இனவெறுப்பு ஊடகங்கள்: நல்லிணக்கத்தின் பெரும் சாபக்கேடு !! (கட்டுரை)
ஊடகம் ‘ஜனநாயகத்தின் நான்காவது தூண்’ என்றும் ‘காவல் நாய்’ என்றும் சொல்லப்படுகின்றது. உலக சரித்திரத்தில் ஊடகங்களுக்கு என்று நீண்ட நெடியதொரு வரலாறு இருக்கின்றது. ஊடக நடைமுறைகள் பற்றிய கோவையும் தார்மிகப் பண்புகளும் விதந்து உரைக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றை, இலங்கையில் இருக்கின்ற பல ஊடகங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அந்த ஊடகங்களின் அறிக்கையிடல்களால், இந்த நாட்டு மக்களுக்கு ‘நல்லது’ நடந்த சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன. ஆயினும், ஒரு சில ஊடகங்களின் போக்குகளைப் பார்த்தால், ஊடக தர்மமும் ஒழுக்கக் கோவைகளும் கேள்விக்குறியாவதையே காண முடிகின்றது.
இந்த வகையறாவுக்குள் வரும் இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் சில, இனவெறுப்பை உமிழும் செய்தியறிக்கைகள், நிகழ்ச்சிகளை அடிக்கடி ஒளி,ஒலி பரப்புவதையும் பிரசுரிப்பதையும் மக்கள் குறிப்பெடுத்து வைத்திருக்கின்றனர்.
குறிப்பாக, இப்போதெல்லாம் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்படுகின்றது. இதற்குப் பின்னால் ஓர் இனவாத நிகழ்ச்சிநிரலும் இனவெறுப்புப் போக்கும் இருப்பதாகக் கருதுமளவுக்கு, அந்தச் செயற்பாடுகள் உள்ளன.
இனங்களுக்கு இடையிலான சௌஜன்ய வாழ்வு பற்றி, மூவின மக்களும் கனவு கண்டு கொண்டிருக்கும் காலப் பகுதியில், தற்போது இருக்கின்ற விரிசல்களைக் கூட, இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லக் கூடிய இத்தகைய செயற்பாடுகளைக் கண்டு, பௌத்த மக்களே முகம் சுழிக்கின்றனர். சிங்கள முற்போக்காளர்கள், இது குறித்துச் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைப்பதையும் காண முடிகின்றது.
முன்னைய காலங்களில் தமிழ் மக்கள், இவ்வாறான ஒரு நெருக்கடியை எதிர்கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் மக்களும் அரசியல்வாதிகளும் ‘புலி’ முத்திரை குத்தப்பட்டே பார்க்கப்பட்டனர். தமிழ்ப் பொதுமக்கள் மீது, இனவெறுப்புப் பிரச்சாரங்களை ஓரிரண்டு ஊடகங்கள், ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ முன்னெடுத்தன.
இப்போது, இதே இனவெறுப்புப் பிரச்சாரம், முஸ்லிம் சமூகத்தின் மீது உமிழப்படுவதை, நன்றாகவே அவதானிக்க முடிகின்றது. சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் போக்கும், சஹ்ரான் போன்ற பயங்கரவாத கூலிப்படைகளின் செயல்களும், இந்த ஊடகங்களுக்குச் சாதகமாகப் போய்விட்டன.
குறிப்பிட்ட சில ஊடகங்கள், இவ்வாறு இனவெறுப்புடன் நடந்த பல சந்தர்ப்பங்களைக் குறிப்பிடலாம். முஸ்லிம் சமூகத்துக்குள் நடக்கின்ற செய்திகளை வெளியிடும் போது, இனத்தை, மதத்தை அடையாளப்படுத்துவதும் செய்திகளைப் பெருப்பித்துக் காட்டுவதும் இதில் பிரதான இடம்பிடித்திருக்கின்றது. இவற்றில், இனவாதக் கருத்தியலை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் இன்னுமொரு ரகம்.
ஓர் ஊடக நிகழ்ச்சியின், உள்ளக உரையாடல் நேரலை முதல், கொரோனாவால் பாதிக்கப்படும் முஸ்லிம்களின் செய்திகள் மாத்திரம், ‘முஸ்லிம்’ என்ற செய்தியுடன் வெளியிடப்பட்டு, முஸ்லிம் சமூகமே கொரோனா வைரஸைப் பரப்ப முனைகின்றது என்ற தோற்றப்பாடு கட்டமைக்கப்பட்டமை, மாளிகாவத்தைப் பள்ளிவாசலுக்கு அருகில், நடந்த துக்ககர சம்பவம் ‘பள்ளிவாசலுக்குள் நடந்ததாக’ ஆரம்பத்தில் செய்தி அறிக்கையிடப்பட்டமை என, இந்தப் போக்கு இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது
நாட்டு மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து, கொரோனா வைரஸை ஒழிப்பதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், அரசாங்கமும் ஊடக ஒழுக்கக் கோவையும் ‘இன, மத அடையாளங்களோடு செய்திகள் வெளியிடுவதைத் தடுத்திருக்கின்ற’ பின்புலச் சூழலிலும், இனவெறுப்பை உமிழும் ஊடகங்கள், இன நல்லிணக்கத்தின் பெரும் சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.
Average Rating