சானிட்டைஸர் பயன்படுத்துகிறவர்களின் கவனத்துக்கு…!! (மருத்துவம்)
‘‘கொரோனா அச்சம் ஏற்பட்ட பிறகு சானிட்டைஸர் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்டது. வெளியில் செல்லும் இடங்களில் எல்லாம் பயன்படுத்தச் சொல்லி வலியுறுத்துவது போல, வீட்டிலும் சானிட்டைஸர் பயன்பாடு பரவலாகி வருகிறது. கைகளின் சுகாதாரம் பற்றி எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது நன்மைதான் என்றாலும், சானிட்டைஸர் பயன்படுத்துகிறவர்கள் சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும்’’ என்கிறார் சரும நல மருத்துவர் கார்டிலியா பபிதா.
சானிட்டைஸர் எல்லோருக்கும் தேவையா?
கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையின் காரணமாக கைகளை கழுவுவது என்பது இன்று கட்டாயமாகிவிட்டது. இந்த அபாயத்தை உணர்ந்து மக்களும், அடிக்கடி சானிட்டைஸரால் கைகளைக் கழுவிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சானிட்டைஸர் என்பது எல்லோருக்கும், எல்லா சூழலிலும் அவசியமானது அல்ல. சோப்பும், தண்ணீரும் பயன்படுத்தி கைகளைக் கழுவுவதே போதுமானது என்று Centers for disease control and prevention (CDC) துறை பரிந்துரைத்துள்ளது. சானிட்டைஸரைவிட சோப் நல்லது என்றும் வலியுறுத்துகிறது. அதாவது 20 விநாடிகள் சோப்பால் கைகழுவினாலே போதும் என்று கூறியிருக்கிறது. எனவே, தேவைப்பட்டால் சானிட்டைஸர் பயன்படுத்தலாம் என்று புரிந்துகொள்ள வேண்டும். சோப் கொண்டு கைகளைக் கழுவ முடியாத சூழலில், சானிட்டைஸரைப் பயன்படுத்தலாம். சோப்பிலும் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் கடினமான சோப் (Hard soap) பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. சாதாரணமான குளியல் சோப்பே போதுமானதாகும்.
சானிட்டைஸரில் ஆல்கஹால் என்று குறிப்பிடப்படுவது என்ன?
Alcohol based என்பது இங்கு சாராயத்தை குறிப்பதாக கருதக்கூடாது. இது ஒரு ரசாயனமாகவே (Chemistry point of view) எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளில் Alcohol based என்பது இத்தனை சதவீதம் சேர்க்கப்பட்டுள்ளது என லேபிளில் அச்சிட்டுருப்பதை பார்த்திருப்போம். அதேபோன்றுதான் அழுக்கை போக்கக்கூடிய கிருமிநாசினிகளில் ரசாயனம் கலப்பது இயல்பே. இதுவே Alcohol based என்று சொல்லப்படுகிறது. இது ஒரு Binding agent-தான். தயாரிக்கப்படுகிற பொருட்களின் தன்மைக்கு ஏற்ப Alcohol ஒரு குறிப்பிட்ட சதவீதம் சேர்க்காமல் கிருமி நாசினிகளை தயாரிப்பது கடினம்.
சானிட்டைஸர் பயன்பாட்டால் தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறதா?
ஒரு பெண் சானிட்டைஸர் பயன்படுத்திவிட்டு சமையல் அறையில் சென்று வேலை செய்துள்ளார். இரு கைகளிலும் இருந்த கிருமி நாசினியால், தீ பற்றிக் கொண்டது என்ற செய்தி வாட்ஸ் அப்பில் பரவியது. இது நம்ப முடியாத சம்பவம் போல் இருந்தாலும், நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே சமையல் அறையில் இருக்கும்போது, நெருப்பு தொடர்பான பணிகளில் இருக்கும்போதும் சானிட்டைஸரை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.
சானிட்டைஸர் யார் பயன்படுத்தலாம்?
எங்கு பணி செய்கிறோம், என்ன செய்யப்போகிறோம் என்பதை பொருத்தே சானிட்டைஸர் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு சானிட்டைஸரும், சமையலறையில் வேலை செய்யும் பெண்களுக்கு சோப்பும் தண்ணீருமே பொருத்தமானது. மருத்துவத் துறையில் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் ஒவ்வொரு நோயாளிகளை பார்க்கும்போதும், அதுவும் தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்கும்போது Sterillium என்ற சானிட்டைஸர்தான் சரியான சாய்ஸாக இருக்கிறது. இது கிருமிகளை எளிதில் கொல்லக்கூடியதாகவும், காற்றில் எளிதாக காயக்கூடியதாகவும் இருக்கிறது. பிறருக்கு கிருமிகள் பரவுவதையும் இந்த முறை தடுக்கிறது.
சானிட்டைஸர் பயன்பாட்டால் சருமப் பிரச்னை வருமா?
சானிட்டைஸர் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் உலர்ந்து Dry skin ஏற்படக் கூடும். மருத்துவர்கள் சானிட்டைஸர் பயன்படுத்தினாலும், சருமப் பிரச்னை வராமல் தவிர்க்க கைகளில் க்ரீம் தடவிக் கொள்வார்கள். ஆனால், பொதுமக்கள் இந்த க்ரீம் முறையைப் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. சிலருக்கு சருமமே உலர்ந்து காணப்படும் Dry skin வகையாக இருக்கும். அப்படி உலர்ந்த சருமம் கொண்டவர்கள் சானிட்டைஸர் பயன்படுத்தும்போது இன்னும் அதிகமாக சருமம் உலர வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் சானிட்டஸரை விட சோப்பும் தண்ணீருமே போதுமானது என்று அதனால்தான் மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.
Average Rating