தமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் !! (கட்டுரை)
பதினோர் ஆண்டுகளுக்கு முன், அதாவது, இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்திருந்த நேரம்… விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்களின் எண்ணவோட்டம், எப்படி இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்குப் பல தரப்புகளும் ஆர்வம் கொண்டிருந்தன.
அரச படைகளும் அதன் புலனாய்வுத் துறையும், தமிழ் மக்களை, ஒவ்வொருவராக அலசி ஆராயும் முனைப்பில் ஈடுபட்டிருந்தன. அந்தத் தருணத்தில்தான், என்றைக்கும் இல்லாதளவுக்கு, புலிகளுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் தமிழ்த் தேசிய நிலைப்பாடுகளுக்கும், எதிரான கட்டுரைகளும் பத்திகளும் தமிழ்ப் பரப்பில் வெளிவர ஆரம்பித்திருந்தன.
அதில், தலைவர் பிரபாகரனை ‘மரணத்தின் காவலன்’ ஆகவும் ‘பேரழிவின் நாயகன்’ ஆகவும் சித்திரித்து வெளியான கட்டுரைகள், இணைய வெளியில் அதிகம் பகரப்பட்டிருந்தன.
இந்தக் கட்டுரைகளை எழுதியவர்களின் எண்ணம், முள்ளிவாய்க்கால் என்கிற பேரூழிக் காலத்தை, தமிழ் மக்கள் சந்தித்து நிற்கின்ற நிலையில், அவர்களுக்கு இராணுவம் மீதான கோபம் மாத்திரமல்ல, புலிகள் மீதான கோபமும் உச்சத்தில் இருக்கும் என்பதே ஆகும்.
ஆனால், புலிகள் மீதான அதிருப்தி, அப்போது தமிழ் மக்களிடம் காணப்பட்டாலும், அது, அவர்களை வெறுக்கும் அளவுக்கு இருக்கவில்லை.
ஏனெனில், புலிகள் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல; அவர்கள், தமிழ்க் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் மகனாக, மகளாக, சகோதரனான, சகோதரியாக இருந்தவர்கள். தமிழ் மக்களுக்காகப் போராடப் போனவர்கள். ஆக, குடும்ப உறவுகளுக்கு இடையில், அதிருப்தி இருக்கலாம்; அது, வாழ்நாள் வெறுப்பாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
ஆனால், புலி எதிர்ப்புக் கட்டுரைகளை எழுதிய பலரும், இதைக் கணிக்கத் தவறிவிட்டார்கள். குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முடிவோடு, புலி நீக்கத்தையும் தமிழ்த் தேசிய நீக்கத்தையும் செய்ய எத்தனித்த அந்தக் கட்டுரையாளர்களால், தமிழ் மக்களிடம் சென்று சேர முடியவில்லை. மக்கள், தமிழ்த் தேசிய நீரோட்டத்துக்குள்ளேயே தொடர்ந்தும் நீந்துவதற்குத் தயாராக இருந்தார்கள்.
இதனால், புலி எதிர்ப்பு, ஆயுதப் போராட்ட எதிர்ப்பைக் கட்டியெழுப்ப நினைத்த பலரும், தங்களது ஓட்டப்பாதையைச் சடுதியாகத் திரும்பிக் கொள்ளத் தொடங்கினார்கள்.
2009, 2010களில், தங்களால் புலிகளுக்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரைகளைச் சடுதியாக அழிக்கத் தொடங்கினார்கள். இணையப் பக்கங்களில் அவை, காணாமற்போயின.
சில நாள்களில், பிரபாகரனை மரணத்தின் காவலனாகச் சித்திரித்தவர்கள், ஆயுதப் போராட்டத்தின் நியாயப்படுகளைப் பேசிக் கொண்டு, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் தேவை குறித்து, ஊடகங்களில் எழுதத் தொடங்கி இருந்தார்கள்.
இறுதிப் போர் பேரூழி, புலிகளின் நிலைப்பாடுகள், ஆயுதப் போராட்டத்தின் போக்கு உள்ளிட்டவை குறித்த, விமர்சன அணுகுமுறை அவசியமானது என்பதை, இந்தப் பத்தியாளர் என்றைக்கும் கொண்டிருக்கின்றார். இது, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் போக்கை, ஆரோக்கியமான கட்டத்துக்கு நகர்த்துவதற்கு உதவும்.
ஆனால், மக்களின் மனங்களை அறியாமல், தாங்கள் எதிர்கொண்டிருக்கின்ற நிர்ப்பதந்தங்களால், மக்களைச் சகுனித்தனமாகக் கையாள நினைக்கின்றமை, அயோக்கியத்தனமாகும். அவ்வாறான மனநிலையை, முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னர் வெளிப்படுத்திய பலரும், தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியத்தின் காவலர்களாக மீண்டும் காட்சிப்படுத்தத் தொடங்கினார்கள். ஒரு சிலர், கருத்து உருவாக்கிகளாகவும் தம்மை முன்னிறுத்தினார்கள்.
இன்றைக்கு, தமிழ் அரசியல் பரப்பில், ‘புலி நீக்கம், தமிழ்த் தேசிய நீக்கம்’ என்கிற விடயங்கள், தொடர்ந்தும் பேசப்படுகின்றன. அவை, தமிழ்த் தேசிய அரசியல் மீதான அக்கறையோடு வெளிப்படுத்தப்படுகின்ற அளவைக் காட்டிலும், தேர்தல் அரசியலுக்கான வெற்றி, தோல்வி ஆகிய கட்டங்களைக் கருத்தில் கொண்டே பேசப்படுகின்றன.
தமிழ்த் தேசிய அரசியல், தேர்தல்-வாக்கு அரசியலுக்குள் சுருங்கி நிற்கின்றது. அவ்வாறான நிலையில், இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் என்கிற இரண்டு நபர்களைச் சுற்றியதாகத் தமிழர் அரசியல் மாறியிருக்கின்றது.
அரசியலில் தனி நபர்கள், ஆளுமையாக எழுவது இயல்பு. இதற்கு, ஜீ.ஜீ. பொன்னம்பலம் தொடங்கி, அண்மைய சுமந்திரன் வரை, நிறைய உதாரணங்கள் உண்டு. அது, அந்த நபர்களால் மாத்திரம் நிகழ்வதல்ல. மாறாக, சூழ்நிலைகள், அன்றைய தேவைப்பாடுகளின் போக்கிலும் எழுவது.
அருணாச்சலம் மகாதேவாவைத் ‘துரோகி’ என்று சொல்லிக்கொண்டு, அரசியலில் தலையெடுத்த ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் தலைமைத்துவத்தைத் தமிழ் மக்கள், தந்தை செல்வாவைக் கண்டதும் தூக்கியெறிந்தார்கள். இன்னொரு கட்டத்தில், தலைவர் பிரபாகரனுக்குப் பின்னால், தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகச் செல்லத் தயாரானார்கள்.
இன்று, களத்தில் இருக்கின்றவர்களில், சம்பந்தனையும் சுமந்திரனையும் ஆளுமைகளாகத் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, காட்சிப்படுத்துகின்றது. இதைத் தமிழ் மக்கள், குறிப்பிட்டளவு அங்கிகரிக்கவும் செய்கிறார்கள். அப்படியான நிலையில், அவர்களின் நிலைப்பாடுகள் சார்ந்து, ஆதரவு-எதிர்ப்பு அரசியல் நிலைபெறுவது இயல்பானது.
ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, கடந்த காலங்களில் இருந்து கற்றுக்கொள்வதைவிடுத்து, மகாதேவாவுக்கு எதிராகப் பொன்னம்பலம் பிரயோகித்த, ‘துரோகி’ அடையாள அரசியலை, மீண்டும் தூக்கிக் கொண்டு வருவதுதான் அபத்தமானது.
ஏனெனில், துரோகி அரசியல் என்பது, ஒவ்வொரு கட்டத்திலும் மாறக்கூடியது. துரோகி அடையாள அரசியலின் வழியாகத் தன்னை நிலைநிறுத்திய பொன்னம்பலத்தை, துரோகி அடையாளத்தை வைத்தே தமிழரசுக் கட்சி, அகற்றியதுதான் வரலாறு. பின்னரான காலத்தில், துரோக அடையாளத்தின் வழியாகப் பலர் பலிவாங்கப்பட்டார்கள்.
துரோகி அடையாள அரசியலைக் கையாள நினைக்கிறவர்கள், தேர்தல் வெற்றியை மாத்திரம், சிந்தித்து இயங்கும் தரப்பினராகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், அரசியல் என்பது ஒற்றைப் பாதையைக் கொண்டதல்ல; இலக்கை அடைவதற்காகப் பல பாதைகளின் வழியாகவும் முயற்சிப்பதாகும்.
ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னராக, இன்றைய நாள்களில், தமது நிலைப்பாடுகள், நம்பிக்கைகளின் வழியாக, ஒவ்வொருவரும் ஒவ்வோர் அரசியல் நிலைப்பாடுகளுக்கு வருகிறார்கள். அது, அவரவர் உரிமை. ஆனால், அதைத் துரோக அடையாளத்துக்குள் சுருக்குவதென்பது, ஆரோக்கியமானதல்ல. அதுபோல, தங்களின் குற்றம் குறைகளை, இன்னொருவரின் அர்ப்பணிப்புகளைக் கொண்டு மறைக்க முயல்வதும் ஆரோக்கியமானவை அல்ல. இவைகள், அயோக்கியத்தனமானவை.
அண்மையில், தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளரான நடராஜர் காண்டீபன், புலிகளுக்கும் பசிலுக்கும் இடையிலான ‘டீல்’ பற்றிப் பேசினார். அந்த விடயம், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் விமர்சிக்கப்பட்டதும், புலிகளின் அர்ப்பணிப்புக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, நியாயமாக விமர்சிப்பவர்களைத் ‘தமிழினத் துரோகிகள்’ என்கிற தோரணையில், குரல் பதிவொன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார். பின்னர், அந்தக் குரல் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
அதுபோல், கருத்துருவாக்கி என்று தொடர்ந்தும் தன்னை அடையாளப்படுத்தும் அரசியல் கட்டுரையாளர் ஒருவர், சுமந்திரனை நோக்கிய வாக்குத் திரட்சி என்பது, புலி நீக்கம், தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்பட்டது என்று, கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். அத்தோடு, சுமந்திரனின் அரசியல் நிலைப்பாடுகளின் பின்னால், அணி திரளும் கூட்டம், பதவிகள், பணத்துக்கானது என்பது மாதிரியான, இரண்டாந்தரக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
தேர்தல் அரசியலுக்குள் பதவிகள், பகட்டுகளுக்காக அலையும் கூட்டமொன்று, எல்லாக் காலத்திலும் உண்டு; அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், ஓர் அரசியல் நிலைப்பாட்டின் பின்னால் இணையும் அனைவரும், அவ்வாறான சிந்தனையைக் கொண்டவர்கள் என்பது, அபத்தமானது. இது, ஆரோக்கியமான அரசியல் விவாதங்களில் ஈடுபட நினைப்போரைத் துரோக அடையாள அரசியலுக்குள் தள்ளிவிட்டு, ஒதுக்கும் முயற்சியாகும்.
கூட்டமைப்புக்கு மாற்றான அணியொன்றை, கட்டியெழும்பும் திட்டங்களோடு இயங்கிய தரப்பினர் அனைவரும் பதவிகளுக்காகவும் வெளிநாட்டுத் தூதுவராலயங்களின் திட்டங்களின் படியும் இயங்கியவர்கள் என்று சொல்ல முடியுமா? அவ்வாறான நிலைப்பாட்டில், சிலர் இயங்கியிருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அனைவரும், அதே நிலைப்பாட்டில் இயங்கினார்கள் என்று சொல்வது ஏற்புடையதல்ல.
ஏனெனில், தன்னை எந்த விதத்திலும் நிரூபிக்காத ஒருவரை நோக்கி, ‘ஜனவசிய வட்டம்’ வரைந்தவர்கள், இன்றைக்கு, ‘சீச்சி இந்தப் பழம் புளிக்கும்’ என்ற கட்டத்தில் நிற்கின்றார்கள். அப்படியான கட்டம் குறித்து, எழும் விமர்சனங்களையும் அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை; சிறுபிள்ளை மனநிலையையோடு இருக்கிறார்கள்.
தமிழ்த் தேசிய அரசியலில் கட்சிகள், ஆளுமைகள் போன்றவற்றின் நிலைப்பாடுகள் சார்ந்து ஆதரவு, எதிர்த்தளம் உருவாகுவது இயல்பானது. அதற்குப் பணம், பதவி, பகட்டுகளை நோக்கியதான திரட்சி என்று, பெயர் சூட்டுவது நல்லதல்ல. விவாதங்களின் வழியாக, விடயங்களைக் கடப்பதுதான், என்றைக்குமே நல்லது.
அது, தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொண்டதாக இருக்க வேண்டும். மாறாக, முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னர், மக்களின் மனங்களை அறியாமல், ‘சகுனியாட்டம்’ ஆடிய, புலி அவதூறுக் கட்டுரையாளர்களின் மனங்களை ஒத்ததாக, இருக்கக் கூடாது.
Average Rating