மனதை உருக்கும் மாளிகாவத்தை சோகம்!! (கட்டுரை)

Read Time:6 Minute, 57 Second

புனிதமான ரமழான் மாதத்தின் அதி உன்னத நாளான நோன்பு 27 முஸ்லிம் சமூகம் புண்ணியம் செய்யும் ,வாரிவழங்கும் தினமாக பார்க்கின்றனர். அத்தகையதொரு நாளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பு மாளிகாவத்தையில் பரோபகாரி ஒருவர் வழமை போன்றே வறிய மக்களுக்கு உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அல்லாஹ்வால் அருளப்பட்ட மறை குர்ஆன் இறக்கப்பட்ட அந்த புனித இரவு நாளில் மாளிகாவத்தையில் இடம்பெற்ற சம்பவம் மனதை உருக்கும் நிகழ்வாகவே பார்க்க வேண்டியுள்ளது.

சனநெரிசலில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த பரோபகாரி ஆன தெஹிவலையைச் சேர்ந்த வர்த்தகரின் நோக்கம் தூய்மையானது. அந்த இஃலாஸான காரியத்தை இன்றைய காலகட்டத்தில் முன்னெடுத்த முறை குறித்துத்தான் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு தொடர்ச்சியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகளை பேண வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த வர்த்தக பிரமுகர் மாளிகாவத்தையில் உள்ள தனது களஞ்சியசாலையில் வறுமைக்கோட்டில் வாழும் குடும்பங்களுக்கு உதவி வழங்க ஏற்பாடுகள் செய்திருந்தார். அந்த இடத்தில் 300க்கும் அதிகமானோர் முண்டியடித்த வாரு திரண்டதன் காரணமாகவே இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நிலையில் அவசர பட்டதன் காரணமாக இந்த கவலை தரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக இன்று மாளிகாவத்தை பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.

தூய்மையான மனதுடன் அல்லாஹ்வால் உபதேசிக்கப்பட்ட கடமைகளில் ஒன்றான ஜகாத் சதகா தர்மங்களை செய்யும்போது மக்கள் புகழ வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரபலப்படுத்துவது இறை பொருத்தமாக அமைய மாட்டாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இது நெருக்கடியான காலகட்டம் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.சமூக இடைவெளியை பேணல், முகக் கவசம் அணிதல் இவை இரண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சுகாதார நடைமுறைகளை பேணாமல் 300 க்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடியதன் விளைவாகவும் உதவியை பெற ஆளுக்காள் முண்டியடித்ததன் காரணமாகவும் சனநெரிசலில் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கதாகும்.

இதன் ஏற்பாட்டாளர் மீது நாம் குற்றச்சாட்டு சுமத்த முற்படவில்லை. ஆனால் இன்றைய காலச் சூழலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் அவர் செய்யப்பட்டிருக்கலாம். இந்த உதவி உபகாரத்தை ஒவ்வொரு ரமழானிலும் மேற்கொண்டு வருவதால் உதவி பெறுபவரை அடையாளம் கண்டு வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்க நடவடிக்கை எடுத்திருக்க முடியும். இறை பெறுத்ததற்கு இதுவே சிறந்த வழியாகும்.

அல்லது அந்தப் பிரதேசம் (மாளிகாவத்தை) பள்ளிவாசல் மூலம் விவரங்களை திரட்டி டோக்கன்களை வழங்கி நேர ஒதுக்கீடு செய்து உதவிகளை வழங்க ஏற்பாடுகள் செய்திருக்கலாம். இவை தான் சிறந்த வழிகளாகும். இவை இரண்டையும் எண்ணிப் பார்க்காமல் செயற்பட முனைந்ததால் 3 இழப்புகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு அந்த வர்த்தகர், உறவினர் ஊழியர்கள் என 6 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். புனிதமான நாளில் இந்த நிலை ஏற்பட்டது மனக் கவலையை தருகிறது. அதுமட்டுமல்ல இந்த சம்பவம் உதவி உபகாரம் செய்யும் பரோபகாரிகள் நல்லெண்ணம் கொண்டோருக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் அவசரமும் தூரநோக்கற்ற செயற்பாடுகளும் எமது சமூகத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி விடுகின்றன. கடந்த காலத்தில் இவற்றை நாம் நிறையவே கண்டுள்ளோம். ஆனால் படிப்பினை கொள்வதாக தெரியவில்லை.

இனியாவது முஸ்லிம் சமூகம் பாடம் படிக்க வேண்டும் அரசாங்கத்தின், பாதுகாப்பு தரப்பின் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பேண வேண்டும். சட்டம் ஒழுங்கை மதிக்க தவறியதன் பிரதிபலனையே மாளிகாவத்தையில் கண்டுகொண்டோம்.

இனியாவது சமூகம் விழிப்புடன் செயற்பட வேண்டும். ஊர் ஜமாஅத்கள் பள்ளி நிர்வாகங்கள் இது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அறிவுறுத்தல்களை பேண தவறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான எச்சரிக்கைகளையும் விடுக்கவேண்டும்.

எதிர் காலத்தில் நாட்டில் மற்றொரு மாளிகாவத்தை சம்பவம் இடம் பெறாமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம். இதனை உதவி வழங்கும் பரோபகாரிகளும் உதவிபெறும் சமூகமும் கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டாய கடப்பாடாகும் என்பதை சொல்லி வைக்க வேண்டி உள்ளது.

எம். ஏ. எம். நிலாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘இவளா?அவளா? பதில் சொல்லு மிஸ்டர்! ரெண்டு பொண்டாட்டி வாய்ப்பே இல்ல!’ (வீடியோ)
Next post மார்கழி பனியை எப்படி சமாளிப்பது? (மகளிர் பக்கம்)