கூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள் !! (கட்டுரை)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கட்சிகளாக ஏன் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்கிற கேள்வி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. குறிப்பாக, கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகள் ஒன்றோடும் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதோரிடமும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் அடையாளம், தங்களின் மீது என்றைக்கும் விழுந்துவிடக் கூடாது என்று நினைக்கும் முன்னணியின் தொண்டர்களிடம், இந்தக் கேள்வி தொடர்ந்தும் இருக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அது முள்ளிவாய்க்கால் முடிவுகள் வரையில், விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குட்பட்டே இருந்தது. அதன் பின்னரேயே, கூட்டமைப்பு இரா.சம்பந்தனின் முழுமையான தலைமைத்துவத்தின் கீழ் வந்தது.
அதுபோல, 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஸ்தாபித்தனர். ஆக, தற்போதுள்ள கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் கிட்டத்தட்ட சமவயதுதான். ஆனால், இரண்டும் தங்களைக் கட்சிகளாகப் பதிவு செய்வதிலிருந்து விலகியே ஓடிக் கொண்டிருக்கின்றன. அதற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியை முழுமையாக நிறுவுதல், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸை மீட்டெடுத்தல் என்கிற கிட்டத்தட்ட ஒத்த காரணங்களே, பதிலாகவும் நீடிக்கின்றன.
2004 பொதுத் தேர்தலுக்கு முன்னரான காலத்தில், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள், கூட்டமைப்பை ஒருங்கிணைப்பதில் அக்கறை செலுத்திய தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டன. கட்சிக்கான யாப்பு வரையப்பட்டு, நிறைவு நிலையை அடைந்திருந்தது. ஆனால், கிளிநொச்சியில் இருந்து விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, அப்போது கூட்டமைப்பைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. தாங்களே ஏக நிலை அமைப்பாக இருக்க வேண்டும், தங்களைத் தாண்டி எந்தவோர் அமைப்பும் செயற்பாட்டுத் தளத்துக்கு சென்றுவிடக் கூடாது என்பதில், புலிகள் கவனமாக இருந்தனர். அதன்போக்கில்தான், கூட்டமைப்பைப் பதிவு செய்யும் செயற்பாடுகளையும் அனுமதித்திருக்கவில்லை.
ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாள்களில், கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை, தமிழரசுக் கட்சி தவிர்ந்த அனைத்துப் பங்காளிக் கட்சிகளாலும் பல தடவைகள் விடுக்கப்பட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டமைப்பை எப்படியாவது கட்சியாகப் பதிவு செய்துவிட வேண்டும் என்பதற்காக அதிகமாகவே உழைத்தார். அதற்காகப் பலதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால், சம்பந்தன் அதற்கு இசைந்து கொடுக்கவில்லை. ”பார்க்கலாம்…” என்கிற தோரணையில், விடயங்களைக் கடந்தி வந்தார்.
இன்னொரு பக்கத்தில், ஆளுமையுள்ளவர்கள் எனத் தான் நம்புபவர்களைக் கொண்டு, தமிழரசுக் கட்சியை நிரப்பும் செயற்பாடுகளையும் அவர் முன்னெடுக்க ஆரம்பித்தார். அது, கூட்டமைப்பு என்கிற அடையாளத்தைத் தக்கவைக்கும் நோக்கங்கள் சார்ந்தவை அல்ல. மாறாக, தமிழரசுக் கட்சி என்கிற தந்தை செல்வாவின் அடையாளங்களின் தொடர்ச்சியைப் பேணும் நோக்கிலானது. எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்கள் அதன்போக்கிலேயே, நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
கூட்டமைப்பு அடையாளத்தைத் தக்க வைப்பது சார்ந்து, சம்பந்தனுக்கு சில நெருடல்கள் இருந்தன. அதாவது, கூட்டமைப்பு என்பது புலிகளின் பின்னணியில் உருவானது; முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அங்கம் வகித்து வருகின்றமை சார்ந்தது. உலக ஒழுங்கில், ஆயுதப் போராட்டங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், ஆயுதப் போராட்டத்தோடு தொடர்பற்ற தரப்பாகத் தங்களை அடையாளப்படுத்துவதற்காக, தமிழரசுக் கட்சியை மீள நிறுவுதல் உதவும் என்று சம்பந்தன் நம்பினார். அதன்போக்கில், 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், புலிகளால் முன்னிறுத்தப்பட்ட பலரையும், 2010ஆமே; ஆண்டுப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக அனுமதிக்கவும் அவர் விரும்பவில்லை.
தந்தை செல்வாவின் தொடர்ச்சியாகத் தன்னை முன்னிறுத்தவே சம்பந்தன் விரும்பினார். செல்வாவுக்குப் பின்னரான, அமிர்தலிங்கத்தின் அடையாளத்தைக் கூட, அவர் தம்மோடு சுமக்க விரும்பவில்லை. ஏனெனில், அமிர்தலிங்கம் போன்றவர்கள், ஆயுதப் போராட்டங்களை நோக்கி இளைஞர்களைத் தள்ளியதில், முக்கிய பங்காற்றியவர்கள் என்பது வரலாறு.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு முன்னரேயே, அதாவது, செல்வாவின் உடல்நிலை மோசமடைந்து, தமிழரசுக் கட்சி அமீரிடம் வந்தது முதல், அது அடுத்த கட்டப் பாய்ச்சலை எடுத்திருந்தது. உணர்வூட்டும் அரசியலின் அதியுச்ச காலம். காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களின் மணித்தியாலக் கணக்கான பேச்சுகள் அரங்கேறிய காலம். அது இன்னொரு கட்டத்தில், தமிழரசுக் கட்சி அடையாளங்களுக்கு அப்பால், தமிழர் விடுதலைக் கூட்டணியாகவும் மாறிவிட்டிருந்தது. ஆக, தமிழரசுக் கட்சியை மீள நிறுவும் போது, செல்வாவின் தொடர்ச்சியாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளலாம் என்பது, சம்பந்தனின் எண்ணப்பாடு. அதில், அவர் ஓரளவு வெற்றியும் கண்டார்.
அதற்காக, அவர் 2010ஆம் ஆண்டு முதல், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இரண்டாம் நிலையில் வைத்தே அணுகினார். தவிர்க்க முடியாத அவசியம் ஏற்பட்டால் அன்றி, எந்தவொரு காரணத்துக்காகவும் அவர்களுக்கான முக்கியத்துவத்தை வழங்குவதிலிருந்து தவிர்த்துக் கொண்டார். தன்னைச் சூழ சிலரை வைத்துக் கொண்டு, முடிவெடுக்கும் மய்யத்தை உருவாக்கினார். அதுவும்கூட, கூட்டமைப்புக்குள் எம்.ஏ. சுமந்திரன் தவிர்க்க முடியாத ஒருவராக மாறக் காரணமாகியது.
கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழும்போதெல்லாம், கூட்டமைப்பு அரசியல் கூட்டாக, தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சுமந்திரன் பதில் சொல்வார். ஆனால், உண்மையில் கூட்டமைப்பு என்பது, எந்தவித அதிகாரக் கட்டமைப்பும் இல்லாத ஒரு தேர்தல் கட்டமைப்பு மாத்திரமே. அங்கு, தமிழரசுக் கட்சியைச் சுற்றியே அதிகாரக் கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றது. அதை அனுசரிக்காத பங்காளிக் கட்சிகள், வெளியேற்றப்பட்டு வந்திருக்கிறார்கள். இதுதான் நிலை.
முன்னணியைப் பொறுத்தளவில், அங்கு இருக்கும் ஒரேகட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ். ஆனால், முன்னணியின் ஆதரவாளர்களில் 95 சதவீதமானோர் தங்களைக் காங்கிரஸ் அடையாளத்தோடு இணைத்துக் கொள்வதில், பெரிய தர்மசங்கடத்தை எதிர்கொள்கிறார்கள். அதனை, அவர்கள் பொது வெளியிலும் உரையாடிக் கொள்கிறார்கள். ஏனெனில், காங்கிரஸ் என்பது, ஜீ.ஜீ. பொன்னம்பலத்தோடு ஆரம்பிக்கும் வரலாற்றைக் கொண்டது.
அப்படியாயின், முன்னணியைக் கட்சியாகப் பதிவு செய்வதில் என்ன சிக்கல் இருக்கின்றது என்றால், அது, பொன்னம்பலத்தின் குடும்ப நிலையிலிருந்து வருவது. அது ஒருவகையில், வாரிசு அடையாளத்தின் போக்கிலானது. எந்தவொரு தருணத்திலும் காங்கிரஸ், பொன்னம்பலங்களைத் தாண்டி, இன்னொரு தரப்பின் ஆளுகைக்குள் சென்றிருக்கவில்லை. அப்படியிருக்க, முன்னணியைக் கட்சியாகப் பதிவு செய்தால், அதைத் தங்களின் கைகளுக்குள் பேண முடியாது என்பது, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும் அவரது தரப்பினதும் எண்ணம். முன்னணி அடையாளத்தோடு மட்டும் இருக்க விரும்பும், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள், இதனை ஏன் எழுப்புகிறார்கள் இல்லை என்பது சாதாரண மக்களின் கேள்வி. பொன்னம்பலத்தின் குடும்பக் கட்சியாக மாறிவிட்ட ஒன்றைக் காப்பாற்றுவது, முன்னணி இளைஞர்களின் எந்தக் கடப்பாட்டுக்குள் வருகிறது?
”..சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பது, பெயர் மாற்றப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்…” என்று முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தொடங்கி, அதன் தொண்டர்கள் வரையில், அண்மைக் காலத்தில் விமர்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால், முன்னணி என்பது எந்த அடையாளத்துக்குள் வருகிறது. காங்கிரஸின் கடந்த காலக் கறுப்பு அரசியல் வரலாற்றுப் பக்கங்களை மறைக்கும், போலி முகத்திரையா முன்னணிக்கான அடையாளம்? மற்றவர்களை நோக்கி விரல் நீட்டும் முன், தங்களை நோக்கிக் கேள்வி எழுப்புவது முன்னணி அடையாளத்துக்காக ஒரு தசாப்த காலமாகக் காத்திருக்கும் இளையோர் செய்ய வேண்டிய ஒன்று.
ஆனால், இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைமை, காங்கிரஸின் ஒரு வரலாற்றைத் தொடர்வதற்கு விரும்புகின்றது. அதுதான், வாரிசு அரசியல் என்கிற அபத்தம். தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலம் முதல், அது வாரிசு அரசியலுக்குள் சென்றதில்லை. ஆளுமைச் செயற்பாட்டின் படியே, தலைமைத்துவத்தைப் பேணியது. ஆனால், மாவை சேனாதிராஜாவை இடைக்காலத் தலைவராக்கி, எதிர்காலத் தலைமைத்துவத்தைத் திட்டமிட்ட சம்பந்தனின் நினைப்புக்கு, இப்போது தடைக் கற்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. அது, மாவையை நோக்கிப் பதவிகளுக்காகத் திரண்டிருக்கின்ற ஒரு கூட்டம், வாரிசு அரசியலை, ஒரு செல்நெறியாகத் தமிழரசுக் கட்சிக்குள்ளும் நிறுவ முயற்சிக்கின்றன. இன்றைக்கு, தமிழரசுக் கட்சிக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் குத்து வெட்டுகள் அதன் போக்கிலானவைதான்.
முன்னணிக்குள், அப்படியான குத்து வெட்டுகள் குறைவு; ஏனெனில், காங்கிரஸ் என்பது பொன்னம்பலங்கள் சார்ந்தது. அங்கு, வாரிசு அரசியல் நிரந்தமானது. அந்த இடத்தில், எப்படிக் கேள்விகளை எழுப்புவது? ஆக, கூட்டமைப்பும் முன்னணியும் தங்களைக் கட்சிகளாகப் பதிவு செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள், பகுத்து ஆயும் அளவுக்குப் பெரிதாக இல்லை. இந்த நிலை, தமிழ்த் தேசிய அரசியலின் போக்குக்குப் பெரும் பின்னடைவே.
Average Rating