மீண்டும் ட்ரெண்ட் ஆகும் கெம்ப் நகைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 57 Second

‘‘எங்க அம்மா எனக்குப் போட்ட நகைடி. நீயும் போட்டுக்கோ…’’
‘‘அட நீ வேற ஏன்மா… இதெல்லாம் பழைய மாடல்…’’

சென்ற வருடம் வரை இப்படி நோ சொன்ன இளம்பெண்கள் இப்போது மீண்டும் அதே பழைய ஸ்டைலை தேடி ஓடத் தொடங்கியுள்ளனர்!
ஆம்! கெம்ப் நகைகள்… பல்லாயிரம் வருடங்கள் பழமையான நகைகளின் டிசைன்கள் இவை. வட்டம், அரைவட்டம், பிறைநிலா, முக்கோணம், சதுரம் போன்ற மிகச் சில அடிப்படை வடிவங்களில் மட்டுமே கற்கள் கொண்டு செய்யப்படும் நகைகள்.

சாமி சிலைகள் தொடங்கி அக்கால ராணிகள் அணிந்த பாரம்பரிய வகைகள் 90களின் இறுதி வரை திருமண நகைகளாக இருந்தன. இப்போது அவையும் குறைந்து பரதம், குச்சிப்புடி நடனக் கலைஞர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்த வருடம் திடீரென திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்ல, கல்லூரி மற்றும் டீன் ஏஜ் பெண்கள் என சகலரையும் இந்த கெம்ப் நகைகள் ஈர்த்துள்ளன. ‘‘பெரும்பாலும் சிவப்பு கலர்களில் மட்டுமே வரும் இந்த நகைகள் வலிமைக்குப் பெயர் போனவை…’’ என உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் ஃபேன்ஸி நகைகளின் டிசைனரான பிரியங்கா சரண்.

‘‘கெம்ப் அப்படின்னாலே வலிமை, கனமான என்றுதான் பொருள். அதேசமயம் மாணிக்கத்தைத்தான் தெலுங்குல கெம்புனு சொல்வாங்க.
ஒரு காலத்துல தங்கத்துல ஒரு ஜோடி ஒரிஜினல் கெம்ப் ஜிமிக்கி வாங்கணும்னா குறைஞ்சது ரூ.75 ஆயிரம் ஆகும். இப்ப ஃபேன்ஸியா ரூ.150 முதலே கிடைக்குது. அதாவது தரத்தைப் பொறுத்து விலைகள் மாறும்.

லேட்டஸ்ட் டிரெண்ட் நூல்கள்ல பொருத்தப்பட்ட கெம்ப் டாலர்கள்… இதுக்கு மேட்ச்சிங்கா தோடு… இந்த டிசைனுக்குதான் ஆர்டர்ஸ் குவியுது. குறிப்பா கருப்பு நிற ஜடை பின்னல் மாதிரி சோக்கர் நெக்லஸ்… அதுல கெம்ப் டாலர்தான் வேகமா விற்பனையாகுது.

இப்பவும் ஆந்திரா, கர்நாடக பெண்கள் கெம்ப் நகைகளை அதிகம் பயன்படுத்தறாங்க. அவங்கதான் இந்த கருப்பு நிற பாசிகள், நூல் நகைகளும் அதிகம் அணியறாங்க. அங்கிருந்து வந்த டிரெண்ட்தான் இந்த கெம்ப் திரெட் நகைங்க…’’ என்று சொல்லும் பிரியங்கா சரண், திரெட் கெம்ப் நகைகளும் பழைய ஸ்டைல் கெம்ப் நகைகளும் மறுபடியும் மார்க்கெட்டை கலக்குவதாக சொல்கிறார்.

‘‘இந்த நகைகளின் சிறப்பே ஒரு தோடு, ஒரு டாலர் வெச்ச நெக்லஸ் போட்டாலே ரொம்ப கிராண்டா தெரியும் என்பதுதான். இப்பவும் நம்ம பாட்டி நகைங்க அப்படித்தான் இருக்கு. ஆனா, போன வருஷம் வாங்குன திருகாணி இந்த வருஷம் நெளிஞ்சு பல் இளிக்குது. ஆக, பழசுக்கு இருக்கற மவுசே தனி.

மாணிக்கக் கற்கள் அல்லது சிவப்பு கற்கள் பதிச்ச கெம்ப்கள்தான் வழக்கமா வரும். ஆனா, இப்ப பிங்க், நீலம், பச்சை, வெள்ளை, கருப்பு நிறங்கள்லயும் வரத் தொடங்கிடுச்சு. சிலவகை ருத்திராட்சம் மாதிரி உருண்டையாவும் வருது. கெம்ப் கனமானதா, வலிமையா இருக்கானு கண்டுபிடிக்கணும்னா அந்த டாலர் மேல புடைச்சு, ஒரு லென்ஸ் மாதிரி தோற்றம் கொடுக்கும். இப்படி இருக்கறதுதான் தரமானது.

டாலர்கள் தட்டையா இருந்தா வாங்காதீங்க. பாந்தமான பாவாடை சட்டை, புடவை. சல்வார் தொடங்கி மாடர்ன் கவுன், ஜீன்ஸ் டாப்ஸ் வரை எல்லாத்து கூடவும் கெம்ப் நகைகளை மேட்ச் செய்யலாம். என்ன, மேக்கப்ல மட்டும் கொஞ்சம் மாற்றம் செய்துக்கணும்…’’ என பிரியங்கா சரண் முடிக்க தொடர்ந்தார் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் டான இலங்கேஸ்வரி: ‘‘மஞ்சள் – கருப்பு நிற மிடிக்கு டார்க் லிப்; சல்வார், கவுன்
களுக்கு கொஞ்சம் லைட் லிப் கலர்… கூடவே சல்வாருக்கு மட்டும் பிரைட் ஐ ஷேடோ பயன்படுத்தினா நல்லா இருக்கும்.

கவுனுக்கு வெஸ்டர்ன் லுக் கொடுக்க நியூட் மேக்கப், அதாவது நம்ம நயன்தாரா அதிகம் பயன்படுத்தற டல் லிப் கலர், டல் ஐ ஷேடோ பயன்படுத்தலாம். டிரெடிஷனல் மேக்கப்ல சிவப்பு, மெரூன், பிங்க்னு மூணு லிப் கலர்ஸ்தான் பயன்படுத்த முடியும். ஆனா, வெஸ்டர்ன்ல நம்ம இஷ்டம்தான்.

இங்க நெக்லஸ் எல்லாமே கிராண்ட் லுக் என்பதால் அதை ஹைலைட் பண்ற விதமா கண்களுக்கு மட்டும் மேக்கப் கூட்டி காண்பிக்கலாம்.கண்ணையும் கழுத்தையும் ஹைலைட் செய்தாலே ஒரு கவர்ச்சி வந்துடும். இதை லெஹெங்கா லுக்ல பார்க்கலாம். பெரும்பாலும் வட இந்தியர்கள் ஒரு பெரிய நெக்லஸ் மட்டும் அணியக் காரணமும் இதுதான்.

கழுத்தை எவ்வளவு கவர்ச்சியாகக் காட்ட முடியுமோ அவ்வளவு கவர்ச்சியா காட்டுவாங்க. சில பாலிவுட் நடிகைங்க நெக்லஸே போடாம காதுக்கு மட்டும் தோடு போடுறதும் இதனாலதான்.அந்த வகைல இந்த திரெட் சோக்கர்கள் நம் கழுத்தை ஸ்பெஷலாகவும், வயதைக் குறைத்தும் காட்டும். கருப்பு அல்லது அடர் நிற திரெட் நகைகள்தான் உங்க சாய்ஸ்னா முடிந்தவரை லிப் கலரை லைட்டா போட்டுக்குங்க…’’ என டிப்ஸ் தருகிறார் இலங்கேஸ்வரி.

மாடல்: குயின்ஸி
உடைகள்: Mabia Boutique (Bridal Studio)
நகைகள்: Jaanvi Fashion Studio
மேக்கப் & ஸ்டைலிஸ்ட் : Freezing Beauty Parlour

ஃபேன்ஸி நகைகளை பாதுகாப்பது எப்படி?

பெரும்பாலும் இரண்டு மெட்டல்கள்; உதாரணத்திற்கு சில்வர் மற்றும் கவரிங் நகைகளை ஒன்றாக வைக்கக் கூடாது. நிச்சயம் ஏதேனும் ஒன்று கருத்துவிடும். இது தூய தங்கம், வெள்ளிக்கும் கூட பொருந்தும். மேக்கப் பவுடர்கள், கிரீம்கள் மற்றும் பாடி ஸ்பிரே, சென்ட் ஆகியவற்றை நகைகள் மேல் படாமல் பயன்படுத்துவது நல்லது.

ஒருவேளை கறை பட்டாலும் துணி கொண்டு உடனடியாக துடைப்பது அவசியம். பயன்படுத்திய மறுகணம் காற்றுப் புகாத பெட்டிகளில் அல்லது கவர்களில் வெள்ளை நிற காட்டன் துணி கொண்டு சுற்றி வையுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய மாணவிகள்!! (வீடியோ)
Next post மனைவியின் வடிவத்தில் பிசாசு 2!! (வீடியோ)