மகத்துவம் நிறைந்த மண்பானை நீர்!! (மருத்துவம்)
‘‘வெயில் காலம் வந்துவிட்டாலே மண் பானை விற்பனையை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று நினைக்கிற எளிய மக்களின் இனிய தேர்வாகவும் மண்பானை இருக்கிறது. இந்த மண்பானை நீர் உடலுக்குக் குளிர்ச்சி மட்டும் தருவதில்லை. பல நன்மைகளையும் மருத்துவரீதியாக தருகிறது’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் அசோக்குமார்.
மண்பானை நீரின் மருத்துவ குணம் பற்றி தொடர்ந்து பேசுகிறார்…
‘‘காலம்காலமாகவே நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கும், தங்களுடைய மற்ற தேவைகளுக்கும் மண்பானையை உபயோகப்படுத்தி வந்திருக்கின்றனர். முக்கியமாக கஷாயம் போன்ற மருந்துப் பொருட்களைத் தயாரிக்க மண்பானைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதிலிருந்தே மண்பானையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். ஃப்ரிட்ஜ் தண்ணீர் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல. அது தாகத்தையும் தணிப்பதில்லை. அதனால்தான் இப்போது குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று மண்பானையைப் பலரும் உபயோகிக்கிறார்கள். மண்பானை நீர் தாகம் தணிப்பதோடு மட்டுமில்லாமல், உடலில் ஏற்படுகிற பல பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. ஆரோக்கியத்துக்கும் உகந்தது. மண் பானை நீர் இயற்கையான முறையில் உடலை குளிர்ச்சியாக்குகிறது. கோடையில் ஏற்படுகிற நா வறட்சி, உடல் நீர் இழப்பு போன்றவற்றைத் தடுக்கிறது. உடலுக்கு நோயை ஏற்படுத்துகிற வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்திருக்கிறது’’ என்பவர் மண்பானையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிக் கூறுகிறார்.
‘‘கோடை காலத்தில் மண்பானை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் சுவை மற்றும் நறுமணத்துக்காக தண்ணீரில் வெட்டிவேர், எலுமிச்சைப்பழம் போட்டு வைப்பார்கள். இவற்றோடு கைப்பிடி அளவு தேற்றான் கொட்டையை சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டிப் போடுவது அவசியம். இவ்வகை கொட்டை கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை அழித்து நீரை சுத்தப்படுத்தும். வாரம் ஒருமுறை அல்லது தண்ணீரை மாற்றும்போது, புதிதாக தேற்றான் கொட்டை போட வேண்டும். இந்த தேற்றான் கொட்டை எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
குளிர்ச்சியான நீர் வேண்டும் என்பதற்காக மண்பானையை உபயோகப்படுத்துகிறவர்கள் நாகரிகம் என்ற பெயரில் பெயின்ட் அடித்து உபயோகிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஒரு சிலர், பானையின் உட்புறத்திலும் பெயின்ட் அடிக்கின்றனர். இவ்வாறு செய்வது பார்ப்பதற்கு வேண்டுமானாலும் அழகாகத் தெரியலாம். ஆனால், இதனால் மண்பானையின் பயன் எதுவும் கிடைக்காது. மேலும், பானையின் வெளிப்புறத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறுசிறு துவாரங்கள் வழியே நீர்த் திவலைகள் வெளிப்படுவதும் தடைபடும்.
முதல் தடவையாக, மண்பானை நீரை குடிப்பவர்களுக்கு தொண்டை கட்டுதல், சளி மற்றும் மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றால் அவதிப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளை எல்லாம் நினைத்து மண்பானை தண்ணீரை தவிர்த்துவிடக் கூடாது. மண்பானைத் தண்ணீரால் ஏற்படுகிற சிறுபிரச்னைகளை சரிசெய்ய தாளிசாதி சூரணம், திரிகடுக சூரணம், கதிராதி கூலிகா ஆகிய மருந்துகள் இருக்கின்றன. திரிகடுக சூரணம் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை சேர்ந்தது. ‘கை மருந்து’ என்று அழைக்கப்படும் இதை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்’’ என்கிறார்.
Average Rating