குழிக்குள் விழுந்த நூலறுந்த பட்டங்கள் !! (கட்டுரை)
பட்டங்களை வானில் ஏற்றிப் பார்த்து இரசிப்பதை, யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால், பறக்கவிடும் பட்டங்களெல்லாம் உயர உயரப் பறப்பதில்லை. அவற்றில் சில, நூல் சிக்கி இடையில் அறுந்துவிடுகின்றன: அன்றேல் மரக்கிளைகளில் சிக்குண்டு, சின்னாபின்னமாகி விடுகின்றன.
அவ்வாறின்றேல், காற்றறுத்துக் கொண்டு போய்விடுவதும் மின்கம்பிகளில் சிக்கிக் கருகிவிடுவதும் கூட நிகழ்வதுண்டு. இந்தப் பட்டங்களை வானில் ஏற்றி, காற்றில் மிதக்க வைப்பதென்பது, பெரும் சிரமமான காரியமாகும்.
இது ஊரடங்கு காலம்; பக்கத்து வீட்டில் என்ன நடந்தாலும் நமக்கென்ன என்றிருக்கும் காலமிது. அதில், வீடுகளுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் சிறார்கள், எப்போது வெளியில் சென்றுவருவோமென துடிதுடித்துக் கொண்டிருப்பர். கூண்டுக்குள் அடைந்துகிடக்கும் பறவைகளைத் திறந்துவிட்டால், சிறகுகளை அடித்துக்கொண்டு எவ்வாறு மகிழ்ச்சியுடன் பறக்குமோ, அதேபோல, வீடுகளுக்குள் அடைந்து கிடக்கும் சிறுவர்களும், வெளியே சென்று விளையாடிவிட்டு வருவதையே விரும்புவர்.
ஊரடங்கு, பெரும் நகரங்களில் கடுமையாக இருந்தாலும், ஊர்களில் ஊரடங்காது; கிராமங்களில் கணக்கே இருக்காது. இதனால், அனர்த்தங்களுக்கும் பஞ்சமிருக்காது. வெளியில் வந்த செய்திகளை விடவும், வெளிவராத சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன.
இந்த ஊரடங்குச் சட்டக் காலப்பகுதியில், குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. கணவன் – மனைவிக்கு இடையிலான வாய்த் தர்க்கம், சண்டையாக மாறி, உயிரைப் பறித்தெடுக்குமளவுக்குச் சென்றுள்ளமையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விளைவுகளாகும்.
பெற்றோரிடையே காணப்படும் முரண்பாடு, அவர்களுடைய பிள்ளைகளின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, பிள்ளைகளின் திடீர் இழப்புகள், பெற்றோரின் மனங்களில் நீங்காத வடுக்களாக அமைந்துவிடுகின்றன. ஆகையால், இருதரப்பினரும் விழிப்பாக இருப்பதே, ஊரடங்குச் சட்டம் அமலிலுள்ள காலப்பகுதியில் மிகமுக்கிய கடமையாகும்.
அது மட்டுமன்றி, இக்காலப்பகுதியில் சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்களும் அதிகரித்துச் சென்றுள்ளமை கவலைக்குரியதாகும். அலட்சியங்களால் மடியும், பிஞ்சுகளின் எண்ணிக்கைகள் அதிகரித்துச் செல்கின்றன.
இவற்றையெல்லாம் தீர்க்கதரிசனத்துடன் மகாகவி பாரதியார், இற்றைக்கு நூற்றாண்டுக்கு முன்னரே பாடி, மனத்துக்கு வலிமையூட்டி இருக்கிறார்.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
எனப் பாடி, அநியாயத்தை எதிர்த்துநிற்க வேண்டும் என்ற மனோதிடத்தைச் சிறுவர்களுக்கு ஊட்டமுயன்றிருக்கிறார் பாரதியார்.
பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோரும் பாதுகாவலரும் அதிசிரத்தையைக் காட்ட வேண்டும் என்பது அடிப்படை. ஆனால், புத்தகப் பூச்சிகளாய் மாறிவிடும் சிறார்கள், சாதாரண விபத்துகளிலிருந்து கூடத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றனர் என்பது, சில சம்பவங்களைப் பார்க்கும் போது கண்கூடாகும்.
அப்பியாசக் கொப்பிகள், புத்தகங்களுடன் மட்டும், கல்வியை மட்டுப்படுத்துவதால், பல்வேறான ஆபத்துகளைச் சிறுவர்கள் சந்திக்கின்றனர். பெற்றோர், பாதுகாவலர் சிறுவர்களைப் பாதுகாக்கத் தவறும் பட்சத்தில், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியாது பிள்ளைகள் திணறுகின்றார்கள்; அந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளும் சாணக்கியம் தெரியாது, சிக்கித் தவித்து, மடிந்து போய்விடுகிறார்கள்.
கொரோனா வைரஸ் தோற்றுக் காரணமாக, உலகளாவிய ரீதியில் பல மில்லியன் மக்கள், இன்று வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மரண பயம் அநேகரைச் சூழ்ந்துள்ளது. உலக நாடுகளின் தலைவர்களும் அரசாங்கங்களும் தத்தமது குடிமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, ஊரடங்குச் சட்டத்தை விதித்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர், இவ்வாண்டு மார்ச் 11ஆம் திகதி, நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இந்த நோயாளரின் தொகை, சங்கிலித் தொடராக நீண்டு கொண்டு செல்வதுடன், மார்ச் 20ஆம் திகதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இன்றுவரை தொடர்கின்றது.
பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு, அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு காலப்பகுதியில் நிகழும் அல்லது, நிகழ்த்தப்படும் சிறார்களின் மரணங்கள் குறித்தான செய்திகள், உண்மையிலேயே இதயத்தைக் கனக்கச் செய்கின்றன.
ஒன்றா, இரண்டா…; கொவிட்-19 தொற்றாளர்களின் பட்டியல் அதிகரித்துச் செல்வது போன்று, சிறு பிள்ளைகளின் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.
துருதுருவென இருக்கும் குழந்தைகள், சுறுசுறுப்புடன் செயற்படும் குழந்தைகள், குறும்புத்தனக் குழந்தைகள், வெள்ளை மனத்தோடு, துடுக்காய்ப் பேசும் குழந்தைகள். எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றிருப்பதை நாம், அன்றாடம் வாழ்வில் பார்க்கின்றோம். எனினும், இவ்வாறான குழந்தைகளை இந்த இடர்காலத்தில் கவனிக்க அல்லது பாதுகாக்க நாம், தவறுகின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
கொரோனா வைரஸ் அச்சத்தால் பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பிள்ளைகள் தமது குடும்பங்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான, சந்தர்ப்பங்களில்தான் பிள்ளைகளை மனம், உடல் ரீதியாகப் பாதுகாக்க வேண்டிய, வலுப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பில் பெற்றோரும் பாதுகாவலர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், இவர்களின் அலட்சியங்கள், கவனிக்க அல்லது கடமையிலிருந்து தவறுதல், பொறுப்பற்ற செயற்பாடுகளாலேயே சிறுபிள்ளைகளின் திடீர் மரணங்கள், துஷ்பிரயோகங்கள் தற்போது அதிகரிப்பதற்கு முக்கிய அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. பெற்றோர், பாதுகாவலர் மத்தியில் காணப்படும் போதைப்பொருள் பாவனை, மது பாவனை, தகாத உறவு, குடும்ப வன்முறைகள் போன்றவை இத்தகைய மரணங்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் சூழ்நிலைகளை உருவாக்கிக்கொடுத்து, வழிசமைக்கின்றன.
இந்தக் காலப் பகுதியில், குடும்பத்தாருடன் சேர்ந்திருக்கக் கூடிய சந்தர்ப்பத்தைப் பயனுள்ளதாக்க வேண்டும். ஆனால், இன்று பலர், குடும்ப வாழ்க்கையை மேலும் மேலும், சிக்கலுக்கு உள்ளாக்குகின்றனர்.
மார்ச் 20 திகதி முதல், மே 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 160 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது; இவர்களில் 110 பேர் ஆண்களாவர்.
தவிர, எந்தெந்தச் சூழ்நிலையில், யார் யார், எப்படியெப்படி மாறுவார்கள் என்பது, யாருக்குமே தெரியாது. பெற்றோரால் இழைக்கப்படும் அநியாங்கள், கவனம் இன்மையால் பிள்ளைகளில் உயிர்கள் பறிக்கப்படுகின்றமை கொடுமையிலும் கொடுமையாகும். இவ்வாறான சம்பவங்கள், மனிதத்தின் இருப்புக்குச் சவால்விடும் வகையில், வளர்ந்து வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தந்தையர் மூலம் பிள்ளைகள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸில் ஏராளமான துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில், கணவன் – மனைவி தகராறின் போது, பிள்ளைகளைக் கொலை செய்வதாக மனைவியிடம் கணவன் அச்சுறுத்தியமை, மூன்றரை வயதுச் சிறுமிக்குத் தந்தை மதுபானம் பருக்கியமை, மனைவியின் பராமரிப்பில் இருந்த இரு பிள்ளைகள், வீதியில் விளையாடிக் கொண்டிருக்கையில் எவருக்கும் தெரியாமல் தந்தை கொண்டு சென்றமை, இரும்புக் கம்பியால் மகளுக்குத் தந்தை தாக்கியமை என, இந்தப் பட்டியல் இன்னும் நீள்கின்றது. இந்தப் பட்டியலில் சில…
சம்பவம் – 1 (மட்டக்களப்பு)
வாழைச்சேனை – மாவடிச்சேனையில் ஏப்ரல் 14ஆம் திகதி, நடந்தேறிய கொடூரமும் இப்படியானதே; உறக்கத்திலிருந்த 10, 07 வயதுகளை உடைய தனது இரு பிள்ளைகளையும் தந்தை, கிணற்றில் வீசிப் படுகொலை செய்தமை, அப்பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்தத் துயரச் சம்பவம், நள்ளிரவில் நடந்தேறியமையால் விடிவதற்கு முன்பாகவே, அந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளும் பரிதாபமான முறையில் உயிரிழந்திருந்தனர்.
மாவடிச்சேனை, பாடசாலை வீதியில் வசிக்கும் அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) ஆகிய இரு பிள்ளைகளே, இவ்வாறு கிணற்று நீரில் அமிழ்ந்து மரணமடைந்தனர்.
இப்பிள்ளைகளின் தாய், ஐந்து வருடங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமான மரணமடைந்த நிலையில், ஆண் பிள்ளையை, அட்டுல்கம பிரதேசத்திலுள்ள காப்பகத்திலும், பெண் பிள்ளையை, இரத்மலானை பிரதேசத்திலுள்ள காப்பகத்திலும் தந்தை சேர்ப்பித்துள்ளார்.
அங்கு, இவ்விருவரும் கல்வி கற்று வந்த நிலையில், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பிள்ளைகளை, ஏறாவூரிலுள்ள காப்பகமொன்றில் சேர்ப்பதற்காக, பாடசாலைகளில் இருந்து பிள்ளைகளை இடைவிலகலில் தந்தை அழைத்து வந்திருந்தார். எனினும், ஊடரங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டமையால் அது சாத்தியமற்றுப் போனது.
சம்பவங்கள் – 02, 03 (திருகோணமலை)
திருகோணமலை, மொரவெவ பிரதேசத்தில், இம்மாதம் 9ஆம் திகதி, கடைக்குச் சென்ற சஞ்சீவ என்ற எட்டு வயதுச் சிறுவன், மின்சாரம் தாக்கிப் பரிதாபதாக உயிரிழந்தான்.
சிறுவன் சென்றிருந்த கடையைச் சுற்றி, யானை மின் வேலிகள் போடப்பட்டிருந்த நிலையில், கடை உரிமையாளரால், அதிலிருந்து திருட்டு மின்சாரம் பெறுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்தமையை அறியாமல், அதில் சிக்குண்டே, சிறுவன் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்தச் சம்பவம், நிகழ்ந்த மறுநாளும், இதே போன்ற அலட்சியத்தால் பிறிதொரு சிறுவனின் மரணம் நடந்தேறியது. கிண்ணியா, மாஞ்சோலைச் சேனை, ஆலீம் வீதியில், வீடொன்றின் மதில் சரிந்து விழுந்ததில், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ரணீஷ் முஹம்மது ஷான் (வயது – 04) எனும் சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அச்சிறுவனின் சகோதரரான ரணீஸ் முஹம்மது – தாஜ் (வயது-02) படுகாயத்துக்கு உள்ளாகினார்.
சம்பவம் – 04 (அம்பாறை)
பட்டம் விடுவதைப் பார்வையிடச் சென்ற 03, 06 வயதுடைய இரு குழந்தைகள், பாதுகாப்பற்ற கிணறு போன்றதொரு குழியில் தவறி வீழ்ந்து, மரணமடைந்த சம்பவமும் இம்மாதம் ஒன்பதாம் திகதி சம்மாந்துறையில் இடம்பெற்றது.
உயிரிழந்த சிறுவர்களின் தந்தை, மத்திய கிழக்கு நாடொன்றில் பணி புரிந்துவருகின்றார். தாய், வீட்டில் சிற்றுண்டித் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த வேளை, அருகில் வசிக்கும் சிறுவர்கள் பட்டம் விடுவதைப் பார்வையிட அப்பகுதிக்கு, சிராஜ் சிபாம், சிராஜ் ரிஸ்ஹி என்ற இவ்விரு சகோதரர்களும் சென்றுள்ளனர். இதன்போது, மேற்படி அனர்த்தத்தால் இவர்கள் உயிரிழந்தனர்.
சம்பவம் – 05
தான் பெற்றெடுத்த சிசுவை, அள்ளியெடுத்து அணைத்திருக்க வேண்டிய தாயே, நாய்க்கு அதை இரையாக்கிய கொடூர சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, வெல்லாவெளி, மண்டூர், ஆணைக்கட்டுப் பிரதேசத்தில், ஒழுக்கக்கேடான நடத்தைதயால் பிரசவிக்கப்பட்ட பெண் சிசுவொன்றே, இவ்வாறு நாய்க்கு இரையாக்கப்பட்டுள்ளது. சிசுவைப் பிரசவித்த தாய், வீட்டின் வளவில் சிசுவைக் கைவிட்டுச் சென்றதையடுத்து, நாய் இழுத்துச் சென்றுள்ளது.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 21, 17, 14, 11 வயதுகளுடைய நான்கு பிள்ளைகளின் 39 வயதுடைய தாயொருவர், கணவன், ஒன்றரை வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்ந்து வரும் நிலையில், பிறிதோர் ஆணுடன், தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் கர்ப்பம் தரித்திருந்த அவர், உடலில் அதற்கான எந்தவிதமான அடையாளங்களும் காணப்படாத நிலையில், இம்மாதம் 9ஆம் திகதி காலை ஒன்பது மணியளவில், வீட்டின் வளவின் 300 மீற்றர் தூரம் கொண்ட பகுதியில், யாருக்கும் தெரியாமல் பெண் சிசுவைப் பிரசவித்துள்ளார்.
இதையடுத்து, தனக்கு சிசு பிறந்துள்ளதாகவும் அதை எடுத்துச் செல்லுமாறும் தான் தொடர்பு வைத்திருந்த ஆணுக்கு, அலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். காதலன் வருவார் என அன்றைய தினம் இரவு ஏழு மணிவரை காத்திருந்துள்ளார். ஆனால், காதலன் வராததால், இந்தச் சிசு பிறந்த விடயம், தனது பிள்ளைகளுக்குத் தெரியக்கூடாது எனப் பிறந்த சிசுவை, அங்கேயே கைவிட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளார்.
மறுநாள், மாலை ஆறு மணியளவில், கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர், இறந்த சிசுவொன்றின் உடலை, நாய் கவ்விக்கொண்டு செல்வதைக் கண்டு, கிராம உத்தியோகத்ததருக்கு வழங்கிய தகவல் அடுத்து, சிசுவின் பகுதியளவு உடல் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சம்பவத்தில், சிசுவின் தாயை, பொலிஸார் கைதுசெய்து முன்னெடுத்த விசாரணையிலேயே, இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அடுக்கடுக்காக, இடம்பெற்று முடிந்த இவ்வாறான சம்பவங்கள் அனைத்தும், சிறுபிள்ளைகளை நாம் பாதுகாக்கத் தவறியுள்ளோம் என்பதையே பறைசாற்றுகின்றன. எனவே, சிறு பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, எம் அனைவருக்கும் உண்டு என்பதை உணரத் தலைப்படவேண்டும்.
இளைய சமுதாயத்துக்கு வேண்டியது, எதிர்கால நம்பிக்கைதான். அவ்வாறான நம்பிக்கையை, அவர்களுக்கு வழங்குங்கள். எது நல்லது, எது தீயது என்று பகுத்தறியும் வாழ்க்கைக் கல்வியை அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்.
பட்டங்களை ஏற்றுவதற்கு முன்னர், அதன் சமநிலையைச் சிறார்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
அதனை ஏற்றும்போது, எவ்வாறு தட்டுத்தடுமாறுகிறதோ, அதேபோல சமூகத்திலிருக்கும் நெளிவு சுழிவுகளைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். உயர்ந்துவிடும் பட்டங்களின் நூல்கள், மின்சாரக் கம்பிகளிலும் மரக்கிளைகளிலும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதைப்போல, சமூகவிரோதிகள் குறித்து அறிவூட்டினால், பட்டம்போல தடுமாறி மேலெழும் சிறார்களின் வாழ்க்கையில், அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
Average Rating