அடுப்படியில் தேடப்படும் ’யானை’ !! (கட்டுரை)

Read Time:16 Minute, 24 Second

‘யானை காணாமல் போனால், அடுப்படியில் தேடக் கூடாது’ என்கிற பழமொழியொன்று
உள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக்
கையாள்வதில், முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அதிகமானோரின் செயற்பாடுகளைக்
காணும்போது, அவர்கள், ‘அடுப்படியில்தான் யானையைத் தேடுகிறார்களோ’
என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ஆண்டாண்டு காலமாக, ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை
முன்னெடுத்து வந்த, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கூட, கோட்டாபய
ராஜபக்ஷவின் வெற்றியை அடுத்து, இணக்க அரசியலைச் செய்வதற்குத்
தீர்மானித்துள்ள நிலையில், இணக்க அரசியலுக்கு அநேகமாகப் பழக்கப்பட்ட
முஸ்லிம் சமூகத்தை வைத்து, ”எதிர்ப்பு அரசியல் ஆடிப் பார்க்கலாம்” என,
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தீர்மானித்துள்ளமை, சரிதானா என்கிற கேள்வி
முக்கியமானதாகும்.

தமிழர்கள், கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக வாக்களித்து உருவாக்கிய
நல்லாட்சிக் காலத்திலேயே, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமல்
போனமையாலும், அந்தக் கசப்பான அனுபவத்திலிருந்து கிடைத்த பாடத்தின்
அடிப்படையிலும்தான், மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து, ”தமிழ் அரசியல்
கைதிகளை விடுவியுங்கள்” என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கோரிக்கை
விடுத்திருக்கிறார்கள் என்று, பலரும் பேசிக் கொள்கின்றனர்.

தமிழ் இனத்தைக் கொன்றொழித்த போர்க் குற்றவாளி என்று, தமிழ்த் தேசிய
கூட்டமைப்பினரால் குற்றம் சாட்டப்பட்டவர், மஹிந்த ராஜபக்ஷ என்பதையும்,
இங்கு நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்தக் குற்றசாட்டுகள், கசப்புகள் எல்லாவற்றையும் கடந்த நிலையில்தான்,
ராஜபக்ஷவினரிடம் சென்று, ”தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்”
என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து நின்றார்கள்
என்பதை, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், கவனிக்க வேண்டியமை அவசியமாகும்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த சிங்கள
மக்களின் பேராதரவு, எதிர்வரும் பொதுத் தேர்தலில், பொதுஜன பெரமுனவுக்குக்
கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் ஆசனங்கள், ராஜபக்ஷவினருக்கே உரிய
‘கெத்து’ அரசியல் போன்றவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்
போது, அவர்களுடன் இணக்க அரசியல் செய்வதே புத்திசாலித்தனம் என, தமிழ்த்
தேசிய கூட்டமைப்பினரும் நினைத்திருக்கலாம்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் ஒவ்வோர் அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளை
அனுபவித்து வந்த, முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு, இப்போது மட்டும்,
ராஜபக்ஷவினருடன் இணக்க அரசியல் செய்ய முடியாமல் போனமைக்குக் காரணம் என்ன
என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

தேவை இணக்கம்

கடந்த நாடாளுமன்றில் உறுப்பினர்களைக் கொண்டிருந்த முஸ்லிம் கட்சிகள்
இரண்டையும், தம்முடன் இணைத்துக் கொள்வதில்லை என்கிற தீர்மானத்துடன்தான்
ராஜபக்ஷவினர் இருக்கின்றனர். அதனால், இப்போதைய நிலையில், முஸ்லிம்
காங்கிரஸோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ, ராஜபக்ஷவினருடன் சேர்வதற்குத்
தீர்மானித்தாலும், அந்தக் கட்சிகளை ராஜபக்ஷ தரப்பு இணைத்துக் கொள்ளாது.

கடந்த காலங்களில், ராஜபக்ஷவினருக்கு மேற்படி முஸ்லிம் கட்சிகள் செய்த
துரோகங்களும், அவற்றால் ஏற்பட்ட காயங்களும், ராஜபக்ஷவினருக்கு இன்னும்
ஆறவில்லை. மேலும், முஸ்லிம் கட்சிகளைத் தமது கூட்டணியில் சேர்த்துக்
கொள்வது, ராஜபக்ஷவினருக்குக் கிடைக்கும் ‘சிங்கள வாக்கு’களை,
இப்போதைக்குச் சிதறடித்தும் விடக்கூடும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், ராஜபக்ஷவினருடன் பிரதான முஸ்லிம் அரசியல்
கட்சிகள், இணக்க அரசியலில் ஈடுபட வேண்டுமென, முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒரு
தரப்பு விரும்புகிறது. அதுதான், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும்
பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்த்துக் கொள்வதற்குரிய, புத்திசாலித்தனமான
அரசியலாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில்
அலரி மாளிகைக்கு அழைத்த போது, அதை ஏற்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
சென்றது போல், முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும்
சென்றிருக்க வேண்டும் என்றும், அங்கு வைத்து, கொரோனா வைரஸ் தாக்கத்தால்
மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை,
பிரதமரிடம் கேட்டிருக்க வேண்டும் என்றும் மேற்சொன்ன முஸ்லிம் தரப்புக்
கூறுகிறது.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் இதற்கு, மாற்றமானதொரு
கருத்தை முன்வைத்தன. ”ஏற்கெனவே, பிரதமரை நாங்கள் சந்தித்து, கொரோனா
வைரஸ் தாக்கத்தால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம்
செய்வதற்கான அனுமதியைக் கேட்டோம். ஆனால், அதற்கு உரிய பதிலை அவர்
வழங்கவில்லை. அதனால்தான், அவரின் தலைமையிலான இன்னொரு கூட்டத்துக்குச்
செல்வதில், எந்தவித பிரயோசனமும் இல்லை என்று கருதி, குறித்த அலரி
மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணித்தோம்” என்று, அந்தக் கட்சிகள்
தெரிவித்தன.

அதாவது, தாங்கள் எறியும் ‘ஒற்றை’க் கல்லிலேயே, ‘மாங்காய்’ விழுந்து விட
வேண்டும் என்று, அந்தக் கட்சிகள் எதிர்பார்க்கின்றன என்பதை, அந்தக்
கட்சியின் மேற்படி கூற்றிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால்,
இவ்வாறான எதிர்பார்ப்பு, சாணக்கியமான அரசியலாகத் தெரியவில்லை.

ராஜபக்ஷவினரின் கோபம் என்ன என்பதும், தாம் என்ன செய்தமை காரணமாக,
இவ்வாறானதொரு கோபத்தில் அவர்கள் உள்ளனர் என்பதையும், முஸ்லிம் காங்கிரஸ்,
மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமைகள், நன்றாகவே அறியும்.
எனவே, எடுத்த எடுப்பில் ராஜபக்ஷவினர், தம்மை வாரி அணைக்க வேண்டும் என,
இந்த முஸ்லிம் கட்சிகள் நினைப்பது, ஏற்புடையதாகவும் தெரியவில்லை.

ஜனாஸா அரசியல்

இந்த நிலையில், ‘கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின்
ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராகவும், குறித்த ஜனாஸாக்களை அடக்கம்
செய்வதற்கான அனுமதியை வழங்குமாறும் கோரி, ஹில்மி அஹமட் என்ற தனி நபர்,
உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தமையை
அடுத்து, அரசியல் கட்சிகளும் வழக்குத் தாக்கல் செய்யக் கூடும்’ என்று,
கடந்த வாரப் பத்தியில் நாம் குறிப்பிட்டவாறே, அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட நால்வர் இணைந்து, ஜனாஸா
எரிப்புக்கு எதிராக, உயர்நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்கள்.

இதன் காரணமாக, இந்த விவகாரத்தில், தமது சார்பாகவும் வழக்கு ஒன்றைத்
தாக்கல் செய்ய வேண்டிய ‘அரசியல் தேவை’, முஸ்லிம் காங்கிரஸுக்கு
ஏற்பட்டது. இதையடுத்து முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, உயர்நீதிமன்றில், ஜனாஸா எரிப்புக்கு
எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார்.

மறுபுறமாக, கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முன்னாள்
உறுப்பினர் தவம், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண
சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோர், ஜனாஸா
எரிப்புக்கு எதிராக, முறையே ஒரு இலட்சம், ஐம்பதாயிரம் எனும் இலக்குகளை
நிர்ணயித்து, மக்களிடமிருந்து கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கைகளில்
இறங்கியுள்ளனர். இவ்வாறு, கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கையை
ஆரம்பித்துள்ள இருவரும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம்
காங்கிரஸின் வேட்பாளர்களாகப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாஸா எரிப்புக்கு எதிராகப் பெறப்படும் இவ்வாறான கையெழுத்துகளைக் கொண்டு,
இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் விரும்பும் தீர்வொன்றை, நிச்சயமாகப்
பெற்றுக் கொள்ள முடியாது என்பதை, ‘கையெழுத்துப் போராட்டத்தை’
ஆரம்பித்துள்ள அரசியல்வாதிகளும் நன்கு அறிவார்கள். எனவே, ஜனாஸா எரிப்பு
விவகாரத்தை வைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமக்கான வாக்குகளைப்
பெறுவதற்கான நடவடிக்கையாகவே, இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை, இவர்கள்
ஆரம்பித்துள்ளார்கள் என்கிற புகார்கள் உள்ளமையும், இங்கு
குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் பார்த்தால், காணாமல் போன யானையை, இவ்வாறான அரசியல்வாதிகள்,
வேண்மேன்றே அடுப்படியில் தேடிக் கொண்டிருக்கிறார்களா என்கிற சந்தேகமும்
இங்கு எழுகின்றது.

சாத்தியம் எது?

இவை இவ்வாறிருக்க, ”ஜனாஸா எரிப்பை எதிர்த்து, நீதிமன்றங்களில் வழக்குத்
தாக்கல் செய்திருக்கும் அரசியல் கட்சியினரும் ஏனையயோரும், சிங்கள
மக்களிடத்தில், தமது நியாயங்களை எடுத்துச் சொல்லத் தவறியிருக்கின்றனர்”
என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான
பஷீர் சேகுதாவூத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ”பெரும்பான்மையினரான சிங்கள மக்களின் மன்றுக்கு முன்னால்
செல்வதுதான், முஸ்லிம்களுக்கு இப்போதுள்ள இலகுவான, சிறந்த வழியாகும்”
என்று கூறியுள்ள அவர், ”முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்யப்படும்
பொய்யுரைகளை, மெய்யுரைகளால் வெல்லலாம் என்ற நம்பிக்கையோடு, களத்தில்
இறங்கவேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘அரசியல் என்பது, சாத்தியங்களின் கலை’ என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு,
எது சாத்தியமோ, அதைச் சாதித்துக் கொள்வதே அரசியலாகும். அந்தவகையில்,
முஸ்லிம்களின் பிரச்சினைகளை ‘இணக்க அரசியல்’ மூலமாகவா, ‘எதிர் அரசியல்’
ஊடாகவோ, இப்போதைக்குத் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை, சமூக
அக்கறையுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.

கட்சி அரசியலையும் வாக்கு அரசியலையும் வெற்றிகரமாகச் செய்து கொண்டே,
சமூகத்துக்கான அரசியலையும் மேற்கொள்வதென்பது, சிலவேளைகளில் முடியாத
காரியமாக இருக்கும். எனவே, சமூகத்தின் வெற்றிக்காக, கட்சி அரசியலில்
இருந்து சற்றே விடுபட்டுச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது என்பதையும்,
முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் பிரிந்து நின்று அரசியல்
செய்யும் தற்போதைய கால கட்டத்தில், ராஜபக்ஷவினரை எதிர்கொள்ளும் வகையிலான
பலம்மிக்கதோ எதிர்க்கட்சி, நாடாளுமன்றில் அமையுமா என்கிற கேள்வியும்
உள்ளது.

அதேவேளை, பிரதான முஸ்லிம் கட்சிகள், கடந்த காலங்களில் பெற்றுக் கொண்ட
எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை, எதிர்வரும் தேர்தலில்
பெறுவார்களா என்கிற சந்தேகங்களும் இருக்கின்றன.

எனவே, தற்போதைய அரசியல் செல்நெறியைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு
முஸ்லிம் கட்சிகள் செயற்பட வேண்டும் என்பதே, முஸ்லிம் சமூகத்துக்குள்
இருந்து எழும் கோரிக்கையாகும்.

‘யானை காணாமல் போனால், காடுகளில்தான் அதைத் தேட வேண்டும்’ என்பதைத்
தெரிந்தவர்களுக்கு மட்டும்தான், கொரோனா வைரஸின் தாக்கத்தால் மரணிக்கும்
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை, எங்கிருந்து
பெறலாம் என்கிற ‘அரசியல்’ புரியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைரலாகும் பகீர் வீடியோ – புலம் பெயர்ந்த தொழிலாளர்களா? (உலக செய்தி)
Next post திருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது!! (அவ்வப்போது கிளாமர்)