1 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை! (உலக செய்தி)
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு 13 லட்சத்து 92 ஆயிரத்து 900 க்கும் அதிகமானோரை இந்த வைரஸ் பாதித்து உள்ளது எனவும், 82 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் எனவும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையம் தெரிவித்தது.
அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், 92 க்கும் மேற்பட்ட பொது பரிசோதனை மையங்களை கொரோனா பரிசோதனைகள் நடத்த அங்கீகரித்துள்ளது. தினமும் 1½ லட்சம் பேருக்கு பரிசோதனை நடந்து வந்தது. இப்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தென் கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளை விட கூடுதலானோருக்கு அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இங்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்கிறவர்களின் எண்ணிக்கை இந்த வாரம் 1 கோடியை தாண்டி விடும்.
எங்கள் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவுதான் இது. 4 மாதங்களில் தென்கொரியா பரிசோதனை செய்ததைவிட அமெரிக்க மாகாணங்களில் இந்த மே மாதத்தில் மட்டுமே அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு விடும்.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் அமெரிக்கா ஒவ்வொரு வளத்தையும் பயன்படுத்தி உள்ளது. பொது, தனியார், இராணுவம், பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்துறை என அனைத்தும் பயன்படுத்தப்பட்டது.
இந்த உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று நோய் நமது மக்களுக்கு மிகுந்த வேதனையையும், கஷ்டத்தையும் கொடுத்து இருக்கிறது. இதுபோன்று இனி ஒருபோதும் நடக்க அனுமதிக்கக்கூடாது. இது சீனாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்க முடியும்,
நாம் கொரோனா வைரசுக்கு இழந்த ஒவ்வொருவருக்காகவும் துக்கப்படுகிறோம். அந்த துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம். இது உலக அளவில் செல்கிறது. குறைந்தபட்சம் 184 நாடுகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.
முதல் காலாண்டில் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. இரண்டாவது காலாண்டிலும் அதே நிலைதான். ஆனால் மூன்றாவது, நான்காவது காலாண்டில் நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும்.
அடுத்த ஆண்டு, மிகப்பெரிய அளவிலான தேவை இருப்பதால் நாம் இதுவரை இல்லாத வகையில் சிறந்த ஆண்டினை கொண்டிருக்கப்போகிறோம். இதை நான் உணர்கிறேன்.
நாட்டு மக்கள் கடந்த 2 மாதங்களில் நிறைய கற்றுக்கொண்டனர். சமூக விலகலை கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் கைகளை அடிக்கடி கழுவுவது பற்றி நிறைய கற்றுக்கொண்டனர். நான் எல்லோரையும் பார்க்கிறேன். அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ள கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இது ஒருதலைப்பட்சமானது அல்ல.
நீங்கள் இப்போது கொரோனா எண்ணிக்கையை பார்த்தீர்களானால், அது கணிசமாக குறைந்து இருப்பதை பார்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனா தொற்று மையம் என கருதப்படுகிற நியூயார்க் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விடுவது குறித்த திட்டங்களை அறிவித்துள்ளன. 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று கொண்டவர்களையும், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அந்த தொற்றுக்கு இழந்தும் உள்ள நியூயார்க்கில் வரும் வெள்ளிக் கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் பொருளாதாரம் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.
Average Rating