ஏற்கனவே ஏமாந்தவள் நான்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 12 Second

என்ன செய்வது தோழி?

அன்புத் தோழி…
இனித்த காதல் கசந்த கதை நிறைய இருக்கலாம். ஆனால் புண்ணாகி, புரையோடிப் போன காதல் என்னுடையது. பிரச்னை வரக்கூடாது என்றுதான், வந்த வண்ணங்களில் சொந்த வண்ணத்தை கண்டுபிடித்து காதலித்தேன். ஒரே சாதி என்பதால் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். அதனால் சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால் நல்ல வாழ்க்கைக்கு ‘நம்ம’ சாதி மட்டும் போதாது என்று புரிந்தபோது ஒரு குழந்தைக்கு
தாயாகி இருந்தேன்.

ஆனாலும் வசவுகளும், அடி உதைகளும் தினசரி மெனுவாகி இருந்தன. ‘நாமே தேடிய வாழ்க்கை’ விட்டுவிட்டால் அசிங்கமாகி விடுமே என்று அமைதி காத்தேன். அது அவருக்கு வசதியாகி விட்டது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் செத்து விடலாம் என்று முடிவுக்கு வந்த நாளில் ‘அவர் விபத்தில் இறந்து விட்டதாக’ போன் வந்தது.

அதன்பிறகு எல்லாம் மாறியது. அம்மா வீட்டுக்கு சென்று விட்டேன். கை நிறைய சம்பாதிக்காவிட்டாலும், அப்பா, அம்மா உதவியில்லாமல் சமாளிக்கும் அளவுக்கு சம்பாதிக்கிறேன். ஆனாலும் என் பெற்றோர்தான் எல்லா செலவுகளையும் பார்த்துக் கொள்கின்றனர். என் ஊதியம் அப்படியே சேமிப்பாகிறது. ஆனாலும் எதையோ இழந்த உணர்வு தொடர்கிறது.

இப்போது என் பிரச்னை இறந்துவிட்ட என் கணவரோ, ஆதரவாக இருக்கும் என் பெற்றோரோ அல்ல. நான்தான். அவர் இல்லை என்று தெரிந்த பிறகு என்னை நோக்கி நிறைய ஆதரவு கரங்கள் நீளுகின்றன. ‘கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன்’ என்று அவர்கள் சொல்லும் போது ‘நம்பலாம்’ என்றுதான் தோன்றுகிறது. ஆனால் நிறையபேர் அப்படி கேட்பதால் அவர்களின் சொல்லில் உண்மை இருக்குமா என்று தயக்கமும் ஏற்படுகிறது.
அதிலும் ‘ஏற்கனவே வந்த காதல், அதனால் கிடைத்த வாழ்க்கை, அதன் மூலம் பெற்ற அனுபவம்’ என்னை பயமுறுத்துகிறது.

அதனால் ‘நான் இருக்கிறேன்’ என்று சொல்வதை கேட்டாலே சில நேரங்களில் பயமாக இருக்கிறது. அந்த ‘நான்’களில் கல்யாணம் ஆனவர்களும் இருப்பதுதான் கொடுமை.ஆனாலும் அதில் ஒருவர் மட்டும் பொய் சொல்லவில்லை. நேர்மையானவர் என்று தோன்றுகிறது. அவரிடம் எனக்கும் ஈர்ப்பு இருக்கிறது. ஆனால் ஏற்கனவே ஒருமுறை நம்பி ஏமாந்த அனுபவம்தான் என்னை பயமுறுத்துகிறது. அது மட்டுமல்ல அவர் வேறு சாதி.

எனக்கு 32 வயது. என் மகனுக்கு 4 வயது. என் வயதில் பலர் முதல் திருமணம் கூட ஆகாமல் இருக்கின்றனர். மறுமணம் செய்ய என் பெற்றோரும் வற்புறுத்துகின்றனர். அவர்களும் வரன் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இது போன்ற ‘மறுமணங்கள் பார்த்து செய்வதை விட பிடித்து செய்வதுதான் நல்லது’ என்று தோழிகள் ஆலோசனை சொல்கின்றனர்.

எனக்கு பிடித்தவரை திருமணம் செய்யலாமா அ்ல்லது என் பெற்றோர் பார்ப்பவரை கல்யாணம் செய்யலாமா? புரியாமல் தவிக்கிறேன்.
முன்பு நான் மட்டும்தான், இப்போது என் பிள்ளையின் எதிர்காலத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. அதனால் எனக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. நீங்கள்தான், என்ன செய்வது என்று எனக்கு வழிகாட்ட வேண்டும் தோழி.இப்படிக்கு ெபயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,உங்கள் கடிதத்தை படிக்கும் போது உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்கள் என்பது புரிகிறது. அதற்கு காரணம் நீங்கள் முதலில் எடுத்த முடிவு தவறாக போய் விட்டதுதான். அதனால் அப்பா, அம்மா சொல்கிற ஆளை திருமணம் செய்வதா, தனக்கு பிடித்தவரை திருமணம் செய்வதா என்று குழம்பிய மனநிலையில் இருக்கிறீர்கள்.

முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன். நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் முடிவு சரியானது. உங்களுக்கு கட்டாயம் துணை தேவை.
அப்புறம் உங்கள் முதல் திருமணம் நடந்து முடிந்த கதை. அது குறித்து நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்.பெற்றோர் பார்க்கும் வரனோ, நீங்களாக தேர்ந்தெடுக்கும் வரனோ யாராக இருந்தாலும் உங்களையும், உங்கள் குழந்தையையும் உண்மையாக, நன்றாக பார்த்துக் கொள்ளும் நல்ல மனிதனாக இருப்பது முக்கியம்.

உங்களை மறுமணம் செய்து கொள்ளும் அவரது முடிவுக்கு காரணம் என்ன என்பது முக்கியம். அந்த காரணங்கள் நியாயமானவையா என்பதை விசாரிக்க வேண்டும். உங்களால் முடியாவிட்டால் பெற்றோர் மூலமாக விவரம் அறிய முயலலாம். உங்களுக்கு மட்டும் அறிமுகமானவர் என்றால் உங்கள் நலம் விரும்பும் உறவினர்கள், நண்பர்கள் மூலமாக விசாரியுங்கள். கலந்து பேசி முடிவெடுங்கள்.

ஏனென்றால் இந்த முடிவில்தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்கள் குழந்தையின் எதிர்காலமும் இருக்கிறது. அதனால் அவர் நேர்மையானவரா என்பது முக்கியம். ஒருவரின் புறத்தோற்றத்தை வைத்து முடிவு செய்ய வேண்டாம். அழகாக இருக்கிறார், நன்றாக பேசுகிறார் என்பதெல்லாம் தகுதிகள் அல்ல. அவர் நல்லவரா? நல்ல வேலையில் இருக்கிறாரா? என்பதுதான் அவசியம். கூடவே அவரது வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள். அவர் பெற்றோரை, உடன் பிறந்தவர்களை எப்படி நடத்துகிறார். நண்பர்களிடம் எப்படி பழகுகிறார் என்பதை வைத்து அவரின் குணநலன்களை அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் கொஞ்ச நேரம் பேசுவதை வைத்து, சில நாட்கள் பழக்கத்தை வைத்தெல்லாம் அவரின் குணநலன்களை கண்டறிந்து விட முடியாது. எனவே தீர விசாரித்து, குடும்பத்தினர், நண்பர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுங்கள். சரியாக இருக்கும்.

மீண்டும் சொல்கிறேன். உங்கள் திருமணம் குறித்து முடிவு எடுக்க வேண்டியது நீங்களா, இல்லை உங்கள் பெற்றோரா என்பது முக்கியமில்லை. நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் எப்படிப்பட்டவர் என்பதுதான் முக்கியம். இனி உங்கள் வாழ்க்கை கட்டாயம் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்த்துகள்!

தொகுப்பு: ஜெயா பிள்ளை

பருத்தி துணிகள் பளீரென்று மின்ன வேண்டுமா?

பருத்திச் சேலையை முதன் முதலாக தண்ணீரில் நனைக்கும்போது, அதில் கொஞ்சம் உப்பு போட்டுச் சேலையை ஊற வைத்து, பின் சோப்பு போட்டுத் துவைத்து நிழலில் உலர வைத்தால், பருத்தி துணி சாயம் போகாது.

* பட்டுப்புடவையை வெயிலில் காய வைக்கக்கூடாது. சலவை சோப்பில் துவைக்கக் கூடாது. உடம்புக்கு போடும் சோப்பை பட்டுப்புடவைக்கு போட்டு, லேசாக கும்மிவிட்டு நிழலில் உலர்த்த வேண்டும்.

* புடவையை நீரில் நனைக்கும்போது பார்டரையும், மற்ற பாகத்தையும் தனித்தனியாக நனைக்கவும். கெட்டியான நிறம் கொண்ட புடவைகளை ஊறப் போடாமல், உடனடியாக உலர வைக்கவும். இதனால் புடவையின் நிறம் மங்காது.

* வசம்பையும், வேப்பங்கொட்டையையும் நன்கு பொடி செய்து ஒரு துணியில் கட்டி பட்டுப்புடவைகள் வைத்திருக்கும் பீரோவினுள் வைத்து
விட்டால் போதும், பட்டுப்புடவைகள் பூச்சி அரிக்காது.

* நன்கு காய்ந்த புகையிலைகளை மெல்லிய காகிதத்தில் சுற்றி கம்பளி உடைகள் உள்ள பெட்டியில் வைத்தால், துணிகளில் பூச்சிகள் வராது.

* உப்பு கலந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை படிந்த துணியைப் போட்டு ஊற வைத்த பின் சுத்தம் செய்தால், கறை போய்விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம்மை அடிமுட்டாளாக்கிய உண்மைகள் ! (வீடியோ)
Next post 70% சிறை கைதிகளுக்கு கொரோனா!! (உலக செய்தி)