தைராய்டு பிரச்னைக்கான உணவுமுறை!! (மருத்துவம்)
தைராய்டு என்பது இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒரு நோயாக மாறிவிட்டது. குறிப்பாக, பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாகவும் தைராய்டு உள்ளது. இதற்கான உணவுமுறை பற்றி பார்க்கும் முன் தைராய்டு பற்றிய அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்வோம்… நம் உடலில் உள்ள எண்டோகிரைன்(Endocrine) சுரப்பிகளில் ஏற்படும் ஒருவகை பிரச்னையே தைராய்டு நோய்(Thyroid disease) என்று அழைக்கிறோம். நம் உடலில் தைராய்டு ஹார்மோன் அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும். தைராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஹைப்பர் தைராய்டிசம்(Hyperthyroidism) மற்றும் ஹைப்போ தைராய்டிசம்(Hypothyroidism). ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கும் நிலையாகும். ஹைப்பர் தைராய்டில் தைராய்டு ஹார்மோன் வழக்கத்துக்கும் அதிகமாக சுரக்கும்.
ஏன் தைராய்டு குறைபாட்டை சரி செய்ய வேண்டும்?
தைராய்டு சுரப்பியானது உடலுக்குத் தேவையான ஆற்றல், வளர்சிதை மாற்றம் போன்றவற்றுக்குத் தேவைப்படுகிறது. எனவே, தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பு நம் உடலின் ஒட்டு மொத்த உறுப்புகளை பாதிப்பு அடையச் செய்யும். மரபுரீதியிலான காரணங்கள், தொற்று நோய்கள், வயது, அயோடின் குறைபாடு, ஆண் மற்றும் பெண்கள், கர்ப்பிணிகள் பாதிப்பு அடைவார்கள்.
தைராய்டின் அறிகுறிகள்
ஹைப்போ தைராய்டு குறைபாடு ஏற்படும்போது உடல் சோர்வு, மலச்சிக்கல், சளி, சரும வறட்சி, தசை வலி, மாதவிடாய்க் கோளாறு, கவனக்குறைவு ஏற்படுவது போன்றவை முக்கிய அறிகுறிகள்.ஹைப்பர் தைராய்டு பிரச்னை வந்தால் நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு, வேகமான இதயத்துடிப்பு, வேர்த்துக் கொட்டுவது, மன அழுத்தம் உண்டாவது, உடல் எடை குறைதல், கவனக்குறைவும், அதிக குடல் இயக்கம் போன்றவை இருக்கும். ரத்தப் பரிசோதனை, Imaging test, தைராய்டு ஸ்கேன் போன்றவற்றின் மூலம் தைராய்டு குறைபாடுகளைக் கண்டறியலாம்.
தைராய்டு சிகிச்சை முறை
தைராய்டு குறைபாட்டை சரி செய்யும் மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பியை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வெட்டி எடுக்கும் நடைமுறையும் உண்டு. சரியான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
எந்த ஊட்டச்சத்து ஹைப்போ தைராய்டுக்கு நல்லது?
அயோடின் நம் உடலின் மெட்டபாலிசத்துக்கு அவசியம். தைராய்டு சுரப்பதற்கும் மிகவும் தேவை. அயோடைஸ்டு உப்பு (Iodised salt), கடல் உணவுகள், பால், தயிர், சீஸ், யோகர்ட்(yogurt), முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, கீரை வகைகள், வேர்க்கடலை, பருப்பு வகைகள் போன்றவற்றில் அயோடின் தேவையான அளவு உள்ளது. 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு 90 mcg ஒரு நாளில் தேவை. 7 முதல் 12 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு 110 mcg தேவை. ஒரு வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு 120 mcg அளவும், 9 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கு 130 mcg-யும், 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 150 mcg அளவும் தேவை.
முக்கியமாக, குழந்தை பெற்ற பெண்களுக்கு அதிக அளவு அயோடின் தேவை. செலினியம் என்ற கனிமமும் தைராய்டு குறைபாட்டை சரி செய்யும். இதை உணவுகள் மூலம் நாம் பெற்றுக்கொள்ளலாம். இது உடலில் சிறிதாக புரதத்தை உற்பத்தி செய்யும். இதுதான் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றை வராமல் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது. கொட்டை வகைகள், நட்ஸ், மீன், செலினியம் சேர்க்கப்பட்ட உணவுகள்(Enriched Selenium goods), கோழிக்கறி, தானியங்கள், சீஸ், முட்டை, பிரௌன் அரிசி, சூரியகாந்தி விதை, பீன்ஸ், மஷ்ரூம், கீரை, பால், யோகர்ட், வாழைப்பழம், பூண்டு போன்றவற்றில் செலினியம் நிறைந்துள்ளது.
ஒரு நாள் முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு 15 mcg அளவும், 7 முதல் 12 மாத குழந்தைகளுக்கு 20 mcg அளவும் செலினியம் தேவை. இதே 20 mcg செலினியம் அளவே ஒரு வயது முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கும் போதுமானது. 4 முதல் 8 வரையிலான குழந்தைகளுக்கு 30 mcg அளவும், 9 முதல் 13 வரையிலான குழந்தைகளுக்கு 40 mcg அளவும், 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 55 mcg செலினியமும் தேவை. துத்தநாகம்(Zinc) தைராய்டை ஆக்டிவேட் செய்யும். அதாவது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்கும். இறைச்சி வகைகள், மட்டி(Shellfish), பருப்பு வகைகள், விதைகள், நட்ஸ், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், முட்டை, தானியங்கள், டார்க் சாக்லேட் போன்றவற்றில் துத்தநாகம் நிறைந்துள்ளது.
ஒரு வயது முதல் 8 வரையிலான குழந்தைகளுக்கு 5 mg வரையிலும் செலினியம் ஒரு நாளில் தேவை. 9 முதல் 13 வரையிலான ஆண் குழந்தைகளுக்கு 8 mg அளவும், 14 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கு 11 mg அளவும் தேவை. பெண் குழந்தைகளைப் பொறுத்தவரையில் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு 8 mg அளவும், 14 முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு 9 mg அளவும் தேவை. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 11-13 mg செலினியம் தேவை.
ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பனீர், முட்டைக்கோஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீச் பழம், ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ், விதைகள் போன்றவற்றை ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இவற்றில் அடங்கியிருக்கும் Goitrogens என்ற வேதிப்பொருள் தைராய்டு சுரப்பைத் தடுக்கும். ஹைப்போ தைராய்டு உள்ளவர்களுக்கு கழுத்தின்கீழ் வீக்கமாக இருக்கும். அந்த வீக்கத்துக்கே Goitre என்று பெயர். எனவே, Goitrogens நிறைந்த மேற்கண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
இதேபோல் க்ளூட்டன்(Gluten) என்கிற புரத உணவுகளையும் தவிர்க்க வேண்டும். கோதுமை மற்றும் பார்லியில் க்ளூட்டன் போன்றவை புரத உணவுகள். சிலியாக் நோய் இருப்பவர்கள் கண்டிப்பாக ஹைப்போ தைராய்டால் கஷ்டப்படுவார்கள். இவர்களும் Gluten உணவை தவிர்க்க வேண்டும். பிரெட், பாஸ்தா போன்றவையும் க்ளூட்டன் உணவுகளே! அயோடின் அதிகம் உள்ள உணவுகள், நைட்ரேட்ஸ் அதிகம் இருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெள்ளரிக்காய், பூசணிக்காய், கேரட், Gluten உணவுகள், சோயா மற்றும் சோயா பொருட்கள். கஃபைன் (Caffeine) நிறைந்த டீ, காபி, சோடா, சாக்லேட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
ஹைப்பர் தைராய்டு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
அயோடின் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக அயோடின் உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டை, வெள்ளைக்கரு சாப்பிடலாம். மேலும் ஃப்ரெஷ் பழங்கள், உப்பு இல்லாத நட்ஸ் மற்றும் பட்டர், உப்பு இல்லா பிரெட், பால் சார்ந்த பொருட்கள், ப்ரோக்கோலி, முளைகட்டிய தானியங்கள், காலிஃப்ளவர், கடுகு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இரும்புச்சத்து குறைவாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு வரும். எனவே நட்ஸ், முட்டை, கோழி கறி, மீன், கீரை, முழுதானியங்கள், பீன்ஸ், விதைகள் போன்ற இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செலினியம் தைராய்டு ஹார்மோனை சரி சமமாக வைத்திருக்க உதவும்.
எனவே கொட்டை வகைகள், நட்ஸ், மீன், செலினியம் சேர்க்கப்பட்ட உணவுகள், கோழிக்கறி, தானியங்கள், சீஸ், முட்டை, பிரௌன் அரிசி, சூரியகாந்தி விதை, பீன்ஸ், மஷ்ரூம், கீரை, பால், யோகர்ட், வாழைப்பழம், பூண்டு போன்றல் செலினியம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதேபோல் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைக்க துத்தநாகம்(Zinc) உதவும். எனவே, Zinc நிறைந்த இறைச்சி வகைகள், மட்டி(Shellfish), பருப்பு வகைகள், விதைகள், நட்ஸ், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், முட்டை, தானியங்கள், டார்க் சாக்லேட் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
Average Rating