வருத்தும் முதுகுவலி… விரட்டலாம் இப்படி!! (மருத்துவம்)
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்ற பெரியவர்கள் வரை பலரும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். முதுகுவலி வருவதற்கான அடிப்படைக் காரணம் குறித்து நம்மில் பலரும் தெரியாமல் இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. முதுகுவலி ஏற்படக் காரணம் என்ன? அதற்கான தீர்வு, சிகிச்சை முறைகள் என அனைத்து பற்றியும் விளக்கம் அளிக்கிறார் இயன்முறை மருத்துவரான (physiotherapist) கோமதி இசைக்கர்.
முதுகுவலி என்பது?
முதுகுவலி என்பது முதுகு தண்டு வடத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்படக்கூடிய வலி. அதாவது, கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப்பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும்புகள் போன்றவற்றின் கலவையே முதுகுத்தண்டுவடம். இது தவிர முதுகு தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் சில நரம்புகள் மூளையின் தொடர்ச்சியாகவும், சில நரம்புகள் கை, கால் நரம்புகளுடன் இணைக்கப்பட்டும் இருக்கும். இதில் ஏதேனும் சிறு பிரச்சனைகள் தொடங்கி பெரிய பிரச்சனைகள் வரை ஏற்படுவதால் ஒருவருக்கு வலி ஏற்படக்கூடும். அத்துடன் தசை மற்றும் முதுகுத்தட்டிலும் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதாலும் முதுகுவலி வரக்கூடும்.
காரணங்கள்?
* போதிய உடற்பயிற்சியும், போதிய சத்துணவும் இல்லாததால்
* வயது காரணமாக முதுகு எலும்பு தேய்மானம் அடைவது, முதுகுத்தட்டு வறட்சி அடைவது, முதுகுத்தட்டு பிதுங்குவதால்
* தசைப்பிடிப்பு (muscle catch), தசை சமச்சீரின்மை (muscle imbalance) மற்றும் அதிக தசை அயர்ச்சி (muscle strain)
* கிருமிகளின் தாக்குதல் (TB பாக்டீரியா)
* எலும்பு புற்றுநோய்
* உடல் பருமன் (அதிலும் குறிப்பாக அளவுக்கதிகமான தொப்பை)
* அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வதும், நடப்பதும், பயணிப்பதும், வாகனம் ஓட்டுவதும்
* தவறான முறையில் பளு தூக்குதல்
* பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் அதைச்சுற்றிய பகுதியில் ஏற்படும் கிருமித் தொற்று
* மகப்பேறு காலத்தில் வயிற்றுப்பகுதியில் எடை கூடுவதாலும் (6 முதல் 10வது மாதம் வரைக்கும்), குழந்தை பிறப்புக்குப்பின் போதிய உடற்பயிற்சி
இல்லாததாலும் வலி வரக்கூடும்.
* மாதாந்திர உதிரப்போக்கு சமயத்தில்
* 40 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் குறைவால் எலும்புகளில் ஏற்படும் கால்சியம் குறைவு.
இவை பெரும்பாலும் முதுகுதண்டுவடத்தில் உள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் போன்றவற்றில் ஏற்படும் சிறு பாதிப்புகள் தொடங்கி, பெரிய பாதிப்புகள் வரை பாதிப்பினை பொறுத்து வேறுபடலாம். இத்துடன் மது மற்றும் புகைப்பிடிப்பதாலும் வரலாம் என அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
வயது?
முதுகுவலியைப் பொறுத்தவரை இந்த வயதினருக்குத்தான் வரும் என்பது கிடையாது. அதனால், எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகள் முதல், கோலூன்றி நடக்கும் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் முதுகுவலி வரலாம். அதிலும் பரவலாக 30 வயது முதல் 60 வயதுவரை முதுகுவலியால் அவதிப்படுபவர்கள்தான் அதிகம் என்றாலும், அதில் பெண்கள் தான் மிக அதிகம் எனலாம். முதுகுவலியைப் பொறுத்துவரை வளரும் நாடுகள் மட்டுமின்றி வளர்ந்த நாடுகளிலும் கணிசமாக அதிகரித்த வண்ணம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. அத்துடன் ‘பத்துபேரில் எட்டுபேர்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் முதுகுவலியால் அவதிப்பட்டிருப்பர்’ என்று சொல்கிறது இன்னொரு புள்ளிவிவரம்.
வராமல் தடுக்க?
* நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்தும், நின்றும் வேலை செய்வதைத் தவிர்ப்பது
* அப்படி வேலை செய்யும்போது 90 டிகிரி அளவில் உட்கார்ந்தபடி நிமிர்ந்து நேராக உட்கார்ந்து வேலை செய்வது
* தவறான முறையில் வலுவான பொருட்களை தூக்குவதை தவிர்ப்பது
* அதேபோல் இரண்டு மற்றும் 4 சக்கர வாகனம் ஓட்டும்போது நேராக 90 டிகிரியில் உட்கார்ந்தபடி ஓட்டுவது
* குழந்தைகள் அதிக சுமை கொண்ட புத்தகப்பை தூக்குவதை தவிர்ப்பது
* கணிப்பொறியில் வேலை செய்யும்போது அதற்கேற்றார்போல் அமர்ந்துகொண்டு வேலை செய்வது
* தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி (அ) நடைப்பயிற்சி, யோகா, வாரத்தில் இரண்டுநாள் குறைந்தது 40 நிமிட நீச்சல் பயிற்சி
* எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டியோடு சேர்த்து, தசைகளுக்குத் தேவையான புரதச்சத்துள்ள உணவு உட்கொள்ளுதல்
* உயரத்துக்கேற்ற எடையை கொண்டிருத்தல்
* மது மற்றும் புகை தவிர்த்தல்.
இவற்றோடு.. முதுகு தண்டுவடத்திற்கு எந்தவித பாதிப்பும் வராத அளவுக்கு சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை தங்களது அன்றாட வேலைகள் தொடங்கி, படுக்கைத் தூக்கம் வரை கவனமாகப் பார்த்துக்கொள்வது போன்றவற்றால் ஒருவருக்கு முதுகுவலி வராமல் தடுக்கலாம்.
பிரச்சனை பலவிதம்?
முதுகுவலி என்பது வெறும் முதுகுவலி என்று மட்டுமே நினைத்து அப்படியே தொடர விட்டுவிடாமல் உடனுக்குடன் அதற்கான தீர்வு மேற்கொள்வது மேலும் பல பாதிப்புகளை வளரவிடாமல் தடுக்க வழிவகுக்கும். அதாவது… சிலருக்கு முதுகு வலியுடன் கூடிய கால்வலி (கால் மரப்பது, தசை செயலிழப்பு, எரிச்சல், குடைதல்) வரக்கூடும். சிலருக்கு இருமுவதால், தும்புவதால் கூட முதுகு வலி அதிகரிக்கலாம். சிலருக்கோ குறுகிய தூரம் நடப்பது, சிறிது நேரம் அமர்வது கூட கடினமாக இருக்கும். சிலரால் தன் அன்றாட வேலைகளை கூட செய்ய முடியாமல் போகலாம். இப்படி முதுகுவலியால் இன்னும் எத்தனையோ விதமான உடல் பிரச்சனைகள் மட்டுமின்றி, மனம் சார்ந்த பிரச்சனைகளும் வரக்கூடும்.
அறிகுறிகள்..
* முதுகுப்பகுதியில் மந்தமான வலி ஏற்படுதல்
*கால் மரத்துப்போதல், எரிச்சல், குத்துதல், குடைதல்
* நம் அன்றாட வேலைகளை செய்யும்போது சிரமம் ஏற்படுதல்.
எப்படிக் கண்டறிவது?
ஒருவருக்கு திடீரென முதுகுவலி வந்தால், அது அப்போதைய தற்காலிக செயலால் வந்த வலி என்று விட்டுவிடலாம். அதுவே தொடர்ந்து வரும் பட்சத்தில் அவர் உடனடியாக இயன்முறை மருத்துவரை (physiotherapist) அணுகவேண்டியது அவசியம். முதுகுவலியைப் பொறுத்துவரை சாதாரண special manual test மூலமாக எந்தெந்த தசைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், நரம்பு அழுத்தம் ஏதேனும் உள்ளதா என்பதையும் கண்டறியலாம். பாதிப்பு இருக்குமாயின் அதற்கேற்ப சிகிச்சைகள் வழங்கப்படும். அதையும் தாண்டி வலி இருப்பின் எக்ஸ்ரே மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலமாக வேறு பிரச்சனைகள் ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிகிச்சை முறை?
முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்சனையைப் பொறுத்து ஒருவருக்கு உடற்பயிற்சிகள் தொடங்கி, அறுவை சிகிச்சை வரை பலவிதமான சிகிச்சைகள் வழங்கப்படும். சிலருக்கு சாதாரண முதுகுவலியாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு.. சில மருத்துவ ஆலோசனைகளோடு, வாழ்க்கை முறை மாற்றம், ஓய்வு, வலி நிவாரண உபகரணங்கள் போன்றவற்றை கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்.
அதுவே, அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக நிரந்தர தீர்வினை பெறலாம். அறுவை சிகிச்சை செய்துகொண்டால் நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடுமா? கண்டிப்பாக, அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இயன்முறை மருத்துவர்களின் ஆலோசனைபடி தொடர்ந்து செயல்பட்டால் வாழ்நாள் முழுமைக்கும் முதுகுவலி இல்லாமல் நிரந்தரத் தீர்வு காணமுடியும்.
எவ்வளவு செலவாகும்?
மருத்துவ ரீதியாக ஒருவருக்கு முதுகு வலி ஏற்பட என்ன காரணம் என்பதைக் கண்டறிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றிற்கு 2 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அதில் ஆரம்பகட்ட பிரச்சனை மட்டுமே இருக்கிறது என்று கண்டறியும் பட்சத்தில் பயிற்சிகளும், வலி நிவாரண உபகரணங்களின் மூலமாக அவர்களின் பிரச்சனையை குணப்படுத்த சில ஆயிரம் மட்டுமே செலவாகும். அதுவே அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு பிரச்சனை இருப்பவர்களுக்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ள 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகலாம். தவிர.. தலைமை அரசு மருத்துவமனைகளில் இலவச இயன்முறை சிகிச்சையும் வழங்கப் பட்டு வருகிறது. அத்தோடு மிகக் குறைந்த கட்டணத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரேயும் எடுக்கலாம்.
கட்டாயம் கூடாது?
‘முதுகுவலிதானே பெயின்கில்லர் வாங்கிப் போட்டா சாரியாய்டும்’ என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், மருந்துக் கடைகளில் வாங்கி சாப்பிடுவது முற்றிலும் தவறு. இதனால் முதுகுவலியானது கொஞ்சம் கூட சரியாகாமல் போவதோடு, கிட்னி பாதிப்பு உள்ளிட்ட இன்னும் பல பக்க விளைவுகள் வரக்கூடும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.
’எந்தவொரு வலியும் தானாக வருவதில்லை; நாம்தான் அதை வரவழைக்கிறோம்..’ என்பதற்கு முதுகுவலி தக்க உதாரணம். எனவே, இனி முதுகுவலி விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருந்தால், நாம் ஒவ்வொருவரும் முதுகுவலி வராமல் தடுக்கலாம். வாழ்வை இன்னும் சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றார் இயன்முறை மருத்துவரான (physiotherapist) கோமதி இசைக்கர்.
Average Rating