கொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம் !! (கட்டுரை)

Read Time:21 Minute, 7 Second

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற நம்பிக்கையை, மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் கூட, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரான புள்ளிவிவரங்கள், மக்கள் ஆறுதலடையும் விதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

அதுபோலவே, தற்போதிருக்கின்ற களச் சூழலைப் பயன்படுத்தி, ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதன் மூலம், சட்டத் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்வது மட்டுமன்றி, ஆட்சியையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அரசாங்கம் எடுத்து வருகின்ற எத்தனங்கள், ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ நிலைமைகளையே அவதானிக்க முடிகின்றது.

உலகில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகே, இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்குத் திகதி குறிக்கப்பட்டு, வேட்புமனுக்களும் ஏற்கப்பட்ட பின்னர், தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் முழுக் கவனத்தையும் செலுத்தியது.

இப்போது, ‘கொரோனா’வில் இருந்து வெளியேறும் திட்டமொன்றில் பயணித்து, தேர்தலுக்குள் நுழைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய சூழலில், யதார்த்தங்களாலும் நடைமுறைச் சவால்களாலும் நாடு உண்மையிலேயே கொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில், செய்வதறியாது அவதிப்படுகின்றது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

அரசாங்கத்தின் நடவடிக்கை

இலங்கையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய வேளையில், விமானங்களின் உள்வருகை தாமதித்தே கட்டுப்படுத்தப்பட்டமை போன்ற சிற்சில தவறுகள் இடம்பெற்றிருந்தாலும் கூட, அதன் பின்னர், கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் பல, தமது நாட்டை முற்றாக முடக்கநிலைக்கு உட்படுத்துவதற்குத் தயங்கிய வேளையிலும் கூட, இலங்கை அரசாங்கம், ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்தி, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது. இதை ஒப்பீட்டளவில் வெற்றிகரமாகவும் செயற்படுத்தியது.

ஆட்சியாளர்களின் அசட்டுத் துணிச்சலான தீர்மானங்களை விட வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புத் தரப்பினரின் அர்ப்பணிப்புமிக்க சேவை, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியது; இன்னும் பங்காற்றி வருகின்றது.

ஆனால், எதிர்பாராத விதமாக அரசாங்கம், ஏப்ரல் 20ஆம் திகதியில் இருந்து, கட்டுப்பாடுகளைக் கட்டம் கட்டமாகத் தளர்த்தி வருகின்றது. “இலங்கையில், கொரோனா வைரஸ் பரவுவதற்கு இன்னும் வாய்ப்புள்ளது என்றபடியால், ஊரடங்கைத் தளர்த்தும் தீர்மானத்தை இப்போது எடுக்க வேண்டாம்” என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்தது.

ஆனால், அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் சுகாதார சேவைகள் பணிப்பாளரும், எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன என்ற தொனியிலேயே கருத்துகளை வெளியிட்டார்கள். அதுமட்டுமன்றி, ஏப்ரல் 20ஆம் திகதியில் இருந்து, நாட்டின் 20 மாவட்டங்களில் ஊடரங்குடன் தொடர்புபட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் அவசரத்திலேயே அரசாங்கம் இவ்வாறு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுத்ததாகப் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

சமகாலத்தில், தேர்தல் இப்போது அவசியமில்லை என்றும் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், அரசியலரங்கில் தத்தமது இலாப-நட்டங்களுக்கு ஏற்ப, ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளும் கட்சிகளால் முன்வைக்கப்பட்டன. ஆனால், தாம் தேர்தலுக்கு அவசரப்படவில்லை என்றே, அரசாங்கம் சொல்லிக் கொண்டிருந்தது.

எதிர்பாராத நிலைமை

அரசாங்கமும் சுகாதாரத் துறையும் கொவிட்-19 விடயத்தில், எதிர்வுகூரியதற்கு மாற்றமான போக்கு, அதன் பின்னர் அவதானிக்கப்பட்டது. அதாவது, 20 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைப் பகல் வேளைகளில் தளர்த்த அரசாங்கம் முடிவெடுத்த சில மணிநேரங்களில், கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் பெண் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை அடையாளம் காணப்பட்டமை காரணமாக, 65 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதேபோன்று, கொழும்பை அண்டிய பகுதிகளிலும் நாட்டின் வேறு ஒருசில பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனால், கொழும்பின் பல பகுதிகள் உள்ளடங்கலாக, மேலும் பல பிரதேசங்களைப் புதிதாக முடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏப்ரல் 20 இற்குப் பிறகு ஏற்பட்டது.

இதேவேளை, கடற்படை வீரர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. கொத்துக் கொத்தாக கடற்படை, இராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினருமாக, இதுவரை 310 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக கொழும்பிலும் படையினரிடையேயும் திடீரென இவ்வாறு கொரோனா வைரஸ் பரவியமை, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பெரும் சவாலையும் பின்னடைவையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

இதன்படி, 20 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளத்தப்பட்ட வேளையில், 271ஆகக் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை, இந்தப் பத்தி எழுதப்படும் வரை, 526 பேரால் அதிகரித்திருந்தது. மேலதிகமாக, இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன. இதனால், ஊரடங்கைத் தளர்த்துவதற்கு முன்னர் எடுத்த தீர்மானத்தை, அரசாங்கம் மீள்பரிசீலனை செய்து, வேறு விதமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது எனலாம்.

எனவே, அரசாங்கம் அவசரப்பட்டு கட்டுப்பாடுகளைத் தளத்தியிருக்கக் கூடாது என்ற விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. தேர்தலை நடத்துவதற்கு முன்னேற்பாடாகவே, இவ்வாறான தீர்மானங்களை, அரசாங்கம் அசட்டுத் துணிச்சலோடு மேற்கொள்கின்றது என்றும் சிலர் அபிப்பிராயங்களை முன்வைக்கின்றனர். ஆனால், இன்னும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படாத பகுதிகளிலும், கணிசமான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 20ஆம் திகதி, கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்குக் கடுமையான ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், மே 11ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்குப் பெரிதாக இதுவரை விமர்சனங்கள் எழவில்லை.

ஆக மொத்தத்தில், நாட்டை இன்னும் மூடி, முடக்கி வைக்க முடியாது என்று, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் அரசாங்கம் எடுத்த நிலைப்பாட்டுக்கு இசைவாக, மே முதல் வாரத்தில் கணிசமான மக்களும் வந்து சேர்ந்திருக்கின்றனர் என்று சொல்லலாம்.

முடக்கியதன் விளைவு

இலங்கை ஒரு சிறிய தீவு என்பதற்கப்பால், தன்னிறைவுப் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளாத ஒரு தேசமாகும். இந்நிலையில், ஒன்றரை மாதங்கள் முடக்கத்தை அமல்படுத்தியதன் விளைவாக, இலங்கையில் பல நிறுவனகள் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளில் கைவைக்கத் தொடங்கி விட்டன. இன்னும் சில நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்வது பற்றியும் ஆலோசித்து வருகின்றன.

உண்மையில், அன்றாட உழைப்பாளிகள், கூலித் தொழிலாளர்களைக் கொரோனா வைரஸ் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லைத்தான். ஆயினும், அவர்கள் சில நாள்களில் ஓரளவுக்கு வழமைக்குத் திரும்பிவிடுவார்கள்.

ஆனால், கொரோனா வைரஸால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டதைப் போன்றே, நமது நாட்டில் இயங்கும் குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இலகுவில் மீண்டெழ முடியாத வருமான இழப்பைச் சந்தித்து நிற்கின்றன.

இது, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, தேசிய வருமானம், சென்மதி நிலுவை, நிதிக் கையிருப்பு என முக்கியமான விடயங்களில், பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறிகள், ஏற்கெனவே தென்படத் தொடங்கி விட்டன.

எனவே, நாட்டை இன்னும் மூடிவைத்திருந்தால், மீண்டெழுவதற்கு மேலும் அதிகமான காலத்தை எடுக்கும் என்று அரசாங்கம் கருதியதால்த்தான், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் முடிவெடுத்தது என எடுத்துக் கொள்ளலாம்.

உப நோக்கம்

ஆயினும், இதில் அரசியல் காரணங்களும் அரசியல்சார் எதிர்பார்ப்புகளும் இருந்தன; இருக்கின்றன என்பதை, யதாத்தங்களைப் புரிந்தவர்களால் மறுக்கவும் முடியாது. அதாவது, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில், ஆட்சியாளர்கள் எந்தளவுக்கு வெற்றியடைகின்றார்கள் என்பது, அவர்களது அரசியல் வெற்றி அல்லது தோல்வியில் செல்வாக்கும் செலுத்தும் உலக ஒழுங்கு ஒன்று, இன்று உருவாகியிருக்கின்றது.

இந்த ஒழுங்கின்படி பார்த்தால், வெற்றிகரமான கொரோனா வைரஸை இலங்கை கட்டுப்படுத்தியது என்ற எண்ணம், உலக நாடுகள் மத்தியிலும் மக்களிடத்திலும் காணப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவோ, சஜித் பிரேமதாஸவோ ஆட்சியில் இருந்திருந்தால் சிக்கல்கள் அதிகரித்திருக்கும் என்ற அபிப்பிராயம் பொதுவாக மக்கள் மத்தியில் உள்ளது.

இதேநேரம், மக்களுக்குக் கட்டம் கட்டமாக, அரசாங்கத்தின் உதவிகள் சென்றடைந்துள்ளன. தேர்தல் பிரசாரங்களைச் செய்வதற்கான வாய்ப்பும் வசதியும் ஆளும் தரப்புக்கே அதிகமுள்ளது.

எனவே, இந்தப் பின்புலங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அதிலிருந்து அரசியல் விளைவொன்றைப் பெற்றுக் கொள்வதாயின், தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்திருக்கலாம். இது அரசியலில் சாதாரணமான வியூகமே.

அதன்படி, நாட்டில் இயல்பு வாழ்க்கை ஏற்பட்டு விட்டதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைந்தமையும் அரசாங்கம் எடுத்த மேற்படி தீர்மானத்துக்கு உப காரணமாக அமைந்திருக்கலாம். இருப்பினும், தேர்தல் ஜூன் 20 இற்குத் தள்ளிப்போனமையால் கொரோனா வைரஸ் குறித்து, இன்னும் கொஞ்சம் கூடிய கவனத்தைச் செலுத்த அரசாங்கத்துக்கு அவகாசம் கிடைத்துள்ளது.

சட்டச் சிக்கல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது, இலங்கை அரசமைப்பு குறிப்பிடுகின்ற அடிப்படை விடயமாகும். எனவே, திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, இதுவரை தேர்தலொன்றை நடத்துவதற்கு ஏதுவான சூழலொன்று ஏற்படவேயில்லை என்பது, வெள்ளிடைமலை.

இந்நிலையிலேயே, மூன்று மாதங்கள் கழித்து, தேர்தலொன்றை நடத்த முடியாது எனவும் எனவே, உரிய தினத்தில் தேர்தல் நடைபெறவில்லையாயின், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கூட்ட வேண்டும் என்றும் அரசியல் அரங்கில் காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தில், நாடாளுமன்றம் கூடவில்லை என்றால் அமைச்சரவைக்கு நிதி உள்ளிட்ட விடயங்களைக் கையாளும் சட்ட ரீதியான அதிகாரமும் இல்லாது போய் விடும் சாத்தியமிருப்பதாகச் சொல்ல முடியும். எனவே, கொரோனா வைரஸ் விவகாரத்தைத் தவிர்த்துப் பார்த்தால், நாடாளுமன்றத் தேர்தலைத் தாமதிக்காது நடத்துவதே சிறந்த தெரிவு என்று அரசாங்கம் கருதுவதாகத் தெரிகின்றது.

இதற்கிடையில், “மே 10ஆம் திகதிக்கு முன்னர், நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற உத்தரவாதத்தை வழங்கினால் மாத்திரமே, ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்தக் கூடியதாக இருக்கும்” என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். அதன் பின்னரான அவரது கருத்துகள், ஜூன் 20இல் வாக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என, மக்கள் நம்பும்படியாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு அடிப்படைக் காரணம், நாட்டில் வேகமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்கின்றமையும் என்னதான் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான களச் சூழலும் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்க்கும் காலஅவகாசமும் கைகூடி வராமை ஆகும்.

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, நாட்டை ‘வழமைக்குத் திருப்புவதில்’ அரசாங்கம் கூடிய கவனத்தைச் செலுத்தும் என்றே எதிர்பார்க்க முடிகின்றது.

மனுக்கள் தாக்கல்

எப்படியிருப்பினும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு, கொரோனா வைரஸ் மட்டுமன்றி, சட்ட ரீதியான சவால்களும் ஏற்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பைச் சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜூன் 20 எனத் திகதி குறிக்கப்பட்டுள்ள தேர்தலானது, மேலே குறிப்பிட்ட அரசமைப்பின் பல்வேறு சரத்துகளை மீறுவதாகவே மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், நாடு இன்றிருக்கின்ற நிலைமையில், சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என்ற அடிப்படையில், தேர்தல் அறிவிப்புக்கான வர்த்தமானியை இரத்துச் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மார்ச் 16ஆம் திகதிக்கு மேலதிகமாக, 19ஆம் திகதி வரையும் பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையிலா வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்பட்டன என்ற விடயமும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

‘சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம்’ என்ற அடிப்படையில், மக்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், கடந்த சில நாள்களாக கொரோனா வைரஸ் ஒழிப்பையும் தேர்தலையும் சமாந்தரமாக முன்னெடுக்க அரசாங்கம் நினைக்கின்றது.

இந்தப் பின்னணியில் சட்டத்தின் வளைவு சுழிவுகள், நுணுக்கங்களைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கே அரசாங்கம் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஒருவேளை அது சாத்தியப்படாமல் விட்டால், என்ன செய்வது என்பதை, நாடி பிடித்துப் பார்க்கின்ற சந்திப்பாகவும், முன்னாள் எம்.பிக்களுடனான சந்திப்பை நோக்க வேண்டியும் இருக்கின்றது.

போகின்ற போக்கைப் பார்த்தால், ஜூன் 20ஆம் திகதியோ அல்லது அதற்குச் சில நாள்களுக்குப் பின்னரோ, தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின், அத்தேர்தலை கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாப்பான முறையில், நடத்தி முடிப்பதென்பது, தேர்தல் வெற்றியைக் காட்டிலும் அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிரளவைக்கும் வெறித்தனமான ஆப்டிகள் இல்லுசன்கள் ! (வீடியோ)
Next post சிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் ! (வீடியோ)