‘தெருவில் வைத்து தலையில் ஊத்து’ !! (கட்டுரை)
இப்போது ‘கொரோனாக் காலம்’; நோயின் பயம் காரணமாக, வீட்டுக்குள் யாவரும் முடக்கப்பட்டு இருந்தாலும், ஒவ்வொருவரும் புதுப்புது அனுபவங்களை அன்றாடம் பெற்றுக்கொள்கின்றார்கள். மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்தத் தொற்று, அபாயகரமானது; மரணத்தை விரைவில் வரவைப்பது; வரவழைப்பது என்பது மட்டும் உறுதி.
அந்தவகையில், இந்தத் தொற்றைக் கண்டு, வையகமே நடுங்கிப் போய் உள்ளது; அமைதியாக உறக்கத்தில் இருக்கின்றது. நாளை என்ன நடக்குமோ என, நடுங்கியவாறு உள்ளது.
இந்தத் தொற்று, சீனாவில் ஆரம்பித்தபோது, அது ஏற்படுத்தப் போகின்ற அழிவும் அது, பரவும் வேகமும் நோயின் வீரியமும், பெரிதாக எவராவும் கண்டுகொள்ளப்படவில்லை; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஆனால், இன்று, பல இலட்சம் மனித உயிர்கள் விழுங்கப்பட்டு விட்டன. பல இலட்சம் பேர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தத்தளிக்கின்றனர். முழு உலகமும், இது தொடர்பில் மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தொற்று தன்னைத் தவிர, பிற விடயங்களைப் பேசச் சற்றும் அனுமதிக்கவில்லை.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், கடந்த வாரம் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட வேளையில், யாழ்ப்பாணம் – ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மருந்தகத்துக்கு முன்பாக, வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றார்கள். தற்போதைய கொள்ளைநோய் அனர்த்த சூழலில், சமூக இடைவெளியைப் பேணும் பொருட்டு, அக்கடையின் முன்னால், ஒன்று தொடக்கம் 10 வரை இலக்கமிட்டு, வட்டமும் வரையப்பட்டிருந்தது.
செல்வச்சந்நிதி முருகன் கோவிலில், பூசகர் முகத்தில் கட்டியிருப்பது போன்று, அனைவருமே தங்கள் முகத்தைக் கட்டிக் கொண்டு நின்றார்கள். எவ்வாறாயினும், ஒரு சிலர் இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியிலும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
“உது என்னடாப்பா புதுமையான பேச்சு’’என, ஆறாவது வட்டத்தில் நின்ற ஐயா சொன்னார்.
“என்ன, எனக்கு ஒன்றும் விளங்கவில்லை’’ என, ஏழாவது வட்டத்தில் நின்றவர் கூறினார்.
“அதாவது, நீங்கள் எல்லாரும் வீட்டுக்கு வெளியே சென்று, மீண்டும் வீட்டுக்கு வரும் போது, உங்கள் கைகளைச் சவர்க்காரம் போட்டு நன்றாகக் கழுவுங்கள் என்றுதானே எல்லாப் பேப்பரிலும் ரேடியோக்களிலும் டி.வியிலும் எல்லாத்திலையும் திரும்பத் திரும்பச் சொல்லுகினம்’’ என்று கூறினார்.
“ஏன், இதுகூட எங்கட சனத்துக்குத் தெரியாதே; இது ஓர் அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கம் தானே’’ என மற்றையவர் கூறினார்.
“உனக்குத் தெரியுமோ, தெரியாதோ எனக்குத் தெரியாது; ஆனால், எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எங்கட ஐயா (அப்பா), அந்தக் காலத்தில செத்த வீட்டுக்குப் போட்டு, நேராக வீட்டுக்குள் வர மாட்டார்; ஏன் முற்றத்துக்குக் கூட வரமாட்டார். அவர், பிள்ளை… பிள்ளை… என்று கூப்பிட்டபடி, வீட்டுப் படலையடியில நிற்பார். நாங்கள் பெரிய வாளியில் தண்ணியை அள்ளிக் கொண்டு போய், படலையடியில் குந்தியிருக்கும் அவரது தலையின் மேல் ஊத்துவோம். அதன் பின்னரே, அவர் வீட்டுக்குள் வருவார்’’ என மற்றையவர் கூறினார்.
இவ்வாறு தொடர்ந்த இவர்களது உரையாடலில் இருந்து, ஆழமான கருத்து ஒன்றை உள்வாங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது, இன்றைய சந்ததியினரால் மூடநம்பிக்கைகள் என ஒதுக்கப்படும் சில பழக்கவழக்கங்கள், எமது மூதாதையரின் ஆரோக்கியத்துக்கான மூலோபாயங்களாக இருந்துள்ளன. அவர்கள், தங்களது சுகாதாரத்தை மிகவும் எளிமையாகப் பாதுகாத்தும் பராமரித்தும் வந்துள்ளார்கள். மரண வீட்டு கிருமிகளை, வீட்டுக்குள் எடுத்துவருவதைத் தவிர்க்கும் முகமாகக் குறித்த நபரிலிருந்து, தொற்று நீக்கம் செய்த பின்னரே, வீட்டுக்குள் வர அனுமதித்தனர்.
இவ்வாறான பழக்கவழக்கங்களை இன்றும் ஒருசிலர் மரபாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். அவர்கள், தமது மூதாதையர் செய்ததைத் தாங்களும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தொடர்ந்து செய்துவருகின்றார்கள். இதனூடாக, ஒரு சிறப்பானதும் நன்கு கட்டமைக்கப்பட்டதுமான சுகாதாரப் பழக்கவழக்கம் பின்பற்றப்பட்டு வந்துள்ளமை, இன்றைய கொரோனா வைரஸ் காலத்தில், அப்பட்டமாக உணரக்கூடியதாக உள்ளது.
இவ்வாறாக தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், எம் முன்னோர்களால், பல சுகாதாரப் பழக்க வழக்கங்கள், காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றில் சில மரபாகவும் சில சமய நம்பிக்கைகள் ஊடாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. இவை, நமது சமூகத்தில், “கடலும் உப்புச் சுவையும் போல” இணைபிரியாது இருந்துள்ளன. எழுத்தில் இல்லாத சட்டங்களாக, ஆனால் ஆழமாக வலுப்பெற்றனவாகச் சமூகத்தை வழி நடத்தியுள்ளன.
இத்தகைய வழக்கங்கள் ஒவ்வொன்றையும் இங்கு பட்டியல் இடுவது தேவையற்றது; சலிப்பை ஏற்படுத்தி விடும். ஆனால், சந்ததி சந்ததியாக இவ்வாறாகப் பேணப்பட்டு வந்த உயர்ந்த மரபுகள், கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.
அதிரடியாக நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப மாற்றங்கள், தலைமுறை இடைவெளிகள், நாகரிக மாற்றங்கள் போன்றவை, இன்று இவற்றைக் கேள்விக்கு உட்படுத்தி விட்டன.
முக்கியமாக, இலங்கையில் தமிழ்ச் சமூகம், கடந்த 40 ஆண்டுகளாகக் கடந்து வந்த இடப்பெயர்வு வாழ்வு, இவ்வாறான மரபுகளின் தொடர்ச்சித் தன்மையை அடியோடு அறுத்துப் போட்டு விட்டது. இதனால், இவற்றில் சி(ப)லவற்றைப் பக்குவமாக அடுத்த சந்ததியிடம் கையளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது.
மேலும், இன்றைய நவநாகரிகமானதும் முற்போக்கானதுமான உலகில், நம்மத்தியில் பழக்கத்தில் இருந்த அல்லது இருக்கின்ற சுகாதாரப் பழக்கவழக்கங்கள், பிற்போக்குத்தனமானவையாக அலட்சியப்படுத்தப்பட்டன; அவமதிக்கப்பட்டன.
எவ்வாறாக இருந்தபோதிலும், மாற்றங்கள் தவிர்க்க முடியாதவைகள். ஆனாலும், மாற்றங்கள் பயன்தரு நிலையில் உள்ளனவா, ஏற்பட்டதா என்பதே கேள்விக்குறிகளாகவே உள்ளன.
மாற்றங்கள் தொடர்பில் விளித்துக் கேட்க முன்னரும், அவை தொடர்பிலான விழிப்புணர்வு இல்லாத சூழ்நிலையிலும் மாற்றங்களுக்கு இசைவாக்கம் கொள்ள வேண்டிய கட்டாயம் (திணிப்பு) ஏற்பட்டமை அல்லது, ஏற்படுத்தப்பட்டமை தவிர்க்கமுடியாததாகும்.
ஆனால், இன்று கொடிய கொரோனா வைரஸ், இழந்து போனதும் மறந்து போனதுமான மரபுகளை, மீள நினைவு ஊட்டியும் கடைப்பிடிக்கவும் வழி செய்திருக்கின்றது.
வீட்டுக்கு வெளியே சென்று, மீள வீட்டுக்கு வரும் போது, சவர்க்காரமிட்டுக் கை கழுவுங்கள் என்ற சாதாரண விடயத்தைக் கூட, திரும்பத் திரும்பக் கூற வைத்துள்ளது.
இவ்வாறான சுகாதார நடைமுறைகளைக் கட்டாயமாகக் கடைப்பிக்குமாறு உள்ளூர் சுகாதாரத் திணைக்களம் தொடங்கி, உலக சுகாதார நிறுவனம் வரை, திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன. கணிசமான மக்கள், தாம் நோய்நொடியின்றி வாழவேண்டும் என்பதற்காக, விரும்பியோ விரும்பாமலோ, இயலுமென்றாலோ இயலாது விட்டாலோ எப்படியிருந்த போதிலும் பல சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள்.
ஆனால், மறுபுறத்தே இவ்வாறான எமது சமூகத்தின் முன்னைய பழக்க வழக்கங்களை முறையாகவும் முழுமையாகவும் கடைப்பித்து வந்திருப்பின், கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து முற்றாக விடுபட்டிருக்கலாம் எனக் கூறவில்லை; கூறவும் முடியாது.
நமது அன்றாட வாழ்வில், துன்பங்களையும் துயரங்களையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும். இது இயற்கையின் இயங்கியல் விதி. இவ்வாறான கொள்ளை நோய் ஆபத்துகளில் பாதி, தாமாக வருபவை; மீதி, நாமாக இழுத்துக் கொள்பவை என்று கூறலாம். ஆனால், நடப்பு உலகில், நாமாகவே கூடுதலான துன்பங்களை வலிந்து இழுத்துக் கொண்டு வாழ்கின்றோமோ என எண்ணத் தோன்றுகின்றது.
பொருளாதாரத்தை மய்யமாகக் கொண்ட இன்றைய வாழ்வில், நிதி வளத்தில் மேலாண்மை கொண்டவரையே சமூகம் போற்றுகின்றது; கனம் செய்கின்றது.
கற்றோரும் மற்றோரும் பொருளாதாரத்தைத் தேடியே வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய வாழ்வில், எம் மரபுகளை முற்றிலும் மறந்து விட்டோம்.
இன்று, கொரோனா வைரஸ் மனிதனின் எல்லை மீறிய அட்டகாசங்களுக்குக் கடிவாளம் போட்டிருக்கின்றது. உலகின் ஒழுங்கையே மாற்றம் காணச் செய்திருக்கின்றது.
அமெரிக்கனோ, ஆங்கிலேயனோ, சீனாக்காரனோ, இந்தியனோ அனைவருமே கதிகலங்கி உள்ளனர் என்பதே உண்மை. அணுகுண்டு தயாரித்து, நீயா நானா பெரியவன் என அடிபட்ட அனைவரும் கண்ணுக்குத் தெரியாத அணுவளவு நுண்ணங்கி முன்னால் சுருண்டு வீழ்ந்து விட்டனர்.
இன்று, மனிதன் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம், வாசல் அருகே வந்துள்ளது. ஆனால், அதற்காக கொரோனா வைரஸ் அனர்த்தம் முடிந்தவுடன், உலக நாடுகள் தங்களுக்கு இடையிலான பகை மறந்து, உறவு பாராட்டும் எனக் கருத முடியாது.
உலகநாடுகளை விட்டு விடுவோம். இலங்கையரான நாம், கொரோனா வைரஸின் கொடும் துயரத்துக்குப் பின்னராவது விழித்துக் கொள்ள வேண்டும். இனவாதமும் மதவாதமும் இல்லாத தேசத்திலேயே நாம் மனதளவில் ஒன்றாக, ஒருமித்து இலங்கையராக எழுந்து நிற்க முடியும். ஏனெனில், நன்கு அபிவிருத்தியடைந்த பெரும் செல்வந்த தேசங்களே கொரோனா வைரஸின் தாக்கத்தால் பொருளாதாரத்தை இழந்து நிற்கின்ற வேளையில் நம்நாடு எம்மாத்திரம்?
Average Rating