நடனமே என் சிறகுகள்!! (மகளிர் பக்கம்)
‘‘எனக்கு பரதம், குச்சிப்புடி, கரகம், பறை, சிலம்பம், பொய்க்கால் குதிரை, கொக்கலி கட்டை, மான்கொம்பு, மாட்டுக்கொம்பு, கை சிலம்பம், கால் சிலம்பம், பெரிய குச்சி, சாட்டை குச்சி, ஜிக்காட்டம், தேவராட்டம், மோகினியாட்டம், கதக், ஒடிசி, வெஸ்டர்ன் ஃப்ரீ ஸ்டைல். கூலா ஹுப் (Hula hoop) என ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைகள் தெரியும்’’ என மூச்சுவிடாமல் பேசத் தொடங்கிய ஏஞ்சலின் ஷெரில் தற்போது தஞ்சை தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கூடவே பரதத்தில் டிப்ளமோவும்.
சின்ன வயதில் ஒப்பனைகள் செய்வது(makeup) பிடித்துப்போக, அந்த ஆர்வம் அப்படியே நடனத்துக்குள் என்னைக் கொண்டு வந்தது என்றவர், ‘‘என் அம்மா வாலிபால் விளையாட்டில் நேஷனல் பிளேயர். எனவே என்னையும் விளையாட்டு மைதானத்திற்குள் இறக்கினார். ஆனால் நான் நடனம்தான் என் விருப்பம், ஆளைவிடு சாமி என ஓடி வந்துவிட்டேன்’’ எனச் சிரித்த ஏஞ்சலின் சிரிப்பிற்கு பின்னால் மிகப் பெரும் சோகம் ஒளிந்திருக்கிறது. ஏஞ்சலின் உடல் ரீதியாக வலியினை அனுபவித்து வரும் சிறப்புக் குழந்தை.
குறிப்பாக சி.ஏ.எச்(CAH) எனப்படும் நோயால் பாதிப்புக்குள்ளானவர். சுருக்கமாக கான்டினல் அட்ரினல் ஹைபர்பிளாசியா (Congenital adrenal hyperplasia) பாதிப்பு இவருக்கு. ‘‘அதாவது எல்லோர் உடலிலும் நாளமில்லா சுரப்பி இருக்கும். அது இல்லாமல் பிறந்திருக்கிறேன்’’ என்கிறார், தனது புன்னகையில் வலிகளை மறைத்தவராய். ‘‘நம் உடலில் தோன்றும் உப்பு சிறுநீரகத்தின் வழியே வெளியேறும். எனக்கு அது நடைபெறாது. இதற்காக நான் தினமும் ஸ்டீராய்டு எடுக்கிறேன்’’ என்கிறார்.
ஏஞ்சலின் அம்மா ஜாக்குலின் ஜீவா நம்மிடத்தில் பேசியபோது, ‘‘என் சொத்து முழுவதையும் இந்த வியாதிக்காக செலவழித்துவிட்டேன். தாலி கூட என்னிடத்தில் மிஞ்சவில்லை என்றவர், ஒவ்வொரு பரிசோதனையுமே ஆறு ஆயிரம், ஏழாயிரம் என செலவை ஏற்படுத்தும். இது ஒரு மரபணு குறையென மருத்துவர்கள் சொன்னாலும், எங்களுடையது இன்டர் ரிலீஜியன் மேரேஜ். டூ வீலரை சர்வீஸ் செய்ய விட்டு எடுப்பதுபோல், அவ்வப்போது ஜிப்மர் மருத்துவமனையில் 10 நாள் உள் நோயாளியாய் தங்கி சரியான பிறகு திரும்பி வருவோம். காற்றடைத்த பலூன் போலத்தான் என் மகளின் வாழ்க்கை’’ என்கிறார் சோகத்தை மறைத்து புன்னகையோடு.
மேலே தொடர்ந்த ஜாக்குலின், ‘‘எல்.கே.ஜி படிக்கும்போதே முறையாக பரதம் கற்கத் தொடங்கினேன். என் உடல் அசைவுகளைப் பார்த்த மாஸ்டர் நடனத்துக்கான திறமை இயல்பிலே இருப்பதாய் சொல்லி, நாட்டியத்தின் மீது கவனம் வைக்கச் சொன்னார். போதிய பொருளாதார வசதி அப்போது எங்களிடம் இல்லை. தொடர்ந்து இசைப்பள்ளி மூலமாக கரகம், சிலம்பம் போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தேன். என் நிலையை அம்மா முகநூலில் பதிவிட, பரதத்தில் பி.எச்.டி. செய்யும் சுரேஷ் மாஸ்டர் நடனம் கற்றுக் கொடுக்க தானாக உதவ முன்வந்தார். இன்றுவரை அவருடன் இணைந்தே பரதத்தில் பயணிக்கிறேன். அதற்காக அவர் பணம் எதுவும் என்னிடம் பெற்றுக் கொள்ளவில்லை.
மேலும் என் திறமையைப் பார்த்த கலைமாமணி தேன்மொழி ராஜன் அவர்களும் கரகத்தின் அனைத்து நளிவு சுழிவுகளையும் கற்றுத் தந்தார். கிராமியக் கலைகளின் மீதிருந்த ஆர்வம் மேலோங்க, மேலும் சில கலைகளை நானாகவே யூ டியூப்பினைப் பார்த்தும், சிலவற்றை ஆசிரியர்கள் மூலமாகவும் கற்றுக் கொண்டேன்.கடலூரில் இயங்கும் சிறகுகள் என்ற தன்னார்வ அமைப்பின் மூலமாக என் திறமைகள் வெளி கொண்டுவரப்பட்டது. அவர்கள் உதவியால் கடலூரில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
தொடர்ந்து என் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து, பல வாய்ப்புகள் என்னைத் தேடி வரத் தொடங்கின. அந்த அமைப்பின் மூலமாக குவைத், மலேசியா போன்ற நாடுகளுக்கு நிகழ்ச்சிக்காகச் சென்று வந்தேன். என் நடன நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் முத்தமிழ் மன்றத்திலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.படிப்பிலும் நான் குறை வைக்கவில்லை. பத்தாம் வகுப்பில் 470 மதிப்பெண்களும் பனிரெண்டாம் வகுப்பில் 920 மதிப்பெண்களும் பெற்று தேர்வானேன். எனது திறமையினைப் பார்த்து கும்பகோணத்தில் இருக்கும் அன்னை கல்லூரி பைசா செலவின்றி அவர்கள் கல்லூரியில் படிக்க அனுமதித்துள்ளனர். என் கலை தாகத்தை வளர்ப்பதற்கும் கல்லூரி நிர்வாகம் மிகப் பெரும் பக்க பலமாக இருக்கிறது.
சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் ‘மக்கள் பாதை’ அமைப்பினர், என் நடன திறமையைப் பார்த்து அவர்களின் அமைப்பின் ‘கூத்து’ திட்டப் பொறுப்பாளராகவும் என்னை நியமித்துள்ளனர். கூடவே கடலூரில் இயங்கி வரும் சேனல் ஒன்றில் வி.ஜே.யாகவும் இருக்கிறேன். கலையின் மீதிருக்கும் தாகத்தால் அரசு நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், கல்சுரல்ஸ், கோயில் நிகழ்ச்சி எனத் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறேன். குவைத் நாட்டிற்கு சென்றபோது, இந்தியாவில் இருந்து 7 பேர் தேர்வாகிச் சென்றோம். அதில் நானும் ஒருத்தியாக இருந்தேன்’’ என்கிறார் பெருமிதம் பொங்க.
இதுவரை 900க்கும் மேற்பட்ட மேடைகள், 3 வெளிநாட்டுப் பயணம், 60 விருதுகள், 13 உலக சாதனை நிகழ்ச்சி என நம்மை திக்குமுக்காட வைத்தவர், கின்னஸ் சாதனை ஆசையும் எனக்கு உள்ளது என்கிறார்.
‘‘ராகவா லாரன்ஸ் மாஸ்டர் டீமிலும் நான் இருக்கிறேன். காஞ்சனாவில் கூட நான் சின்ன ரோல் நடித்திருக்கிறேன். தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும், சமுத்திரக்கனி அவர்களின் அடுத்த சாட்டை படத்திலும் எனக்கு சின்ன வாய்ப்பு கிடைத்தது என்றவர், இப்போதுவரை என் மருத்துவ செலவிற்காக ராகவா லாரன்ஸ் மாஸ்டரும் கடலூர் சிறகுகள் அமைப்பினரும் உதவி வருகிறார்கள்’’ என்கிறார் உதவியவர்களை நினைத்தவராய்.
‘‘நடனத்தில் பி.எச்.டி. செய்ய வேண்டும் என்பதே என் ஆசை’’ எனும் ஜாக்குலின், ‘‘என் குழந்தை பருவத்தில் கலைகளைக் கற்க போதிய
பண வசதி இல்லாமலும் நான் நிறைய கஷ்டப்பட்டேன். பொருளாதாரத் தடையால் எந்தக் குழந்தையும் கலையினைக் கற்க முடியாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, சிறகுகள் நாட்டியப் பள்ளி மூலமாக அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக நடன வகுப்புகளை எடுத்து வருகிறேன். மேலும் நலிவடைந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளையும் எடுக்கிறேன் என்றவர், மாற்றுத் திறனாளிகளுக்கும், மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் கலையார்வம் இருந்தால் அவர்களை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்’’ என்கிற திட்டங்களும் மனதில் இருப்பதாய் சொல்கிறார்.
கால்தடம் படாத மருத்துவமனைகளே இல்லை எனலாம். கடலூரில் இருக்கும் அத்தனை மருத்துவமனைகளிலும் என் மருத்துவ ரெக்கார்டுகள் இருக்கும். எனக்கான மருத்துவத்தை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்கிறேன் என்றவர், நான் ஆட ஆரம்பித்த பிறகு என்னை எப்போதுமே நடனத்தில் பிஸியாக வைத்துக்கொள்வதால், மருத்துவமனைகள் செல்வது குறைந்துள்ளது. எப்போதாவது மனம் சோர்வடைந்தால், கண்ணாடி முன்னால் நின்று ஆடத் தொடங்கிவிடுவேன்’’ என்கிறார் இந்த நாட்டிய தேவதை.
பெற்றோர்கள் தாங்கள் சாதிக்க முடியாத எதையும் குழந்தைகளிடத்தில் வலியத் திணிக்க வேண்டாம் என்றவர், அவர்களின் விருப்பம் என்னவோ அதைச் செய்ய குழந்தைகளை அனுமதியுங்கள் எனச் சொல்லி விடைகொடுத்தார்.
பரதத்துடன் சேர்த்து ஏஞ்சலின் கற்று வைத்திருக்கும் கலைகள் சுமார் 50க்கும் மேல்…
*கொக்கலி கட்டை. இதில் கட்டைகள் பெரியதாக இருக்கும்.
* பொய்க்கால் குதிரை என்பது தமிழர்களின் பாரம்பரிய ஆட்டம். இதில் கட்டை சிறியதாக இருக்கும். கையில் குதிரை உருவம் இருக்கும்.
* கை சிலம்பு என்பது தர்மபுரி மக்களின் கலை. அம்மனின் அழகை வர்ணித்து ஆடுவது.
* கால் சலங்கை ஆட்டம் ஈரோடு மக்களின் கலை வடிவம். இதில் கால்களில் நிறைய சலங்கை கட்டி ஆடுவார்கள்.
* ஜிக்காட்டம் என்பது பொள்ளாச்சி மக்களின் ஆட்டம்.
* கரகம் மதுரை மற்றும் தஞ்சை பகுதி மக்களின் கலை வடிவம்.
* ஒயில் ஆட்டத்தில் இரண்டு உண்டு. ஒன்று மகிழ்ச்சியினை வெளிப்படுத்த ஆடும் ஆட்டம். இதில் கைகளில் துணி இருக்கும். மற்றொன்று கோல் அல்லது களியல் வைத்து ஆடுவது. இது போர்கலை மாதிரி. குச்சிகள் பெரியதாக இருக்கும். இது சாட்டை குச்சி மற்றும் பெரிய குச்சி என அழைக்கப்படும்.
* அதே முறையில் ஆடுவதுதான் தேவராட்டம். இதில் தலையில் தலைப்பாகை இருக்கும். இது குறிப்பிட்ட இனம் சார்ந்தது என்பதால் துந்துபி என்கிறார்கள்.
* சிலம்பத்தில் ஒத்தக் கழி, ரெட்டக் கழி, சுருள், மான் கொம்பு, மாட்டுக் கொம்பு ஆட்டங்களும் உண்டு. இவை அனைத்தும் போர்கலை சார்ந்தது.
* மேலும் மயிலாட்டம், மாடாட்டம் போன்ற கலைகளும் உண்டு.
*இத்துடன் கேரள மாநிலக் கலையான கதக், குச்சிப்புடி நடனம் மற்றும் வெஸ்டெர்ன் ஃப்ரீ ஸ்டைல் நடனங்களையும் ஏஞ்சலின் ஆடுகிறார்.
Average Rating