ரவிவர்மா ஓவியமாக மாறிய நட்சத்திரங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 19 Second

ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ராஜா ரவிவர்மா வரைந்த சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவியின் ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. இவர் தான் லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளுக்கு ஒரு உருவம் கொடுத்தார் என்று கூட சொல்லலாம். நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். இவரின் ஒவ்வொரு ஓவியங்களும் புகழ்பெற்றவை. அப்படிப்பட்ட ஓவியங்களை மறுபடியும் தன் புகைப்படங்கள் மூலம் உயிர் கொடுத்துள்ளார் ஜி.வெங்கட்ராம்.

‘‘இந்த பிராஜக்ட் நாலு வருஷத்துக்கு முன்னாடி தோன்றியது. சுஹாசினி மேடம் தான் இந்த ஐடியா சொன்னாங்க. அவங்க ஃபேஷன் ஷோ ஒன்று நடத்தப் போவதாகவும் அதில் ரவிவர்மா ஓவியத்தை புகைப்படமா பிடித்து வைக்கலாம்ன்னு திட்டமிட்டாங்க. அப்படித்தான் லிசி மற்றும் குஷ்புவை முதலில் படம் பிடித்தேன். அதன் பிறகு அதை அப்படியே விட்டுட்டேன். கடந்த ஆண்டு தான் சமூக வலைத்தளத்தில் குஷ்புவின் புகைப்படத்தை வெளியிட்ட போது, அதற்கான ரெஸ்பான்ஸ் ரொம்பவே நல்லா இருந்தது. அதனால் டிசம்பர் மாதம் மறுபடியும் சுஹாசினி மேடத்துக்கு ஃபோன் செய்து, ரவிவர்மாவின் ஓவியத்தை கேலண்டராக செய்யலாமான்னு கேட்டேன். நேரம் குறைவாக இருக்கு… செய்ய முடியுமான்னு யோசிச்சவங்க… பிறகு சரின்னு சொல்லிட்டாங்க.. அதன் பிறகு தான் எங்க இருவரின் பயணம் துவங்கியது. மேலும் இதனை ஒரு நல்ல விஷயத்துக்கு செயல்படுத்தணும்ன்னு முடிவு செய்து தான் இந்த வேலையை துவங்கினோம்’’ என்றவர் ஒவ்வொரு ஓவியத்திற்கு ஏற்ற முகங்களை தேடிப் பிடித்துள்ளார்.

‘‘ரவிவர்மாவின் ஒவ்வொரு ஓவியமும் காவியம். அதில் உள்ள பெண்கள் அனைவரும் ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள். அதற்கு ஏற்ப ஆட்களை தேர்வு செய்யணும். நிறைய மாடல்கள் கிடைப்பாங்க. ஆனால் அந்த ஓவியத்தில் உள்ள சிரிப்பு, முகபாவம் போன்றவற்றை ஒரு ஆர்டிஸ்ட் தான் கொண்டு வர முடியும். காரணம் ஓவியத்தை பொறுத்தவரை கண்கள் தான் பேசும். அவரின் ஓவியத்திற்கு யாரெல்லாம் சரியாக இருப்பார்கள் என்று பட்டியலிட்டேன். ஓவியத்திற்கு ஏற்ற முக அமைப்பு மட்டும் இல்லை கண்கள், தலைமுடி தோற்றம், உடலமைப்பு எல்லாமே மேட்சாகணும். அப்படி தேர்வானவர்கள் தான் இந்த 11 பேர்’’ என்றவர் 40 நாட்களில் இதனை முடித்துள்ளார்.

‘‘இது சாதாரணமாக புகைப்படம் எடுப்பது போல் கிடையாது. ஏற்கனவே வரையப்பட்ட ஓவியங்களை புகைப்படமாக மாற்றணும். அது சரியாக அமையணும்ன்னு எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஓவியங்கள் ஓவியரின் கற்பனைக்கு ஏற்ப வரைவது. அதில் அவர் ஒரு பெண்ணுடைய உடலைமைப்பு முதல் அவர் உடுத்தி இருக்கும் உடை எல்லாவற்றிலும் அழகு சேர்த்திருப்பார். ஆனால் புகைப்படம் என்பது இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும். அதில் நாம் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. ஓவியத்தில் இருக்கும் பெண்கள் எல்லாரும் ஜரி வேலைப்பாடு கொண்ட பட்டுப்புடவையை தழைய தழைய உடுத்தி இருப்பாங்க. ஜரிகள் அடர்த்தியா இருந்தா, புடவை நாம் விரும்புவது போல் வளையாது. அதனால் பார்க்க பட்டு போல இருக்கணும். அதே சமயம் ஓவியத்திற்கு ஏற்ப மேட்ச்சாகணும். அந்த வேலையை உடை அலங்கார நிபுணர் அம்ருதா தான் பார்த்துக் கொண்டாங்க.

ஒவ்வொரு புடவை அதற்கு ஏற்ப ஜரி என எல்லாம் பார்த்து பார்த்து வாங்கினாங்க. சில புடவைகள் ஒன்பது கஜம் இருந்தது. அடுத்து நகைகள். எல்லாம் பழைய காலத்து நகைகள். அவை எல்லாம் இப்போது இல்லவே இல்லை. பிரின்ஸ் ஜுவல்லரி அதை செய்து கொடுத்தாங்க. செட் பொறுத்தவரை தேவா என்பவர் பார்த்துக் கொண்டார். ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படத்தில் மேஜை மேல் ஒரு நகைப் பெட்டி இருக்கும். அதே மாதிரி தேடிய போது வெத்தல பெட்டி தான் கிடைச்சது. தாம்பூலத் தட்டை வெட்டி அதை பட்டறையில் கொடுத்து அந்த பெட்டி போல் செய்து வந்தார். சில நாற்காலிகள் தெர்மாகோலில் செய்து, அதை ஓவியத்தில் இருப்பது போல் அமைத்துக் கொடுத்தார். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து தான் செய்தோம்’’ என்றவர் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘ரவிவர்மா ஓவியங்களில் மிகவும் புகழ் பெற்றது, ஒரு பெண் தன் குழந்தையை கையில் தூக்கி வைத்திருப்பது. அந்த பெண் ராஜா ரவிவர்மாவின் மகள். குழந்தை அவரின் பேத்தி. இந்த ஓவியம் இன்றும் அவரின் மாளிகையில் ஆளுயரத்திற்கு இருக்கும். அந்த ஓவியத்தில் ஒரு நாய் இருப்பது போல் இருக்கும். அந்த காலத்தில் ராஜா சமஸ்தானத்தில் செல்லப் பிராணிகளுக்கு வீட்டிற்குள் அனுமதி கிடையாது. ஆரம்பத்தில் அவர் நாயை ஓவியத்தில் வரையவில்லை. ஒரு முறை லண்டனுக்கு அந்த ஓவியத்தை கண்காட்சிக்கு எடுத்து சென்றார். அங்கு எல்லா ஓவியத்திலும் நாய் அல்லது பூனை இருப்பதைப் பார்த்தவர், அங்குள்ள ஒரு நாயை அதன் பிறகு அந்த ஓவியத்தில் இணைத்துள்ளார். அந்த வகை நாயை தேடுவது ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஃபேஸ்புக்கில் இந்த நாயின் புகைப்படத்தை வெளியிட்ட பிறகு அதே போல் ஒன்று இருப்பதாக என் நண்பன் மூலம் தெரிந்து புகைப்படம் பிடித்தேன்.

ஒவ்வொரு ஆர்டிஸ்டுக்கு ஏற்ற நேரத்திற்கு ஷூட்டிங்கை முடித்தோம். இதற்காக நதியா மும்பையில் இருந்து வந்திருந்தாங்க. சமந்தா ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்ததால், அவங்களை அங்கு சென்று படம் பிடித்தோம். இதில் நான் சந்தித்த பெரிய சேலஞ்ச் புகைப்படம் எடுப்பது தான். பொதுவா புகைப்படம் எடுக்கும் போது, முகத்திற்கு ஏற்ற வெளிச்சம், பின்னணி எல்லாம் பார்த்து அதற்கு ஏற்ப எடுக்கலாம். ஆனால் இதில் அப்படி இல்லை. அந்த குறிப்பிட்ட இடம், அந்த லைட்டிங் கொண்டு தான் எடுக்கணும். எனக்கான இடம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதற்குள் எடுப்பது ரொம்பவே சேலஞ்சாக இருந்தது’’ என்றவர் இந்த நிதியினை ‘நாம்’ அமைப்புக்கு அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.

‘‘நாம்’’ சுஹாசினி அவர்களால் துவங்கப்பட்ட ஒரு அமைப்பு. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆசிட் அட்டாக் பெண்கள் என பலர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு தொழில் சொல்லிக் கொடுத்து, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவது தான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே. அப்படிப்பட்ட அமைப்பிற்கு என்னுடைய இந்த படைப்புகள் மூலம் வரும் நிதியினை கொடுப்பது எனக்கு ரொம்பவே பெருமையா இருக்கு. ஆரம்பத்தில் சாதாரண நாள்காட்டிதான்னு நினைச்சேன். ஆனால் அதற்குள் சென்ற போது தான் அதன் ஆழம் புரிந்தது. தமயந்தி ஓவியத்தில், ஒரு மரம் இருக்கும். அதை ரம்யா புகைப்படத்துடன் வரையும் போது சரியா மேட்ச் ஆகல. அவங்க உயரத்துக்கு ஏற்ப மேட்ச் செய்து வரைவதே ஒரு பெரிய டாஸ்க் மாதிரி இருந்தது.

அதே போல் அந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படம். குழந்தை அழாம இருக்கணும். ஷோபனாவிடம் வரணும். முதலில் இருவரையும் தனியா படம் பிடித்து பிறகு பேஸ்ட் செய்யலாம்ன்னுதான் நினைச்சேன். ஆனா அது சரியா வரலைன்னா… சுஹாசினி மேடம்தான் குழந்தையை சமாளித்து புகைப்படம் எடுக்க உதவினாங்க. எனக்கு எப்பவுமே அவரின் ஓவியங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன். அதை புகைப்படமா எடுத்து இருக்கேன். ஓரளவுக்கு என்னால் முடிந்த வரை மேட்ச் செய்து இருக்கேன்னு நினைக்கிறேன். இதில் நான் மட்டும் இல்லை… ‘நாம்’ அமைப்புக்காக சுஹாசினி மேடம், நாள்காட்டியை வடிவமைத்த பத்மஜா, செட் அமைத்த தேவா, ஸ்டைலிஸ்ட் அம்ருதா ராம், பழமை மாறாமல் மேக்கப் அமைத்த பிரக்ருதி மற்றும் சிகை அலங்கார நிபுணர் கியரா எல்லாரும் ஒரு குழுவா இணைந்து செயல்பட்டு இருக்கோம். ஒவ்வொரு வருடமும் நல்ல விஷயத்திற்காக ஒரு கான்செப்ட் எடுத்து செய்யணும்ன்னு எண்ணம் உள்ளது’’ என்றார் புகைப்பட கலைஞர் வெங்கட்ராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்!! (மருத்துவம்)
Next post ஆண்களும் கோலம் போடலாம்! (மகளிர் பக்கம்)