கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
தினம் தினம் கிடைக்கும் அனுபவங்கள், நமக்கு நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் நிறையவே கற்றுத்தரும். விடுமுறை நாட்கள் வந்தாலே, சில பெற்றோர்கள் ஏன்தான் லீவு விடுகிறார்களோ என்று புலம்புகிறார்கள். இரண்டு பிள்ளைகள் வீட்டில் அடம் பிடித்தால், தொந்தரவு செய்தால் சிரமப்படுகிறோம். சுமார் 40 பிள்ளைகளை ஒவ்வொரு 45 நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு அமைதிப்படுத்தி, ஒவ்வொரு விதமான பாட விஷயங்களை மனதிற்குள் புகுத்த வேண்டுமென்றால் கிட்டத்தட்ட இருபது அம்மாக்கள் செய்யும் சேவையை கற்பிப்பவர் செய்ய முனைகிறார். அதுதான் அவரின் பொறுப்பாகிறது. அதிலும் ஒவ்வொரு பிள்ளையும் வேறு வேறான சூழலிலிருந்து வருபவர். சிலருக்கு சத்தமாகப் பேசினால் பிடிக்காது. மிகவும் பொறுமையாகப் பேசினால், அதுவே சிலருக்கு எரிச்சலூட்டலாம். இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து செயல்பட்டு, அதன்மூலம் ஒரு மாணவரை ஆசிரியர் பிரகாசிக்க வைக்கிறார் என்றால் அது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.
பாடம் கற்பித்தல் மட்டுமின்றி, எத்தனையோ விஷயங்கள் கருத்து வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இவற்றிலும் நிறைய ஆசிரியர்கள் எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதையும் தன் கடமையாகத் தான் செய்கிறார்கள். அதனால் அவர்கள் பொறுமையின் சிகரமாகத் திகழ்கிறார்கள். பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. மிகவும் புதுமையான, அதிசயமான, ஆச்சரியம் தரும் சில விஷயங்களில், நாம் நினைக்க முடியாத சம்பவங்களும் நடைபெறுவதுண்டு. பெற்றோரும் கண்டிப்பாக இருந்து, ஆசிரியர்களிடமும் பகிரமுடியாத சமயங்களில்தான் சில பிள்ளைகள் சங்கடப்படும். அப்படியொரு மாணவர் ஒரு சமயம் தர்மசங்கடப்படுவதைக் கண்டு விசாரித்ததில், சில விஷயங்கள் தென்பட்டன. ஒரு சக ஆசிரியை அவனைக் கேள்வி கேட்க, அவனோ இருந்த இடத்திலிருந்து தப்புத் தப்பாக உளறியிருக்கிறான்.
ஆசிரியைக்கோ, மாணவன் எழுந்துகூட பதில் கூறவில்லையே, விடை தப்பாக இருந்தால் பரவாயில்லை, எழுந்துகூட நிற்க முடியாதா என்ற ஆதங்கம் அவருக்கு. சக மாணவர்களோ, சில நாட்களில் அவன் அப்படித்தான் நடந்துகொள்வதாகக் கூறினார்கள். எப்படியானாலும், அவனைக் கூப்பிட்டு பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்து மாலை மணி அடிக்கும் வரை காத்திருந்தோம். அவன் வகுப்பினருகில் சென்று பார்த்தபொழுதுதான் தெரிந்தது, அவன் வகுப்பு காலியான பிறகுதான் இடத்தை விட்டு எழுந்தான். அவனைத் தனியே அழைத்துச்சென்று ஆறுதலாகப் பேசி, உண்மை என்னவென்று கேட்டோம். அவன் சொன்ன பதில் எங்களை அழ வைத்தது. அவன் தாயார் மிகவும் மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும், காலையில் சமைக்க முடியவில்லை என்பதால் ‘காசு’ தந்து வெளியில் ஏதேனும் சாப்பிடு என்பார்களாம். பள்ளிக்கு வரும் அவசரத்தில், கிடைப்பதை வாங்கிச் சாப்பிடுவது அவன் பழக்கமாம்.
அதனால் ஒரு சில நாட்கள் வயிற்றுவலி வந்து விடுவதாகவும், திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விடுவதாகவும் சொன்னான். அவன் உடை அழுக்காவதால், மற்ற பிள்ளைகள் பார்த்தால், சிரித்து கேலி செய்வார்களே என பயம். இதுபோன்று அவ்வப்பொழுது நடப்பதால், நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாயிடம் சொல்ல முடியாமல் வேதனைப்பட்டிருக்கிறான். நண்பர்களிடம் பகிர்ந்தால் கேலி செய்வார்கள் என்கிற பயம் அவனுக்கு. என்ன ஒரு தர்மசங்கட நிலை அந்தப் பிள்ளைக்கு. நாங்களும் அந்த உண்மையை அறியவில்லையென்றால், அவன் மனதிற்குள் எவ்வளவு சங்கடங்கள் குடிகொள்ளும். அன்று முதல் சரியான சாப்பாட்டிற்கு ஒரு வழி அமைத்துத் தந்தோம். அவனிடம் இந்த விஷயங்களைப் பேசியிருக்கவில்லையென்றால், அவனைப்பற்றி எங்கள் மனதிலும் நல்ல அபிப்ராயம் இல்லாமல் போயிருக்கும். அனைத்தும் புரிந்துவிட்டதால், எங்கள் மனதில் அவன் மேலும் உயர்ந்தவனாக கருதப்பட்டான்.
இதைத்தான், ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என நிச்சயமாகக் கூறலாம். இதுபோன்று நிறைய விஷயங்களைப் பார்த்தும், கேள்விப்பட்டும் பழகிய எங்களால் மாணவர் மனநிலையை நன்றாகவே புரிந்துகொள்ள முடியும். மற்றொரு தினம், ஒரு பெண் மாணவி மிகவும் நன்றாகவே படிப்பாள். முக்கியமான பாடங்களில், வகுப்பறைத் தேர்வு இருந்தது. குறிப்பிட்ட பாடப்பகுதி அனைவருக்குமே சிறிது சிரமமாகத்தான் இருந்தது. அன்றைய தினம் அம்மாணவி விடுமுறை எடுத்துக்கொண்டு விட்டாள். அவள் தோழிகள் அனைவரும், தேர்விலிருந்து தப்புவதற்காகவே அவள் ‘லீவு’ எடுத்ததாகப் பேசிக்கொண்டனர். ஒரு சில பெண்கள் இதை ஆசிரியரிடம் நேரிடையாகவே வந்து புகார் செய்தனர். கொட்டும் மழையில், பஸ் பிடித்து வர முடியாமல் இருக்கலாமென்று நினைத்தேன். மறுநாள், அவள் வகுப்பிற்கு வெகு சீக்கிரம் வந்துவிட்டாள். மற்ற மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவளை, ‘தேர்விலிருந்து தப்புவதற்குத்தானே நீ லீவு எடுத்தாய்’ என்று கேட்டு சூழ்ந்து கொண்டனர். அவளோ, ‘இல்லை-இல்லை’ என்று உரக்கக் கத்திக் கொண்டிருந்தாள்.
அந்த சமயம் நான் வகுப்பிற்குள் நுழையவும் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். தனியே அழைத்து, ஆசிரியர் அறைக்குச் சென்று ஆறுதலாகப் பேசினோம். பின் எங்கள் கண்களில் தண்ணீர்! அவள் அம்மா வீடுகளில் வேலை செய்து ‘பீஸ்’ கட்டுகிறாராம். அப்பா வாடகை வண்டி ஓட்டுகிறாராம். தினமும் வருமானம் கிடைக்காதாம். ஒரே ஒரு ‘யூனிபார்ஃம்’தான் அவளிடம் உள்ளதாம். முதல் நாள் நடந்து செல்லும்பொழுது ‘சகதி’ அடித்து விட்டதால் ஊற வைத்து, பின் துவைத்துப் போட்டாளாம். ஆனாலும் மழை கொட்டியதால் முழுவதும் ஈரமாகயிருந்ததால், போட முடியவில்லையாம். எப்பொழுதும் சிறிது ஈரமாக இருந்தால்கூட, போட்டுக்கொள்வாளாம். உடலில் காய்ந்து விடுமாம். அன்று சொட்ட சொட்ட இருந்ததால் போட முடியவில்லையாம். மன்னிப்புக் கேட்டதுடன், எப்பொழுது வேண்டுமானாலும் தேர்வு எழுத தயாராக இருப்பதாகக் கூறினாள்.
‘யூனிபார்ஃம்’ என்பதே வேறுபாடு இல்லாமல், சரிசமமாக இருப்பதற்குத்தான். அந்த ‘யூனிபார்ஃம்’ வாங்குவதுகூட சிரமம் என்று நினைக்கும்பொழுது, என்ன ஆறுதல் சொல்வது? இது கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லலாம். இவற்றைப் போக்க இப்பொழுதுதான் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கிறதே! தினந்தோறும் நான்கைந்து சம்பவங்கள் இதுபோன்று நடப்பதுண்டு. இதைப்பார்த்து பழகி விட்டதால், எல்லாவற்றிற்கும் பின்னால் ஏதேனும் காரணம் இருக்கும் என்று நம்பி அனைத்தையும் அலசி ஆராய முற்படுவோம். எவ்வளவு பிரச்னைகள் இதுபோன்று காணப்பட்டாலும், அவ்வப்பொழுது மகிழ்ச்சிக்கும் குறையிருக்காது.
குழந்தைகள் தினமென்றால், பிள்ளைகளை மகிழ்ச்சிப்படுத்தி இனிப்புகள் வழங்குவதுண்டு. ஆசிரியர்களும் குழந்தைகள் போன்று நடித்துக் காட்டுவதுண்டு. மாறுவேடப் போட்டிகள் நடைபெறும். அப்பொழுது ஒரு பெண் இளவரசி வேடம் பூண்டு வந்தாள். ஆனால் என்ன பேசுவதென்று தெரியாததால், அவள் பெற்றோர் எங்களிடம் உதவி கேட்டனர். ஆங்கிலத்தில் அரைப்பக்கம் எழுதித்தந்து படித்துவரச் சொன்னோம். ஆனால் அச்சிறுமிக்கு கன்னத்தில் அறை கிடைத்தது. கன்னம் சிவக்க மறுநாள் அழுதுகொண்டே வந்தாள். அந்த அரைப்பக்க நடிப்பை சொல்லித்தராமல், அவளின் தாய் மனப்பாடம் செய்யும்படி வற்புறுத்தியிருக்கிறாள். சிறுமிக்கு மனப்பாடம் செய்வது பிடிக்கவில்லை. அதனால் கோபப்பட்டு அம்மா அடித்திருக்கிறாள்.
அவளைத்தனியே அழைத்துச்சென்று, அப்படியே நடித்துக் காட்டினோம். என்ன ஆச்சரியம்! சில நிமிடங்களில் அழகாக நடித்துக் காட்டினாள். குழந்தைகளை ‘படிபடி’ என்று அழுத்தம் கொடுக்காமல், படிக்கும் ஆர்வத்தை மட்டும் தூண்ட வேண்டும். அதனால்தான், சில சமயங்களில் நாமும் அவர்கள் வயதையொத்தவர்களாக மாற வேண்டியுள்ளது. நல்ல ஒரு அடித்தளம் இல்லாத கட்டடம், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் ஒருநாள் ஆபத்தைத்தான் தேடித்தரும். அதுபோல், சிறு வயது ஆரம்பக்கல்வி பலமாக இருந்துவிட்டால் போதும்! சில குழந்தைகள் பார்த்து படித்தவுடனேயே நன்கு புரிந்து பிழையில்லாமல் எழுதுமளவுக்கு தன்னை தயார் செய்துகொண்டு விடுவார்கள். சிலருக்கு ரொம்ப எழுத்துப்பிழை வருவதுண்டு. கடினச் சொற்களை தேர்ந்தெடுத்து, எழுதி பலமுறை அப்பியாசம் செய்தபின் மீண்டும் முழுச் சொற்றொடர்களாக எழுத வைக்கலாம். அப்பொழுது எழுத்துப் பிழைகள் குறையும்.
அதிலும் பிள்ளைகள் முழு மனதுடன் கவனம் செலுத்துவதும் முக்கியம். ஐயோ, எழுத வைத்துவிட்டார்களே என்று புலம்பினால், அது அவர்களுக்கே பின்னால் சிரமமாக முடியும். வளர்ந்து ஆளான பிறகு அவர்களுக்கே நன்கு புரிந்துவிடும். படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டுப் போக்கில் படிப்பவன் ஒரு மாணவன் – அவனை அழைத்து ஒருசில வார்த்தைகளை மனதில் பதியும் வரை எழுதிவா என்றோம். ‘‘மிகவும் சிரமமான உச்சரிப்புக்கள் கொண்டவை, அதனால் மனதில் சொல்லிக்கொண்டு எழுத்துக்களை கூட்டி எழுது. நாளை வீட்டுப்பாடமாக அதை செய்துகொண்டு வா, பார்க்கலாம்’’ என்றோம்.
மறுநாள், நிறைய பேப்பர்களை ஒன்றாக இணைத்து ஒரு நோட்டுப்புத்தகம்போல் கொண்டுவந்தான். ஒவ்வொரு தாளிலும், ஒரு பத்து தடவைகள் ஒவ்வொரு வார்த்தையும் எழுதப்பட்டிருந்தன. எப்படி இவ்வளவு எழுத முடிந்தது என்று நினைத்து ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டிப் பார்த்தேன். இவ்வளவும் நீ எழுதினாயா? யாராவது உதவினார்களா என்று கேட்டேன். ‘‘ராத்திரி முழுக்க முழிச்சி எழுதினேன்’’ என்றான். அப்பொழுதுதான் பின்னால், பக்கங்கள் போகப்போக எழுத்துக்கள் ‘இங்க்’ இல்லாததுபோல், அங்கங்கே அழுக்குடன் பக்கங்கள் இருப்பதைப் பார்த்தேன். ‘சரி மாலையில் வீட்டிற்குச் செல்லுமுன் வந்து இதை வாங்கிப்போ’ என்றேன். என் சந்தேகம் சரியாயிற்று. மாலையில் வந்தவுடன், இதமாகப்பேசி உண்மையை வரவழைத்தேன். அவன் மேலேயுள்ள ஒரு பேப்பரில் எழுதி, அதனடியில் வரிசையாக கார்பன் வைத்து நிறைய நகல்கள் எடுத்திருக்கிறான்.
அவனே அதை ஒப்புக்கொண்டான். கண்டிப்பாக மிகப்பெரிய தண்டனை கிடைக்கப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, அன்பான வார்த்தைகள், மேலும் பயத்தை தந்தன போலும்! அவனின் கைகள் நடுங்கின. ‘‘நிறைய தடவை எழுத எனக்குப் பிடிக்கவில்லை, எழுதாமல் இருந்தாலும் தப்பு. அதனால் இப்படிச் செய்தேன். மன்னித்து விடுங்கள், மிஸ்……. ப்ளீஸ்’’ என்று கதறி அழுதான். அதற்குள் மற்ற ஆசிரியர்களுக்கும் தெரிந்துவிடவே, குற்ற உணர்ச்சி அவனை வாட்டி எடுத்தது. தன் தவறை உணர்ந்தபின், அவனுக்கு எதற்கு தண்டனை? ‘பரவாயில்லை, நீ உன் தவறை உணர்ந்துவிட்டாய், எந்தப் பிரச்னை வந்தாலும், நேரில் வந்து சொல். நாங்கள் உனக்கு உதவுகிறோம்’ என்று தட்டிக்கொடுத்து, ஆறுதல் கூறி அனுப்பி வைத்தோம். ஒரு தாய்க்கு குழந்தைகள் செய்யும் தவறுகள், பெரிதாக இருந்தாலும் மன்னிக்கப்படத்தக்கதாகத்தான் இருக்கும். ஒரு நிமிடம் நம் குழந்தைப் பருவத்தையும் நினைத்துப் பார்த்தால், எதுவுமே பெரிதாகத் தெரியாது நாமும் இப்படித்தானே, தெரிந்தோ, தெரியாமலோ தவறுகளை செய்திருப்போம்? இவற்றைக் கடந்துதானே வந்திருப்போம்?
Average Rating