Earth Therapy தெரியுமா?! (மருத்துவம்)
மண், கற்கள், புல், பாறைகள் நிறைந்த தரையில் வெறும் காலுடன் நடப்பதன் மூலம் பூமியின் இயற்கை ஆற்றலுடன் நம்மை இணைக்க முடியும். வெறும் காலோடு, பூமியுடனான இணைப்பின் மூலம் பலரை பாதிக்கும் நீண்டகால வலி, சோர்வு மற்றும் பிற நோய்களைக் குறைக்க முடியும். சுருக்கமாக சொன்னால் உங்கள் வெற்று கால்களினுடைய தோல் மேல் பரப்பு, பூமியில் படும்போது எலக்ட்ரான்கள் உடலுக்குள் ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன. இப்படி இலவசமாக நமக்கு கிடைக்கும் எலக்ட்ரான்கள் இயற்கையின் மிகப்பெரிய ஆக்ஸிஜனேற்றிகளாகவும், உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதற்கும் உதவுகின்றன.
பூமியைப் பற்றிய நீண்ட நாள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி உடலில் உள்ள மின்னாற்றல் சீராக இல்லாதபோது நமது உயிரியல் செயல்முறைகள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக வீக்கம், பதற்றம், தூக்கமின்மை மற்றும் பிற பக்க விளைவுகள் உருவாகலாம். எர்த்திங் செய்வதன் மூலம் பூமியின் டிரில்லியன் மெகாவாட் எதிர்மறை மின்னாற்றலுக்கு எதிராக நம் உடலின் நேர்மறையான கட்டணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அந்த சமநிலையை கொண்டு வரலாம். ‘எர்த்திங்’ என்பது உங்கள் உடல் கடிகாரத்தை மீட்டமைக்க உதவும் ஒரு தூக்க உதவியாக செயல்பட்டு, தூக்கமின்மை சுழற்சியை உடைக்கிறது. முதலாவதாக ‘எர்த்திங்’ சிகிச்சை பெரிதாக்கப்பட்ட மெலடோனின் அளவுகளுடன் தொடர்புகொண்டு இரவில் சிரமமின்றி தூக்கத்தை வர வைக்கிறது.
இரண்டாவதாக கார்டிசோலின் அளவை குறைப்பதன் மூலம், சர்க்காடியன் தாளங்களை திறம்பட மறுசீரமைக்கும் பணியையும் செய்கிறது. தூக்க முறைகளை சீரமைப்பதைத் தவிர, நாள்பட்ட வலியைக் குறைக்க உதவுகிறது. சுவாசப் பிரச்னைகளை மீட்க உதவுகிறது. ஆர்த்தரைட்டிஸ் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, குறை ரத்த அழுத்தத்தை மேம்படுத்தவும் செய்கிறது. இந்த எர்த்திங் தெரபியில் சில வகைகளும் உண்டு.
* வெளியிடத்தில்…
வீட்டிற்கு வெளியே தரையில் வெறும் காலில் நடப்பது எளிதானதும், மலிவானதுமான ‘எர்த்திங்’ சிகிச்சை முறை என்பதில் சந்தேகமில்லை. கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மணற்பரப்பு என்றால் இன்னும் சிறந்தது. பாதங்களின் மேல் தோலானது பாறை, மணல், நீர் ஆகியவற்றோடு நேரடி தொடர்பு கொள்ள முடியும். குறிப்பாக கடற்கரை மிகவும் சிறந்தது. ஏனெனில் கடலின் உப்பு நீரும், மணலும் மிகப்பெரிய அளவில் மின்கடத்தும் தன்மை கொண்டது மட்டுமல்லாமல், உப்புநீரில் மெக்னீசியம் அளவு மிகுந்துள்ளது.
* வீட்டிற்குள்…
ஒரு வேளை கடற்கரை இல்லாத இடம் அல்லது வெளியில் செல்ல முடியாத சூழல் என்றாலும் வீட்டிற்குள்ளேயும், அலுவலக மேஜை மீதே வைத்து செய்யக்கூடிய வகையில், சிறப்பு கிரவுண்டிங் விரிப்புகள், காலுறைகள், கையுறைகள் போன்ற நிறைய தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. ‘கிரவுண்டிங் மேட்’ டை வாங்கி கம்ப்யூட்டர் மேஜை மேலும், நாற்காலிக்கு கீழேயும் வைத்துக் கொண்டு, அவ்வப்போது உள்ளங்கைகளையும், பாதங்களையும் அதில் வைத்து அழுத்தம் கொடுக்கலாம். இதை நீங்கள் வேலைக்கு நடுவிலேயே செய்ய முடியும் என்பது வசதி. கம்ப்யூட்டரில் வேலை செய்வதால் உடலிலிருந்து வெளிப்படும் மின்காந்தப்புலங்களின் எண்ணிக்கையை இதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.
இந்த தயாரிப்புகள் நேரடியாக பூமியோடு தொடர்பு கொள்ளும்போது தோன்றும் அதே மின்சாரத்தை பிரதிபலிக்கிறது. அந்த அனுபவத்தை ஒருவர் வீடு அல்லது அலுவலகத்திற்குள்ளேயும் கொண்டுவர இவை உதவுகின்றன. ‘எர்த்திங்’ தெரபி உணர்ச்சி ஆரோக்கியத்திலும் பிரதிபலிக்கிறது. உங்களுக்கு ஏதேனும் வலியிருந்தால், நிச்சயம் மனதாலும் பாதிக்கப்படுவீர்கள். வலியால் அசௌகரியம் அடையும் நீங்கள் மன எரிச்சலடைவீர்கள். அந்த மன எரிச்சலைப் போக்கிவிட்டால் உடல் வலி தானாக நின்றுவிடும். மனம் அமைதியடையும். உங்களுக்கு மீண்டும் ஆற்றல் கிடைக்கும். இதுபோல் ‘எர்த்திங்’ சிகிச்சை செய்யும் போது மனஅழுத்தம் குறைந்து மன அமைதி கிடைப்பதால் நல்ல மனநிலையை மீட்டெடுக்க உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
* உணவுமுறையின் மூலம்…
முடிந்தவரை ஃப்ரஷ்ஷான காய்கறிகளை உட்கொள்ள முயற்சி செய்யலாம். குறிப்பாக மண்ணுக்கடியில் வளரும் வேர் காய்கறிகளான கிழங்கு வகைகளை உண்பதால் பூமியின் மின்காந்த ஆற்றலை பெற முடியும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றை வேர்க் காய்கறிகளாக சொல்லலாம். இவை தவிர பழங்களில், மாங்காய், பப்பாளி, திராட்சை, ஆலிவ், அத்தி, முலாம்பழம் மற்றும் காய்களில், பச்சைப்–்பட்டாணி, பீன்ஸ், கத்தரிக்காய் போன்றவை பூமியிலிருந்து நேரடியாக பெறக்கூடியவற்றைச் சொல்லலாம். உணவுகளில் சுவையூட்டுவதற்கு இஞ்சி, ஜாதிக்காய், பூண்டு, இலவங்கப்பட்டை, சீரகம், கிராம்பு, கொத்தமல்லி போன்று வெப்பத்தைக் கொடுக்கும் மசாலாப் பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
* குளியலும்…
தண்ணீரைப் போலவே உப்பிலும் இயற்கையான நோய் நிவாரண கூறுகள் இருக்கின்றன. ஒரு தொட்டியில் சூடான நீருடன் உப்பைக் கலந்து குளிப்பதால் உடலை சுத்திகரிப்பதோடு, ஒரு தியான நிலைக்கும் எடுத்துச் செல்கிறது. அழுக்கு நல்லது மண்ணில் விளையாடுதல், களிமண் பொம்மைகள் செய்வது இவையும் ‘எர்த்திங்’ சிகிச்சைதான். மண்ணில் குழி தோண்டி செடி நடுவது, களை பிடுங்குவது, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற தோட்ட வேலைகள் சிறந்த ‘எர்த்திங்’ சிகிச்சையை கொடுப்பவை. எங்கேயும் எப்போதும் காலணிகள் அணிவது, குளிரூட்டப்பட்ட அறையில் முடங்கிக் கிடப்பது, எல்லா இடங்களுக்கும் செல்ல வாகனங்களை பயன்படுத்துவது போன்ற நம்முடைய இன்றைய வாழ்க்கை முறையால், வெறும் காலோடு நடப்பது என்ற பழக்கமே இல்லாமல் போய்விட்டது. இதனால் பூமிக்கும், நம் உடலுக்குமான தொடர்பு அறுபட்டுவிட்டது. இதனாலேயே இன்று நாம் எக்கச்சக்கமான நாட்பட்ட நோய்களை வரவழைத்துக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். எனவே, இந்த பூமியோடு எப்போதும் இணைந்திருந்தால், மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம்தான்!
Average Rating