Genetic Dating!! (மருத்துவம்)
காதலோ, கல்யாணமோ…. எனக்கான ஒருவரை எப்படித் தேடுவது?!
ஒரே ரசனை உள்ளவர்களாக அமைய வேண்டும் அல்லது நம் விருப்பங்களுக்கு ஒத்துச் செல்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பது முதல் கவலை. கல்யாண வாழ்க்கையில் உருவாகிற குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது அடுத்த கவலை. இதற்காகத்தான் திருமணம் என்றாலே ஜாதகப்பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். இந்த கவலை எல்லாம் இனி வேண்டியதில்லை. எல்லாவற்றையும் Genetic Dating பார்த்துக் கொள்ளும் என்று கண் சிமிட்டுகிறார்கள் புதிய மரபணு ஆராய்ச்சியாளர்கள். உங்களுக்கான ரோமியோவையோ அல்லது ஜூலியட்டையோ இனிவரும் காலங்களில் கல்யாண வரன் தேடும் வலைதளங்களே, உங்கள் மரபணுக்கு மேட்ச்சாகும் ஜோடியை கண்டுபிடித்து கொடுத்துவிடும்.
இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன?!
பல வருடங்களுக்கு முன்பு, Sweaty T-shirt experiment என்ற ஆய்வில், மிகப்பெரிய கூட்டத்திலும் கூட ஒருவர் தனக்கேற்ற துணையை அவரின் வாசனையை வைத்து கண்டுபிடித்துவிட முடியும் என்று கண்டறியப்பட்டது. குறிப்பாக பெரோமோன்கள்(Pheromones) எனப்படும் சில உடல் ரசாயனங்களின் வாசனை, ஒருவருக்கொருவர் மாறுபடும் என்றும், இந்த ரசாயன வாசனை ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது, அதை வைத்தே ஒருவரின் துணையை கண்டுபிடித்துவிட முடியும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டது.
இந்த அறிவியலை வைத்துதான் இப்போது அமெரிக்காவின் மரபணு டேட்டிங் சேவை நிறுவனங்களான Singld out, Instant Chemistry போன்றவை ‘நாங்கள் உங்கள் பெரோமோன் மரபணுக்களை அடையாளம் கண்டு, எங்களின் டேட்டா பேஸில் உள்ள மற்றவர்களின் மரபணுக்களோடு ஒப்பிட்டு, நீங்கள் விரும்பும் நபரை தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறோம், உங்கள் விருப்பத்திற்கேற்ற தேதியில், அவர்களோடு டேட்டிங் செய்யலாம்’ என்று விளம்பரம் செய்கின்றன.
இன்னும் ஒருபடி மேலே போய் DNA Romance மற்றும் Digi-8 போன்ற நிறுவனங்கள், மரபணு சோதனை முடிவை அதன் வலைதளத்தில் ஏற்றிவிட்டால் போதும். நம்முடைய டேட்டிங்கிற்கு சரியான ஜோடியை தேடித்தருவதோடு அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து தருகிறது. அதோடு மட்டுமல்ல ஜோடிகளிடத்தில் உள்ள மரபணுகோளாறுகளையும் கண்டுபிடித்துச் சொல்கிறது. இதன்மூலம் சரியான நபரை கண்டறிய முடிவதோடு, எதிர்காலத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை பெறுவதற்கான நம்பிக்கையையும் பெற முடியும்.
இந்நிறுவனம் உங்கள் டி.என்.ஏவை மரபணு மாற்றங்களுக்காக பகுப்பாய்வு செய்து, அதே பிறழ்வைக் கொண்ட ஒருவருடன் நீங்கள் இணைவதில்லை என்பதை உறுதி செய்யும். ஏனெனில், மரபணு பிறழ்வு கொண்ட ஒருவருடன் நீங்கள் இணைந்தால், எதிர்காலத்தில் உங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு, 25% நோய்வாய்ப்படும் அபாயம் உண்டாகும். தற்கால தம்பதிகள், தங்களுக்கு மரபணுக்கோளாறு உள்ள குழந்தை பிறப்பதை தவிர்ப்பதற்காக முன்கூட்டிய மரபணு சோதனையைத் தேர்வு செய்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டே Digi-8 நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக இந்த சேவையையும் சேர்த்தே தருகிறது. உலகம் எப்படி வேகமாக போயிட்டிருக்குன்னு பாத்தீங்களா?!
Average Rating