கடவுளின் சாபமா கண்புரை?! (மருத்துவம்)
மிகவும் முற்றிய நிலையில் புரை இருக்கும்போது லென்ஸ் வெள்ளையாகத் தெரியும். கண்களின் நடுவில் வெள்ளைப் பொருளை அகற்றினால் பார்வை ஓரளவுக்கு கிடைக்கிறது என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்தனர். ஒரு கனமான மழுங்கிய பொருளால்(Blunt object) கண்களில் லேசாகத் தாக்கினால் அந்த வெள்ளைப் பொருள் கண்ணின் பின்பகுதியில் உள்ள விழிப்படிக நீர்மத்தில்(Vitreous humour) விழுந்தது. திரையை நீக்கியது போல கொஞ்சம் பார்வை தெரிந்ததை கவனித்தவர்கள் அதையே ஒரு சிகிச்சைமுறையாக மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
நோயாளி கீழே மண்டியிட்டிருக்க, கனத்த தடிமனான பைபிள் புத்தகத்தால் பாதிரியார் ஒருவர் மூடிய கண்களைத் தாக்குவதைப் போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன. Couching என்று பெயர் பெற்ற இந்த சிகிச்சைமுறை அந்த நாட்களில் பிரபலமானது. இந்திய மருத்துவத்தின் முன்னோடியான சுஷ்ருதா இந்த அறுவைச்சிகிச்சை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியதாக சமஸ்கிருதத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் ஐரோப்பிய கண்டத்திலும் இதே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலப் போக்கில் கனமான பொருட்களுக்குப் பதில் கூர்மையான சிறிய ஆயுதங்களால் இந்த ‘தள்ளிவிடும்’ சிகிச்சையை மேற்கொண்டனர். கண் சிகிச்சைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் எகிப்திய அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஓவியர் ஒருவர் சித்திர வேலையில் ஈடுபட்டிருப்பது போலவும், சிகிச்சையளிக்கும் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் அவர் கண்களில் சிகிச்சையை அளிப்பது போலவும் ஒரு ஓவியம் எகிப்திய கோயில் ஒன்றில் காணப்படுகிறது. ‘லென்ஸினை அகற்றுவது நல்ல பார்வையை அளிக்கிறது’ என்பதைக் கண்டறிந்து சில காலம் கழித்து அந்த லென்ஸ் விழிப்படிக நீர்மத்தில் தங்கியிருப்பதால் சில பாதிப்புகளைக் உருவாக்குவதையும் கண்டறிந்தனர். அதன் பின் லென்ஸை வெளியே அகற்றிவிடும் முறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர்.
30 வருடங்களுக்கு முன் வரை பரவலாக இந்த சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதும் 90 வயது, 100 வயது முதியவர்கள் சிலர் கனத்த கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அவர்கள் இதேபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களாக இருக்கலாம். லென்ஸ் வெளியேற்றப்படுவதால் அதற்குச் சமமான பணியைச் செய்யத்தக்க பொருத்தமான அளவுள்ள கண்ணாடிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. நமது நாட்டிலும் பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த சிகிச்சைகள் செய்யப்பட்டன. எல்லா மாவட்டங்களிலும் மருத்துவமனை வசதிகள் இல்லாத காலகட்டம் அது. அந்த நாட்களில் பள்ளிக்கூடங்களில், ரயில்களில் கூட முகாம் நடந்ததாகக் கூறுவார்கள். அறுவை அரங்கம் ஒன்று ரயிலின் பெட்டியினுள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் மருத்துவர்களும் செவிலியர்களும் பயணித்து குறிப்பிட்ட ஊரின் ரயில் நிலையத்தை சென்றடைவார்கள்.
நோயாளிகள் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு ரயில் பெட்டியில் வைத்து அறுவை சிகிச்சை நடந்த காலங்களும் உண்டு. இப்படிப்பட்ட சூழலில் கண்களுக்குள் பொறுத்தப்படக் கூடிய Intraocular lens கண்டுபிடிக்கப்பட்டது கண் மருத்துவ சிகிச்சை வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. லென்ஸ் ஒரு சிறிய பாதுகாப்பான பையில்(Lens capsule) அழகாக அமர்ந்திருக்கிறது. அந்தப் பையை அகற்றாமல் பையின் மேல் பகுதியில் மட்டும் ஒரு வட்டமான துளையிட்டு அதிலிருந்து லென்ஸை அகற்றிவிடுவார்கள். அந்த வட்டமான துளை வழியாக மீண்டும் அந்தப் பைக்குள் செயற்கை லென்ஸினை செலுத்தி விடுவார்கள்.
இதற்கு 10 முதல் 12 மில்லி மீட்டர் வரை நீளமுள்ள துளை போடப்படும். இதுவே இன்று செய்யப்படும் அனைத்து அறுவை சிகிச்சைகளிலும் பொதுவாக நடக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை இதே வகையான அறுவை சிகிச்சையைச் செய்து அதன்பின் சில தையல்கள் போடும் சிகிச்சை பரவலாக (Extracapsular cataract extraction) செய்யப்பட்டு வந்தது. இன்று செய்யப்படும் நவீன கண் புரை அறுவை சிகிச்சையில் பெரும்பாலும் தையல்கள் இடப்படுவதில்லை. என்ன… தையல் இல்லாத அறுவை சிகிச்சையா என்று நீங்கள் நினைக்கலாம். கிருஷ்ணபடலத்துக்குப் பின்னாலிருக்கும் லென்ஸை, கண்ணின் வெளியில் உள்ள வெண்கோளப் பகுதியில் (Sclera) ஒரு சிறிய சுரங்கம் (Sclerocorneal tunnel) போன்ற அமைப்பின் மூலம் சென்றடையலாம். அந்த சுரங்கத்தின் வழியே பழுதுபட்ட லென்ஸ் அகற்றப்பட்டு பின் செயற்கை லென்ஸ் பொருத்தப்படும். இதற்கு 6 முதல் 8 மில்லி மீட்டர் வரை உள்ள துளை தேவைப்படும்.
பேகோ எந்திரம் மூலம் செய்யப்படும் சிகிச்சைகளில்(Phacoemulsification) இரண்டு முதல் மூன்று மில்லி மீட்டர் வரை அகலம் உள்ள துளை மூலமாகவே லென்ஸைச் சென்றடைந்து விடலாம். உயர் அழுத்த அதிர்வுகள்(Vibrations) மூலமாக சிறு துகள்களாக நொறுக்கப்படுகிறது. அதன் பின் அவற்றை சிரிஞ்சுடன் இணைந்த ஒரு கருவியின் மூலமாக எடுத்துவிடலாம். அதே சின்ன ஓட்டையின் வழியாகவே லென்ஸினை உட்செலுத்துவார்கள். இப்போது அதற்கு வசதியாக சிரிஞ்சுகளில் அடைக்கப்பட்ட லென்ஸ்கள் கிடைக்கின்றன. இவை அனைத்துமே புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளால் கிடைத்த நல்ல விஷயங்கள். சில நேரங்களில் கடினமான கண்புரையாக இருந்தால் தையல் போட வேண்டியதிருக்கும். நவீன கண் சிகிச்சை முறைகளால் மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்க வேண்டியதில்லை.
முந்தைய நாட்களில் அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்துவிட்டால் காலையில் சென்று மாலையில் திரும்பிவிடலாம். எளிதாகவும் விரைவாகவும் தங்கள் பணிகளுக்கும் திரும்பிவிடலாம். கண்களில் பொருத்தப்படும் லென்ஸ்கள் பெரும்பாலும் நம் உடலுக்கு ஊறு விளைவிக்காத வகையிலேயே தயாரிக்கப்படுகின்றன. அக்ரிலிக் (Polymethyl methacrylate) எனப்படும் மூலப்பொருள் மூலமாக பெரும்பான்மையான லென்ஸுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இப்போது சிலிக்கான், கொலாமர்(Collamer) போன்ற மூலப்பொருட்கள் மூலம் தயாரிப்பதால் லென்ஸ்களில் நெகிழ்வுத் தன்மையை அதிகம் ஏற்படுத்த முடிகிறது.
செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்ட பின் அது மிக இயல்பாக நம் உடல் அமைப்புடன் பொருந்திக் கொள்கிறது. அறுவைசிகிச்சையின் முன் கண்ணில் பொருத்த வேண்டிய லென்ஸின் பவர் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதனை அறுவை சிகிச்சைக்கு முன்பாகவே தீர்மானிக்க முடியும். இதற்கு ஏ ஸ்கேன், கெரடோமீட்டர்(A scan, Keratometer) ஆகிய இரண்டு கருவிகள் பயன்படுகின்றன. இதனால் ஓரளவுக்கு துல்லியமாக கண்களுக்குள் பொருத்த வேண்டிய லென்ஸின் பவரை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். மிகச் சிலருக்கு லென்ஸ் மற்றும் லென்ஸுடன் சேர்ந்திருக்கும் ரசாயன திரவங்களால் ஒவ்வாமை ஏற்படலாம். அதுவும் எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒன்று. செயற்கை லென்ஸ்களுக்கு கிட்டப்பார்வைக்கு ஏற்ப சுருங்கும் ஆற்றல் கிடையாது. எனவே, செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்ட பின்னும் படிக்கும்போது கண்ணாடி அணிய வேண்டியதிருக்கும்.
இப்போதுள்ள புதுவகையான லென்ஸ்கள்(Multifocal lenses) சிலவற்றில் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை இரண்டையும் கண்ணாடி இன்றி பார்க்கும் வகையில் நான்கு அல்லது ஐந்து பொது-மைய வட்டங்கள்(Concentric circles) அமைக்கப்பட்டுள்ளன. இந்த லென்ஸ் பொருத்திக் கொள்வோருக்கு கிட்டப்பார்வைக்குக் கண்ணாடி தேவை இருக்காது. மேற்கூறிய அனைத்தும் பொதுவான வழிமுறைகள். சிலருக்கு உடல் உபாதைகளால் இவற்றில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் சிறு துளையானது இயற்கையின் ஆற்றலால் மூடும்போது கண்ணுக்குத் தெரியாத சிறு தழும்பு ஏற்படும்.
இந்த தழும்பு உருவாகும் திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதால் அதனால் சிறிய அளவிலான பவர் கொண்ட சிலிண்ட்ரிக்கல் கண்ணாடிகள் தேவைப்படலாம். சர்க்கரை நோய் கண் அழுத்த நோய் போன்றவற்றால் அறுவை சிகிச்சைக்கு பின்னால் துல்லியமான பார்வை கிடைப்பதில் சில பிரச்னைகள் வரலாம். தேவையான முன் பரிசோதனைகள் செய்து, சரியான மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்து முறையாக அறுவை சிகிச்சை செய்தால் கண் புரை என்னும் பிரச்னையை எளிதில் கடந்துவிடலாம்.
Average Rating