உலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு!! (மகளிர் பக்கம்)
சிறுமியாக இருந்ததில் இருந்து பெண் கல்விக்காகப் போராடி வருபவர் பாகிஸ்தான் நாட்டின் 22 வயது மலாலா யூசுப்சாய். பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா துன்பெர்க். இவர்கள் இருவருமே சர்வதேச அளவில் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். பருவநிலை மாறுபாடு தொடர்பாக பிரிஸ்டல் நகரில் மாணவர்களுடன் இணைந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த மிகச் சமீபத்தில் லண்டன் சென்ற கிரேட்டா, அங்கிருந்த மாணவர்களுடன் அமர்ந்து தனது போராட்டம் குறித்தும் கலந்துரையாடினார். அப்போது அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மலாலாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள மலாலா, கிரேட்டாவுக்காக மட்டுமே தனது வகுப்புகளை தவிர்ப்பேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கிரேட்டா தன்பர்க்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே புகைப்படத்தை பதிவேற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மதவெறியும், தீவிரவாத அச்சுறுத்தலும், பிற்போக்கு சித்தாந்தங்களும் நிறைந்த நாடுகளில் பெண்கள் கல்வி பெறுவது சவால்கள் நிறைந்தது. அப்படியொரு அடிப்படைவாதிகளின் நிலத்திலிருந்து வெடித்து மலர்ந்தவர் யூசுப் மலாலா. பாகிஸ்தான் நாட்டில் பள்ளிக்கூடம் செல்ல பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதோடு, 400 பெண்கள் பள்ளிக் கூடங்கள் ஒரே நாளில் இழுத்து மூடப்பட்டன. இவற்றைச் செய்தது தலிபான் தீவிரவாத அமைப்பு. தலிபான்களின் ஆசிட் வீச்சு அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்களைக் கண்டு அவருடன் படித்த பல மாணவிகள் படிப்பை நிறுத்த, மலாலா மட்டும் கல்வியைத் தொடர்ந்தார். தனது பர்தாவுக்குள் புத்தகங்களை மறைத்து பள்ளிக்கு சென்றார். அவரின் சிந்தனை முழுவதும் கல்வி மட்டுமே இருந்தது. அப்போது மலாலாவுக்கு 12 வயது. தனது உருது வலைத்தளத்தில் ‘குல் மக்காய்’ (சோளப் பூ) எனும் புனைப்பெயரில் தலிபான்களின் அராஜகத்தை தோலுரித்தார்.
இதனால் தலிபான்களின் அச்சுறுத்தலுக்கு ஆளானார். இந்த நிலையில் பள்ளி விட்டு வேனில் சென்றுகொண்டிருந்தவரை, தலிபான் தீவிரவாதி ஒருவன் கழுத்திலும், தலையிலும் சுட, ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் மலாலா. அவருக்கு கிரேட் பிரிட்டனில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் வைத்து உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிழைத்து வந்த மலாலா, உலகளவில் குழந்தைகள் கல்வி குறித்தும், கல்வி பெறுவதில் அவர்களுக்கு உள்ள உரிமை குறித்தும் தொடர்ந்து பேசினார். தனது தந்தை யூசுப் சியாவுதினுடன் சேர்ந்து பெண்கள் கல்விக்காக அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கினார். 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவை தேடி வந்தது. இளம் வயதில் நோபல் பரிசு பெறும் சிறப்புடன், அமைதிக்கான நோபல் பரிசை பெறும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையும் மலாலாவுக்கு கிடைத்தது. நோபல் பரிசினைப் பெற்ற மலாலா மேடையில் ஆற்றிய உரை மிகவும் சுவாரசியம் நிறைந்தது. அதில் உலக அமைதி மற்றும் பெண் கல்வி குறித்து நிறையப் பேசினார்.
ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா தன்பர்க், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கையை உலகம் முழுவதும் முன்னெடுத்து செல்பவர். இவரது செயல்பாடுகள் உலகின் கவனத்தை ஈர்க்கவே, இன்று லட்சக்கணக்கானோர் பருவநிலை மாற்றத்துக்கு எதிராகத் தங்களது குரலை பதிவு செய்ய கிரேட்டா முக்கிய காரணமாக இருக்கிறார். பருவநிலை மாற்றங்களைத் தடுக்க, தன்னைப் போன்ற குழந்தைகளிடம் ‘பள்ளிக்குப் போகாதீர்கள்… தங்களுக்காகவும், வருங்கால தலைமுறையினருக்காகவும் வெள்ளிக்கிழமை தோறும் வீதிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தவர் கிரேட்டா. பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அனைத்து நாட்டு அரசுகளும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி, ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தியவர்.
உங்களது வெற்று வார்த்தைகளால், எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள். என்ன தைரியம் உங்களுக்கு? பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து எங்களை ஏமாற்றிவிட்டு இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என்று உலகத் தலைவர்களை ஐ.நாவில் கேள்விகளால் துளைத்தவர். சூழலியல் செயல்பாடுகளுக்காக ‘ஸ்டால்க்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ வழங்கும் சூழலியலாளருக்கான விருதுக்கு ஸ்வீடன் மற்றும் நார்வே நாட்டின் சார்பாக கிரேட்டா தன்பர்க் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், விருது கொடுக்கும் நோர்டிக் நாடுகளிலே ஏகப்பட்ட சூழலி யல் பிரச்னைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்னைகளை அவர்கள் பெரிதாகக் கருதாதபோது விருதுகள் எதற்கு?” என்றவர், விருதும் பரிசுத்தொகையும் தனக்கு வேண்டாமென மறுத்து மீண்டும் உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.
Average Rating