நிர்பயா காலணி…!! (மகளிர் பக்கம்)
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதை நிரூபணமாக்குகிறது நாளேடுகளில் வரும் செய்திகள். அவ்வாறு இருக்கையில், பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பல புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் பெண்களுக்கான தற்காப்பு கடிகாரம் செய்து குடியரசுத் தலைவர் கையால் விருது வாங்கியுள்ளார் ஓசூரை சேர்ந்த 11 வயது சிறுமி அபர்ணா.
ஓசூரில் உள்ள கிருஷ்ணா நகர் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரசேகர். இவரின் மகள் அபர்ணா. சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளில் அலாதி ஆர்வம். எப்போதும் எதையாவது ஆராய்ச்சி செய்வதும், அது குறித்து பெற்றோரிடம் பல கேள்விகளைக் கேட்டு தெரிந்து கொள்வதுமாகவே இருந்துள்ளார். மகளின் ஆர்வத்தை பெற்றோரும் ஊக்குவிக்கவே, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஒரு பிரத்யேகமான கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளார். இதற்காக பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஷ்கார் விருது வென்று அசத்தியுள்ளார் அபர்ணா.
அபர்ணாவின் கண்டுபிடிப்பான இந்த கைகடிகாரத்தில் மிளகாய் பொடி உள்ளது. பெண்கள் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் போது இந்த கடிகாரத்தில் உள்ள பொத்தானை அழுத்தினால் அதில் இருந்து வெளியாகும் மிளகாய் பொடி எதிரில் உள்ளவர் கண்களில் விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘‘செய்திகள் அதிகமாக பார்ப்பேன். ஸ்வாதி அக்காவிற்கு ரயில்வே ஸ்டேசனில் நடந்தது, டெல்லியில் நடந்த சம்பவம் போன்றவைகளை கேள்விப்படும் போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமென்று யோசித்து இதை செய்திருக்கிறேன்” என்கிறார் அபர்ணா. சிறுமி அபர்ணாவின் கண்டுபிடிப்புக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, அந்த கைகடிகாரத்தில் தனது கையொப்பத்தை இட்டுள்ளார். அத்துடன் தமிழ் புத்தகம் ஒன்றையும் அவர் பரிசளித்துள்ளார்.
இதை போலவே, பெண்கள் துணிச்சலாக எதையும் எதிர்கொள்ளவும், ஆபத்து காலங்களில் உதவும் வகையிலான கருவி ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள் தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள். பொறியியல் படிக்கும் நிகிதா, பவித்ரா மற்றும் அமிர்த கணேஷ் ஆகியோர் ஒன்று சேர்ந்து இந்த கருவியை வடிவமைத்துள்ளனர். கருவி என்றால் பெரிதாக எதையும் கற்பனை செய்ய வேண்டாம். பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் காலணி மற்றும் வாட்ச்தான் அவை. ‘‘பாலியல் ரீதியான பிரச்சினைகள், செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கும் போது பெண்கள் அவர்களை இந்த காலணியை கொண்டு மிதித்தால் போதும். பெண்களின் உடல் வேகத்திற்கு ஏற்ப இந்தகருவி செயல்பட்டு எதிராளியை தாக்கும்” என்கிறார் இந்த கருவியை வடிவமைக்க உதவிய அமிர்த கணேஷ்.
“நகரம் முதல் குக்கிராமம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகிக் கொண்டே போகிறது” என்று கூறும் நிகிதா, “ஒரு பெண்ணாக நாங்கள் இதை எதிர்கொள்வதால், அதிலிருந்து தற்காத்து கொள்ள ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என தோன்றிய போது கிடைத்த யோசனைதான் நிர்பயா செப்பல். 6.30 மணிக்கு மேல் பெண்களால் எளிதில் வெளியே போவது கடினம். முதலில் எங்களுக்கு முதல் உதவி தேவைப்படுகிறது. அதற்காக யாரிடமும் தனியா போய் உதவி கேட்க முடியவில்லை.
எனவே எங்களை நாங்களே காப்பாத்திக் கொள்வதற்காக, எங்களிடமே ஒரு கிட் இருக்க வேண்டுமென்று இதை வடிவமைத்திருக்கிறோம்” என்றார். “இந்தக் கருவியை பயன்படுத்துவதும் எளிது என்பதோடு, நடக்கும் போதே ரீசார்ஜ் ஆகக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆபத்து காலங்களில் உள்ள பெண்கள் உதவிக்காக யாரையும் எப்போதும் தேட வேண்டியதில்லை” என்கிறார் பவித்ரா. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் கருவிகளும் தற்காப்புக் கலைகளும் தேவை என்றாலும் கூட, தனி மனித ஒழுக்கமும் கடுமையான சட்டங்களும் அவசியம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
Average Rating