மாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்! (மகளிர் பக்கம்)
அதாவது, நாமாகவே நமக்கு ஏற்படுத்திக்கொள்ளும் இந்த வாழ்வுமுறை மாற்ற பாதிப்புகளுக்கு எல்லா வகையிலும் விளைவுகள் காத்திருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டியது மிக அவசியம். அத்தகைய வாழ்வியல் மாற்றங்களால் என்னென்ன உடல் மற்றும் உள நல சிக்கல்கள் வரக்கூடும்? அதனால் குடும்ப அளவில் எத்தகைய பாதிப்புகள் உண்டாகும் போன்றவற்றை தெரிந்துகொள்ள வேண்டிய அவசிய சூழலில் இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.
மாறிப்போன வாழ்வுமுறை
இன்றைக்கு உள்ள அவசர உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் மருத்துவமனை வாசம் என்பது வந்து விட்டது. குழந்தைகளுக்கு புதுப்புதுக் கோளாறுகள், முதியவர்களுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவுகள் என சுகாதாரம் மாறி வருவதற்கு மூலக் காரணமாக நம் வாழ்வு முறை மாற்றங்களே இருக்கிறது. அவை என்னென்ன? அவற்றை எப்படி நல்வழியில் மாற்றிக்கொண்டு மீள்வது? போன்றவற்றின் ஒருங்கிணைந்தப் பட்டியல் இதோ…
* ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்தும், நின்றும் வேலை செய்வது.
* வீட்டிலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு நீண்ட தூரம், நீண்ட நேரம் வாகனத்தை ஓட்டி செல்வது.
* குளிரூட்டப்பட்ட அறையில் வேலை செய்யும் நபர்கள் அதிகம் தண்ணீர் அருந்தாமல் இருப்பது.
* சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் தவிர்ப்பது.
* காலை உணவை தவிர்ப்பது (பெரும்பாலான பிரச்சனைக்கு இதுவே முக்கியக் காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் இதை ஏதோ நல்பழக்கம் போன்று தொடர்ந்து வருவது)
* அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வது.
* பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை சாயம் கலந்த உணவுகள் போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ளுதல்.
* உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் (குறைந்தபட்ச உடற்பயிற்சியான நடைபயிற்சி கூட இல்லாமல் இருத்தல்)
* புகை, மது மற்றும் போதைப் பழக்கம்.
* உயரத்திற்கு ஏற்ற எடையை மீறிய உடல் பருமன்.
* போதிய தூக்கமின்மையும், நேரம் தவறிய தூக்கமும்.
* அருகில் நடந்து செல்லும் தூரமாக இருந்தாலும் வாகனம் பயன்படுத்துவது.
* ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சரியான மருந்தை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது.
* குழந்தைகள் அதிக நேரம் காணொளிகளைக் காண்பது.
* பணி ஓய்வுக்குப் பின்னான சோம்பலும் சுறுசுறுப்பின்மையும்.
* குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடாமல் இருப்பது.
இதனால் வரக்கூடியவை..?
* உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பதால் நம் தசைகள் வலுவானதாக இருக்காது. இதனால் நீண்ட நேரம் அமர்ந்து அல்லது நின்று வேலை செய்பவர்களுக்கு தசைகள் தளர்வாக ஒருபக்கமும், இறுக்கமாக மறுபக்கத்திலும் இருக்கும். இதனால் மூட்டுகளில் வலி ஏற்படும். 30 வயதே ஆனாலும் கூட ஒருவருக்கு எளிதில் முதுகு வலி, கழுத்து வலி, கால் மூட்டு வலி வர வாய்ப்புகள் அதிகம்.
* தசைகள் சீராய் செயல்படாமல் இருந்தால் எலும்புகளில் அழுத்தம் அதிகரிக்கும். அதனால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து எலும்பு தேய்மானம் ஏற்படக்கூடும். மேலும், முதுகு தண்டுவடப் பகுதியில் உள்ள குஷன் போன்ற ஜவ்வு தட்டுக்கள் சீக்கிரம் பிதுங்கக்கூடிய வாய்ப்புகளும், வறட்சியடையும் வாய்ப்புகளும் உண்டு.
* தசைகள் வலுவாக இல்லையென்றால் மூட்டுகளை சுற்றியுள்ள ஜவ்வு எளிதில் கிழியலாம். இதனால் மூட்டுகள் எளிதில் தன் இடத்தில் இருந்து இடம்பெயறும். இதனை joint dislocation என மருத்துவத்தில் கூறுவோம்.
* மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும்.
* ஸ்டாமினா குறைவதால் சிறிது தூரம் நடந்தாலோ, படிகளில் ஏறினாலோ மூச்சு வாங்கக்கூடும். அதனால் எப்போதும் மந்தமாக இருப்பார்கள்.
* ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சரியான மருந்தை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் இருதய அடைப்பு, பக்கவாதம் போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும்.
* சரிவர தண்ணீர் குடிக்காததாலும், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தேவையற்ற மருந்து மாத்திரைகள் உட்கொள்வதாலும் கிட்னி பாதிப்படையக்கூடும்.
* பணி ஓய்வு பெற்றவர்கள் தங்கள் அன்றாட இயக்கங்களை குறைத்துக் கொள்வதால் தசைகள் வலுவிழந்து கீழே விழுவது போன்றவை ஏற்படலாம்.
* தேவைக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை உட்கொள்வதால் இருதய ரத்தக் குழாய்களில் கொழுப்பானது அதிகமாக சேர்ந்து இருதய அடைப்பு ஏற்படக்கூடும். மேலும், மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்படும்போது பக்கவாதம் வரக்கூடும்.
* மனச்சோர்வும், மன அழுத்தமும்.
* பெண்களுக்கு சீரான மாதவிடாய் வராமல் இருப்பது, கருப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றுவது போல கருப்பை கோளாறுகள் தோன்ற வாய்ப்புகள்
அதிகம் உண்டு.
* குழந்தைகளுக்கு ஏ.டி.எச்.டி (ADHD – Attention Deficit Hyperactivity Disorders) போன்ற உளவியல் கோளாறுகள் வரலாம். மேலும், பேச்சு தாமதம் போன்ற பாதிப்புகளும், உடல் பருமன் பிரச்சனையும் வரக்கூடும்.
* நேரத்திற்கு சாப்பிடாமல் தாமதமாக உணவு உண்பதால் இரைப்பை, குடற்புண் வருவதற்கு வாய்ப்புண்டு.
* புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய் வரவும், அதிலும் குறிப்பாக குடல்புற்றுநோய் வரவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கும் வாய்ப்புள்ளது.
தீர்வுதான் என்ன?
* தினமும் உடற்பயிற்சி செய்வதனால் 70 சதவீத நோய்களை தள்ளிப் போடலாம்.
* உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் குறைந்தது 45 நிமிடங்களுக்கு மேல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
* ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சரிவர மருந்துகள் எடுத்துக்கொண்டு, அவ்வப்போது அதன் அளவுகளை கண்காணிக்க வேண்டும்.
* ஏதேனும் ஒரு வெளி விளையாட்டில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
* உணவு முறையில் அவரவர் உடலுக்கும், வயதுக்கும், வாழ்வுமுறைக்கும் ஏற்ற மாற்றங்களை தகுந்த ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவியுடன் செய்துகொள்ளலாம்.
* முடிந்தவரை வாகனங்களை பயன்படுத்துவதை குறைத்தும், தவிர்த்தும் நடப்பது.
* மிதிவண்டியை ஓட்டி பயன் பெறலாம்.
* முடிந்தவரை வெளி உணவுகளை, அதிலும் குறிப்பாக துரித உணவுகளை தவிர்த்தல் நல்லது.
* குழந்தைகளை அதிகநேரம் தொலைக்காட்சி, கைப்பேசி பார்க்க அனுமதிக்காமல் இருக்கவேண்டும்.
* குழந்தைகளை தினமும் வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்த வேண்டும். எனவே நாம் ஒவ்வொருவரும் நம் தவறான வாழ்வுமுறை மாற்றங்களை இன்றைக்கே சரிசெய்து சுகாதாரமான வாழ்வுமுறைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்வை மீண்டும் பெறக் கிடைத்த ஒரு வாய்ப்பாக இதனை நினைத்து இப்போதே நம் வாழ்வியல் முறையை மாற்றி ஆரோக்கியத்திலும் வயதிலும் சதம் அடிக்கலாம்.
Average Rating