கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான அமெரிக்க பன்றி இறைச்சி!!! (கட்டுரை)
கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பற்றி நிச்சயம் சொல்லியாக வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள தெற்கு டக்கோட்டாவில் ஒரு மூலைப் பகுதியில் பெரிய அளவில் எப்படி பரவல் நிகழ்ந்துள்ளது?
பன்றிகள் இறைச்சிப் பண்ணையின் மூலம் வேகமாக நோய்த் தொற்று பரவியுள்ளது. தன் அலுவலர்களுக்கு அந்த நிறுவனம் எந்த வகையில் பாதுகாப்பு வசதிகள் செய்தது என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
மார்ச் 25 ஆம் தேதி மதியம் ஜூலியா தனது லேப்டாப்பில் முகநூலில் போலிக் கணக்கில் நுழைந்தார். நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை மறைமுகமாக கண்காணிக்க அவர் முயற்சி செய்தார். ஆனால், பல ஆண்டுகள் கழித்து, அதிக தீவிரமான விஷயத்துக்கு அது பயன்படுகிறது.
“ஸ்மித்பீல்டு பற்றி நீங்கள் கவனிக்க முடியுமா” என்று கேட்டு Argus911 என்ற பதிவருக்கு அந்தப் பெண் தகவல் அனுப்புகிறார். அந்தப் பகுதி பத்திரிகையான Argus Leader-ன் முகநூல் வழியிலான தகவல் அனுப்பும் பதிவர் அடையாளம் அது. “அங்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது. பண்ணையை திறந்து வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.” அந்தப் பெண் “ஸ்மித்பீல்டு” என்று குறிப்பிடுவது ஸ்மித்பீல்டு உணவுக்கான பன்றி இறைச்சிப் பண்ணையைப் பற்றி.
அது தெற்கு டக்கோட்டாவில் அந்தப் பெண்ணின் சியோவ்க்ஸ் பால்ஸ் நகரில் உள்ளது. பெரிய சியோவ்க்ஸ் நதியின் கரைகளில் எட்டு மாடிகள் கொண்ட வெள்ளை பெட்டிகளைப் போன்ற அந்த தொழிற்சாலை, அமெரிக்காவில் அதிக அளவில் பன்றி இறைச்சி உற்பத்தி செய்யும் 9வது இடமாக இருக்கிறது.
முழு அளவில் அது செயல்படும்போது ஒரு நாளுக்கு 19,500 புதிய பன்றி இறைச்சித் துண்டுகளை அது உருவாக்கும். இறைச்சியை துண்டுகளாக்கி, அரைத்து, பதப்படுத்தும் வேலை, ஹாட்-டாக் மற்றும் ஸ்பைரல் கட் ஹேம் என்ற பெயர்களில் அவை தயாரிக்கப்படுகின்றன. அங்கே 3,700 பேர் பணிபுரிகின்றனர். அந்த நகரில் அதிகம் பேர் வேலை பார்ப்பதில் நான்காவது பெரிய தொழிற்சாலையாக உள்ளது.
“உங்களது தகவலுக்கு நன்றி” என்று Argus911-ல் இருந்து அந்தப் பெண்ணுக்குத் தகவல் வந்தது. “கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்ட தொழிலாளர்கள் என்ன வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்?”
“எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை” என்று ஜூலியா பதில் அளித்தார்.
“ஓ.கே. நன்றி” என்று Argus911-ல் இருந்து பதில் வந்தது. “மீண்டும் தொடர்பு கொள்கிறோம்.”
மறுநாள் காலை 7.35 மணி. Argus Leader தனது இணையதளத்தில் இது குறித்த செய்திக் கட்டுரையை வெளியிட்டது.
“ஸ்மித்பீல்டு உணவக நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.”ஒரு அலுவலருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 14 நாள் தனிமைப்படுத்தல் சிகிச்சையில் இருப்பதாகவும், அவர் பணிபுரிந்த இடம் “முழுமையாக கிருமிநீக்கம்” செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த நிறுவனத்தின் பெண் செய்தித் தொடர்பாளர் கூறியதை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் டிரம்ப் அரசாங்கத்தில் “முக்கிய கட்டமைப்பு தொழிலாகக்” கருதப்படும் அந்த தொழிற்சாலை தொடர்ந்து முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
“நம் அனைவரின் வாழ்விலும் உணவு அத்தியாவசியமானது. கோவிட்-19 நோய்த் தடுப்பில் நாட்டின் நடவடிக்கைகளில் 40,000 அமெரிக்க குழு உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான அமெரிக்க விவசாயக் குடும்பத்தினர், உணவுப் பொருள் விநியோக சங்கிலித் தொடரில் ஏராளமானவர்கள் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள்” என்று, ஆலையை தொடர்ந்து நடத்துவதற்கான காரணம் குறித்து, ஆன்லைனில் மார்ச் 19 ஆம் தேதி வெளியிட்ட வீடியோ செய்தியில் ஸ்மித்பீல்டு தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஇஓ)கென்னத் சுல்லிவன் கூறியுள்ளார். “எங்கள் அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய நாங்கள் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் ஜூலியா அச்சப்படுகிறார்.
“இதற்கு முன்பே அங்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் பரவின” என்று அவர் கூறுகிறார்.
“குறிப்பாக ஸ்மித்பீல்டு ஆலையில் இருந்து சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக நான் அறிந்தேன். வாய்வழி தகவலாக மட்டுமே அவை வெளியாகின.”
ஜூலியா அந்தத் தொழிற்சாலையில் வேலை பார்க்கவில்லை. 20 வயதைக் கடந்துவிட்ட பட்டதாரியான அவர், கோவிட்-19 பாதிப்பால் பல்கலைக்கழகம் மூடப்பட்டதால் வீட்டில் இருக்கிறார். அவருடைய பெற்றோர் இருவரும் ஸ்மித்பீல்டில் நீண்டகாலம் பணியாற்றுகின்றனர். அவர்கள் மூலமாக அங்கு ஏற்பட்ட தொடர்புகளில் கிடைத்த தகவலை அன்றைய தினம் அவர் தெரிவித்துள்ளார். அந்தத் தொழிற்சாலை ஊழியர்களின் பிள்ளைகளில் வளர்ந்து பெரியவரான நிலையில் இருக்கும் பலரில் ஜூலியாவும் ஒருவர். குடியேற்றவாசிகளில் முதல் தலைமுறை குழந்தைகளில் ஒருவராகவும் இருக்கிறார். இவர்கள் ஸ்மித்பீல்டின் குழந்தைகள் எனப்படுகிறார்கள். இப்போது நோய்த் தொற்று பற்றி அவர்களாக பேசத் தொடங்கியுள்ளனர்.
“என் பெற்றோருக்கு ஆங்கிலம் தெரியாது. தங்களுக்காக அவர்களால் வாதாட முடியாது. யாராவது அவர்களுக்காகப் பேச வேண்டும்” என்கிறார் ஜூலியா.
சியோவ்க்ஸ் பால்ஸ்-ல் உள்ள பல குடும்பங்களைப் போல, அவருடைய குடும்பத்தினரும், நோயுறாமல் இருக்க தங்களால் ஆன அனைத்தையும் செய்தனர். விடுமுறை காலத்தில் மீதியுள்ள நாட்களை அவருடைய பெற்றோர், வீட்டிலேயே இருந்து கழித்துவிட்டனர். வேலை முடிந்து வந்து, காலணிகளைக் கழற்றியதும், நேராக குளிக்கச் செல்வார்கள். பணியில் இருக்கும்போது மூக்கு, வாயை மூடிக் கொள்வதற்கு துணியாலான தலைக் கவச உறைகளை வால்மார்ட் மூலம் ஜூலியா வாங்கிக் கொடுத்துள்ளார்.
தன் பெற்றோர்களை வீட்டிலேயே இருக்கச் செய்து, தொழிற்சாலையை மூடுவதற்கு மக்கள் மூலம் நெருக்கடியை ஏற்படுத்துவதும், அதன் மூலம் அனைவருக்கும் ஆரோக்கியம் கிடைக்கச் செய்வதற்கும் ஊடகத்துக்குத் தகவல் தருவது தான் நியாயமான வழி என்று ஜூலியா நினைத்துள்ளார். ஆனால் தங்களால் இழந்துவிட முடியாத வேலையில் அவருடைய பெற்றோர் தொடர்ந்து மூன்று வாரங்கள் ஈடுபட்டனர். உற்பத்திப் பிரிவுகளில் மற்றவர்களிடம் இருந்து ஓரடிக்கும் குறைவான இடைவெளியில் அவர்கள் அருகருகே நின்று வேலை பார்க்க வேண்டும். நெரிசலான லாக்கர் அறைகளை, நடைபாதைகளை, உணவகங்களை அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
அந்த சமயத்தில் ஸ்மித்பீல்டில் கோவிட்-19 பாதித்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 80ல் இருந்து 190 என உயர்ந்து, பிறகு 238 ஆக அதிகரித்தது.
கடைசியாக, ஏப்ரல் 15 ஆம் தேதி தெற்கு டக்கோட்டா ஆளுநர் அலுவலகத்தின் உத்தரவால் ஸ்மித்பீல்டு மூடப்பட்டது. அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 644 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால் அமெரிக்காவில் முதல்நிலை ஹாட்ஸ்பாட் ஆக அது மாறிவிட்டது. மொத்தத்தில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பில் 55 சதவீதம் ஸ்மித்பீல்டு தொடர்புடையதாக உள்ளன. யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் கடற்படை கப்பல் மற்றும் இல்லினாய்ஸ் சிக்காக்கோ கூக் கவுண்டி சிறைகளைவிட ஸ்மித்பீல்டு எண்ணிக்கை அதிகம் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்மித்பீல்டில் நோய் பாதித்தவர்களில் முதன்முறையாக ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததற்கு அடுத்த நாள், இந்த புள்ளிவிவரங்கள் வெளியாயின.
“அவருக்கு அங்கே வைரஸ் பரவியது. அதற்கு முன்பு அவர் ஆரோக்கியமாக இருந்தார்” என்று இறந்தவரின் மனைவி ஏஞ்சலிட்டா ஸ்பானிய மொழியில் பிபிசியிடம் தெரிவித்தார். “இதனால் உயிரிழப்பது என் கணவருடன் முடிந்துவிடாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி ஆட்சி நடைபெறும் ஐந்து மாகாணங்களில் ஒன்றில் ஸ்மித்பீல்டு பன்றி இறைச்சிப் பண்ணை செயல்படுகிறது. அங்கு பாதுகாப்பு அம்சம் எதுவும் பின்பற்றப்படவில்லை. நோய்த் தொற்று பாதிப்பின் சமூக பொருளாதார பாரபட்சத்தைக் காட்டும் வகையில் அதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன. நாட்டில் அலுவலகப் பணியில் இருக்கும் பலரும், தங்கும் வசதியுடனும், வீட்டில் இருந்தபடியும் வேலை பார்க்கின்றனர். ஸ்மித்பீல்டு போன்ற உணவுத் தொழிற்சாலை ஊழியர்களின் பணி “அத்தியாவசியம்” என்ற பிரிவில் வருவதால், அவர்கள் முன்வரிசை சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
“அமெரிக்காவில் சராசரி வேலைகளுக்குத் தருவதைவிட, இந்த அத்தியாவசிய சேவை தொழிலாளர்களுக்கு, குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. சில நேர்வுகளில் சம்பள வித்தியாசம் அதிகமாக உள்ளது. எனவே, வீடுகளுக்குச் செல்லும் உதவியாளர்கள், காசாளர்கள் ஆகியோர் அத்தியாவசிய சேவையில் இருக்க வேண்டியவர்கள், முன்வரிசை சேவையில் இருப்பவர்கள் என்பதால் நேரடியாக பணிக்கு வந்தாக வேண்டும்” என்று புரூக்கிங்ஸ் நிலையத்தின் ஆராய்ச்சியாளர் அடியி டோமர் கூறினார். “அவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களாக அல்லது ஹிஸ்பானியர்களாக இருப்பார்கள்” என்கிறார் அவர்.
மியான்மர், எத்தியோப்பியா, நேபாளம், காங்கோ மற்றும் எல் சால்வடோர் நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்த அல்லது அகதிகளாக வந்தவர்கள் ஸ்மித்பீல்டில் அதிக அளவில் வேலை பார்க்கின்றனர். அந்த வளாகத்தில் 80 வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 14 முதல் 16 டாலர் வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது. அங்கு வேலை நேரம் அதிகம், வேலை சூழல் கடினமாக இருக்கும், நின்று கொண்டு வேலை பார்க்க வேண்டும், அருகில் நிற்பவரிடம் இருந்து ஓர் அடிக்கும் குறைவாகத்தான் தள்ளி நிற்க வேண்டியிருக்கும்.
ஸ்மித்பீல்டில் வேலை பார்க்கும் மற்றும் ஏற்கெனவே வேலை பார்த்த அரை டஜன் பேரிடம் பிபிசி பேசியது. அங்கே தொடர்ந்து வேலைக்குப் போக பயப்படுவதாக அவர்கள் கூறினர். வேலையா அல்லது ஆரோக்கியமா என்று முடிவு செய்வது சிரமமாக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
“எனக்கு நிறைய செலவுகள் உள்ளன. எனக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கப் போகிறது. எனவே நான் வேலைபார்த்தாக வேண்டும்” என்று 25 வயதான ஒரு தொழிலாளி கூறினார். அவருடைய மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். “எனக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், சிக்கலாகிவிடும். என் மனைவியை என்னால் காப்பாற்ற முடியாது” என்றார் அவர்.
நாடு முழுக்க உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கொரோனா வைரஸ் பிரச்சினையில் சிக்கியுள்ளன. இதனால் நாட்டில் உணவு வழங்கல் சங்கிலித் தொடரில் பாதிப்பு ஏற்படக்கூடும். கொலராடோவில் இறைச்சி பதப்படும் ஜே.பி.எஸ். தொழிற்சாலையில் 103 தொழிலாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்ததை அடுத்து, அந்த ஆலை மூடப்பட்டது. இயோவாவில் டைசன் உணவுத் தொழிற்சாலையில் 2 தொழிலாளர்கள் இந்த நோய்க்குப் பலியாகிவிட்டனர், 148 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சியோவ்க்ஸ் பால்ஸ் போன்ற பெரிய அளவிலான இறைச்சி பதப்படுத்தும் ஆலைகள் மூடப்படுவது, உணவு வழங்கல் சங்கிலித் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தும், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்க முடியாமல் திணறுவார்கள். சுமார் 550 பன்றி வளர்ப்பு விவசாயிகள் சியோவ்க்ஸ் பால்ஸ் பண்ணைக்கு பன்றிகளை அனுப்பி வருகின்றனர்.
ஆலை மூடப்படுவதாக அறிவித்தபோது, இறைச்சி வழங்குவதில் “கடுமையான, அநேகமாக பேரழிவுகரமான, பின்விளைவுகள் ஏற்படும்” என்று ஸ்மித்பீல்டு சிஇஓ சுல்லிவன் எச்சரித்துள்ளார்.
ஆனால் ஸ்மித்பீல்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் குடிபெயர்ந்த மக்களின் வழக்கறிஞர்களின் கருத்தின்படி, இந்த ஆலை தவிர்க்க இயலாமல் மூடப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். தனிப்பட்ட முழு உடல் கவச உறைகள் வழங்க வேண்டும் என்று ஆரம்பத்தில் விடுத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன, நோயுற்ற தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர், வைரஸ் பரவி இருப்பது பற்றிய தகவலை நிர்வாகம் தெரிவிக்கவே இல்லை, குடும்பத்தினருக்கும் வெளியில் பொது மக்களுக்கும் அவர்கள் மூலமாக நோய் பரவும் ஆபத்து இருந்தும் அந்தத் தகவலை மறைத்துவிட்டார்கள் என்று அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
“இந்த நிறுவனம் திறந்திருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்று மத்திய ஆட்சி விரும்பினால், தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு அந்த நிறுவனம் நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டியது யாருடைய பொறுப்பு” என்று Que Pasa Sioux Falls என்ற ஸ்பானிய மொழி செய்தி மையத்தின் நிறுவனர் நான்சி ஹெய்னோஜா கேள்வி எழுப்புகிறார். இதுதொடர்பாக ஸ்மித்பீல்டு தொழிலாளர்கள் பல வாரங்களாக இயலாமையை வெளிப்படுத்தியதை அறிந்திருப்பதாக அவர் கூறுகிறார்.
கேள்விகள் பட்டியல் ஒன்றையும், தொழிலாளர்களின் புகார்களையும் ஸ்மித்பீல்டு நிர்வாகத்துக்கு பிபிசி அனுப்பியது. ஒவ்வொரு விஷயங்கள் குறித்த புகார்களுக்கும் நிர்வாகம் பதில் எதுவும் அளிக்கவில்லை.
“ஒவ்வொரு நாளும் எங்கள் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் தான் எங்களுக்கு முதன்மையானது” என்று ஸ்மித்பீல்டு நிர்வாகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
“பிப்ரவரி மாதத்தில் இருந்து, நாங்கள் கடுமையான, கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். மார்ச் மாத ஆரம்பத்தில், எங்கள் செயல்பாடுகளில் கோவிட்19 பாதிப்பு எதற்கும் வாய்ப்பு அளித்துவிடாமல், சிறப்பாக மேலாண்மை செய்ய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி.) வழிகாட்டுதல்களைத் தீவிரமாகப் பின்பற்றி வருகிறோம்” என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஜூலியாவின் தாயாருக்கு ஏற்கெனவே உடல்நலன் பாதித்துள்ளது. தங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உயிருக்கு ஆபத்து இருப்பதைப் பற்றி பெற்றோர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்று ஜூலியா போன்றவர்களுக்குக் கவலை ஏற்பட்டுள்ளது.
“எனக்கு இருப்பதெல்லாம் என் பெற்றோர்கள் மட்டுமே. அவர்களைப் பற்றி நான் கவலைப்பட்டாக வேண்டும்” என்று கூறுகிற போது அவருடைய குரலில் தடுமாற்றத்தை உணர முடிகிறது. “அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். அந்த நிறுவனம் எதையெல்லாம் செய்யவில்லை என்ற உண்மையான ஆதாரங்கள் உள்ளன” என்கிறார் அவர்.
ஸ்மித்பீல்டு பணியிடத்தில் ஷிப்டு நேரத்தில் நீலாவை முதன்முதலில் அகமது பார்த்திருக்கிறார். அந்தப் பெண்ணின் தோலின் நிறம் அவருக்குப் பிடித்துப் போனது. அகமதுவின் சிரிப்பு அந்தப் பெண்ணுக்குப் பிடித்துப் போனது. நீலாவிடம் பேச்சுக் கொடுத்தபோது, இருவரும் எத்தியோப்பியாவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இருவரும் ஒரோமோ என்ற மொழியைப் பேசினர்.
“வாவ் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு கிடைக்கும் இடைவேளை நேரத்தில் நீலா எங்கே பணிபுரிகிறார் என தேடிப் பார்ப்பேன்” என்று அகமது நினைவுபடுத்திக் கூறுகிறார். “அவரைப் பார்த்ததும் நின்று, `ஹே, என்ன செய்கிறாய்’ என கேட்டு, அவர் அழகாக இருப்பதாகச் சொல்வேன்.”
எல்லோரும் செல்லும் நியூ அமெரிக்கன் உணவகத்துக்கு நீலாவை அகமது அழைத்துச் சென்றிருக்கிறார். விஸ்கான்சின் டெல்ஸ் பகுதிக்கு நீண்ட விடுமுறைக்கால பயணம் சென்றிருக்கிறார்கள். நீர்ச் சறுக்கு மற்றும் வெப்ப நீருற்றுகள் கொண்ட, சுற்றுலா தலமாக அது இருக்கிறது. இருவரும் காதல் கொண்டு, திருமணம் செய்து கொண்டார்கள்.
இப்போது நீலா எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறார். டிசம்பரில் நீலா ஸ்மித்பீல்டு வேலையில் இருந்து நின்றுவிட்டார். அகமது அங்கே தொடர்ந்து வேலைக்குச் செல்கிறார். தொழிற்சாலையில் நோய்த் தொற்று ஏற்பட்டால், தன் மூலமாக மனைவிக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் பரவுமோ என்ற பயத்தில் அவர் இருக்கிறார். எட்டு மாத கால கர்ப்பம் என்பதால் நடக்க சிரமப்படும் நீலாவுக்கு, அகமதுவின் உதவி தேவைப்படுகிறது. அதனால் இருவரும் பிரிந்திருக்க முடியாது.
தொழிற்சாலையில் தன் நண்பர்கள் இருவருக்கு நோய்த் தொற்று கண்டறியப் பட்டிருப்பதாக அகமது கூறினார். தன்னிடமும் அறிகுறிகள் தென்படுவதாகவும் குறிப்பிட்டார்.
“ஸ்மித்பீல்டில் தொழிலாளர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். தங்களுடைய பணம் பற்றி மட்டுமே அவர்கள் கவலைப்படுவார்கள்” என்று நீலா கூறினார்.
தொழிலாளர் பாதுகாப்பு கருதி ஷிப்டு மற்றும் உணவு இடைவேளை நேரங்களை மாற்றி அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை மார்ச் ஆரம்பத்தில் ஸ்மித்பீல்டு நிர்வாகத்திடம் வைத்ததாக சியோவ்க்ஸ் பால்ஸ் தொழிற்சங்கத்தின் தலைவர் கூப்பர் காராவே தெரிவித்தார். நிறுவனத்தின் கேண்டீனில் ஒரே சமயத்தில் 500 பேர் வரை சாப்பிட முடியும் என்ற நிலையில், நேரத்தை பிரித்து வைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. முகக்கவச உறைகள், முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் தருவது, நுழைவாயில்களில் உடல் வெப்பத்தைக் கண்டறிவது போன்ற கோரிக்கைகளையும் அவர்கள் வைத்துள்ளனர்.
“நிறுவனத்தில் யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படாத காலத்திலேயே இவற்றை நாங்கள் கேட்டோம்” என்று காராவே தெரிவித்தார்.
“நிர்வாகம் பின்வாங்கிக் கொண்டது, தொழிலாளர்களின் கோரிக்கைகளின் தீவிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை.”
தொழிற்சாலையில் நோய்த் தொற்று பாதிப்பு தொடங்கியதாக முதலாவது பாதிப்பு குறித்த தகவல் வந்த போது டிம் அங்கு பயிற்சியில் இருந்த தொழிலாளி. அவருக்கு அருகில் அமர்ந்து வேலை பார்த்த ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் அந்த அறிவிப்பை செய்த பிறகு தொழிற்சாலை அமைதியாகிவிட்டது என்று டிம் தெரிவித்தார்.
“கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி அதன் பிறகு நாங்கள் எதுவுமே கேள்விப்படவில்லை. எல்லாம் சரியாகிவிட்டது என்று நாங்கள் நினைத்தோம்” என்றார் அவர். அதன்பிறகு ஏப்ரல் 8 ஆம் தேதி, அந்தத் தொழிற்சாலையில் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெற்கு டக்கோட்டா மாகாண சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியது. ஊடகச் செய்திகள் மூலம் தான் தாங்கள் இதைத் தெரிந்து கொண்டதாகவும், ஸ்மித்பீல்டு நிர்வாகத்தின் மூலம் தெரியவரவில்லை என்றும் அங்கு வேலை பார்க்கும் பலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
“எனது துறையில் வேலை பார்த்த சிலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக நான் அறிந்தேன். உடன் வேலை பார்க்கும் மற்றவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்று ஜூலியாவின் தாயார் ஹெலன் தெரிவித்தார்.
தொழிற்சாலையின் பிரதான நுழைவாயில் அருகே வெள்ளைக் கூடாரத்தின் கீழ், உடல் வெப்பத்தைக் கண்டறியும் வசதி உருவாக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், உடல் வெப்பம் அதிகமாக இருந்தவர்களும் தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்பட்டதாக ரெய்னோஜாவும், காராவேயும் தெரிவித்தனர். உடல் வெப்பத்தைக் கண்டறியும் பகுதியைத் தவிர்க்க விரும்புபவர்கள், பக்கவாட்டில் உள்ள பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று ஹெலன் தெரிவித்தார்.
சாப்பாட்டு மேசையில் தொழிலாளர்களுக்கு இடையில் தடுப்புகளை உருவாக்க அட்டைகளை வைத்தது, ஷிப்டு நேரங்களை மாற்றியது, கை கிருமிநாசினிகள் வைத்தது போன்ற மற்ற மாற்றங்களை ஸ்மித்பீல்டு மேற்கொண்டது. ஆனால் பாதுகாப்புக் கவச சாதனங்கள் முகத்தின் தாடியை மறைக்கும் வலைகளைப் போல இருந்தனவே தவிர, காற்றில் பரவம் மாசுகளைத் தடுக்கும் N95 முகக் கவச உறைகளைப் போல இல்லை என்று, பல தொழிலாளர்கள் சொன்ன தகவல்கள் மூலமாகவும், பிபிசிக்கு வந்த புகைப்படங்கள் மூலமாகவும் தெரிய வந்துள்ளது.
“முடிகளுக்கான வலைகளை முகத்துக்குப் போட்டால் போதும் என்று சிடிசி கூறியதாக நான் எங்கும் படிக்கவில்லை” என்று காராவே தெரிவித்தார்.
முடியை மறைக்கும் வலைகள் தந்தது பற்றிய கேள்விகளுக்கு ஸ்மித்பீல்டு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடை தரப்பட்டது பற்றிய கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. மாறாக, “வழங்கல் சங்கிலித் தொடரில் உள்ள நெருக்குதலைக் கருத்தில் கொண்டு, உடல் வெப்பம் கண்டறியும் சாதனம் மற்றும் முகக்கவச உறைகள் வாங்குவதற்கு நாங்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம், இரண்டுமே பற்றாக்குறையாக உள்ளன” என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
சியோவ்க்ஸ் பால்ஸில் இருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ள, மின்னெசோட்டாவில் வொர்த்திங்டனில் உள்ள ஜே.பி.எஸ். வளாகத்தில் தொழிலாளர்களுக்கு, “கையுறைகள், முகக்கவச சர்ஜிக்கல் உறைகள், முகக் கவசங்கள், உடலை மூடும் ஆடைகள்” தரப்பட்டிருப்பதாக தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர் என்று ஸ்டார் டிரிபியூன் (Star Tribune) தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்று உள்ள யாருடனாவது அவர்களுக்கு தொடர்பு இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தங்களுடைய விதிமுறையாக உள்ளது என்று டைசன் உணவு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளார்.
Average Rating