நாயுருவி!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 33 Second

மூலிகை மந்திரம்

எல்லா பருவங்களிலும், எல்லா இடங்களிலும், எளிதாக வளரக்கூடிய ஒரு செடியாக நாயுருவியை நாம் அறிந்திருப்போம். குறிப்பாக மழைகாலங்களில் பார்க்கிற இடங்களில் எல்லாம் சாதாரணமாகத் தென்படக்கூடிய நாயுருவிக்கு, அசாதாரணமான பல மருத்துவகுணங்கள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?Achyranthes aspera என்பது நாயுருவியின் தாவரப் பெயர் ஆகும். ஆங்கிலத்தில் Prickly chaff flower என்று அழைக்கிறார்கள். ஆயுர்வேதத்தில் அபமார்க்கா, ஷிகாரி, மயூரா என்றும், தமிழில் நாயுருவி என்ற பெயரோடு கதிரி, சிறுகடலாடி, மாமுனி என்ற பெயர்களாலும் சொல்வதுண்டு.

ஆன்மிகரீதியாகவும் பெரிய முக்கியத்துவம் கொண்டது நாயுருவி. ஓமம் வளர்க்கும்போது காய்ந்த நாயுருவியை அக்னியில் சேர்ப்பது வழக்கம். நவக்கிரகங்களில் புதன் பகவானுக்கு உரியதாகவும், தான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும் என்றும் நாயுருவியை ஆன்மிகத்தில் கொண்டாடுகிறார்கள்.நாயுருவியின் மருத்துவப் பயன்கள் Pectoral என ஆங்கிலத்தில் சொல்லப்படும் மார்பகத்தசை தொடர்பான நோய்களைத் தீர்க்கும் வல்லமை பெற்றது நாயுருவி. நாயுருவியை காயவைத்து எரித்து சாம்பலாக்கி வைத்துக்கொண்டு, தினம் இருவேளை 500 மில்லிகிராம் முதல் 2 கிராம் வரை உள்ளுக்குச் சாப்பிடுவதால் ஆஸ்துமா, இருமல் போன்ற மார்பக நோய்கள் குணமாகும்.

ஈரலைப் பலப்படுத்தி பாதுகாக்கும் பெருமைமிக்க மருத்துவ குணத்தை உடையது நாயுருவி.நாயுருவி மாதவிலக்கைத் தூண்டக்கூடியது. இளந்தாய்மார்கள் நாயுருவியை உபயோகப்படுத்தும்போது தேவையான பால் சுரப்பு ஏற்படும். கருச்சிதைவு உண்டாகும் அபாயம் இருப்பதால் கர்ப்பிணிகள் நாயுருவியைத் தவிர்க்க வேண்டும்.நாயுருவியின் வேர் வற்றச் செய்யும் தன்மை உடையது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மையுடையது. இதன் விதைகள் வாந்தியைத் தூண்டக்கூடியது, பித்த சமனியாகப் பயன்படுவது. நாயுருவியினின்று தயாரிக்கப்படும் எண்ணெய் பூஞ்சைக் காளான்களைப் போக்கக்கூடியது.‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்பதைக் கேள்வியுற்றிருக்கிறோம்.

நாயுருவியின் வேரும் அதற்கு இணையான மகத்துவம் கொண்டதுதான். நாயுருவி வேரின்மூலம் பல் துலக்குவதால் பற்களுக்கு பாதகம் செய்யும் கிருமிகள் கொல்லப்படுவதோடு, பேசுகையில் துர்நாற்றம் வீசச் செய்யும் நுண்கிருமிகளும் கொல்லப்படும்.நாயுருவி வேரினால் பல்துலக்கிவந்தால் முகத்துக்கும் பொலிவு கிடைக்கும்.நாயுருவியின் சமூலத்துக்கு(இலை, பூ, துளிர், தண்டு, காம்பு, பட்டை,வேர் ஆகிய அனைத்துப் பகுதிகளும்) சிறுநீரை வடிக்கும் குணம் உண்டு. இதனால் இந்திய மருத்துவத்தில் நாயுருவி சமூலத்தை தீநீராக்கி சிறுநீரகத் கோளாறு களுக்கும், நீர்த்தேக்கத்துக்கும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நாயுருவியின் இலையை அதிசாரம்(நீராகப் பேதியாகி உடல் நீர் வற்றுதல்), ரத்த மூலம், அதிக வியர்வை ஆகியவற்றை குணமாக்கப் பயன்படுத்துவர்.

நாயுருவி விதையைப் பசியில்லாமல் இருப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் சித்தர்கள் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.தேள், வண்டு போன்றவை கடித்துவிட்டால் நாயுருவியின் இலையை நசுக்கி கடித்த இடத்தில் வைத்து தேய்த்தால் வலி உணர்வும், விஷத்தன்மையும் மறைந்துவிடும். இதேபோல் வெறிநாய்க்கடி, விஷப்பாம்புக்கடி, தேள்கடி ஆகியவற்றை குணப்படுத்தவும் நாயுருவி விதைகளை உள்ளுக்குள் மருந்தாகக் கொடுக்கிறது ஆயுர்வேத மருத்துவம்.கண் நோய்கள், சரும நோய்கள் ஆகியவற்றுக்கும் நாயுருவியின் விதைகளை உள்ளுக்குள் மருந்தாக உபயோகிக்கலாம்.நாயுருவி இலைகளைப் புதிதாகப் பறித்து, நன்கு மைய அரைத்து உருட்டி தேள் கடிக்குத் தேய்த்தால் உடனே நச்சு நீங்கப் பெற்று நலம் உண்டாகும். நாயுருவி செடியின் இளம் மொட்டுக்களைச் சேகரித்து, கொஞ்சம் இனிப்பு சேர்த்து அரைத்து, மாத்திரை போல உருட்டி உள்ளுக்குள் மருந்தாகக் கொடுத்தால் வெறிநாய்க்கடி விஷம் வெளியேறிப் போகும்.

நாயுருவியின் சமூலத்தை வெயிலில் இட்டுக் காயவைத்து, எரித்து எடுத்த சாம்பலைக் கஞ்சியில் கலந்து உள்ளுக்குக் கொடுக்க ‘மகோதரம்’ என்கிற பெருவயிறு மங்கிப் போகும். இலைக்குடிநீரை வயிற்றைச் சுத்தம் செய்யும் பொருட்டு பேதி மருந்தாகவும் பயன்படுத்தலாம். பிரசவ காலத்தில் நாயுருவி குடிநீரைக் கொடுத்துவந்தால் இடுப்பு வலி தூண்டப்பட்டு எளிய பிரசவத்துக்கு வழி பிறக்கும்.நாயுருவி இலைகளை மிளகு, பூண்டு இவைகளுடன் சேர்த்து அரைத்து, மாத்திரைகளாகச் செய்து உள்ளுக்குக் கொடுப்பதால் விட்டுவிட்டு வந்து வேதனையைத் தருகிற காய்ச்சல்கள் மறைந்து போகும்.

நன்னாரி யுடன் நாயுருவியை சமபங்கு சேர்த்துக் குடிநீராக்கிக் கொடுப்பதால் கொடுமையான குடற்கோளாறுகளும் கட்டுப்படும். நாயுருவியின் இலைக்கொழுந்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்து ரத்த மூலம், வெளித்தள்ளிய மூலம், வேர் விட்ட மூலம் என எவ்வித மூலமானாலும் மேற்பூச்சாகப் பூசி வந்தால் விரைவில் மூலம் குணமாகும்.நாயுருவியின் இலையை கலவாங்கீரையில் (பலவகை கீரைகள் கலந்தது) சேர்ப்பது வழக்கம். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த மூலம், அதிசாரபேதி, சீதள நோய்கள், அதிக வியர்வை, பல் சம்பந்தமான நோய்கள்(பல்லில் ரத்தம் மற்றும் சீழ் வடிதல்) ஆகியன குணமாகும்.நாயுருவி சமூலத்தின் சுட்டெரித்த சாம்பல் பிரசவித்த பெண்களின் உதிரச்சிக்கலைப் போக்கும்.மேலும், பெண்களின் பெரும்பாடு என்கிற மாதவிலக்கு பிரச்னைகளைப் போக்கவும் இந்த சாம்பல் பயன்படுகிறது.

நாயுருவி மருந்தாகும் விதம்

* மலச்சிக்கலைப் போக்கவும், உடலுக்கு உஷ்ணத்தைத் தூண்டவும் ஆயுர்வேதத்தில் நாயுருவியைப் பயன்படுத்துகிறார்கள். சிவந்த நாயுருவியை வாத நோய்களைத் தடுக்கவும், குளிர்ச்சியை உண்டாக்கவும் மருத்துவர்கள் பயன்படுத்துவர்.

* வெண்மை, சிவப்பு இரண்டு வகை நாயுருவிகளையும் வாந்தி, கபம், ெகாழுப்பு, வாதம், இதயநோய், வயிறு உப்புசம், மூலநோய், அரிப்பு, வயிற்றுவலி என்பனவற்றைப் போக்குவதற்குப் பயன்படுத்துவர்.

* நாயுருவி வேரில் ஊற வைத்த குடிநீர் அல்லது சமூலக் குடிநீர் தயார் செய்து 20 மி.லி. முதல் 35 மி.லி. வரை உள்ளுக்குக் கொடுத்து வந்தால் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும்.

* நாயுருவி வேரை 15 கிராம் அளவு எடுத்து, இரவு ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, ஊறிய தெளிந்த நீருடன் சுவை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்று வலி, வயிற்றுப்புண் ஆகியன குணமாகும்.

* நாயுருவியின் இலைச்சாற்றை மேலுக்குத் தடவுவதால் சொறி, சிரங்கு, தேமல், படை போன்ற சரும நோய்கள் குணமாகும்.மலேரியா, டைபாய்டு, அம்மை, யானைக்கால் ஆகிய எவ்வித காய்ச்சல் கண்டபோதும் நாயுருவி இலையோடு ஐந்தாறு மிளகும் வெல்லமும், இரண்டு அல்லது மூன்று பல்பூண்டும் சேர்த்து அரைத்து உள்ளுக்கு தினம் இரண்டு வேளை கொடுக்க காய்ச்சல் விரைவில் காணாமல்
போகும்.

* நாயுருவி வேரை விழுதாக அரைத்து, அரிசி கழுவிய நீருடன் சிறிது தேனும் கலந்து அன்றாடம் உட்கொண்டு வந்தால் மூலநோய் முற்றிலுமாகத் தணியும்.

* நாயுருவி சாற்றை செம்மறி ஆட்டின் சிறுநீரில் கலந்து உள்ளுக்குக் கொடுப்பதால் சிறுநீர்ப்பையில் சேர்ந்து துன்பம் தரும் கல் கரைந்து வெளியேறி விடும் என்று ஆயுர்வேத நூல்கள் பரிந்துரைக்கின்றன.நாயுருவி விதைகளை எடுத்து விழுதாக அரைத்து, எண்ணெயில் இட்டுக் காய்ச்சிப் பக்குவப்படுத்தி, எண்ணெய் குளியல் செய்வித்தால் தீராத தலைவலியும் தீர்ந்து போகும்.

* நாயுருவி சமூல விழுதை நெய் கலந்துஅரிசி கழுவிய நீரில் கலந்து உட்கொள்ளச் செய்தால் பாம்பு விஷம் நீங்கும். நாயுருவி சமூலத்தை அரைத்து விழுதாக்கி, நெல்லிக்காய் அளவு எடுத்து பாலுடன் சேர்த்து உள்ளுக்குக் குடித்தால் சிறுநீர் தடை, சொட்டு மூத்திரம், சிறுநீர்த்தாரை எரிச்சல் ஆகியன குணமாகும்.

* நாயுருவி விதையை அரைத்து நெல்லி அளவு எடுத்து, அரிசி கழுவிய நீரில் கலந்து உட்கொள்ளச் செய்தால் ரத்த மூலம் குணமாகும்.நாயுருவி வேரை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வெருகடி அளவு எடுத்து சம அளவு மிளகுப் பொடியும் சேர்த்து தேனில் குழைத்து உள்ளுக்குக் கொடுக்க இருமல் குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வித்தியாசமாக வாழ்பவர்கள்!! (வீடியோ)
Next post தினம் வால்நட் சாப்பிடுங்க… படுக்கையில் அசத்திடுங்க…!! (அவ்வப்போது கிளாமர்)