ஹீட்டர் யோகாவும் நீர் மேல் அமர்ந்து செய்யும் யோகாவும் !! (மகளிர் பக்கம்)
‘‘ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், உடல் எடையை குறைக்கவும் யோகாசனம் அவசியம். யோகா செய்தால் மனநிம்மதியும், மன மகிழ்ச்சியும் ஏற்படும்…’’ என்கிறார் சர்வேஷ் சஷி. 23 வயதாகும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக யோகா பயிற்சி அளித்து வருகிறார்.
இவரது ஸ்பெஷல் என்ன தெரியுமா? தரையில் பாயை விரித்து அதில் யோகாசனம் செய்வது மட்டுமல்ல. அதிலேயே வேறு பல புதுமைகளை புகுத்த முடியும் என ஆராய்ந்து வருவதும் அதை அமல்படுத்தி வருவதும் தான்.ஆகாசனத்தில், சூடான அறையில், தண்ணீரில் யோகா செய்வது சர்வேஷ் சஷியின் சிறப்பு.‘‘அப்ப நான் கல்லூரி படிச்சுட்டு இருந்தேன். அப்பா கொஞ்சம் ஃபிட்னஸ் ஃபிரீக். நானும் அப்படித்தான். நடனம், உடற்பயிற்சின்னு என்னுடைய உடலை ஆரோக்கியமா வைச்சிருப்பேன்.
அப்பாவுக்கு யோகா கத்துக்கணும்னு திடீர்னு ஆசை வந்தது. அதுக்காக கட்டணமும்கட்டிட்டார். ஆனா, வேலை காரணமா அவரால யோகா பயிற்சிக்கு போக முடியலை. செலுத்திய கட்டணம் வீணாக வேண்டாமேன்னு என்னை அந்த பயிற்சிக்கு போகச் சொன்னார். ஆரோக்கியத்து மேல எனக்கும் ஈடுபாடு இருந்ததால சந்தோஷமா நானும் யோகா கத்துக்க ஆரம்பிச்சேன். அஞ்சு வருஷங்கள்… யோகா கத்துக்க ஆரம்பிச்ச பிறகுதான் என்னையே நான் உணர்ந்தேன். உடல் ஆரோக்கியம் ஒரு பக்கம்னா, மன தைரியம் அடுத்த பக்கம். ஆழ்மன சக்தியை முழுமையா உணர்ந்தது அப்பதான்.
நான் கத்துக்கிட்டதை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்க நினைச்சேன். அதனோட விளைவுதான் ‘ஸோர்பா யோகாசன பயிற்சி மையம்’. இதை ஆரம்பிச்சப்ப எனக்கு வயசு 21தான்…’’ என்று சிரிக்கிறார் சர்வேஷ்.‘‘யோகாசனத்துல பல வகை ஆசனங்கள், தியான முறைகள், மருத்துவம் சார்ந்த ஆசனங்கள் இருக்கு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை கொடுக்கும். நீரிழிவு பிரச்னை, உடல் எடை குறைப்பு, மன அழுத்தம்… இப்படிஎல்லாத்துக்கும் தீர்வு உண்டு.
உடல் ஆரோக்கியமா இருந்தாதான் சந்தோஷமாவே வாழ முடியும். இதற்கான உத்திரவாதத்தைதான் நாங்க தர்றோம். பயிற்சி மையம் ஆரம்பிக்கலாம்னு முடிவு செய்ததும் பலரும் தோள் கொடுத்தாங்க. இதை தொடங்க என் மாமா பண உதவி செய்தார். பல நண்பர்கள் உள் அலங்காரம் செய்யவும் பிரான்சைஸ் எடுக்கவும் உதவினாங்க. இந்த இரண்டு வருடங்கள்ல சொல்லிக்கிறா மாதிரி நிறைய செய்திருக்கோம். யோகா மூலமா ஒருத்தருக்கு ரத்தத்துல இருக்கிற WBC எண்ணிக்கை கணிசமா உயர்ந்திருக்கு. உட்காரவேமுடியாதவங்க நடக்கறாங்க.
இன்னிக்கி இருக்கிற வேகமான உலகத்துல மனதை சாந்தப்படுத்த யோகாவால மட்டும்தான் முடியும்…’’ என்றசர்வேஷ், தனது புதுமைகள் குறித்து உற்சாகத்துடன் விளக்க ஆரம்பித்தார். ‘‘நான் புதுமை விரும்பி. எந்த வேலையையும் மத்தவங்க மாதிரி செய்யக் கூடாதுன்னு நினைப்பேன். அப்படித்தான் எனக்கு தெரிஞ்ச யோகாசனங்களிலும் புதுமையை புகுத்த நினைச்சேன். நமக்கு தெரிஞ்ச, நம்மால் முடிந்த விஷயங்களை நமக்குள்ளயே வைச்சிருக்கறதால யாருக்கு என்ன பயன்? அதனால மத்தவங்களும் பயனடையும்போதுதான், அவங்க முகத்துல சந்தோஷம் பூக்கும்போதுதான் அதுக்கான அர்த்தமே வெளிப்படும்.
தினமும் தரைல பாய் விரிச்சு யோகா செய்தா, நாளடைவுல அப்படி செய்யணும்கிற கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம். அதுவே அதை புதுமையா செய்ய ஆரம்பிச்சா… நிச்சயம் கட்டாயத்துக்காக இல்லாம விருப்பத்தோட செய்ய ஆரம்பிப்போம்.இதை எல்லாம் மனசுல வைச்சுதான் ‘ஹாட் யோகா’வை அறிமுகப்படுத்தினோம். அதாவது, ஒரு சூடான அறைல யோகாசனம் செய்வது. அந்த அறையை ஹீட்டரால சூடாக்குவோம். கிட்டத்தட்ட ஸ்டீமர் அறை மாதிரி இருக்கும். இதுல யோகா செய்யறப்ப உடல்ல இருக்கிற தேவையற்ற கொழுப்புகள் கரையும். உடல் எடையை குறைக்க நினைக்கிறவங்களுக்கு ஏற்ற யோகா இது.
அப்புறம் ஏர் யோகா. அதாவது, தொட்டில் யோகா.
குழந்தைக்கு கட்டுறது மாதிரி துணில தொட்டில் கட்டி அதுல செய்யற யோகாதான் ஏர் யோகா. பிறகு பேடில் போர்ட் யோகாசனம். தண்ணீர்னா சிலருக்கு பயம். வேறு சிலருக்கு சந்தோஷம். அதுல விளையாட அவங்களுக்கு பிடிக்கும். யோகா செய்யும்போது மனசுல சந்தோஷமும் உடல்ல புத்துணர்ச்சியும் ஏற்படணும். இதுதான் முக்கியம். சொல்லப்போனா யோகா கான்ெசப்டே இதுதான். அதனாலதான் விதவிதமான யோகாவை அறிமுகப்படுத்தறோம்.
தண்ணீர்ல உடற்பயிற்சி செய்யலாம். சிலர் அதுலயே நடன அசைவுகளை அறிமுகப்படுத்தி இருக்காங்க. நான் ஒரு படி மேலே போய் அதுல யோகாசனத்தை புகுத்தியிருக்கேன். சர்பிங் செய்ய பயன்படுத்தப்படும் பலகைதான் பேடில் போர்ட். இது தண்ணீர்ல மிதக்கும். கவிழ்ந்தாலும் மூழ்காது. சென்னைல சவுக்கத் ஜமால் என்பவர் சர்ஃபிங் பயிற்சி அளிக்கிறார். அவரோட சேர்ந்து இதை செய்ய நினைச்சேன். அவரும் உற்சாகத்தோட சம்மதிச்சார். இப்படி அறிமுகமானதுதான் பேடில் போர்ட் யோகாசனம்.இதை அடுத்தமாசம்தான் மக்களுக்கு அறிமுகப்படுத்தப் போறோம்…’’ என்று சொல்லும்சர்வேஷ், இதில், தான் பயிற்சி அளிக்கும் விதத்தை விவரித்தார்.
‘‘நான் ஏற்கனவே சொன்னா மாதிரி இந்த பலகை கவிழாது. தண்ணீர்ல மிதக்கும். சரியானபடி அது மேல நாம அமர்ந்து ஆசனம் செய்யலைனா பேலன்ஸ் தவறி தண்ணீர்ல விழுவோம். ஸோ, முதல்ல சரியான நிலைல இருக்க பழகணும். அதுக்கு சவுக்கத் பயிற்சி அளிப்பார். இதை கத்துகிட்டு பயமில்லாம நாம அமர ஆரம்பிச்சதும் யோகாசனம் செய்யறது சுலபம். பேடில் பலகைல சில நுணுக்கமான விஷயங்களை கடைப்பிடிச்சாலே போதும்.அதாவது, பலகையோட நடுவுலதான் நாம இருக்கணும். பலகையில் இருந்து எழுந்திருக்கும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தை பார்த்துக் கொண்டுதான் எழுந்துக்கணும். கொஞ்சம் தலையை திருப்பினாலோ அல்லது சாய்ந்து பார்த்தாலோ பேலன்ஸ் தவறி தண்ணீர்ல விழுந்துடுவோம்.
முக்கியமான விஷயம், இந்த யோகா செய்ய நீச்சல் தெரிஞ்சிக்கணும்னு அவசியமில்ல. 250 அடி ஆழம் இருந்தாலும், அப்படியே தவறி விழுந்தாலும் லைஃப் கார்டுகள் காப்பாத்திடுவாங்க.இந்த பயிற்சியை ஒட்டியம்பாக்கம் குவாரில செயல்படுத்தப் போறோம். இதை தினமும் செய்ய முடியாது. மத்த யோகாசன பயிற்சிகளுக்கு நடுவுல, மாசத்துக்கு ஒரு நாள் அல்லது ரெண்டு நாள் செய்ய திட்டமிட்டிருக்கோம். ஒருநாள் கட்டணம் இரண்டாயிரம் ரூபாய்தான்.
காலை ஆறு மணிக்கு கிளம்பினா, குவாரிக்கு ஏழரைக்கு போயிடலாம். அங்க ஒரு மணி நேரம் பயிற்சி. அப்புறம் காலை உணவை சாப்டுட்டு வீட்டுக்கு திரும்பிடலாம்.இப்ப பெங்களூர்ல ஒரு கிளை ஆரம்பிக்கப் போறோம். அதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு. குவாரி பயிற்சி சக்சஸ் ஆனதும் அதை அப்படியே ஏரி, கடல்னு விரிவுப்படுத்தும் திட்டமிருக்கு…’’ என்று சொல்லும் சர்வேஷ் யோகாசனத்தில் மேலும் பல புது யுக்திகளை அறிமுகம் செய்யப் போகிறாராம்.
Average Rating