கொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்!! (உலக செய்தி)
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நெருக்கடிக்கு நீங்கள் மட்டுமே காரணம் என பிரதமர் நரேந்திர மோதிக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கொரோனா நெருக்கடியை பிரதமர் கையாளும்விதம் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“ஏமாற்றமடைந்த ஒரு குடிமகன் என்ற முறையில் இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். மார்ச் 23ஆம் தேதி எழுதிய என்னுடைய முதல் கடிதத்தில் நம் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள், பலவீனமானவர்களைக் கைவிட்டுவிட வேண்டாமெனக் கோரியிருந்தேன். ஆனால், அடுத்த நாளே மிகக் கடுமையான, உடனடியான ஊரடங்கு உத்தரவை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செய்ததுபோலவே அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வுசெய்யப்பட்ட என் தலைவர் என உங்களை நம்பியிருந்த எனக்கு இது மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போதும் உங்களை நம்பினேன். அனால், அது தவறு எனப் புரிந்தது. நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்பதை காலம் நிரூபித்தது.
இப்போதும் நீங்கள்தான் எங்கள் தலைவர். இந்தக் கடினமான காலகட்டத்தில் நீங்கள் சொல்வதைத்தான் 140 கோடி இந்தியர்களும் கேட்கப்போகிறோம். இன்றைக்கு உலகில் உங்களுக்கு இருப்பதுபோல இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு வேறு யாருக்கும் கிடையாது. நீங்கள் சொன்னால் அவர்கள் செய்கிறார்கள். இன்று இந்த தேசம் கடினமான நிலைமையை உணர்ந்து, உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக நீங்கள் கைதட்ட உத்தரவிட்டபோது, உங்கள் எதிராளிகள்கூட கைதட்டினார்கள். ஆனால், நீங்கள் சொல்வதைச் செய்கிறோம் என்பதால், உங்களுக்கு அடிபணிந்து செல்வதாக நீங்கள் புரிந்துகொள்ளக்கூடாது. என் மக்களின் தலைவர் என்ற முறையில் நீங்கள் நடந்துகொள்ளும் முறையைக் கேள்விகேட்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நடந்த அதே தவறு மிகப் பெரிய முறையில் மீண்டும் நடப்பதாக எனக்கு அச்சம் இருக்கிறது. பணமதிப்பழப்பு நடவடிக்கையால் பலர் தங்களுடைய சேமிப்பை இழந்தார்கள். ஏழைகள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். தவறான முறையில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த ஊரடங்கு, வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கப்போகிறது. ஏழைகளுக்கு உங்களைவிட்டால் வேறு யாரும் இல்லை. ஒரு பக்கம், வசதியுள்ளவர்களை விளக்குகளை ஏற்றி, பிரமாதமான காட்சியை உருவாக்கச் சொல்கிறீர்கள். ஆனால், ஏழைகளின் வாழ்வே ஒரு வெட்கப்படத்தக்க காட்சியாக இருக்கிறது.
உங்களுடைய உலகில், பால்கனியில் எண்ணெய் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும்போது, ஏழைகளின் வீட்டில் அடுத்த ரொட்டியைச் சுடுவதற்கே எண்ணையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, மக்களை அமைதிப்படுத்த முயன்றீர்கள். அது இந்த நேரத்தில் அவசியம்தான். ஆனால், அதைவிட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.
வீட்டில் பால்கனி உள்ள வசதிபடைத்தவர்களின் பதற்றங்களைத் தணிக்க இம்மாதிரியான மனநல நடவடிக்கைகள் பலனைத் தரலாம். ஆனால், தலைக்கு மேல் கூரையே இல்லாதவர்கள் கதி? நம்முடைய சமுதாயத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் ஏழைகளை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, பால்கனி உள்ள மக்களுக்கான பால்கனி அரசாக இருக்க விரும்ப மாட்டீர்கள் என்றே நான் கருதுகிறேன். இந்த ஏழைகளின் மீதுதான் பணக்காரர்களும் வசதி படைத்தவர்களும் மத்திய தர வர்க்கத்தினரும் தங்கள் வாழ்க்கையைக் கட்டியிருக்கிறார்கள். ஏழைகள் முதல் பக்கச் செய்தியில் வர மாட்டார்கள். ஆனால், தேச வளர்ச்சியில் அவர்களது பங்கு, பொருளாதார ரீதியிலும் சரி, உணர்வு ரீதியிலும் சரி புறக்கணிக்க முடியாதது. நாட்டில் பெரும்பான்மையினர் அவர்களே. கீழே இருப்பதை அழிக்க நினைத்தால், மேலே இருப்பது கவிழ்ந்துவிடும் என்பதை வரலாறு பலமுறை நிரூபித்திருக்கிறது.
லட்சக் கணக்கான தினக்கூலித் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் தெருவோரம் கடை வைத்திருப்பவர்கள், ஆட்டோ – டாக்ஸி ஓட்டும் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் இருள் நீங்கி, சிறு வெளிச்சமாவது கிடைக்காதா என ஏங்குகிறார்கள். ஆனால், ஏற்கனவே பாதுகாப்பாக இருக்கும் மத்திய தர வர்க்கத்தை இன்னும் பாதுகாப்பதிலேயே நாம் நமது கவனத்தைச் செலுத்துகிறோம். நான் மத்திய தர வர்க்கத்தையோ, வேறு எந்தப் பிரிவினரையோ கண்டுகொள்ளக்கூடாது என்று சொல்லவில்லை. மாறாக, எல்லாருடைய பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்; யாரும் பட்டினியோடு படுக்கைக்குச் செல்லக்கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்கிறேன். கோவிட் – 19 மேலும் பலரைத் தாக்கும். ஆனால், ஏழைகள் பசியாலும் ஏழ்மையாலும் வாடுகிறார்கள். இது கோவிட் – 19ஐவிடக் கொடுமையானது. கோவிட் – 19 போன பிறகும் இதன் தாக்கம் போகாது.
இவ்வளவு பெரிய பிரச்சனையை மிக மோசமாக எதிர்கொள்வதற்கு, சாதாரண மக்களைக் குற்றம்சொல்ல முடியாது. உங்களை மட்டுமே குற்றம் சுமத்த முடியும். நீங்கள் மட்டுமே இதற்குப் பொறுப்பு. தங்கள் வாழ்க்கை இயல்பானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதற்காகத்தான் மக்களால் அரசு நிறுவப்படுகிறது. இதற்கு மக்கள்தான் பணம் கொடுக்கிறார்கள்.
இம்மாதிரியான மிகப் பெரிய சம்பவங்கள் வரலாற்றில் இரண்டு காரணங்களுக்காக இடம்பெறுகின்றன. முதலாவது, அவை ஏற்படுத்தும் அழிவுக்காக. அதுதான் அவற்றின் இயல்பு. இரண்டாவதாக, அவை மனிதர்களிடத்தில் ஏற்படுத்தும் சமூக – கலாச்சார மாற்றங்கள், எதற்கு முன்னுரிமை தர வேண்டுமென மனிதர்களுக்கு கற்பிப்பதால் ஏற்படக்கூடிய நீண்ட காலத் தாக்கம் ஆகியவற்றுக்காக நினைவுகூரப்படுகின்றன. ஆனால், எந்த ஒரு வைரஸாலும் ஏற்படுத்த முடியாத தாக்கமும் அழுகலும் நம்முடைய சமூகத்தில் ஏற்பட்டிருப்பதை நான் வருத்தத்தோடு பார்க்கிறேன்.
ஐயா, உண்மையான அக்கறை கொண்டவர்களின் குரலைக் கேட்க இதுதான் சரியான நேரம். எனக்கு உண்மைான அக்கறை இருக்கிறது. எல்லாக் கோடுகளையும் அழித்துவிட்டு, உங்கள் பக்கம் நின்று உதவிசெய்ய எல்லோருக்கும் அறைகூவல் விடுக்க வேண்டிய தருணம் இது. இந்தியாவின் மிகப் பெரிய சக்தி என்பது அதனுடைய மனித சக்தி. கடந்த காலத்தில் நாம் மிகப் பெரிய பிரச்சனைகளையெல்லாம் சந்தித்திருக்கிறோம். நாம் இதையும் தாண்டிச் செல்வோம். ஆனால், அப்படி நடக்கும்போது எல்லோரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். மறுபடியும், ஏதாவது ஒரு பக்கத்தை தேர்வுசெய்வதாக அமையக்கூடாது.
நாங்கள் கோபமாக இருக்கிறோம். ஆனால், இன்னமும் உங்கள் பக்கம் இருக்கிறோம்.” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.
Average Rating