மெட்ராஸ் கீரை!! (மருத்துவம்)
சென்னைக்குப் புதிதாக வருகிறவர்கள் பிரம்மாண்டமான ஓங்கி உயர்ந்த கட்டிடங்களைப் பார்த்து வியப்பது போலவே, ஓங்கி உயர்ந்த ஒரு கீரையைப் பார்த்தும் வியந்துபோயிருப்பார்கள். அதிலும் ஆடி மாதங்களில் மிக அதிகமாக எல்லா இடங்களிலும் காணக் கிடைக்கும் அந்த கீரை. அதற்குப் பெயர்தான் தண்டுக்கீரை.
ஆடி மாத அம்மன் வழிபாட்டின்போது கூழ் வார்க்கும் நிகழ்வில், அந்த பெரிய தண்டுக்கீரைக்கு முக்கிய இடமுண்டு.அதில் அப்படி என்ன விசேஷம், வழக்கமாகக் கிடைக்கும், எல்லா ஊர்களிலும் பயன்படுத்தப்படும் தண்டுக்கீரைக்கும் இதற்கும் பயன்கள் வேறுபடுமா என்று உணவியல் நிபுணர் சிவப்ரியாவிடம் கேட்டோம்…
‘‘பச்சைப்பசேல் என்ற நிறத்திலும், இளஞ்சிவப்பு நிறத்திலுமாக இரண்டு விதமான தண்டுக்கீரைகள் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். இதில் சென்னையில் பயன்படுத்தபட்டு வரும் கீரைக்கும், மற்ற தண்டுக்கீரைக்கும் பயன்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
அவற்றில் பெரிதாக வித்தியாசங்களும் இல்லை. அடையாளத்துக்காக இதனை பெரிய தண்டுக்கீரை என்றோ அல்லது சென்னையில் மட்டும் கிடைப்பதால் மெட்ராஸ் கீரை என்றோ சொல்லிக் கொள்ளலாம்’’ என்கிற சிவப்ரியா, அதன் பயன்களைப் பற்றித் தொடர்ந்து விளக்குகிறார்.
‘‘நாம் அன்றாடம் பயன்படுத்துகிற கீரை வகைகளிலேயே, ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டது இந்தக் கீரை வகை என சொல்லலாம். ஆங்கிலத்தில் White goose foot என அழைக்கப்படுகிற இக்கீரை, இந்தியா முழுவதும் விளையக் கூடியது. குறிப்பாக, தமிழகம் உட்பட தென்னிந்தியா, இமயமலை அடிவாரம் பகுதிகள் முதலான இடங்களில் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஆனாலும், சென்னையில்தான் பரவலாக இது
விற்கப்படுகிறது.
மிகப்பெரிய இலைகள், நீண்ட, தடித்த தண்டுகளை உடைய இக்கீரை 90 சென்டிமீட்டர் முதல் 1.30 சென்டிமீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. இளஞ்சிவப்பு வண்ணத்தில் பூக்களைக் கொண்ட இத்தாவரத்தின் விதைகள், மஞ்சள், சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
வைட்டமின், புரதம், தாது, கால்சியம், ஆண்டி-ஆக்சிடண்ட்ஸ், லூடின் பிக்மென்ட்(Lutein Pigment), ஃபோலேட் என்கிற ஊட்டச்சத்து ஆகியவை இந்த உணவுப் பொருளில் ஏராளமாக உள்ளன.
இதனால், மழைக்காலங்களில், உண்டாகிற தொற்றுநோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. பழுதடைந்த உயிரணுக்களின் வளர்ச்சியைத் தூண்டி, உடல் திடகாத்திரமாக வளரச் செய்கிறது. இதில் உள்ள கால்சியம் எலும்புகள் தேய்ந்து போவதைத் தடுத்து, ஆஸ்டியோபொரோசிஸ் வராமல் பார்த்துக்கொள்கிறது.
மாடுலர் சீரழிவு, கண்புரை முதலான பாதிப்புகள் உண்டாவதை லூடின் பிக்மென்ட் தடுக்கிறது. இந்த தண்டுக்கீரையால் பெண்களுக்கு அதிகளவில் பயன்கள் கிட்டுகின்றன. ஃபோலேட் என்ற சத்து பெண்களுக்குக் அவசியம் தேவைப்படுகிற சத்துக்களில் ஒன்றாக உள்ளது. முக்கியமாக கருவுற்ற பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிற கீரையாகவும் இருக்கிறது.
ஃபோலேட் சத்து குறைபாட்டுடன் பிறக்கிற குழந்தைகளுக்கு நரம்புக்குழாய் தொடர்பான பிரச்னைகள் வரலாம். அப்பிரச்னைகளில் இருந்து மழலைச் செல்வங்களைப் பாதுகாக்க அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இதன் சாறு தலைமுடி உதிர்வதைத் தடுக்கிறது. நம்முடைய உடலில் சுரக்காத அமினோ அமிலமான லைசின் இந்த தண்டுக்கீரையில் ஏராளமாகக் காணப்படுகிறது. லைசின் அமிலம் தலைமுடி வேர்களுக்குக் கால்சியம் செல்லும் திறனை அதிகரித்து, முடி தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. நார்ச்சத்தை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உள்ளதால், கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பேணிப் பாதுகாக்கிறது.
இத்தனை மகத்துவங்கள் உள்ள இந்த தண்டுக்கீரை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது. பொதுவாகவே, ஏதேனும் ஒரு கீரை வகையினை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கூறுகள் கீரையில் நிறைய உள்ளன’’ என்று பொதுவான உடல்நல ஆலோசனை சொல்பவர், ‘‘அதற்காக தண்டுக்கீரையினை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.
முக்கியமாக, ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் குறைவாக சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்குக் கொடுப்பதாக இருந்தால் 6 மாதங்கள் முடிந்த பின்னர்தான் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
அவ்வாறு கொடுக்கும்போது, தண்ணீரில் பலமுறை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், இக்கீரையில் படிந்திருக்கும் நச்சுப்பொருட்கள் அகற்றப்பட்டு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. கைக்குழந்தைகளுக்கு நன்றாக வேக வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து ஊட்டலாம்’’ என அறிவுறுத்துகிறார்.
Average Rating