நெஞ்சக கோளாறுகளை போக்கும் அம்மான்பச்சரிசி!! (மருத்துவம்)
அன்றாடம் நமக்கு அருகில், எளிதில், இல்லத்தில், சாலையோரங்களிலும் கிடைக்க கூடிய மூலிகை பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருந்துகள் தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்தவரிசையில், அம்மான் பச்சரிசி கீரை குறித்தும், உடலை பலப்படுத்தும் பச்சை பயறுவின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.எளிய முறையில் கிடைக்கின்ற அம்மான் பச்சரிசி கீரையானது வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளது. இதன் இலை, பூ, தண்டு ஆகியன ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. சுவாச பை மற்றும் சுவாச வழி பாதையில் ஏற்படுகின்ற கோளாறுகளை சரிசெய்கிறது. இவ்வகை கீரை சிறுநீர் பெருக்கியாக இருந்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
சிவப்பு அம்மான் பச்சரிசியை பயன்படுத்தி துவையல் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அம்மான் பச்சரிசி- இலை, தண்டு, நல்லெண்ணெய், பெருங்காயப்பொடி, பூண்டு பற்கள், வரமிளகாய், வெங்காயம், சீரகம், தேங்காய் துருவல், உப்பு.பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் சிறிது பெருங்காயம், சீரகம், பூண்டு பற்கள், 2 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் சுத்தம் செய்த அம்மான் பச்சரிசி கீரை சேர்க்கவும். பச்சை வாடை நீங்கியதும், அதனுடன், தேங்காய், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். பின்னர் சூடு தணிந்ததும் அதனை துவையலாக அரைக்கவும். இந்த துவையலை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நீங்கும். வாரத்தில் இரண்டு முறை உணவுடன் எடுக்கும்போது, வயிற்று கோளாறு, சீதபேதி, வைரஸ் காய்ச்சல், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு ஆகியவற்றை சரிசெய்கிறது.மேலும் அம்மான் பச்சரிசி கீரை தண்டினை உடைக்கும்போது வெளிவரும் பாலினை மருக்கள், கால்ஆணிகளில் இடுவதால் உடனடி நிவாரணம் கிடைக்கும். தாய்மார்களுக்கு பால்சுரக்கவும், ரத்தத்தை உறைய செய்யவும், ரத்த நாளங்களில் அடைப்புகளை சரிசெய்து ரத்தத்தை நீர்மையாக்கும் தன்மையும் இக்கீரைக்கு உள்ளது.
நரம்புகளை பலப்படுத்தும் பச்சைபயறு காரப்பொடி தயாரிப்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பச்சை பயறு, பெருங்காயம், சீரகம், வரமிளகாய், நெய், நல்லெண்ணெய், உப்பு. செய்முறை: வாணலியில் நெய்விட்டு, உருகியதும் சீரகம், வரமிளகாய், பச்சை பயறு, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொறிய விடவும். கலவை ஆறியதும் பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியினை நெய் கலந்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். கை, கால் உளைச்சலை சரிசெய்கிறது. இடுப்பு வலியை போக்குகிறது. இஞ்சியை பயன்படுத்தி இருமலுக்கான நிவாரணியை தயார் செய்யலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி, பால், தேன். செய்முறை: இஞ்சி சாறு-1 அல்லது 2 ஸ்பூன், பால்-300 மில்லி, தேன்-2 ஸ்பூன் எடுக்கவும். மிதமான பாலில் இஞ்சி சாறு கலந்து தேனுடன் குடிப்பதால் இருமல் நீங்கி உடனடி நிவாரணம் கிடைப்பதுடன் படிப்படியாக நெஞ்சக சளியினையும் அகற்றுகிறது. மேலும் சுவைமிக்க இந்த இஞ்சி ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் வாயு கோளாறுகளை நீக்குகிறது.
Average Rating