அநியாயமோ, அறியாமையோ? ஆனால், அடக்கப்பட வேண்டியது !! (கட்டுரை)
கொரோனா! கொரோனா!!
இந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை.
அடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ்.
இவ்வாறாக, முழு உலகத்தையுமே கொரோனா வைரஸ் உரு(புர)ட்டிப் போட்டு விட்டிருக்கின்றது.
அறிவியல் ரீதியாகப் பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்கார நாடுகள், இன்று கண்டுபிடிக்க முடியாத, கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மல்லுக்கட்டி வருகின்றன.
புதிய சட்டங்கள், புதிய திட்டங்கள் நாளாந்தம் நடைமுறைக்கு வருகின்றன.
இவ்வாறானதொரு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான நேரத்தில் யாழ்ப்பாணம், நல்லூர்ப் பகுதியிலுள்ள குளிர்பான நிலையத்தில், கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டிய வைத்தியருக்கும் அவரது நண்பருக்கும் நிறுவனப் பணியாளர்களும் வேறு சிலரும் இணைந்து அடித்துள்ளனர்; கற்கலால் எறிந்துள்ளனர்.
கொரோனா வைரஸ், மூன்று வழிகளில் பரவுகின்றது. முதலாவதாக, வெளிநாட்டிலிருந்து வருகின்ற நோயாளர்கள்;
இரண்டாவது, வெளிநாட்டிலிருந்து வரும் நோயாளர்களுடன் நேரடித் தொடர்பு உள்ளவர்கள்;
இறுதியாக, உள்ளூர் நோயாளிகளிடமிருந்து பரவுதல் என்பனவே அவையாகும்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், வைத்தியரும் அவரது நண்பரும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்த வேளையில், வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர், குறித்த குளிர்பானக் கடைக்குச் செல்வதை அவதானித்து உள்ளனர்.
வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என, வைத்தியரும் அவரது நண்பரும் எடுத்துக் கூறி விளக்கி உள்ளனர். அவ்வேளையிலேயே, குளிர்பான விற்பனை நிலைய ஊழியர்களும் வேறு சிலரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள பிறிதொரு குளிர்பானக் கடையில் பணியாற்றிய 18 வயதுக்குக் குறைந்த ஓர் ஊழியர் (சிறுவன்) அங்கு கடமையில் இருந்த வேளையில், மின்சார ஒழுக்கின் காரணமாக மரணமடைந்த சம்பவம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.
வணிக நிலையங்கள், வருமானம் ஈட்டுவதற்கு அப்பால், சில சமூகப் பொறுப்புகள், கடப்பாடுகள் அவற்றுக்கு இருக்கின்றன. அவை, அறம் சார்ந்ததாகவோ, சட்டம் சார்ந்ததாகவோ, சமூகம் சார்ந்ததாகவோ இருக்கலாம். ஆனால், விரும்பியோ விரும்பாமலோ, அவை கட்டாயமாகக் கடைப்பிக்கப்பட வேண்டியவைகள் ஆகும்.
ஆனால், இன்றைய பரபரப்பான பொருள் ஈட்டும் குறுகிய வாழ்க்கை, அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்து விட்டது. குறித்த வைத்தியர், தான் பணியாற்றும் பிரிவு (ஊர்காவற்றுறை, காரைநகர்) என்பதைக் கடந்து, தான் சார்ந்த மக்கள் என்றே, அவ்வாறான விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தார் என்பதை, ஒரு தடவை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும், இன்றுள்ள ஆபத்தான சூழ்நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக, இவ்வாறான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை, வைத்தியர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியாது. இந்நோய் தொடர்பிலான விடயங்களை அறிந்த தன்னார்வ நபர்கள் யாருமே, விழிப்புணர்வில் ஈடுபடலாம்.
ஏனெனில், வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. ஆனால், ஒரு வைத்தியருக்கே அடி கொடுக்கும் எம்மவர்கள், கையில் சாதாரண நபர்கள் சிக்கினால், என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது, வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும்; தலை குனிய வைத்திருக்கும்.
‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப் பொருள் கேட்பதே அறிவு’. அதற்கு அமைவாக, நோய் பரவும் விதம், நோயின் கொடூரம், தடுப்பு முறைகள் என, அவற்றைக் கேட்டு, அவர்களது அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் பின்பற்றியிருக்க வேண்டியதே காலத்தின் கட்டாய தேவை ஆகும்.
அடுத்து, ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என, எமது சமூகம் கல்வியைத் தனது கண்கள் போலக் கருதுகின்றது. ஆனாலும், இவ்வாறான பாரிய இடர்பாடு நேரத்திலும், தனியார் வகுப்புகள், சட்டத்தைப் புறக்கணித்து, ஆங்காங்கே களவாக நடத்தப்படுகின்றன.
கல்வி முக்கியம்தான்; அதில் இரண்டாம் கருத்துக்கு இம்மியும் இடமில்லை. ஆனால், ‘சுவர் இருந்தால் தானே, சித்திரம் வரையலாம்’ எனக் கல்வியைக் காட்டிலும், உடல், உள ஆரோக்கியம் முக்கியமானது. இதை, இக்காலப் பகுதியில், கல்வியைக் களவாகப் புகட்டும் ஆசிரியர் சமூகம், அறியாமை அறிவீனம் ஆகும்.
இவற்றைக் காட்டிலும், கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்காக அரசாங்கம் விடுமுறை வழங்கி உள்ளது. இதனைப் பயன்படுத்தி, பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஊர் சுற்றுவது, தேவையற்ற பயணங்களை மேற்கொள்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே, அரசாங்கத்துக்கு ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது.
அன்று தமிழினம், முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக உயிர்ப்பலி கொடுத்தது. அநியாயமாக, நடு வீதியில் குற்றுயிராகக் குருதி கொட்டக் கொட்டக் கிடந்த, எங்களை மீட்க மீட்பர்கள் இல்லையா என ஏங்கித் தவித்தோம்; அனைவரும் கை விட்டனர்; ஆற்றாமையால் அழுதோம், புரண்டோம்; இறுதியில் மடிந்தோம்.
இன்று வீதி விபத்துகள் என்றும் தற்கொலைகள் என்றும் கொஞ்சம் கொஞ்சமாகக் கறையான் போல, எம் இனத்தைப் பலி கொண்டு வருகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இன்னும் ஏன் இந்த அலட்சியப் போக்கு எங்கள் மத்தியில் நிலவுகின்றது?
1956ஆம் ஆண்டு தொடக்கம், 2009 ஆம் ஆண்டு வரையிலான மரணங்களைத் தடுத்து நிறுத்தும் வலிமை, எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு இருந்தது. இன்று இவ்வாறான மரணங்களையும் நோய்களையும் அடியோடு அழிக்கும் சக்தி எங்களிடம் இருந்தும், ஏன் அவற்றை உதாசீனப்படுத்துகின்றோம்?
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் மய்யங்களை, அரசாங்கம் கிழக்கில் மட்டக்களப்பிலும் வடக்கில் வவுனியாவிலும் அமைத்துள்ளதாக கவலை அடைகின்றோம். இது கூட, இன ரீதியான பாகுபாடு என, நாம் எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றோம். ஆனால், எங்களது தனிப்பட்ட பாதுகாப்பிலும் அது கடந்து, ஒட்டு மொத்த எம் சமூகத்தினது பாதுகாப்பிலும் எந்தளவு தூரம் அக்கறை கொண்டிருக்கின்றோம்.
ஸ்பெயின் நாட்டில், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட பிரார்த்தனையே, பலருக்குக் கொரோனாவை வழங்கி விட்டுச் சென்று விட்டது. அதாவது, அந்நாட்டில் கொரோனாவிலிருந்து விடுபடுவதற்கான விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டு உள்ளது. அதன் போது, புனித நீர் ஒரு பாத்திரத்தில் இடப்பட்டு, அங்கிருந்தவர்களுக்குத் தீர்த்தம் போல, வழங்கப்பட்டு உள்ளது. இறுதியில் அந்தத் தீர்த்தமே, எமனாக 80 பேருக்கு நோயை வழங்கி விட்டுச் சென்று விட்டது.
இவ்வாறான, உலக நடப்புகளை அறியாது, எங்கள் நாட்டிலும் விசேட பூஜை வழிபாடுகள், ஜெப ஆராதனைகள் எனப் பலர் வெளிக்கிட்டு விட்டார்கள். கூட்டுப் பிரார்த்தனை சக்தி வாய்ந்தது; வலிமை மிக்கது. ஆனால், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, கூட்டப் பிரார்த்தனை செய்வோரை, அது, கூட்டாகக் கொய்து விடும் என்பதை, அவர்கள் அறியாமை, அறிந்தும் அதை நிறுத்தாமை, வேதனை அளிக்கின்ற விடயங்கள் ஆகும்.
கண்களை மூடிக் கொண்டு, நெருப்புடன் விளையாட முடியாது என, உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி, இது தொடர்பில் அழுத்தமாகச் கூட்டிக் காட்டி உள்ளார். ஏற்கெனவே, எம் நாடு கூட, கடந்த 12ஆம் திகதியே பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்தது.
நாம் அனைவரும், ஏதோ சீனாவில் ஏற்பட்ட ஒரு வியாதி தானே என, வெறும் அலட்சியப்போக்குடன் காலத்தைக் கடத்தி விட்டோம். எங்கள் நாடு, ஒரு தீவு ஆகும். ஆகவே, எமக்கு புவியியல் ரீதியாக எல்லைகள் கிடையாது. நோய்க் கிருமி எம் நாட்டுக்குள் நுழை(ந்த)வதற்கான ஒரே வழி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்புத் துறைமுகம் மாத்திரமே ஆகும்.
ஆகவே, வெளிநாட்டவர்கள், வெளி நாட்டுக்குப் போய், மீள நாட்டுக்கு வந்த எம்மவர்களே, நோயைப் பரப்பியவர்கள் ஆவார்கள். எனவே, இவர்களது வருகையை, நாங்கள் கண்காணிக்கத் தவறி விட்டோம்.
இத்தாலி நாட்டில் கூட, இந்நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தத் தவறியதாலேயே பாரிய அளவிலான உயிரிழப்புகள் நடைபெற்று உள்ளன. இன்று காலன் காலுக்கு அடியில் சுற்றிச் சுற்றி வட்டமிடும் போது கூட, உணர்கின்றோம் இல்லை.
இதற்கிடையே முழு உலகுமே, தம்மைக் கொரோனா வைரஸ் கொன்று குவித்து விடும் எனப் பயத்தில் இருக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகப் பாரியதொரு பிரச்சினை அல்ல; அது தடிமன் போன்று, ஒரு புதிய நோய் ஆகும்” எனத் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தெரிவித்து உள்ளார்.
தனது கட்சி சார்பில், அம்பாறை மாவட்டக் கச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு, “கொரோனா வைரஸ் தாக்குதல் செய்யாது” எனக் கூறியுள்ளார். இது கூட, இவர்களது அறியாமையா? அல்லது, அநியாயக் கருத்தா?
Average Rating