Buckwheat Special!! (மருத்துவம்)
கோதுமையையே ஆங்கிலத்தில் Wheat என்கிறோம். ஆனால், Buckwheat என்பது கோதுமையுடன் தொடர்பு கொண்டது அல்ல. இந்த தானியம்தான் சமீபகாலமாக ஊட்டச்சத்து உலகில் டிரெண்டாகிக் கொண்டும் இருக்கிறது. இதுபற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?!
* Buckwheat தமிழில் பப்பாரை என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு மரக்கோதுமை என்றொரு பெயரும் உண்டு. இச்செடியின் தாவரவியல் பெயர் Fagopyrum esculentum.
* குட்டைச் செடியாக இருந்தாலும் Buckwheat அடர்த்தியாக வளரக் கூடியது. இதன் பூக்கள் அளவில் சிறியவை. வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். ஆசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இச்செடி பயிரிடப்படுகிறது.
* பார்க்க கோதுமை போல் இருந்தாலும் இது கோதுமையின் ஒரு வகையெல்லாம் இல்லை. மொத்தத்தில் இது தானிய வகையைச் சார்ந்ததே இல்லை. இச்செடியின் விதையான பக் வீட்(Buckwheat) உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
* நார்ச்சத்து, புரதம் மேலும் பல வகையான ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவாக இருப்பதால் இதனை சூப்பர் ஃபுட் என்று கருதுகின்றனர்.
* ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் அடுப்பில் மிதமான தீயில் சமைத்து சாப்பிடலாம். வெந்தவுடன் பார்த்தால் பார்லி போல இருக்கும். இதனை மாவாக அரைத்தும் பலவிதமான உணவுகளில் பயன்படுத்தலாம்.
* வட இந்திய உணவுகளில் Buckwheat பயன்படுத்துகின்றனர். பொதுவாக பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த விதைகளை கஞ்சி செய்து சாப்பிடலாம். நூடுல்ஸ் போன்றவற்றிலும் உபயோகிக்கலாம். Raw foood (சமைக்காத உணவு) டயட் எடுப்பவர்கள், க்ளூட்டன் ஃப்ரீ உணவு எடுப்பவர்களும் இதனை பயன்படுத்துகின்றனர்.
* சமைக்கப்பட்ட ஒரு கப் Buckwheat விதையில், கொழுப்புச் சத்து மிகக் குறைவாக ஒரு சதவிகித அளவிலும், நார்ச்சத்து 5 கிராம் அளவிலும், கார்போஹைட்ரேட் 33 சதவிகித அளவிலும், புரதம் 6 கிராம் அளவிலும் இருக்கும். கலோரி 155 கிராம் இருக்கும். இது தவிர மக்னீசியம், பாஸ்பரஸ், ஸிங், நியாசின், மாங்கனீசு, போலேட் மற்றும் விட்டமின் B6 போன்ற சத்துக்கள் இதில் நிரம்பியுள்ளன.
* தானியம் போன்று காணப்பட்டாலும் பக் வீட் தானிய வகையைச் சார்ந்ததல்ல. பக்வீட்டின் தனிப்பட்ட குணநலன்களால் அது நமக்குப் பலவிதத்திலும் நன்மை தருவதாக இருக்கின்றது.
* பக் வீட்டின் விதை எல்டிஎல்(LDL) எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இதயக் குழாய்கள் தடிமனாவதைத் தடுக்கும். இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இந்த விதையில் உள்ள சில சத்துக்களால் ரத்த அழுத்தமும் சீராகிறது.
* மற்ற முழு தானியங்களோடு ஒப்பிடுகையில் பக் வீட்டிலுள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக உறிஞ்சப்பட்டு உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. இன்சுலின் ரெஸிஸ்டன்ஸையும்(சென்ஸ்டிவிட்டி) அதிகரிக்கிறது.
* க்ளூட்டன் குறைவான உணவாக இருப்பதால் சீலியாக் நோய் (Ceiliac disease) உள்ளவர்களுக்கு பாதுகாப்பான உணவாக இருக்கும். சிலருக்கு தானியங்கள் அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால், இந்த பக் வீட் அத்தகைய அலர்ஜியை ஏற்படுத்தாது. ஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவாக இருக்கும்.
* நார்ச்சத்து 6 சதவிகிதம் மட்டும் இருப்பதால், இதனை ஒரு கப் அளவிற்குச் சாப்பிட்டாலும் அவ்வளவு சீக்கிரம் பசியெடுக்காது. அதனால் எடை குறைப்பில் உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பக் வீட்டிலிலுள்ள சில சத்துக்கள் சில வகை புற்றுநோய்களையும் கட்டுக்குள் வைக்கின்றன.
* எளிதில் ஜீரணமாகக்கூடிய தாவர புரதம் இது. தசைகளை வலுவாக்கும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
* வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் நம் ஊரின் ஆர்கானிக் கடைகளிலும், ஆன்லைன் வழியாகவும் பக் வீட் கிடைக்கிறது.
Average Rating