தமிழ்த் தேசியமும் கொரோனா வைரஸும் !! (கட்டுரை)
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டச் செல்நெறியில், தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை நோக்கும்போது, வெறும் சுயநல அரசியல் போக்கையே காணமுடிகின்றது.
இந்தத் தமிழ்க் கட்சிகள், விடுதலைப் போராட்டம் தொடர்பான கொள்கைகளால், தமக்குள் முரண்பாடுகள், பிரிவுகளை வளர்த்துக் கொண்டதாகக் காணமுடியவில்லை. அவை, கடைந்தெடுத்த சுயலாபம் கருதிய நடத்தைகளாலேயே தமக்குள் முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் தோற்றுவித்து உள்ளன.
இத்தகைய பிற்போக்குத் தனமான நடத்தைகளால் உருவான அரசியல் சூழ்நிலைகளானது, தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான, நீண்ட கால அபிலாசைகளைப் புறந்தள்ளி, நாடாளுமன்றப் பிரதிநித்துவத்தை இல்லாமல் ஆக்கிவிடும் ஆபத்துகள் நிறைந்தவையாகும்.
எனவே, தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் சுயலாப அரசியல் அணுகுமுறைகளானவை, தமிழினத்தின் நீண்டநாள் கனவுகளைச் சிதைப்பதுடன், தமிழர்களின் தனித்துவ அடையாளங்களைக் கூறு போடுவது மட்டுமல்லாமல், இலங்கையில் தமிழ் இனம் என்று ஓரினம் வாழ்ந்தது என்பதை, எதிர்கால சந்ததியினர் வரலாற்றுப் புத்தகங்களில் படித்து அறிந்துகொள்ள வேண்டிய நிலைமையையும் ஏற்படுத்தி விடும்.
தேசியம், சுயநிர்ணய உரிமை குறித்த அரசியல் தீர்வுகள் தொடர்பான கோட்பாடுகளை முன்னிலைப்படுத்திய போதும், தமிழர்களின் அடிப்படையானதும் அத்தியாவசியமானதுமான தேவைகளை அடைதல் தொடர்பான ஆரோக்கியமான முன் நிகழ்ச்சித் திட்டங்களையோ, அதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவது தொடர்பாக, அக்கறையற்றிருப்பது குறித்து, தமிழ் மக்களிடையே வினாவொன்று பூதாகாரமாக எழுந்துள்ளது.
தேசியமும் அதன் விடுதலை தொடர்பாகவும் உலகளவில் கூப்பாடு போடும் தமிழ்த் தேசிய அரசியல்வதிகள், தமிழரின் அன்றாட ஜீவனோபாய வேலைத் திட்டங்களையும் அதனைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் எந்தளவுக்கு செயற்படுத்தத் துணிந்துள்ளார்கள்? இந்த வினாவை, இன்று புத்திஜீவிகளும் சமூக விழிப்புணர்வுச் செயற்பாட்டாளர்களும் பொதுவௌியில் கேட்டுவருகிறார்கள்.
மேலும், தமிழர் தேசியம் தொடர்பாகவும் தமிழர் உரிமை தொடர்பாகவும் அஹிம்சை ரீதியிலும் ஆயுத ரீதியிலும் போராட்டங்களில் போராடியவர்கள், தமிழர் அபிலாசை தொடர்பாக, இறுதி வரை இறுதி மூச்சு வரை போராடுவோம் என்பதை அறிவிப்பவர்கள், தமிழர் நலன் சார் சமூக வேலைத்திட்டங்களை, எந்த அளவுக்கு முன்னகர்த்தி உள்ளார்கள் என்பதும் பாமரர்கள் முதற்கொண்டு கற்றோர்கள் வரையிலான ஏக்கமாகும்.
இலங்கையின் தேசிய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை விடும் அளவுக்கு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக, தேசிய நலன் கருதி, இந்தத் தமிழ்த் தேசிய அரசியல் விற்பன்னர்களும் தமிழ் தேசியம் பேசுகின்றவர்களும் இந்த வைரஸில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற எடுத்துள்ள நடவடிக்கைகள், விழிப்புணர்வு வேலைத் திட்டங்கள் என்ன?
தேசியம் பேசுபவர்கள், இலங்கை அரசாங்கத்தின் தேசிய வேலைத் திட்டத்தில் தங்களை மறைத்துக் கொண்டார்களா? அல்லது, தாங்களாகவே மறைந்து கொண்டார்களா?
அவ்வாறு இல்லாமல் இலங்கையின் தேசிய வேலைத் திட்டத்தை, இனவாதக் கண்கொண்டு, தமிழ்த் தேசியத்தை அழிக்கும் நடவடிக்கை எனப் பிரசாரப்படுத்துவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்களா என்ற எதிர்வினை வினாக்களும் தமிழ் மக்களின் மனதில் எழுந்துள்ளன.
தமிழ் மக்களின் உரிமை தொடர்பாகவும் தமிழ்த் தேசிய விடுதலை தொடர்பாகவும் வாய்கிழியப் பேசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் பங்காளிகளும் தமிழ் மக்கள் தொடர்பாக, தமிழ்த் தேசிய இனத்தை, கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது தொடர்பாக, இதுவரை கட்சி மட்டத்திலும் ஈழ அரசியல் பீடத்திலும் முடுக்கியுள்ள வேலைத்திட்டம் என்ன?
ஆனால், இத்தகைய வேலைத்திட்டம் தொடர்பாக, விசேட கலந்துரையாடல்கள், விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதற்கான மூலோபாயத் திட்டங்கள், பாதுகாப்பு நடைமுறைகள் போன்றவற்றை தமிழர் பிரதேசங்களின் புத்திஜீவிகள், சமூக நலன் விரும்பிகள், தொண்டர்கள் முன்னெடுத்துள்ளார்கள்; அதற்கான நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டுள்ளார்கள்.
ஆனால், தமிழ் மக்களுக்காகப் பாடுபடுகின்றோம் எனச் சொல்லிக் கொள்ளும், தமிழ்த் தேசியத்தின் மீது அக்கறை உள்ளவர்களாகத் தங்களை அடையாளப்படுத்தி நிற்கும் அரசியல்வாதிகள், கொரோனா வைரஸ் தடுப்பு பற்றிய முதற்கட்ட பணிகள் பற்றியாவது இதுவரை கலந்துரையாடியுள்ளார்களா? அதற்கான ஒன்றுகூடல்களை, ஆலோசனைகளை நிகழ்த்தியுள்ளார்களா என்பது, இன்று இந்தத் தமிழ்த்தேசிய தலைமைகளிடம், தமிழ்த் தேசிய ஆர்வலர்களும் உணர்வாளர்களும் நலன் விரும்பிகளும் முன்வைத்துள்ள வினாவாகும்.
தமிழினம் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு இழப்புகளைச் சந்தித்து, நொடிந்துபோய் இருக்கிறது. இந்நிலையில், தமிழ்த் தேசியத்தின் அடிப்படை அடையாளமாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள், அமைப்புகள் தங்கள் பிரதேசங்களில், தமது கட்சி சார்பாக முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களைப் பட்டியல் படுத்த முடியுமா?
தமிழரின் தேசிய அடையாளமாகத் தம்மை அடையாளப்படுத்தி நிற்கும் இவ்வமைப்புகள், தமிழரின் ஜீவனோபாய வாழ்வாதார பாதுகாப்புக்காகத் தற்காப்பு சுகாதார அடிப்படை வசதிகளை இதுவரை முன் எடுக்காதது ஏன்?
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மை வரித்துக் கட்டி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொரோனா வைரஸ் தொடர்பாக, இதுவரை எத்தகைய ஆரோக்கியமான கருத்துகளையும் வேலைத்திட்டங்களையும் அதற்கான ஆதாரங்களையும் காணாமல் இருப்பது ஏன்?
மக்களுக்காகவே அரசியல்; அரசியலுக் காக மக்கள் அல்ல என்பதை, இந்த அதி மேதாவித்தனம் நிறைந்த தமிழ்த் தேசிய அரசியல் உயர்பீடங்கள் இதுவரை கண்டு கொள்ளாதது ஏன், அல்லது கண்டும் காணாது இருப்பது ஏன்?
தமிழ்த் தேசிய அரசியல் ஆயுதப்போராட்டம், ஆரோக்கியமாக இருந்த காலகட்டத்தில், சுனாமி அனர்த்தத்தை,தமிழ் தேசியம் எதிர்கொண்ட விதமும், அதற்காக அவர்கள் முன்னெடுத்த அரசியலுக்கு அப்பாலான ஆரோக்கியமான நடவடிக்கைகளும் நல்ல முயற்சிகளும் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததுடன் வரலாற்றில் பதியப்பட்ட விடயங்களாகவும் இருந்துள்ளன.
உலகின் விருந்தோம்பலுக்கும் மனித நேயத்துக்கும் புகழ் பெற்ற தமிழ் இனம், தமிழர் அரசியல் ஆயுத ரீதியிலான உரிமைப் போராட்டத்தின் பின்புலத்தில், சாதித்த விடயங்களை, ஜனநாயக அரசியல் சூழலில் சாதிக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் யாது?
தமிழரின் ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின், அடுத்துள்ள அரசியல் சூழ்நிலை பின்புலத்தில், தமிழரின் அரசியல் தீர்வை, இந்தியா வழங்கும், சர்வதேசம் வழங்கும், ஐ.நா வழங்கும், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் வெற்றி கொள்வோம் என, காலத்துக்கு காலம் வரும் தேர்தல்களிலும் தேர்தல் வெற்றியின் பின்னும், தமிழ்த் தேசியம் தொடர்பாக அரசியல் அறிக்கை வாயிலாக, தமிழ் மக்களை உசுப்பேத்தி, சந்தி அரசியல், சந்தை அரசியல், சனசமூக நிலைய அரசியல் செய்து இரசிகர்களை மகிழ்விக்கும் பாணி தொடர்ந்து எடுபடாது.
தமிழர்கள், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், தமது அரசியல் உரிமைகள் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ள போதும், அதன் எதிர்வினைகள் என்பது, நீறுபூத்த நெருப்பாகவே என்றும் தமிழ்ப் பிரதேசங்களில் காணக் கிடைக்கின்றன.
இந்த வகையில், தமிழினம் பல்வேறுபட்ட சகிக்க முடியாத சூழ்நிலைகளில் இருந்து எதிர்நீச்சல் போட்டு, தன்னைச் சுதாரித்துக் கொண்டு இருக்கும் சூழலில், மிக முக்கிய சவாலாக, சர்வதேசம் எங்கும் வியாபித்துள்ள இன்றைய சூழ்நிலையில், எமது நாட்டின் தேசிய பிரச்சினையாக நாளுக்குநாள் இரண்டுமே கிளம்பியுள்ள சூழலில், தமிழ் தேசியத்தின் மீது அக்கறை உள்ள, மிக முக்கிய குரலாகவும் அடையாளமாகவும் துவங்குமா?
தமிழரின் தன்மானத்துக்கும் உரிமையின் அடையாளமாகவும் விளங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தற்போதை ய கேள்விகளின் தன்மையை உணர்ந்து, முன்னெடுக்க வேண்டிய கடமைகள் ஏராளம்.
தேர்தலில் வாக்களிப்போம்; தமிழர்களைக் காப்பாற்ற, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் முக்கியம் எனக் கருதுவோர், பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாக்காளப் பெருமக்களை, முதலில் பாதுகாக்க வேண்டும்; இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிய தார்மீக கடமை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழரைக் காக்க முன்வராது, தமிழர் வாக்குகளை எதிர்பார்ப்பது, வாழ்வா சாவா என்ற சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில் முன்னோக்கு சிந்தனையற்ற செயற்பாடாகும்.
எனவே, தமிழரின் அரசியலில், தமிழரும் அவர்களின் நிலமும் தமிழரின் சுகாதாரமும் தமிழரின் தற்காப்பும் அவசியம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமக்கான பணியைச் சிந்தித்து, முன்னெடுக்குமா என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இங்கிலாந்தில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த நபர் ஒருவர், மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா நோயாளி என அடையாளப்படுத்தப்பட்டார். மேற்படி நபர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு புறம்பாக, செயற்பட்டதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அறியத் தரப்பட்டுள்ளது.
எனவே இவ்விடயத்தில், அரசியல் நிலைமைகளுக்கு அப்பால் தமிழ் அரசியல் கட்சிகள், இதற்கான காரணியை ஆராய்ந்து, வைத்திய ஆலோசனையின் பெயரில் முன்னெடுப்பது சிறப்பாகும்.
இதனைச் சாத்தியமாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும்.
Average Rating