‘பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’ !! (கட்டுரை)
தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனம் கண்டது. அதன் பின்னரான, ஓராண்டு காலம் நிறைவு பெறுவதற்குள் (08 ஏப்ரல் 2010) 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 13 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக ஓர் ஆசனத்தையும் பெற்று, மொத்தமாக 14 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.
அதன் பின்னர், 15ஆவது நாடாளுமன்றத் தேர்தல், 2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு, 14 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக, இரண்டு ஆசனங்களையும் பெற்று, மொத்தமாக 16 ஆசனங்களைக் கைப்பற்றியது.
இதற்கிடையே, 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்பது ஆசனங்களைக் கொண்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட ஆசனங்களின் எண்ணிக்கை, 2015ஆம் ஆண்டுத் தேர்தலில், ஏழாகக் குறைக்கப்பட்டது. அவ்வாறு இருந்த போதிலும், 2010இல் மொத்தமாக 14 ஆசனங்களைக் கைப்பற்றிய கூட்டமைப்பு, 2015இல் 16 ஆசனங்களைக் கைப்பற்றியது.
இலங்கையில் ஏனைய இனங்களோடு ஒப்பிடுகையில், தமிழ் மக்களது வாக்களிப்பு சதவீதம் மிகக் குறைவானது. அத்துடன், தேசியக் கட்சிகளினது வேலை வாய்ப்புகள், அதேபோன்ற ஏனைய சலுகைகள், என இன்னோரன்ன அனைத்துக் காரணங்களையும் கடந்து, நாடாளுமன்றத் தேர்தலில் 16 ஆசனங்ளைக் கூட்டமைப்பு கைப்பற்றியமையானது பெரும் வெற்றியாகும்.
இவ்வாறாகக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைக் கைப்பற்றினாலும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் முற்றிய நிலையில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (முன்னாள்) சிவசக்தி ஆனந்தன், தனித்து இயங்கி வந்தார்.
அடுத்து, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (முன்னாள்) வியாழேந்திரனும் 2018 ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பிற்பட்ட காலங்களில் கூட்டமைப்பிலிருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியுடன் கை கோர்த்தார்.
பொதுவாகத் திருமண நிகழ்வொன்றின் போது, மணமக்களை “பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்துவார்கள். இங்கு, பதினாறு என்பது 16 வகையான பேறுகளையும் அதாவது, செல்வங்களையும் குறிப்பதாகும்.
அதுபோலவே, தமிழ் மக்களும் தங்களது வாக்குகள் மூலம், கூட்டமைப்பு பல(வள)ம் பெற வேண்டும்; அதன் ஊடாகத் தங்களுக்கும் பெருவாழ்வு (அச்சமற்றதும் சுதந்திரமானதுமான வாழ்வு) கிடைக்க வேண்டும் என நிறைந்த மனத்துடனேயே வாக்களித்து வந்துள்ளார்கள்.
இவ்வாறாக, 2009இல் மௌனம் கண்ட பலமான அரசியல் வெற்றிடத்தை, கூட்டமைப்பு பூர்த்தி செய்ய வேண்டும் என்ற, உயரிய ஒற்றை நோக்கம் கருதியே, தமிழ் மக்கள் 2010, 2015 ஆகிய இரு தடவைகளும் கூட்டமைப்புக்கு வாக்களித்து வந்துள்ளனர். இவையெல்லாம், தங்களது தமிழ் மொழி, தமிழ் மண், தமிழ் இனம் என உள்ளூர உணர்வுகளால் உந்தப்பட்டு, அளிக்கப்பட்ட வாக்குகளே ஆகும்.
இதுவே, தேர்தலில் வேட்பாளராக, தும்புத்தடியை கூட்டமைப்பு நிறுத்தினாலும் தமிழ் மக்கள் அதற்கும் வாக்களிப்பார்கள் என்ற கதையின் தாற்பரியம் ஆகும்.
ஆக, கூட்டமைப்பு என்ற தமிழ் மக்களின் ஒற்றுமைப்பட்ட கூட்டுத் திரட்சிக்குத் தமிழ் மக்கள் வாக்களித்து வந்துள்ளார்களே தவிர, அதிலுள்ள முக்கியஸ்தர்களுக்கு அல்ல என்பதே, நிதர்சனம் ஆகும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில், ‘உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்…’ என்ற பாடல் வருகின்றது. இதனது அர்த்தம், எ(த)ன்னை அறிந்தால் என்று கூட, நாம் மறுவளமாகப் பார்க்கலாம்.
ஆனால், கடந்த காலங்களில், முக்கியமாக கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில், கூட்டமைப்பினர் எதை அறிந்து செயற்பட்டு வந்தார்களோ தெரியவில்லை. முக்கியமாக அவர்கள், முழுமையாக அறிய வேண்டிய தமிழ் மக்களது மனங்(உணர்வு)களை அறியவில்லை; அலட்சியமாக நடந்து கொண்டார்கள்.
“ரணில் எம்மை (கூட்டமைப்பை) ஏமாற்றியது உண்மை; அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” எனத் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தற்போது கூறி வருகின்றார்கள். இதனையே, தமிழ் மக்கள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகக் கூறி வந்திருக்கின்றார்கள்.
அரசமைப்பு கருக் கொள்ளாத நிலையிலேயே, புதிய அரசமைப்பு கண்டிப்பாக வரும் என்றார்கள். “நாம், புதிய அரசமைப்பு வரவுக்காக விட்டுக்கொடுப்புகளையே செய்து வருகின்றோம். முட்டுக்கொடுப்புகளை அல்ல” என, வீர மொழி பேசியவர்கள், இன்று குழந்தைத்தனமாக, “ரணில் எம்மை ஏமாற்றி விட்டார்” எனக் கூறுகின்றார்கள். ‘சுடலை ஞானம்’ பேசி வருகின்றார்கள்.
அன்று, ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருந்த போதிலும், கூட்டமைப்பினர் பிரதமராக இருந்த ரணிலையே மதித்தும் நம்பியும் வந்தனர். இது கூட, கூட்டமைப்பின் இராஜதந்திரத் தோல்வியே ஆகும்.
கூட்டமைப்பினர், ஐக்கிய தேசிய கட்சியின் முகவர்களா என, தமிழ் மக்கள் சந்தேகம் கொள்ளக் கூடிய வகையில், கடந்த ஐந்து ஆண்டு காலமாக, ரணில் அரசாங்கத்தைக் கூட்டமைப்பு பல தடவைகளில் காப்பாற்றி வந்தது.
ஆனால், அவரோ இவரோ எவராக இருந்தாலும், சிங்கள ஆட்சியாளர்கள் ஒருவருமே, எமக்கான உரிமைகளை வழங்குவதற்கு, அறவே விருப்பம் அற்றவர்கள் என்பதைத் தமிழ் மக்கள் தெட்டத் தெளிவாக அறிந்தும் தெரிந்தும் வைத்திருந்தனர்; வைத்திருக்கின்றார்கள். ஆகவே, மக்கள் தெளிவாக இருக்க, மக்களை வழி நடத்த வேண்டியவர்கள், குழம்பிப் போய் இருக்கின்றார்கள்.
இந்நிலையில், ரணில் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து, தமிழ் மக்கள் சார்பாகக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட நன்மைகளைக் காட்டிலும், தம்மைத் தக்கவைத்துத் தற்காத்துக் கொள்ள, கூட்டமைப்பிலிருந்து ரணில் பெற்றுக் கொண்டவைகள் அதிகம் போலவே உள்ளன.
ஏனெனில், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான கல் வீட்டுத் திட்டத்தைக் கூட, கூட்டமைப்பினரால் நடைமுறைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. இன்று, விரும்பியோ விரும்பாமலோ, கொங்கிரீட் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ் மக்கள் உள்ளனர்.
மேலும், குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில், வடக்கு, கிழக்கில் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய வகையில், எத்தனை தொழிற்சாலைகளை அமைக்க முடிந்தது? ஆகவே, கூட்டமைப்பால் கடந்த அரசாங்கத்துடன் விட்டுக் கொடுத்து, அரசமைப்பையும் கொண்டு வர முடியவில்லை; பேரம் பேசி, பாரிய அபிவிருத்திப் பணிகளைக் கூடச் செய்ய முடியவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், ஏப்ரல் 25இல் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் வருகின்றது. இந்தத் தேர்தலில், கூட்டமைப்பு 14 ஆசனங்களைப் பெறுவது, பெரும் சவாலான விடயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், “அரசாங்கத்துடன் பேரம் பேசி, எமது உரிமைகளைப் பெற, எமக்கு 20 ஆசனங்களை வென்று தாருங்கள்” எனக் கூட்டமைப்பு, தமிழ் மக்களைக் கேட்டு நிற்கின்றது.
ஆனால், பல கட்சிகளும் பல சுயேச்சைக் குழுக்களும் கங்கணம் கட்டி, ‘நீயா நானா’ என ஒற்றுமையை முற்றிலும் குழி தோண்டிப் புதைத்த மண்ணில், எப்படி 20 ஆசனங்களைப் பெறலாம்?
நிலைமைகள் இவ்வாறு இருக்கையில், “கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் தங்களையே வளர்த்துக் கொண்டார்கள்” எனக் கூறி, பல கட்சிகளும் பல சுயேட்சைக் குழுக்களும் வடக்கு, கிழக்கில் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளன. வரும் தேர்தலில், தமிழர் பகுதி பல முனைப் போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது.
தமிழ், தமிழர், தேசியம், கூட்டமைப்பு, கூட்டணி, ஐக்கியம், முன்னணி, விடுதலை, கட்சி, ஜனநாயகம் போன்ற சொற்களைத் தாங்கியவாறு, பல கட்சிகள் முளைத்து விட்டன. எந்தப் பெயரில், எந்தக் கட்சி இயங்குகின்றது என்பதைக் கூட, தமிழ் மக்கள் அறிய முடியாதவாறு, தமிழ்க் கட்சிகள் பல்கிப் பெருகி விட்டன. கட்சித் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு, கட்சியைப் பற்றிக் கதைக்கும் நிலையிலேயே தமிழ் மக்கள் உள்ளனர்.
தற்போது, ஒற்றுமை குறித்துச் சிந்திக்க முடியாது. வெகு தூரம் கடந்து சென்றாகி விட்டது. யாழ்ப்பாணத்தில் மூன்று, நான்கு கட்சிகளினது தலைவர்களையும் கட்சியிகளினது சின்னங்களையும் தாங்கியவாறு, துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டு உள்ளன.
தமிழர் பகுதி சமூக, சமயத் தலைவர்கள், பல்கலைக்கழக புத்திஜீவிகள், சமூக நலன் குறித்த அக்கறையுடைய தரப்புகள் ஆகியோர் அரசியல் தலைமைகளுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து, ஓரணியில் செயற்படுவதற்கான வாய்ப்புகள் மறைந்து விட்டன.
ஆகவே, இனிவரும் நாள்களில் பொது எதிரியை மறந்து, எம் தலைவர்கள் தங்களுக்குள் சொற்களால் முட்டி மோதப் போகின்றார்கள்.
மேடை போட்டு, ஒலிவாங்கியைப் பிடித்து, விண் அதிர முழங்கப் போகின்றார்கள்; தாங்களே எம் மீட்பர்கள் என, வீர வசனம் பேசப் போகின்றார்கள். இவர்கள் வேடிக்கையான மனிதர்கள்.
Average Rating