சுகமான சுமை!! (அவ்வப்போது கிளாமர்)
‘தேனிலவு என்பது புதுமணத் தம்பதிகளுக்குக் காலத்துக்கும் மறக்க முடியாத ஓர் அனுபவம். ஒருவரை ஒருவர் ஒருகணம் கூட பிரியாமல் கைகளைக் கோர்த்த படியோ, ஒருவர் தோள் மீது இன்னொருவர் சாய்ந்து கொண்டோ இருப்பது சகஜம். இரவு படுக்கையில் தலையணையில் தலை வைத்துப் படுப்பதற்கு பதில் கணவனின் வலது கையில் சாய்ந்து தூங்குவதுதான் மனைவிக்கு விருப்பமானதாக இருக்கும். தேனிலவுக்குச் செல்லும் போதும் பல மணி நேரம் மனைவியின் தலை கணவனின் கைகள் மேல்தான் இருக்கும். புதிய துணையின் பிடிமானமும் அருகாமையும் எத்தனை சுகமானதோ, அதே அளவு பிரச்னைக் குரியதும் கூட!
இதனால் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் அசைக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்’’ என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த நிலைக்கு ‘ஹனிமூனர்ஸ் பால்ஸி’ என்று பெயர். இந்தப் பிரச்னை ஏற்படக் காரணம், கைகளில் வரக்கூடிய மற்ற வகை வாதங்கள், வராமல் தவிர்க்கும் வழிகள் குறித்து நரம்பியல் நிபுணர் ஏ.வி.ஸ்ரீநிவாசனிடம் பேசினோம்!‘‘மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரேடியல் நரம்பு வாதம் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. பெரும்பாலும் பெண்கள் தங்கள் கணவரின் தோள்பட்டையில் சாய்ந்து தூங்குவதை விரும்புவார்கள். சிலர் கையிலும் சிலர் மடியிலும் தலை வைத்துப் படுப்பார்கள். தலையணைக்கு பதில் கணவனின் கையில் தலையை வைத்து உறங்குவார்கள்.
இதனால் 7 முதல் 8 மணி நேரம் தோள் பட்டைக்கு கீழே இருக்கும் ஸ்பைரல் குரூவ் (spiral groove) பகுதியில் வரும் ரேடியல் நரம்பானது அழுத்தத்துக்கு உள்ளாகும். இதனால் உருவாகும் வாதமே ‘ரேடியல் நெர்வ் பால்ஸி’. முன்கையில் தலை வைத்து படுப்பதால் ஆன்டீரியர் இன்டரோசியஸ் நரம்பு (Anterior interosseous nerve) அழுத்தத்துக்கு உள்ளாகி ‘ஹனிமூனர்ஸ் பால்ஸி’ ஏற்படும். பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் மடக்க முடியாமல் போகும். போஸ்டீரியர் இன்டரோசியஸ் நரம்பில் (Posterior Interosseous Nerve) அழுத்தம் ஏற்பட்டாலும் ‘ஹனிமூனர்ஸ் பால்ஸி’ ஏற்பட்டு கைகளை நீட்டுவதில் பிரச்னை ஏற்படும்.
ரேடியல் நரம்பு அல்லது போஸ்டீரியர் இன்டரோசியஸ் நரம்பு பாதிப்புக்குள்ளாகும்போது ரிஸ்ட் டிராப் (wrist drop) ஏற்படும். கைப்பகுதி ஒடிந்த கிளை போல தொங்கிவிடும். ரிஸ்ட் டிராப்பை ‘ஸ்பிளின்ட்’ (Splint) எனப்படும் நிலையை சரி செய்ய போடப்படும் கட்டுகளைப் பயன்படுத்தி சரி செய்யலாம். சில விஷப்பூச்சிகளின் கடி கூட ரேடியல் நரம்பு வாதத்தை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு சோபாவில் கையை தலைக்கு வைத்துப் படுப்பார்கள். இதனால் வரும் வாதத்தை ‘சாட்டர்டே நைட் பால்ஸி’ என்று அழைப்பார்கள். இதுவும் ரேடியல் நரம்பு பாதிப்புக்கு உள்ளாவதால்தான் வருகிறது. இதிலும் ரிஸ்ட் டிராப் ஏற்படுவது முக்கிய அறிகுறி.
கைகளில் சிலர் இறுக்கமான காப்புகளை அணிந்திருப்பார்கள். இதில் அதிக அழுத்தம் ஏற்பட்டால் கூட வாதம் ஏற்படும். இதற்கு ‘ஹேண்ட் கப் பால்ஸி’ (Hand cuff palsy) என்று பெயர். ஸ்குவாஷ் (Squash) விளையாடுபவர்களுக்கு வேகமாக பந்தை அடித்து விளையாடும் போது ஏற்படும் அழுத்து விசையால் ரேடியல் நரம்பில் வாதம் ஏற்படும். இதற்கு ‘ஸ்குவாஷ் பால்ஸி’ என்று பெயர். மரபியல் ரீதியான குறைபாடு உள்ளவர்கள், கைகளை எங்கேயாவது இடித்துக் கொண்டால் கூட வாதம் ஏற்பட்டுவிடும். இந்த எல்லா வாதங்களும் 2 முதல் 4 வாரங்களில் சரியாகிவிடும். நரம்பியல் நிபுணரின் ஆலோசனை அவசியம். பிஸியோதெரபி மருத்துவர்கள் எலெக்ட்ரிகல் ஸ்டிமுலேஷன் சிகிச்சையின் மூலம் செயல்படாத தசைகளை தூண்டி செயல்பட வைப்பார்கள். கையில் உள்ள தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி களையும் சொல்லிக் கொடுப்பார்கள்…’’
தவிர்க்கும் வழிகள்
தூங்குவதற்கு தலையணையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கைகளை தலைக்கு வைத்து தூங்கு வதைத் தவிர்க்க வேண்டும்.
தோள்பட்டை, கைகளின் மேல் அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. பைக்கில் செல்லும் போது வண்டியை ஓட்டுபவரின் தோள்பட்டையை அல்லது கைகளை பின்னால் உட்கார்ந்திருப்பவர் அழுத்திப் பிடித்து, அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது.
படுக்கையிலும் சரியான நிலையில் தூங்குவது அவசியம். படுக்கையின் விளிம்பில் கைகளை வைத்து தூங்கக் கூடாது. இறுக்கமான காப்புகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
Average Rating