கண்புரை…சில சந்தேகங்கள்!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 59 Second

வேறு சில கேள்விகளும் எழலாம்…
‘எங்கள் தாத்தா 90 வயது வரை உயிர் வாழ்ந்தார். அவருக்குக் கடைசி வரை கண்கள் நன்றாக தெரிந்தன. ஆபரேஷன் செய்யவில்லையே ஏன்?’ ‘என் கணவருக்கு என்னை விட 10 வயது அதிகம். அவருக்குக் கண்ணாடி கூடப் போடாமல் கண் பார்வை நன்றாகத் தெரிகின்றதே, எனக்கு ஏன் அதற்குள் ஆபரேஷன்?’. இந்தக் கேள்விகளுக்கு பதில் அறிந்து கொள்ளும் முன் லென்ஸின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். கண்களின் லென்ஸ் பார்வைக்கு மிக முக்கியமான ஒன்று. ஒளிக்கதிர்களை விழித்திரையின் மேல் குவியச் செய்வதில் லென்ஸுக்கு அதிமுக்கியப் பங்கு உண்டு. இயற்பியல் அமைப்பின்படி பார்த்தால் லென்ஸ் இளவயதில் ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கிறது. இந்தத் தன்மைக்கு அதில் செயல்படும் பம்ப் போன்ற வேதியியல் அமைப்பும், லென்ஸ் புரதங்களின் அமைப்பும் காரணம். இந்த அமைப்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் கண்புரை ஏற்படலாம்.

கண்களில் ஏற்படும் கண்புரைக்குப் பல காரணங்கள் உண்டு. முதுமை காரணமாக ஏற்படும் மாற்றங்கள் முதன்மையான காரணி. இத்தகைய மாற்றங்கள் உலகத்திலுள்ள அனைவருக்கும் நிகழக் கூடியவை(Universal) என்று கூறலாம். எனவேதான் எல்லாரும் கண் புரையைக் கடந்தாக வேண்டி இருக்கிறது. ஒவ்வொருவருடைய உடலமைப்பு, சுற்றுப்புறச்சூழல், உடனிருக்கும் பிற உடல் பிரச்னைகள் இவற்றால் புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கால கட்டம் மாறுபடலாம். முதுமையின் காரணமாக லென்ஸில் உள்ள செல்கள் வலு இழக்கின்றன. மேலும் முதுமை காரணமாக நடக்கும் வேதியியல் மாற்றங்களால்(Aging) ஒளி ஊடுருவும் தன்மை குறைகிறது. இவை இரண்டும் கண்புரைக்கு முக்கிய காரணம். இதனால் கண்ணாடி போன்று இருக்கும் லென்ஸில் வெள்ளையான பனி படர்ந்த தோற்றம் ஏற்படுகிறது.

முதுமையினால் ஏற்படும் கண்புரை மெதுவாகவே வளரும். சர்க்கரை நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால் கண்புரை வளர்வது சற்று துரிதப்படும். கண்புரை வளர்ச்சி மரபணு சார்ந்த ஒன்றாகவும் அறியப்பட்டுள்ளது. லென்ஸில் மாற்றம் ஏற்படத் துவங்கும் வயது, படிப்படியான பார்வைக் குறைவு, அறுவை சிகிச்சைக்கு ஆகும் கால கட்டம் இவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே மாதிரியாக இருப்பதை ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. எனவே, மரபணுக் காரணிகள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் காலகட்டங்களிலும் கண்புரை துவங்குவதற்கான தொடர்புகள் கண்டறியப்பட்டுள்ளன. புகைப் பழக்கம் உடையவர்களுக்கு கண்புரை வளர்ச்சி இளவயதிலேயே துவங்குவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப கால கண்புரையினால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டினை ஓரளவுக்குக் கண்ணாடிகள் மூலம் சரி செய்யலாம். கண்புரை லென்ஸின் நடுப்பகுதியில் அமைந்திருந்தாலோ அல்லது நோயாளி நெசவு, நகைத் தொழில் போன்ற நுணுக்கமானவற்றைச் செய்பவராக இருந்தாலோ, அதிகம் எழுத, வாசிக்கக்கூடியவராக இருந்தாலோ கண்ணாடியால் சமாளிக்க முயல்வது கடினம். விரைவில் அறுவை சிகிச்சை செய்தால் நல்லது. முதுமை தவிர கண்புரை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமானது காயம். காயத்தினால் லென்ஸின் தசைநார்களில் பாதிப்பு ஏற்படுகிறது. முக்கியமாக முன்னறை நீர்மம் பகுதியின் திரவம்(Aqueous) லென்சின் பகுதியில் நுழைவதால் கண்புரை ஏற்படுகிறது. காயங்களால் உருவாகும் புரை வெகு வேகமாக வளர்ச்சியடைவதால் விரைவில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

ஏற்கனவே முதுமையின் காரணமாக கண்புரை லேசாக ஆரம்பிக்கத் துவங்கியிருந்தால் காயங்கள் அதனை முற்றின நிலைக்குக் கொண்டு செல்வதும் உண்டு. கண்களில் ஏற்படும் புண்கள், மாலைக்கண் போன்ற பரம்பரை பிரச்னைகள், கண் அழுத்த நோய் போன்றவற்றாலும் கண்புரை ஏற்படலாம். சிறு வயதிலேயே அதிக அளவில் ஸ்டீராய்டு உட்கொள்பவர்களுக்கு கண்புரை வெகு வேகமாக வளர்கிறது. சில நோய்களுக்கு ஸ்டீராய்டு மருந்தினை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். அத்தகைய நோயாளிகள் அடிக்கடி கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஸ்டீராய்டு மட்டுமன்றி ருமட்டாய்டு பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள், பூச்சிக்கொல்லிகள், கதிர்வீச்சு, மின்சார அதிர்வு, கதிரியக்க சிகிச்சை இவற்றாலும் கண்களின் லென்சில் புரை ஏற்படலாம்.

கண் புரையை குணமாக்குவதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே நிரந்தரத் தீர்வு. மூடிய ஜன்னல் வழியாக, திரை போட்ட வாசல் வழியாக நம்மால் வெளியில் உள்ள காட்சிகளை பார்க்க முடியுமா? அதைப்போன்றே பார்வை வட்டத்தை நேரடியாக மறைக்கும் கண் புரையையும் முழுவதுமாக அகற்றாமல் தெளிவாகப் பார்ப்பது முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட லென்ஸை நீக்கி, செயற்கை லென்ஸைப் பொருத்தினால்தான் தெளிவான பார்வை கிடைக்கும். எப்படி கண்புரை கண்டறிந்த உடன் தாமதப்படுத்தாமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியமோ, அதைப் போன்றே கண் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் அறுவை சிகிச்சை செய்வதும் அவசியம். அவசரகதியில் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை கட்டுக்குள் இருக்க வேண்டும்.

உணவு உட்கொண்ட பிறகு எடுக்கப்படும் ரத்தத்தில் 200 மில்லி கிராம்(200mg/dl) அளவுக்குள் இருந்தால் நல்லது. உயர் ரத்த அழுத்த நோயுள்ளவர்களுக்கு ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை, பல் போன்ற உறுப்புகளில் கிருமித் தொற்று எதுவும் இருக்கக்கூடாது. சொத்தைப்பல் இருந்தால் அதை அகற்றி விட்டோ, வேர் சிகிச்சை செய்துவிட்டோதான் கண் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளைத் துவங்க வேண்டும். ஒருவர் நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறார், அவருக்குக் கண்புரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால் அறுவை சிகிச்சையினை உடனடியாகச் செய்யவேண்டிய அவசியமில்லை.

அவர் குணமாகி நன்றாக நடக்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல் திட்டமிடல் வேண்டும். அறுவை சிகிச்சை முடிந்த காலத்தில் கண்களுக்கு சொட்டு மருந்து போடுவது, பளு தூக்குதல் தேவையான வேலைகளைத் தவிர்ப்பது போன்றவை மிகவும் முக்கியம். அதனால் குடும்பத்தினருக்கு விடுமுறை கிடைக்கும் நேரத்தில் கண் அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ளலாம். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் பல பெரியவர்கள் அந்தக் காலகட்டத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்புவார்கள்.
தொடர்ச்சியான இருமல், தும்மல், வாந்தி, மலச்சிக்கல் போன்றவை இருப்பவர்களும் அத்தகைய குறைபாடுகளை சரிசெய்து விட்டு அறுவை சிகிச்சை செய்தால் நல்லது.

கண்களின் அருகில் உள்ள நீர்ப்பையில் தொற்று இருந்தாலோ கண்களில் கண் அழுத்த நோய், விழித்திரை குறைபாடுகள் எதுவும் உடன் இருந்தாலும் அவற்றையும் கண்டுபிடித்து அவற்றை சரி செய்த பின்பே கண் அறுவை சிகிச்சைக்கு திட்டமிட வேண்டும். நவீன மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. காலையில் சென்று மாலையில் வீடு திரும்பும் Daycare சிகிச்சையாக கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. நவீன கண் புரை அறுவை சிகிச்சைகள் குறித்த தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூட்டி வைக்காதீர் !! (அவ்வப்போது கிளாமர்)
Next post நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?! (மருத்துவம்)