கூந்தல்!! (மகளிர் பக்கம்)
முக அழகுக்கு விதம் விதமாக பேக் (Pack) போடுவதைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஃபேஷியல் முடிந்ததும் பேக் போட்டால்தான் அந்த அழகு சிகிச்சையே முழுமையடைந்ததாக உணர்வோம். சருமத்தை உறுதியாக்க, நிறத்தைக் கூட்ட, எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த… இப்படி விதம் விதமாக பேக் போடுவதைப் போலவே கூந்தலுக்கும் பேக் அவசியமாகிறது.
கூந்தலுக்கான பேக் என்பது முடியை கண்டிஷன் செய்யும். மயிர்க்கால்கள் அடைபடும்போது, ஒரு முடிக்கும் இன்னொரு முடிக்குமான இடைவெளி அதிகமாகி, கூந்தல் மெலிவுப் பிரச்னை ஏற்படுகிறது. அப்படி நிகழாமல் இருக்க கூந்தலுக்கு கண்டிஷனிங் அவசியம். அந்த வேலையைத்தான் ஹேர் பேக் செய்கிறது. முறையாக கண்டிஷன் செய்யப்படாத கூந்தலில் பொடுகு அதிகமாகும். வழுக்கை விழவும், முன்னந்தலையில் முடி உதிர்ந்து, முன்நெற்றி ஏறிக் கொண்டே போவதும் நடக்கும்.
இந்தத் தலைமுறையில் யாருமே தலைக்கு எண்ணெய் வைப்பதை விரும்புவதில்லை. என்றாவது ஒருநாள் எண்ணெய் தடவி, உடனே தலைக்குக் குளித்துவிடுகிறார்கள். இப்படிச் செய்வதால், போதுமான அளவு எண்ணெய் பசையானது கூந்தலுக்குக் கிடைப்பதில்லை. அதுவே எண்ணெய் மசாஜ் செய்து, அதன் மேல் ஒரு பேக் போடும் போது தேவையான எண்ணெய் பசை கிடைத்து, கூந்தல் கண்டிஷன் செய்யப்படுகிறது. எண்ணெய் தடவாததால் வறண்டு காணப்படுகிற கூந்தலும், இதன் மூலம் அழகான தோற்றம் பெறும். பேக் உபயோகிப்பதற்கு முன் தலைக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.
எந்தப் பிரச்னைக்கு என்ன பேக்?
தமிழகத்தில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் வெயில் இருக்கிறது. ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்குக் குளித்தால்கூட வியர்வை வாடையையும் பிசுபிசுப்பையும் தவிர்க்க முடிவதில்லை. எனவே… கூந்தலை வாசனையாக வைத்திருக்க ஒரு பேக்…மனோரஞ்சிதம், மகிழம்பூ, செம்பருத்தி ஆகிய மூன்றையும் தலா 5 எடுத்து அரைத்து வடிகட்டவும். அத்துடன் சிறிது வெந்தயத் தூள் கலந்து தலைக்கு ஆயில் மசாஜ் செய்த பிறகு பேக் மாதிரி போட்டு 15 நிமிடங்கள் ஊறி அலசலாம்.
இதே பூக்களை மூழ்கும் அளவு நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தைலமாக எடுத்துத் தலையில் தடவி, வாரவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு வெந்தயத் தூளும் புங்கங்காய் தூளும் கலந்த கலவையால் தலையை அலசலாம். மனோரஞ்சிதம் வியர்வையைக் கட்டுப்படுத்தும். மகிழம்பூ மன அமைதியைத் தரும். செம்பருத்தி கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும்.
அரிப்பும் பொடுகும் நீங்க…
கீரைகளை உள்ளுக்கு சாப்பிடுவது எவ்வளவு ஆரோக்கியமானதோ, அதே அளவு வெளிப்புறப் பூச்சுக்கும் நல்லது. பொன்னாங்கண்ணிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, மருதாணி இலை, செம்பருத்தி இலை, வெந்தயக் கீரை – அனைத்தையும் தலா 1 கைப்பிடி அளவு எடுத்து சாறு பிழிந்து கொள்ளவும். சாறுடன் சம அளவு பயத்த மாவு கலந்து தலையில் பேக்காக தடவிக் குளித்தால் மண்டைப் பகுதியின் சருமத் துவாரங்களின் அடைப்பு நீங்கும். பொடுகும் அரிப்பும் சரியாகும்.
பளபளப்பான, கருமையான கூந்தலுக்கு…
தேங்காய்ப்பாலில், சிறிது கடலை மாவும், சிறிது சீயக்காய் தூளும் கலந்து தலையில் தடவி, சில நொடிகள் வைத்திருந்து அலசினால், கூந்தல் பளபளப்பாக மாறும். தேங்காய்ப்பால் கருமையான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியத்துக்கு…
ரோஜா, தாமரை, பொடுதலை, தவனம், மரிக்கொழுந்து, செண்பகப்பூ எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய வைத்துக் கொள்ளவும். அரைத்து ரவை சல்லடையில் சலிக்கவும். அதில் 5 டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து கொள்ளவும். அத்துடன் சிறிது கடலை மாவு அல்லது ஒரே ஒரு பட்டை கற்றாழையில் இருந்து எடுத்த ஜெல்லை மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து சேர்த்து தலையில் தடவி ஊறிக் குளிக்கவும்.
விடுமுறை தின ஸ்பெஷல் பேக்…
ஒரே ஒரு பட்டை கற்றாழையின் ஜெல்லை எடுத்து மிக்சியில் இட்டு அரைத்து தண்ணீர் கலந்து கொள்ளவும். அத்துடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து ஓசை அடங்கும் வரை காய்ச்சவும். அதை அப்படியே தலையில் தடவிக் கொண்டு, மாலை வரை விட்டுவிடலாம். இது எண்ணெய் பசையுடன் பிசுபிசுப்பாக இருக்காது. அதே நேரம் வாரம் முழுவதும் எண்ணெய் வைக்காமல் விட்டதால் ஏற்பட்ட வறட்சியும் நீங்கிவிடும். மாலை வரை ஊறி பிறகு கூந்தலை அலசலாம். விடுமுறை தினத்தன்று இதை ஒரு கட்டாய சிகிச்சையாகவே பின்பற்றினால் கூந்தல் அழகும் ஆரோக்கியமும் பெறும்.
சூப்பர் கண்டிஷனர் பேக்…
50 கிராம் டீயில் தயாரித்த டீ டிகாக்ஷனில், 2 டீஸ்பூன் மருதாணித் தூள், 2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள், 2 டீஸ்பூன் வெந்தயத் தூள் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். இது கூந்தலுக்கு கலரை கொடுக்காது. ஆனால், கண்டிஷன் செய்து பட்டு போல வைக்கும்.
பேக் உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை…
பேக் தயாரிக்க உபயோகிக்கிற எல்லாப் பொருட்களுமே வறட்சியைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது. கூந்தலை வறண்டு போகாமலும் மென்மையாக்கும்படியும், குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியதாகவும் அதே நேரம் தலைவலியை ஏற்படுத்தாததாகவும் இருக்கும்படியான பொருட்களை சேர்க்க வேண்டும்.
எண்ணெய் தடவிய பிறகே பேக் போட வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் கூந்தலுக்கு பேக் உபயோகிக்கலாம். ஆனால், உங்களுடைய கூந்தலின் தேவை அறிந்தே அந்த பேக் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வெறுமனே ஷாம்பு உபயோகித்து தலைக்குக் குளிக்கும் போது ஏற்படுகிற வறட்சி, பேக் உபயோகித்துக் குளிக்கிற போது ஏற்படாது. பல நேரங்களில் பேக் உபயோகிக்கும் போது தனியே ஷாம்பு உபயோகித்துக் குளிக்க வேண்டிய தேவையும் இருக்காது.
Average Rating