கூந்தல்!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 51 Second

இயற்கையான முறையில் கூந்தல் காப்போம்

எண்ணெயில் தொடங்கி, ஹேர் டை வரை இன்று எல்லாம் கெமிக்கல் மயம்… கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதாக விளம்பரப்படுத்தப்படுகிற பல பொருட்களிலும் கடுமையான ரசாயனங்கள் இருப்பதாகவும் கேள்விப்படுகிறோம். அவை தற்காலிகமாக பிரச்னைகளை சரிப்படுத்துகிற மாதிரி ஒரு மாயையை ஏற்படுத்துவதாகவும் அதே வேகத்தில் ஏற்கனவே உள்ள கூந்தல் ஆரோக்கியத்தையும் மோசமாக்குவதாகவும் எச்சரிக்கைகளையும் எதிர்கொள்கிறோம்.

கூந்தல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தினமும் தலைக்குத் தடவுகிற எண்ணெய் முதல் ஷாம்பு வரை எல்லாவற்றையும் நாமே இயற்கையான முறையில் தயாரித்து உபயோகிக்க முடியும். அவற்றில் பக்க விளைவுகள் பற்றிய பயமிருக்காது. தேவை கொஞ்சம் பொறுமை மட்டுமே!

ஆரோக்கியமான கூந்தலுக்கு ஒரு மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அல்லது
நல்லெண்ணெய் – 1 கிலோ
சீந்தில் கொடி – 100 கிராம்
வெந்தயம் – 500 கிராம்
மாதுளை – 1 (பெரிதாக)
தவனம் – 2
மருதாணி இலைகள் – 100 கிராம்.

தயாரிக்கும் முறை…

எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் இடித்து, எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சவும். சேர்த்தபொருட்கள் எல்லாம் அடியில் தங்கும். அந்த எண்ணெயை அப்படியே 2 நாட்களுக்கு வைக்கவும். குலுக்கவோ, கிளறவோ வேண்டாம். 2 நாட்கள் கழித்து ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு தலைக்குத்தடவ உபயோகிக்கலாம். இந்த எண்ணெயைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் கண்களும் உடலும் குளிர்ச்சியடையும். பொடுகும் இளநரையும் தவிர்க்கப்படும்.முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.

பேன்களை ஒழிக்க

சீத்தாப்பழத்தின் 5 விதைகளில் இருந்து எடுத்த பொடியுடன், சாம்பார் வெங்காயச் சாறு 2 டீஸ்பூன் கலந்து தலையில் தடவி சில மணி நேரம் வைத்திருந்து அலசவும்.

கூந்தலை அலச

ரோஸ்மெர்ரி ஆயில் – 3 துளிகள், ரோஸ்வுட் ஆயில் – 1 துளி, ஜெரேனியம் ஆயில் – 1 துளி – இவற்றை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து, இறுக்கமாக மூடிய பாட்டிலில் நிரப்பி நன்கு குலுக்கவும். ஒவ்வொரு முறை தலை குளிக்கும் போதும் கடைசியாக இதை தலையில் விட்டு அலசவும். உபயோகிக்கும் முன்பும் நன்கு குலுக்கவும்.

பொடுகு மற்றும் முடி உதிர்வுக்கு

எலுமிச்சைச் சாறு, டீ டிகாக்‌ஷன், பொடுதலைக்கீரை, வெந்தயம், முட்டையின் வெள்ளைக் கரு, தயிர், செம்பருத்திப்பூ. எல்லாவற்றையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊறவும். பிறகு தலையை அலசவும். செம்பருத்தி இலைகளை அரைத்த விழுதால் தலையைத் தேய்த்துக் குளிக்கலாம். இது குளிர்ச்சியானது என்பதால் 2 துளிகள் யூகலிப்டஸ் தைலம் சேர்த்துக் கொள்ளலாம்.

ஹென்னா

ஹென்னா- 200 கிராம், திரிபலா பொடி – 6 டீஸ்பூன், டீ டிகாக்‌ஷன் – சிறிது, கறிவேப்பிலை பொடி, வேப்பிலை பொடி மற்றும் துளசி பொடி – சிறிது.எல்லாவற்றையும் டீ டிகாக்‌ஷனில் முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் தலையில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம்.

கூந்தல் வளர்ச்சிக்கு

கறிவேப்பிலை – சிறிது, செம்பருத்திப் பூ மற்றும் இலைகள் – சிறிது. இவற்றை நன்கு அரைத்து சம அளவு தயிரில் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறிக் குளிக்கலாம்.

இளநரை நீங்க

கடுக்காய் – 2, வெந்தயம் – 1 டீஸ்பூன், காய்ந்த நெல்லிக்காய் – 25 கிராம். இவை மூன்றையும் முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் புளித்த தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும். தலைக்கு ஆயில் மசாஜ் செய்ததும் இந்த விழுதைத் தடவி, அரை மணி நேரம் ஊறிக் குளிக்கவும். வாரம் ஒருமுறை செய்யவும். திரிபலா பவுடர் – 1 டீஸ்பூன், சம அளவு எடுத்து 2 நாட்கள் ஊற வைத்து அரைத்த கடுக்காய் மற்றும் நெல்லிக்காய் விழுது – 2 டீஸ்பூன். இவற்றை கால் லிட்டர் நல்லெண்ணெயில் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தினமும் இரவில் இதை தலையில் தடவி மசாஜ் செய்து மறுநாள் கூந்தலை அலசவும்.

சீயக்காய்

சீயக்காய் – 1 கிலோ, கார்போக அரிசி – 50 கிராம், ரோஜா மொட்டு – 50 கிராம், ஆவாரம் பூ – 100 கிராம், ஆவாரம் இலை – 50 கிராம், வெட்டிவேர் – 50 கிராம், செம்பருத்திப் பூ – 50 கிராம், செம்பருத்தி இலை – 50 கிராம், புழுங்கலரிசி – 50 கிராம், வெந்தயம் – 100 கிராம், பூந்திக் கொட்டை – 50 கிராம், ஆரஞ்சுப்பழத்தோல் மற்றும் எலுமிச்சை பழத் தோல் – சிறிது, வேப்பிலை, துளசி மற்றும் கறிவேப்பிலை – தலா 1 கைப்பிடி.

இவை எல்லாவற்றையும் நன்கு காய வைத்து அரைத்து, சலித்து தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்த பிறகு தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாத வெடிப்பில் இருந்து விடுபட…!! (மகளிர் பக்கம்)
Next post ‘ஒருமித்த குரலில் பேசட்டாம்; ஒன்னா மண்ணா போகட்டாம்’ !! (கட்டுரை)