மூலிகைகளில் சூப் அண்ட் நறுமணப் பொருட்கள் தயாரிப்பு!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 36 Second

நிரந்தர வருமானம் ஈட்டும் திருப்பூர் பெண்மணி

அனுபவமே சிறந்த ஆசான். ஒரு சில அனுபவங்கள் நம் வாழ்வையே மாற்றியமைத்துவிடுகிறது. அப்படித்தான், மலைப் பிரதேசத்துக்குச் சென்ற இடத்தில் உடல் நலக்குறைவுக்கு கொடுக்கப்பட்ட கசாயத்தால் குணம் பெற்றதைஅடுத்து அதையே ஒரு தொழிலாக மாற்றியுள்ளார் திருப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி. அத்தொழில் குறித்து அவர் நம்மிடம் பேசியபோது… திருப்பூரைச் சேர்ந்த நாங்கள் குடும்பத்துடன் அடிக்கடி ஊட்டி போவோம். ஊட்டி என்றாலே குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் என் இளைய மகனுக்கு குளிர் ஒத்துக்கொள்ளாமல் அவனுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும். சளியை சரி செய்வதற்காக திருப்பூரில் உள்ள மருத்துவர்களிடம் காட்டினோம். ஆனால் மருத்துவ சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. எனவே, கோயம்புத்தூரில் உள்ள பிரபல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றோம்; ஓரளவு குணம் தெரிந்தது. ஆனால், அந்த மருத்துவரைச் சந்திக்க எங்கள் வேலையை விட்டுவிட்டு நீண்டநேரம் காத்துக்கிடந்து அப்பாயின்மென்ட் வாங்க வேண்டும். அத்துடன் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனாலும் பெரிய பலன் இல்லை.

இந்த நேரத்தில் ஒரு தடவை ஊட்டிக்கு சென்றிருந்த போது என் இளைய மகனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூக்கிலிருந்து சளி ஒழுகிக் கொண்டே இருந்தது. கூடவே காய்ச்சலும் அடித்தது. இரவு நேரம் என்பதுடன் நாங்கள் இருந்த பகுதியில் மருத்துவர்களும் கிடையாது என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது பக்கத்து வீட்டு பாட்டி ஒருவர் சில மருத்துவங்களைச் செய்வதாகச் சொன்னார்கள். எனவே அவரிடம் என் மகனின் நிலைமையைச் சொன்னதும் அவர் ஒரு ரசம் வைத்துக் கொடுத்தார். அதைக் குடித்ததும் அரை மணி நேரத்தில் எங்கள் மகனுக்கு மூக்கொழுகல் சரியாகிவிட்டது, காய்ச்சலும் குறைந்துவிட்டது. எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. இதையடுத்து மருந்து கொடுத்த அந்தப் பாட்டியிடம் அந்த ரசம் பற்றிய விவரத்தைக் கேட்டோம். அப்போது, அவர் முடவாட்டுக் கிழங்கு என்ற ஒரு கிழங்கில் செய்தது என்றார். இதைக்கேட்டதும் எனக்கும் என் கணவருக்கும் ஒரு யோசனை வந்தது. நம் மகனுக்கு சரியானது போல் சளித்தொல்லையால் கஷ்டப்படும் மற்றவர்களும் இதன்மூலம் பயன்பெற வேண்டும் என்று விரும்பினோம். இதுதான் எங்களது சிறு தொழிலுக்கு ஆணிவேர்.

பாட்டி சொன்ன அறிவுரையுடன் அவர் கொடுத்த அந்த சூப்பில் சில மாற்றங்களைச் செய்து நாங்கள் சுவையான ஒரு சூப் தயாரித்தோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் விதத்தில் வேறு சில மூலிகைகளைச் சேர்த்து நவ மூலிகை சூப் ஒன்றைத் தயாரித்தோம்’’ என்று கூறும் தனலட்சுமி இதனை ஆன்லைன் முறையில் வியாபாரம் செய்து வருகிறார். கணவரின் உதவியுடன் நவ மூலிகை சூப் மட்டுமல்ல வல்லாரை, முடக்கற்றான், நெல்லி, பிரண்டை, தூதுவளை, மணத்தக்காளி, கரிசலாங்கண்ணி, முருங்கை, துத்தி இலை, ஆவாரம் பூ, செம்பருத்தி என 16 வகை சூப்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் தனலட்சுமி. அவரிடம் வேறு ஏதும் பொருள்கள் தயாரித்து விற்கிறீர்களா? என்று கேட்க, தொடர்ந்து பேசினார்.

சூப்பை மட்டுமே நம்பியிருக்க முடியாது அல்லவா? மேலும் நாங்கள் வெறும் வியாபாரமாக இல்லாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு வேறு சில பொருள்களையும் தயாரிக்கிறோம். முக்கியமாக மூலிகைப் பல்பொடி தயாரித்திருக்கிறோம். பாட்டிகள் சிலரது ஆலோசனையுடன் பிரம்ம வேர், நாயுருவி, கிராம்பு, லவங்கப்பட்டை மற்றும் பல மூலிகைகளைக் கொண்டு மூலிகை பல் பொடி தயாரித்துள்ளோம். இதைக் கொண்டு பல் விளக்கினால் பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம் சரியாகிவிடும். இந்த பல் பொடியை மாணவர்கள் கையில் கொடுத்து பல் விளக்கச் செய்கிறோம். இதை `ஒரு விரல் புரட்சி’ என்ற பெயரில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அடுத்ததாக மூலிகை உறிஞ்சி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த இன்ஹேலரை நீண்ட நாள்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். சளியினால் ஏற்படும் மூக்கடைப்புக்கு இது நல்ல நிவாரணம்.

கோதுமை காபி ஒன்றை தயாரித்திருக்கிறோம். இது, உடல் எடையைக் குறைக்க உதவும். இந்த கோதுமை காபித்தூளை சுடுநீரில் போட்டு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். இதைக் குடிப்பதால் செரிமானக் கோளாறு, சளித்தொந்தரவு போன்றவையும் சரியாகும். அடுத்ததாக சின்ன வெங்காயத் தொக்கு. இட்லி, தோசை, சப்பாத்தி, பிரெட் போன்றவற்றுக்கு இணை உணவாக இதை எடுத்துக் கொள்ளலாம்’’ என்றவர் முடி வளர்க்கும் எண்ணெய் தயாரிக்க காரணமாக இருந்த ஒரு உண்மை நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். என் கணவருக்கு சொந்த ஊர் மதுரை. வேலை விஷயமாக திருப்பூர் வந்த இடத்தில் இங்கே உள்ள சூழல் ஒத்துக்கொள்ளாமல் அவருக்கு தலைமுடி கொட்டிவிட்டது. ஒருதடவை நாங்கள் எல்லோரும் மதுரைக்குப் போனபோது வீட்டிலுள்ள வயதானவர்கள் என் கணவருக்கு தலைமுடி கொட்டியதைப் பார்த்து வருத்தப்பட்டார்கள். உடனே அவர்கள் தயாரித்து வைத்திருந்த ஒரு எண்ணெயைக் கொடுத்தார்கள். அதாவது, வெந்தயத்தை சோற்றுக் கற்றாழையின் உள்ளே ஊற வைத்து காய வைத்து அதனுடன் வேறு சில மூலிகைகளையும் சேர்த்து அந்த எண்ணெயை தயாரித்துக் கொடுத்தார்கள்.

அந்த எண்ணெயைத் தேய்த்ததும் சில நாட்களில் முடி கொட்டுதல் நின்றுவிட்டது. அத்துடன் இளநரையும் விலகியது. அதன் அடிப்படையில் நாங்கள் சோற்றுக்கற்றாழை, கரிசலாங்கண்ணி, அவுரி, மருதாணி போன்றவற்றைக் கொண்டு நவ மூலிகை எண்ணெய் தயாரித்தோம். எண்ணையுடன் சேர்த்து மூலிகைக் குளியல் பொடி, முக வசீகரப் பொடி போன்றவற்றையும் தயாரித்தோம். வெஜிடபிள் ஜூஸ், வெண்பூசணி கீர், கொத்தமல்லி கீர், கறிவேப்பிலை கீர், அரசாணிக்காய் அல்வா, புடலங்காய் பசும் பொரியல், சிறுதானிய இட்லி என ஏராளமான அடுப்பில்லா சமையல் பயிற்சியும் கொடுத்து வருகிறோம். இவற்றைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள் சரியாவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நார்ச்சத்துகள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் என்ற பிரச்சினையே வராது’’ என்றார் பெருமையாக.

முடிவாக, உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் இந்த இயற்கை மூலிகைப் பொருள்களைக் கொண்டு உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரித்து விற்று வருகிறோம். நோய்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் மூலிகைப் பொருள்களுக்கு நிறையவே வரவேற்பு உள்ளதால் எல்லோரும் இதைச் செய்து பலன் பெறலாம். இயற்கை சார்ந்த எங்களது இந்த தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நிறைய வரவேற்பு உள்ளது’’ என்றார். இவர்கள் தயாரித்து விற்கும் பொருள்களை இவர்களது நண்பர்கள் வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். மேலும் இந்தியாவில் உள்ள வெளிநாட்டவரும் இவர்களின் தயாரிப்புகளை வாங்குவது நம் இயற்கை வைத்திய முறைக்கு கிடைத்த வெற்றி என்றால் மிகையாகாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? (வீடியோ)
Next post கேமராவில் பதிவான வினோதமான சம்பவங்கள்!! (வீடியோ)