தேர்தல் முடியும் வரை கிழக்கு மக்கள் காத்திருப்பார்கள்? (கட்டுரை)

Read Time:11 Minute, 26 Second

ஆளுமை மிக்கவர்கள் அரசியலுக்குள் வரவேண்டும் என்ற ஒரு கதையை பலரும் சொல்கிறார்கள். எதனை வைத்து அதனை மட்டிடுகிறார்கள் என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத விடயமாக இருக்கிறது. “எனது மகன் வைத்தியராக வரவேண்டும்”, “பொறியியலாளராக வரவேண்டும்”, “கணக்காளராக வரவேண்டும்”, “சட்டத்தரணியாக வரவேண்டும்” என்று கனவு, கற்பனை வைத்து கற்பிக்கின்ற பெற்றோர், எனது மகன் அரசியல்வாதியாக வர வேண்டுமென்று எண்ணம் கொள்வதே இல்லை. இது வெறும் வாசகம் அல்ல நாம் அறிந்த உண்மை.

தேர்தல் வரும் போதெல்லாம், நாம் எல்லோரும் வேட்பாளர்கள் விடயத்தில் எதிர்பார்ப்பதொன்று நடைபெறுவதொன்றாகத்தான் இருக்கிறது. இந்த உண்மை ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தாலும் தங்களுடைய அரசியல்வாதிகளைத் தாங்கள் நினைப்பது போல் எல்லாம் அமைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள். அது நடைபெறுவதேயில்லை.

முன்பெல்லாம் தேர்தல் காலங்கள் என்றாலே, அரசியல்வாதிகளைத் தேடித்தேடி பிடிக்கின்ற வேலை ஆரம்பித்துவிடும். அரசியல்வாதியாவதென்றால், தேர்தலில் போட்டியிடுவதென்றால் வயிற்றில் புளியைக் கரைக்கும். நெஞ்சு வெடிக்கும். யாருமே நான் வருகிறேன் என்று மார்தட்டிக் கொண்டு இருந்ததில்லை. முன் வந்ததுமில்லை. அதற்கு இலங்கையில் 70களுக்கு பிறகு உருவான ஆயுத கலாசாரமே காரணம்.

இந்த ஆயுதக் கலாசாரம், 2009 மே 19இன் பிறகு முடிவுக்கு வந்திருந்தது. இந்த முடிவு, எல்லோரும் அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையை வரித்துக் கொள்வதற்கு காலாக அமைந்தது. இருந்தாலும் இப்போது தமிழர் பகுதிகளில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் ஆசை, கொஞ்சம் அதிகம் தான். யார் யாரெல்லாம் அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்கள் எல்லோரும் அரசியல்வாதிகளாக ஆகிவிடுவதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

நினைத்தால் இன்றும் புதிய கட்சி ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். இலங்கையில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டால் ஒவ்வொரு மாவட்டத்தின் வாக்குச்சீட்டை வாக்காளர்கள் வாக்களிக்கும் போது வாசிப்பதற்கு மாத்திரம் அரைமணி நேரம் தேவைப்படலாம். இது ஏன் அநீதியானது என்பதை, அரசியல்வாதிகளாகிவிட வேண்டும் என்று துடிக்கின்ற ஒவ்வொருவருக்கும் புரிந்தாகவேண்டும். ஆனால் நடப்பது வேறாக இருக்கிறது.

ஜனநாயக உரிமை என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உரிமை. அதாவது கட்சி தொடங்குவதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்குமான உரிமை. கட்சிகள் போட்டியிடலாம், சுயேச்சைக் குழுக்கள் போட்டுயிடலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. இந்த விடயத்தை, நிலைமையை மக்களை குழப்புவதற்கும் சஞ்சலப்படுத்துவதற்கும் அரசியல் கட்சிகளும் தனிக் குழுக்களும் பயன்படுத்துவது தான் கவலையான விடயம்.

நாம், தமிழர் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பேசப்புறப்பட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அண்மைக்காலமாக நடைபெறுகின்ற குழப்பங்கள் காலங்காலமாக தமிழர்கள் நினைக்கின்ற தமிழர்களுக்கான அதிகாரம், சுயநிர்ணய உரிமை தொடர்பான கோட்பாடுகள் பொய்த்துப் போகின்ற நிலைமையே நிலவுகிறது. இதற்கு உள் நாட்டுக்குள் மாத்திரமல்ல வெளிநாடுகளில் இருப்பவர்களும் காரணமே.

ஓர் அரசியல் பிரதிநிதியைத் தேர்வு செய்வதென்றால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழன், தமிழ் உணர்வு, தமிழ்த் தேசியம், துரோகம், விடுதலைப்போராட்டம், அதனுடன் சார்ந்த விடயங்களையே கணக்கிலெடுத்து வாக்களிப்பர். இதுதான் யதார்த்தமும் கூட.

மல்லுக்கு நின்று பதவியொன்றைப் பெற்றுக் கொள்கின்ற ஒருவர், தன்னால் முடியாதென்று தெரிந்து கொண்டு காலத்தை வீணடித்துவிட்டு என்னால் முடியவில்லை என்று சொல்கின்ற போது, மக்களுக்கு ஏற்படுகின்ற சலிப்பை விடவும் அவருக்கும் அது ஏற்பட்டாக வேண்டும். ஆனால் அதனை அவர் உணர்வதாக இல்லை என்றால் அவரை ‘மனிதர்’ என்ற கணக்குக்குள் அடக்கிக் கொள்ள முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 கட்சிகளில், டெலோ அமைப்பு, ஒரு சட்டத்தரணியைத் தெரிவுசெய்து விட்டதாக, இரு வாரங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டது.

ஆனால் புளொட் அமைப்பு, தம்முடைய தேர்தல் வேட்பாளரை இன்னமும் அறிவிக்கவில்லை. தமிழரசுக்கட்சி இரு தினங்களில் அறிவிக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் வரையில், அது தாமதமாகலாம்.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு தாமதத்துக்குக் காரணம், ஏற்கெனவே இருக்கின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் உறுதியானாலும் ஏனையவர்கள் குறித்த உறுதிப்படுத்தலின்மையே ஆகும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம், முன்னாள் அமைச்சர் மு.இராசமாணிக்கத்தின் பேரன் சாணக்கியன், பெண்ணியச் செயற்பாட்டாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான மங்களேஸ்வரி சங்கர் போன்றோரது பெயர்கள் பேசப்பட்டாலும் இன்னமும் முடிவு அறிவிக்கப்படவில்லை.

இதிலென்ன வேடிக்கையென்றால் தனக்குத் தானே அமைப்புகள், கௌரவ பிரதிநிதிகளிடம் கடிதங்கள் பெற்று கோவைகளில் நிரப்பி விண்ணப்பிப்பது, அதற்கான அழுத்தங்களைக் கொடுப்பது போன்ற வழிகளில் வேட்பாளர் தேர்வுக்கு முயற்சிகள் நடைபெறுகின்றமைதான்.

ஒவ்வொரு வேட்பாளருமே, தன்னை விடவும் வாக்கு பலம் உள்ளவர்களை மற்றைய கட்சி அறிவித்து விடக்கூடாது; தனது வெற்றி வாய்ப்பை அவர்கள் குறைத்துவிடக்கூடாது என்று புறப்பட்டிருப்பது இன்னொரு கதை.

நடக்குமா நடக்காதா என்று எதிர்பார்த்திருந்த நாடாளுமன்றக் கலைப்பு, மார்ச் 02இல் நடைபெற்றது. அதற்கு முன்னமே, கட்சிகளும் தனிக்குழுக்களும் தம்முடைய தேர்தல் முயற்சிகளை ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் இன்னமும் பட்டியல்கள் நிறைவு பெற்றுவிடவில்லை.

அடுத்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் (பிள்ளையான்) கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

அவர்களின் தாமதத்துக்கு, சந்திரகாந்தன் இன்று வெளியே வருவார்; நாளை வெளியே வருவார் என்று சொல்லிக் கொண்டே இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், இன்னும் சில வாரங்களில் சிறையிலிருந்து வெளியே வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அதற்கும் காத்திருக்கத்தான் வேண்டும்.

அதேபோன்று, கிழக்குத் தமிழர் ஒன்றியமாக, செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், சட்டத்தரணி சிவநாதன் போன்றோரின் தலைமைத்துவத்துடன் அழுத்தக்குழு என்று தொடங்கி, அரசமைப்பு என்று கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தோற்றம் பெற்றது.

ஆனால், அதன் பின்னர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கோபாலகிருஷ்ணன் தலைமையில் தனியாகிப் போனது. சிவநாதன் -தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு வேறாகத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தகவல் இருக்கிறது.

இவர்களுடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதி வி.முரளிதரனின் (கருணா) கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதி அமைச்சராக இருந்து, பின் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு தோற்றுப்போன கணேசமூர்த்தி, புதிதாகத் தொடங்கிய கட்சி போன்றனவும் இணைந்திருக்கின்றன.

இவர்களுக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கழன்று, தனியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கவனத்திலெடுக்கப்பட வேண்டிய ஒருவர்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு விரலில் வீடு தேடி வரும் கார் சர்வீஸ்!! (மகளிர் பக்கம்)
Next post வயசாகியும் சாதித்த நபர்கள்!! (வீடியோ)