ஜெனீவா எதிர் கொழும்பு: மீண்டும் ஆரம்பித்த மோதல் !! (கட்டுரை)
இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையுடன் மீண்டும் மோத ஆரம்பித்துள்ளது.
இலங்கை அரசாங்கமாக இருந்தாலும் அது, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவின் அரசாங்கம் என்பதாலேயே, இந்த நிலைமை உருவாகியிருக்கிறது.
கடந்த வருடம், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பான ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அந்த இணை அனுசரணையை இம்முறை வாபஸ் பெற்றுக் கொண்டது.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட எந்தப் பிரேரணையையும் ஏற்கவில்லை.
ஆனால், 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம், அதே ஆண்டு ஒக்டோபர் மாதம், மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது.
அதன் மூலம், இலங்கையில் போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஆயுதப் படையினருக்கும் புலிகளுக்கும் எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் ஒன்றை நியமிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.
அந்தப் பிரேரணையை வலியுறுத்தி, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம், மற்றொரு பிரேரணை, மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது, இலங்கை அரசாங்கம் அதற்கும் இணை அனுசரணை வழங்கியது. மீண்டும், கடந்த வருடம் அதேபோல் 2015, 2017 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை வலியுறுத்தி, மற்றொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதற்கும் ஐ.தே.க தலைமையிலான இலங்கை அரசாங்கம், இணை அனுசரணை வழங்கியது.
இப்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலான அரசாங்கம், கடந்த வருட பிரேரணைக்கான இணை அனுசரணையை வாபஸ் பெற்றுள்ள நிலையில், அரசாங்கம் முன்னைய இரண்டு பிரேரணைகளில் இருந்தும் தமது பொறுப்பை அகற்றிக் கொண்டுள்ளது.
அதாவது, வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் ஒன்றை நியமிப்பது போன்ற கடப்பாடுகளை, தாம் ஏற்றுக் கொள்வதில்லை என்றே புதிய அரசாங்கம் கூறுகிறது.
அரசாங்கத்தின் இந்த முடிவை அறிவித்து, கடந்த 26ஆம் திகதி மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, 2012ஆம் முதல் 2014ஆம் ஆண்டு வரை, இலங்கை விடயத்தில் மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளை முன்மொழிந்த நாடுகளைச் சாடிப் பேசினார்.
“பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, கவனமாகச் சீரமைக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறையொன்றின் மூலம் நிலைத்தன்மை, மனிதநேய நிவாரனம், நிலையான சமாதானம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் செயற்பாடுகளை வரவேற்கத் தவறிய சில நாடுகளே, இந்தப் பிரேரணைகளை முன்வைத்தன” என அவர் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட, ‘கவனமாகச் சீரமைக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறையொன்று’ என்று, வௌியுறவு அமைச்சர் எதைக் குறிப்பிட்டார் என்பது தெளிவாகவில்லை.
“மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், காயங்களைக் குணப்படுத்தி, சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிலையான நல்லிணக்கக் பொறிமுறையொன்றை ஆரம்பித்தது” என்றும் அவர் அந்த உரையில் குறிப்பிட்டார்.
ஆனால், மனித உரிமைப் பேரவையும் இந்தியாவும் வற்புறுத்தியே, போர் முடிவடைந்தும் நான்காண்டுகளுக்குப் பின்னர், 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், வட மாகாண சபைத் தேர்தலை நடத்த, அந்த அரசாங்கம் முன்வந்தது.
தமிழ்த் தலைவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும், மஹிந்த ஆட்சியின் இறுதி வரை, வட மாகாணத்துக்கு சிவிலியன் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. முதலமைச்சருடன் ஒத்துழைக்க விரும்பும் மாகாண செயலாளர் ஒருவரை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்ட போதும், அரசாங்கம் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இவை, நல்லிணக்கத்துக்கான மிக எளிதான காரியங்கள்; அவற்றையாவது அந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
“கடந்த வருட பிரேரணைக்கான அனுசரணையை வாபஸ் பெற்ற போதிலும், நிலையான சமாதானம், நல்லிணக்கத்தை இலக்காகக் கொண்டு, பொறுப்புக்கூறல், மனித உரிமை தொடர்பாக, இலங்கை மக்களால் விதிக்கப்பட்ட இலக்குகளை அடைய, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியாக இருக்கிறது. தேசிய ரீதியாக வடிவமைக்கப்பட்டு, அமுலாக்கப்படும் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் திட்டமொன்றின் மூலமாக, நிலையான சமாதானத்தை அடைய உறுதியாக இலங்கை அரசாங்கம் இருக்கிறது” எனவும் அமைச்சர் குணவர்தன, மனித உரிமைப் பேரவையில் உரையாற்றும் போது கூறினார்.
மனித உரிமைகள், சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவங்களை விசாரணை செய்த முன்னைய விசாரணை ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளின் அமுலாக்கத் தன்மையை ஆராய்ந்து, அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய, சாத்தியமான நடவடிக்கைகளை பிரேரிப்பதற்காகவும் அமுலாக்குவதற்காகவும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில், விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதும் மேற்படி திட்டத்தில் அடங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இலங்கை அரசாங்கத்தைப் போல், பல இனங்களை, பல மொழிகளை, பல சமயங்களை, பல கலாசாரங்களைக் கொண்ட நாட்டு மக்களின் நல்வாழ்வை, இதயத்தோடு நெருக்கமாகக் கொண்ட வேறு எவரும் இல்லை என்றும் அவர் தமது உரையின் இறுதியில் கூறுகிறார்.
தனித்தனி நாடுகள் தொடர்பிலான அறிக்கைகள் விடயத்தில், வாய்மூல அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் போது, ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அமைச்சரின் உரைக்கு பதிலளித்தார்.
“பொறுப்புக் கூறல் விடயத்தில், உள்நாட்டுப் பொறிமுறைகள் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளதோடு, மற்றொரு விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம், பேரவையின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் எனத் தாம் ஏற்றுக் கொள்ளவில்லை” என, அவர் அப்போது நேரடியாகவே இடித்துக் கூறினார். அத்தோடு அவர், இந்த விடயத்தில் கவனமாக இருக்குமாறு, பேரவையை கேட்டுக் கொண்டார்.
சுருக்கமாகக் கூறுவதாயின், முன்னர் பல ஆணைக்குழுக்களை நியமித்த நீங்கள், மேலும் ஓர் ஆணைக்குழுவை நியமித்து, எதையும் சாதிப்பீர்கள் என்று நாம் நம்பவில்லை; பேரவையின் உறுப்பு நாடுகளே! கவனமாக இருங்கள் என்பதே, அவரது உரையின் சாராம்சமாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழ (LLRC), காணாமற்போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழு, உதலாகம ஆணைக்குழு, திருகோணமலை மாணவர் படுகொலை மற்றும் தொண்டர் அமைப்பின் ஊழியர் படுகொலை போன்ற முக்கிய 16 சம்பவங்கள் தொடர்பான குழு, உயர் மட்ட நபர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீனக் குழு (IIGEP) போன்ற பல குழுக்களை நியமித்தது. பொறுப்புக் கூறல் விடயத்தில், இவற்றால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இதையே, மனித உரிமை உயர்ஸ்தானிகர் அங்கே குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலேயே, அரசாங்கத்தின் கருத்து, விந்தையாகவே இருக்கிறது. மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம், மஹிந்தவின் அரசாங்கம், ஏதாவது ஓர் ஆணைக்குழுவை அல்லது குழுவை நியமிக்கும்.
அக்குழுவும் தனது செயற்பாட்டுக் காலத்தின் இறுதியில், சில பரிந்துரைகளுடன் ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்கும். இவ்வாறு, ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அமுலாக்காது, அவற்றை ஒரு மூலையில் போடும் அரசாங்கம், இப்போது அந்தப் பரிந்துரைகளைப் பரிசீலித்து, நடைமுறைப்படுத்தக் கூடியவற்றைப் பரிந்துரை செய்யவும் அமுலாக்கவும் மற்றோர் ஆணைக்குழுவை நியமிப்பதாக வாக்குறுதியளிக்கிறது.
அதை, மனித உரிமை உயர்ஸ்தானிகர் நிராகரித்துள்ள நிலையில், இப்போது மீண்டும் அரசாங்கத்துக்கும் மனித உரிமைப் பேரவைக்கும் இடையே மோதல் ஆரம்பிக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
எனவே, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவால் விதிக்கப்பட்டதைப் போன்ற தடைகள், வேறு பலருக்கு எதிராகவும் விதிக்கப்படலாம் என, ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை கூறுகிறது.
ஆயினும், கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது, போரால் பாதிக்கப்பட்ட மக்கள், பெரிதாக எதையும் எதிர்பார்க்கவும் முடியாது.
அரசாங்கத்தின் முரண்பட்ட நிலைப்பாடுகள்
வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இரண்டு உரைகளை ஆற்றினார். அவ்விரண்டிலும் பொறுப்புக் கூறல் என்ற பதம், ஓரிரண்டு இடங்களில் வந்துள்ளது.
அவர், எதற்கான பொறுப்புக் கூறலை இங்கே குறிப்பிடுகிறார்? மனித உரிமை, போர் குற்றங்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூறல் பற்றியே, 2009ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைப் பேரவை, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது. அதாவது, நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது என்பது, இதன் அர்த்தமா?
தமது இரண்டு உரைகளின் போதும், அரசாங்கம் இணை அனுசரணையை வாபஸ் பெற்ற போதும், காணாமற்போனோருக்கான அலுவலகம் மற்றும் புனர்நிர்மாணம் தொடர்பான அலுவலகம் ஆகியவை, தொடர்ந்து செயற்படும் என்றும் உரிய விசாரணைகளின் பின்னர், காணாமற்போனோருக்கான மரண சான்றிதழ்கள் அல்லது காணாமற் போனமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அதாவது, அரசாங்கம் போரின் போது, மக்கள் காணாமற்போனதை ஏற்றுக் கொள்கிறது. ஒரு காலத்தில், “போர்க் காலத்தில் எவருமே காணாமற்போகவில்லை” என்றே மஹிந்த அரசாங்கத்தின் தலைவர்கள் கூறினர்.
இந்த இரு அலுவலகங்களும், 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அடிப்படையிலேயே நிறுவப்பட்டன. இணை அனுசரணையை வாபஸ் பெற்ற போதும், அரசாங்கம் அந்தப் பிரேரணையை நிராகரிப்பதாகக் கூறவில்லை. இந்த அலுவலகங்களைத் தொடர்ந்து நடத்துவதாக இருந்தால், அரசாங்கம் அந்தப் பிரேரணைகளை ஏற்றுக் கொள்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளை நிறைவேற்றுவதானது, நாட்டின் இறைமையைப் பாதிக்கும் செயலாகும் என்றே, பேரவையில் ஆற்றிய தமது இரண்டு உரையின் போதும் அமைச்சர் கூறினார்.
அவ்வாறாயின், மேற்படி அலுவலகங்களை நடத்திச் செல்வதன் மூலமும், மற்றோர் ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலமும் இறைமை பாதிக்கப்படாதா?
இவை, அரசாங்கம் விரும்பிச் சுயமாகச் செய்யப்போகும் காரியங்கள் அல்லவே! மனித உரிமைப் பேரவையின் நெருக்குதலினாலேயே அரசாங்கம் இவற்றைச் செய்யப்போவதாகக் கூறுகிறது.
2012 முதல் 2014ஆம் ஆண்டு வரை, மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை, மஹிந்தவின் அரசாங்கம் நிராகரித்தது.
ஆயினும், இந்தப் பிரேரணைகளின் மூலம், இலங்கை மீது விதிக்கப்பட்ட சில கடமைகளை நிறைவேற்றுவதாகவும் காட்டிக் கொண்டது. உதாரணமாக, 2012ஆம் ஆண்டு பிரேரணையை நிராகரித்த அரசாங்கம், அந்தப் பிரேரணையில் இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டதைப் போல், 2013ஆம் ஆண்டு பேரவையின் கூட்டத்தில், இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாட்டுத் திட்டம் (Action Plan) ஒன்றைச் சமர்ப்பித்தது. அதாவது, வீராப்புப் பேசுவதோடு, அரசாங்கம் பணிந்தும் போகிறது.
புதிதாக விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல், காணாமற்போனோருக்கான அலுவலகத்தைத் தொடர்ந்தும் நடத்திச் செல்லல் போன்ற விடயங்களை, மேற்கொள்வோம் என்று கூறும் இடங்களில், “அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய, அவை மேற்கொள்ளப்படும்” என்றே அமைச்சர் கூறினார். ஆனால், அந்தக் கொள்கை என்ன என்று அவர் கூறவில்லை.
தமது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான, தற்போதைய ஆட்சியாளர்களின் நிலைப்பாடு சகலரும் அறிந்ததே. எனவே, உருப்படியாக எதுவும் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அத்தோடு, எம்.சி.சி. உடன்படிக்கை போன்ற விடயங்களில், அரசாங்கம் மேற்குலகுக்கு விட்டுக் கொடுத்தால், மனித உரிமைப் பேரவையிடமும் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.
2012ஆம் ஆண்டு, மனித உரிமைப் பேரவை முதன் முதலாக இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய பிரேரணையில், மஹிந்தவின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மட்டுமே கூறப்பட்டு இருந்தது. அதையாவது அந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
அந்த நிலையிலேயே, 2015ஆம் ஆண்டு ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்தது. அந்த அரசாங்கம், மனித உரிமைப் பேரவையுடன் முட்டி மோதாமல், அதற்கு ஒத்துழைக்க முன்வந்தது.
அதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், மனித உரிமைப் பேரவையின் பிடி தளர்ந்து இருந்தது. ஆனால், அந்த அரசாங்கமும் பேரினவாத சக்திகளுக்குப் பயந்து, தாம் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது இழுத்தடித்தது. எனினும், ரணிலின் அரசாங்கம் மேற்குலகோடு நல்ல உறவைப் பேணி வந்தமையால், அவர்கள் மீது நெருக்குதல் ஏற்படவில்லை.
Average Rating