சிட்டி லைக்ஸ் !! (மகளிர் பக்கம்)
படத்தின் கதைக்குள் செல்வோம். நாடோடிக்கும் பூக்கடை நடத்தும் பார்வையற்ற பெண்ணின் மீது காதல். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடோடி தன் காதலியைப் பிரிகிறான். காதலிக்குப் பார்வை கிடைக்கிறது. ஒரு நாள் நாடோடி காதலி இருக்கும் திசையில் எதேச்சையாக வருகிறான். நாடோடி தன் காதலியை அடையாளம் கண்டுகொள்கிறான். காதலியால் அடையாளம் காணமுடிவதில்லை. காதலி, நாடோடியை பிச்சைக்காரன் என்று நினைத்து அவன் கையைப்பிடித்து காசு போடுகையில் பார்வை இல்லாதபோது முத்தமிட்ட தன் காதலனின் கை என்று உணர்கிறாள். அவனை அடையாளம் கண்டு கொள்கிறாள். இருவரும் இணைகிறார்கள். காதலை வார்த்தைகள் இல்லாமல் உணர்வுகள் மூலம் வெளிப்படுத்திய இக்காட்சியுடன் படம் நிறைவடைகிறது. திரைப்பட வரலாற்றில் முக்கியமான இறுதிக்காட்சிகளில் ஒன்றாகும் இது.
எப்போதும் நாம் காதலிப்பவர்களைத் தேடிக்கொண்டே இருக்கிறோம். இப்படத்திலும் காதலி தனக்கு பார்வை கிடைத்த பிறகு தன் கடைக்கு வரும் ஒருவரை தன் காதலனாக இருப்பானோ என்று ஏங்குவாள். பார்வை கிடைத்த பிறகு ஒருமுறை கூட தன் காதலனை அவள் சந்திக்கவேயில்லை. காதல் உணர்வுகளை மிக அழகாக சித்தரித்திருப்பார் மாமேதை சார்லி சாப்ளின். தவிர அவரது நடிப்பு, முகபாவனை, நகைச்சுவை எல்லாமே இப்படத்தை, திரைப்படம் இருக்கும் வரையில் நகைச்சுவை கலந்த காதலை பற்றிய படங்களில் சிறந்த படமாக நிலைக்க வைக்கும். இந்தப்படம் வெறும் காதல் திரைப்படம் மட்டும் தானா? காதலைத் தவிர்த்து வேறு எதுவும் இப்படத்தில் இல்லையா? சார்லி நம்மிடம் எதைப் பகிர்ந்து கொள்ள விழைகிறார்? இரு வேறு வாழ்க்கையை நம்முன் நிறுத்துகிறார். அந்த வாழ்க்கையின் சாட்சியாகவும் சாப்ளினே இருக்கிறார்.
சாப்ளினுக்கு மிகப்பெரும் பணக்கார நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் பணம் நிறைய இருக்கிறது. ஆனால் நண்பர்களோ, உறவுகளோ யாரும் இல்லை. அதனால் அவன் வெறுமையில் சுழலுகிறான். வாழ்க்கையிலிருந்து விடுபட தற்கொலை செய்யப் போகிறான். தற்கொலை செய்ய இருந்த நேரத்தில் தான் சாப்ளின் அவனைக் காப்பாற்றுகிறார். அவர்களுக்கிடையே நட்பின் ஆரம்பமும் அந்த இடம் தான். பணம் அவனுக்கு மது வாங்கி அருந்த மட்டுமே அதிகம் பயன்தருவதாக இருக்கிறது. பணக்காரனுக்கு இவ்வுலகில் வாழ விருப்பமில்லை. அவனைக் கண்டுகொள்ளவும் நேசிக்கவும் கூட அருகில் யாருமில்லை. இந்த உலகில் இருந்து விடுபட்டு வேறு ஒரு உலகில் சஞ்சரிக்கவே அவன் போதைக்கு அடிமையாகி தினம் தினம் குடித்துக் கொண்டே இருக்கிறான்.
அவன் போதையில் மட்டுமே தன் நண்பன் சாப்ளினை அடையாளம் கண்டுகொள்கிறான். அவன் தெளிவாக இருக்கும் சில மணித்துளிகளில் நண்பனான சாப்ளினை அடையாளம் கூட காண முடிவதில்லை. அந்த நேரங்களில் நண்பன் கூட அவனுக்கு ஒரு அந்நியன் தான். சாப்ளின் பணக்காரனின் தேடலற்ற அன்பற்ற வெறுமையான ஒரு வாழ்க்கையை நம்முன் காட்டுகிறார். அவனிடம் பணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. போதையில் மட்டுமே அவனுக்கான வாழ்க்கை, நண்பர்கள், உறவுகள் எஞ்சி நிற்கின்றன. இன்னொரு அற்புதமான எளிமையான அன்பு நிறைந்த வாழ்க்கையை பார்வையற்ற பூ விற்கும் பெண்ணின் வழியாக நமக்குக் காட்டுகிறார். அந்தப் பெண்ணிடம் பணம் இல்லை. ஆனால், அவளிடம் அற்புதமான வாழ்க்கை இருக்கிறது.
அந்த வாழ்க்கை கடினமாக இருந்தாலும் தேடல் நிறைந்ததாக இருக்கிறது. அடுத்த வேலை உணவிற்காக, வீட்டின் வாடகைக்காக, பார்வையைச் சரி செய்ய, பாட்டியின் உடல் நலத்திற்காக பணத்தைத் தேட வேண்டியிருக்கிறது. அந்தத் தேடலே அவளிடம் வெறுமையை அண்டவிடாமல் செய்கிறது. அவளின் ஆன்மா பணத்தை விடப் பல மடங்கு உயர்ந்ததாக நன்றி நிறைந்ததாக இருக்கிறது. அவள் அழகானவள், இப்போது அவளுக்குப் பார்வையும் கிடைத்துவிட்டது. அவள் பார்வை இல்லாத போது தனக்கு எல்லாவகையிலும் உதவியாக இருந்த தான் நேசித்த இதயத்திற்கு உரியவனுக்காகவே காத்துக்கிடக்கிறாள். அவள் அவனைக் கண்ட போது அவனின் நிலை தன்னை விடப் பலமடங்கு மோசமானதாக இருந்தபோதிலும் அவளின் நேசம் மாறவில்லை. ஆனால் பணக்காரன் தன் உயிரை காப்பாற்றிய நண்பனைக் கூட போதையில் இருக்கும் போதுமட்டும் அடையாளம் காணக்கூடிய ஒருவனாக இருக்கிறான்.
உண்மையிலே யார் வளமானவர்? ஏழைப் பெண்ணா? பணக்காரனா? என்ற கேள்வியையும் எழுப்புகிறார் சார்லி சாப்ளின். சாப்ளின் பணக்காரனின் நண்பனாகவும், ஏழைப் பெண்ணின் காதலனாகவும் இருந்தாலும் வீதி கூட்டுபவனாக, தூங்க இடமில்லாமல், உண்ண உணவில்லாமல், எங்கு இடம் கிடைத்தாலும் தங்கிக்கொள்ளும் ஒரு நாடோடியாகத்தான் எப்போதுமே இருக்கிறார். இந்தப் படத்தில் பணத்திற்காக குத்துச்சண்டை போடுவார். மிகுந்த நகைச்சுவையாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் அதன் பின்னால் இருக்கும் வேதனை, வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. அந்தச் சண்டையை ஏழைகள் பணத்திற்காக படும் பாடாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. பணக்காரர்கள் அச்சண்டையை ரசித்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒரு ரசிகனாகவே இருக்கிறான். மென்மையான உணர்வுகளினூடாக அழகாக நகர்ந்து செல்லும் காட்சிகளின் வழியாக நம் மனதில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் காதலைச் சொல்கிறது சிட்டி லைட்ஸ்.
Average Rating