கிச்சன் டைரீஸ் !! (மகளிர் பக்கம்)
டயட் மேனியாவில் லோ கிளை செமிக் டயட் பற்றி பார்த்து வருகிறோம். நாம் சாப்பிடும் உணவில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் கரையும் விகிதத்தை கிளைசெமிக் என்ற விகிதத்தில் குறிப்பிடுவோம். இதில் குறைவாக கரையும் உணவுப் பொருட்கள் லோ கிளைசெமிக் எனப்படும். இந்த உணவுகள் சர்க்கரை நோய் உட்பட பல்வேறு நோயாளிகளுக்கும் உடல் பருமனை குறைக்க முற்படுபவர்களுக்கும் ஏற்றவை. இனி ஒரு வாரத்துக்கான லோகிளைசெமிக் டயட் சார்ட் ஒன்றை பார்ப்போம்.
திங்கள்
காலை: ஓட்ஸ் உணவு அல்லது ஏதேனும் ஒரு சிறுதானியம், பால், ஏதேனும் ஒரு பழம்.
மதியம்: புரதம், கொழுப்பு நிறைந்த உணவு அல்லது கோழி, முழுதானிய ரொட்டி, சாலட்.
இரவு: புரதம், கொழுப்பு நிறைந்த உணவு, காய்கறிகள், கொஞ்சம் அரிசி சாதம்.
செவ்வாய்
காலை: முழுதானிய டோஸ்ட், அவகேடோ, மீன் மற்றும் தக்காளி வறுத்தது.
மதியம்: சூப் மற்றும் முழுதானிய ரொட்டி சில துண்டுகள்.
இரவு: பொரித்த மீன், வேகவைத்த புரோகோலி, பீன்ஸ் வேகவைத்தது.
புதன்
காலை: ஆம்லெட், காளான், கீரைகள், தக்காளி மற்றும் வெண்ணெய்.
மதியம்: மீன் மற்றும் சாலட்.
இரவு: முழுதானிய ரொட்டி, முழுதானிய பீஸா (வீட்டில் தயாரித்தது), கோதுமை ரொட்டி.
வியாழன்
காலை: பெர்ரிகள் நிறைந்த ஒரு ஸ்மூத்தி, பால், கிரேக்க யோகார்ட், லவங்கப் பொடி சேர்த்தது.
மதியம்: சிக்கன் பஸ்தா சாலட் முழு ரொட்டி பஸ்தாவால் தயாரிக்கப்பட்டது.
இரவு: வீட்டில் தயாரிக்கும் பர்கர், அசைவம், காய்கறிகள், கோதுமை ரொட்டி.
வெள்ளி
காலை: மீன் பொரித்தது, ஆப்பிள் துண்டுகள் லவங்கப் பொடி சேர்ந்தது.
மதியம்: மீன் பொரித்தது, சாலட், கோதுமை ரொட்டி.
இரவு: பாஸ்மதி அரிசி உணவு அல்லது சிக்கன் பிரியாணி.
சனி
காலை: முட்டை, மீன், முழுதானிய டோஸ்ட் தக்காளி சேர்த்தது.
மதியம்: முட்டை, முழுதானிய ரொட்டி.
இரவு: பொரித்த ஆடு, காய்கறிகள், வேகவைத்த பூசணி.
ஞாயிறு
காலை: பான் கேக் அல்லது முட்டை பெர்ரி பழங்களுடன் சேர்ந்தது.
மதியம்: ப்ரவுன் அரிசி சாதம், மீன் மற்றும் சாலட்
இரவு: அசைவம், காய்கறிகள், சிவப்பரிசி சாதம்.
இது ஒரு வாரத்துக்கான மாதிரி மெனுதான். சிலவகை உணவுகள் பிடிக்காதவர்கள் அல்லது கிடைக்க வாய்ப்பில்லாதவர்கள், அதே சத்துக்கள் நிறைந்த கிடைக்கச் சாத்தியமான நம் ஊர் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, பெர்ரிக்குப் பதிலாக நெல்லி அல்லது கொய்யா எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து லோ கிளைசெமிக் டயட்டின் வேறு சில அம்சங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.
அல்வா கொடுத்த கதை
அல்வா என்றதுமே நமக்கு திருநெல்வேலிதான் நினைவுக்கு வரும். அதிலும் அந்த இருட்டுக்கடை அல்வா சர்வதேச ஃபேமஸ். ஆனால், அல்வாவின் பூர்விகம் திருநெல்வேலி அல்ல என்றால் பலர் நம்பமாட்டார்கள். வாங்க கொஞ்சம் அல்வாவின் கதையைப் பார்க்கலாம். அல்வாவின் பூர்விகம் ராஜஸ்தான். அல்வா இந்த ராஜஸ்தான் மாநிலத்தில் அந்த மக்களால்தான் இன்றும் அதிகமாய் செய்யப்படுகிறது. இந்த இனிப்பைச் செய்யும் மக்களை ராஜ்புத்ராஸ் என்று அழைத்தனர். அந்த மக்கள் ஒரு கட்டத்தில் திருநெல்வேலி ஜமீன்தார் அவர்களுக்கு சமையல் செய்ய சொக்கம்பட்டி வந்தனர். அவர்களின் மூலமே இங்கும் அல்வா தயாரிக்கப்பட்டு மக்களிடம் பரவியது.
இந்த அல்வா 19-ம் நூற்றாண்டில் தெருத் தெருவாக விற்கப்பட்டது. பின்பு 1882ம் ஆண்டில் திரு. ஜெகன் சிங் அவர்களால் திருநெல்வேலியில் ஒரு கடை அமைக்கப்பட்டு அதற்கு திருநெல்வேலி அல்வா கடை என்று பெயர் சூட்டினர். இந்தக் கடைதான் இந்த திருநெல்வேலி அல்வாவுக்கே தந்தை என்று கூறலாம். இந்த அல்வாவுக்கு பின்னாளில் சலிவா என்ற ஒருவர் அடிமையாகிறார். அவரால் ஆரம்பிக்கப்பட்டதே இன்றைய ‘இருட்டுக்கடை‘ எனப்படும் திருநெல்வேலியின் புகழ்பெற்ற அல்வா கடை. இந்தக் கடை அல்வாவுக்கென தனி கிராக்கி உள்ளது. அன்று முதல் இன்று வரை இந்த இருட்டுக்கடை அல்வாவின் பெயர் சற்றும் குறையவில்லை. இன்னமும் இந்தக் கடையில் 40 வாட்ஸ் பல்பே உபயோகப்படுத்தப்படுகிறது என்கிறார்கள்.
அல்வாவில் பல்வேறு வகைகள் உள்ளன. கேரட் அல்வா, பாதாம் அல்வா, கேசரி அல்வா, வட்டல்ல அப்பம், பைனாப்பிள் அல்வா, பால் அல்வா, பீட்ரூட் அல்வா, தர்பூசணி அல்வா, ஆப்பிள் அல்வா, சோளம் அல்வா, பப்பாளி அல்வா, மாம்பழ அல்வா, ரவை அல்வா, பூசணி அல்வா, சேமியா அல்வா இவற்றில் முக்கியமானவை. அல்வா பெரும்பாலும் கோதுமை மற்றும் சர்க்கரையால் செய்யப்படும் ஒரு வகையான இனிப்பு பொருள். இந்த அல்வா தமிழ்நாட்டில், இந்தியா அளவில் மட்டும் பிரபலம் இல்லை. அல்வா கிழக்கிந்திய நாடுகள், வடக்கு ஆசியா, மத்திய, தெற்கு மற்றும் மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா நாடுகள், ஈரோப்பிய நாடுகள் மற்றும் மாளத்திய, அரேபிய நாடுகளிலும் பிரபலம்தான்.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் அல்வாவை அலுவா என்று அழைப்பர். இந்த அல்வா கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டில் பிரபலம். கோழிக்கோடு அரபிக் கடலுடன் இணைந்திருப்பதால் இதனை அரேபிய நாடுகளில் கோழிக்கோடன் அல்வா என்று அழைப்பர். கர்நாடக மாநிலத்தில் பிராமின் திருமணத்தில் அல்வா பாரம்பரிய இனிப்பு வகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அல்வாவின் பெயர் காஷி அல்வா. அல்வாவைத் தயாரிக்கக் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும்.
எக்ஸ்பர்ட் விசிட்
விஜயா வெங்கட் இந்தியாவின் முக்கியமான மூத்த டயட்டீஷியன்களில் ஒருவர். ‘சரியான உணவை உண்பது ஒருவரை எந்த நோயிலிருந்தும் வெளியேற்றும். மேலும், தவறான நேரத்தில், தவறான உணவை உண்பதும், தவறான காம்பினேஷனில் உண்பதும், மருந்துகளோடு அவற்றை சேர்த்து உண்பதும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்’ என்று சொல்லும் விஜயா வெங்கட்
ஆரோக்கியமான வாழ்வுக்காக அவர் சொல்லும் ஐந்து உணவு நடைமுறைகள் இதோ:
1. ஒவ்வொரு நாளையும் ஒரு பழத்துடன் தொடங்குங்கள். முடிந்தவரை ஒரு பழத்தை காலை 11:00 மணிக்குள் உண்டுவிடுங்கள். மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே பழச்சாறு அல்லது காய்கறிச்சாற்றை பருகிவிடுங்கள். மதிய உணவிலும் காய்கறிகள் இருக்கட்டும்.
2. மதியம் மற்றும் இரவு உணவுக்குப் பிறகு பதினைந்து நிமிடங்கள் கழித்து ஒரு எலுமிச்சை சாற்றைப் பருகலாம். நமது இந்திய சூழல் கொஞ்சம் அல்கலைன் எனும் அமிலத்தன்மை நிறைந்தது. இந்த அமிலங்கள் உடல் செல்களை பாதிக்கும். உடலின் பி.ஹெச் தன்மையை சரியாகப் பராமரிக்க இந்த எலுமிச்சை ஜூஸ் உதவும்.
3. உணவு உண்டபின் சிறிது நேரம் கழித்து, நட்ஸ் மற்றும் காய்கறி ஜூஸ் ஏதாவது பருகுங்கள். இரவு உணவை சூரிய அஸ்தமனம் முடிந்து எத்தனை நேரத்தில் உண்கிறீர்களோ அத்தனை நல்லது. பழங்கள், காய்கறிகள், நட்ஸ், தானியங்கள் என இயற்கையான உணவுகளை இரவில் உண்ணுங்கள். அது செரிமானத்தை மேம்படுத்தும்.
4. அதிக நேரம் சமைப்பது மற்றும் சூடுபடுத்திச் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டியது. இது ஓர் உணவின் அடிப்படைக் கட்டுமானத்தைச் சிதைத்துவிடும். அனைத்து வைட்டமின்கள், மினரல்கள், கொழுப்புச்சத்துகள், கார்போஹைட்ரேட்கள், புரோட்டின் என யாவும் இந்த செயலால் பாதிக்கப்படும்.
5. தினசரி மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம். ஆனால் இதைப் பெரும்பாலானவர்கள் செய்வதில்லை. மனிதர்கள் தண்ணீர் பருகும் விலங்குகள் அல்ல. ஆனால், மென்றுகொண்டே இருக்கும் பண்பை கொண்டவர்கள். அதனால், அதிகம் தண்ணீர் பருகுவதும் ஆபத்துதான். அதற்காக சராசரி அளவை பருகாமல் இருப்பதும் நல்லதல்ல.
உணவு விதி # 42
இருக்கும் இடத்துக்குத் தகுந்த உணவுகளை உண்ணப் பழகுங்கள். இது ஒரு முக்கியமான விதி. இயற்கை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான தட்பவெப்ப சூழலை கொண்டுள்ளது. எனவே, அங்கு அதற்கேற்ற காய்கறிகள், கனிகள்தான் விளையும். அங்குள்ள மனிதர்களும் அதை அனுசரித்தே உணவுப் பழக்க வழக்கங்களை வகுத்திருப்பார்கள். எனவே, எந்த சூழலில் வசிக்கிறீர்களோ அவர்களின் பொதுவான உணவுகளையே உண்ண விரும்புவதுதான் புத்திசாலித்தனம். ஆசை என்றால் வாரம் ஒரு நாள் நமது விருப்ப உணவை உண்ணலாம். மற்றபடி, வெளியூர், வெளிநாடுகளில் வசிக்க நேர்ந்தாலோ சுற்றுலா சென்றாலோ அந்தந்த ஊர் உணவுகளை உண்பதே வயிற்றுக்கும் நல்லது.
ஃபுட் மித்ஸ்
உலர்ந்த பழங்களில் உள்ள சத்துக்கள் ஃப்ரெஷ்ஷான பழங்களில் உள்ள சத்துக்களைவிட குறைவாகவே இருக்கும் என்று ஒரு கருத்து உள்ளது. இதில் கொஞ்சம் உண்மை உள்ளதுதான். ஆனால், முழு உண்மை அதுவல்ல. அதாவது, உலர் பழங்களில் அதில் உள்ள வெப்பம் காரணமாக வெப்பம் சார்ந்த ஊட்டச்சத்துகளான வைட்டமின் சி போன்றவை சிறிது அளவில் குறைந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால், எஞ்சிய சத்துக்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கும். எனவே, உலர் பழங்களுக்கும் ஃப்ரெஷ் பழங்களுக்கும் அதன் ஊட்டச்சத்து விகிதத்தில் அதிக வித்தியாசம் இருக்காது.
ஃபுட் சயின்ஸ்
ஃபுட் சயின்ஸில் செல்ஃப் லைஃப் என்றால் என்னவென்று பார்ப்போம். செல்ஃப் லைஃப் என்பது ஒரு பொருளைப் பயன்படுத்தத் தகுதியான காலம் எவ்வளவு என்பதைக் குறிப்பதாகும். இந்தக் காலம் என்பது சில பொருட்களுக்கு நுகர்வதற்கான கால எல்லையாக இருக்கலாம். சில பொருட்களுக்கு விற்பனை செய்வதற்கான கால எல்லையாகவும் இருக்கலாம். பொதுவாக, ஒரு பொருளை மார்க்கெட்டின் செல்ஃப்பில் அடுக்கி வைக்கத் தகுதியான கால எல்லையை இது குறிப்பதால், செல்ஃப் லைஃப் எனப்படுகிறது. எனவே, விற்பனை செய்வதற்கான காலம் முடிவடைந்த ஒரு பொருள் நுகர்வதற்கான காலம் முடிவடைந்தது என்று பொருள் அல்ல. உணவுப்பொருட்கள், பலவகைப்பட்ட பானங்கள், காஸ்மெட்டிக்ஸ், மருந்துகள், ஊசிகள், மருத்துவப் பொருட்கள், வேதிப்பொருட்கள், ரப்பர்கள், பாட்டில்கள் போன்ற பலவகையான பொருட்களுக்கும் இப்படி செல்ஃப் லைப் உள்ளது.
சிலவகைப் பொருட்களின் செல்ஃப் லைஃப் முடிந்தது என்றால் அவை பயன்படுத்தத் தகுதி இல்லாதவை என்று பொருள் இல்லை. அவற்றின் வீரியம் அல்லது பலன் சற்று குறைவாகக்கூடும். ஆனால், சிலவகை பொருட்களின் செல்ஃப் லைஃப் முடிந்தபிறகு அவற்றைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். எனவே, செல்ஃப் லைஃப் என்று சொன்னாலும் அதைப் பொதுவான கலைச்சொல்லாகப் பாவிக்க முடியாது. ஒவ்வொரு பொருளுக்கும் அதன் மூலக்கூறுப் பண்புக்கு ஏற்ப அழுகிப்போகும், மட்கிப்போகும், சிதைந்துபோகும் காலம் ஒன்று உண்டு. வெயில், சூடு, ஈரப்பதம், வாயுக்களின் மாறுபாடு, நுண்ணுயிர்களின் பெருக்கம் மற்றும் அழிவு ஆகிய பல காரணங்களைக்கொண்டே ஒரு பொருளின் செல்ஃப் லைஃப் உருவாகிறது.
Average Rating