குடிக்க வேணாம்… அப்படியே கடிக்கலாம்! இது தண்ணீர் புரட்சி!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 23 Second

உலகம் நீராலானது. இந்த பூமிப் பந்தில் மூன்றில் இரண்டு பகுதி நீர்தான். எஞ்சிய நிலத்தில் வசித்துக்கொண்டுதான் நாம் சண்டையிடுகிறோம். காதல் செய்கிறோம். கவிதை எழுதுகிறோம். சினிமா எடுக்கிறோம். ஆயுதங்கள் தயாரித்து அடித்துக்கொள்கிறோம். ஆனால் உலகைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும் நமக்குத் தேவையான நன்னீர் அளவு மிகவும் குறைவு. அதனால்தான் மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக வரும் என்று அச்ச ஆருடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். அதில் உண்மை இல்லாமல் இல்லை. பெருகிக்கொண்டேயிருக்கும் மக்கள் தொகை நமக்கான நன்னீர் தேவையை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இன்னொருபுறம் வருடம்தோறும் பல்லாயிரம் கேலன்கள் அளவுள்ள நன்னீர் கடலில் கலந்துகொண்டிருக்கிறது.
வறட்சியான நிலங்களில் மக்கள் தண்ணீரைத் தேடி பல கிலோ மீட்டர்கள் பயணிக்கிறார்கள். இவ்வளவு ஏன் நம் ஊரிலேயே 3000 அடி போர் போட்டாலும் தண்ணீர் வராத ஊர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்துகொண்டிருக்கிறது.

உலகின் முன் இப்போது உள்ள சவால்களில் முதன்மையானது நீர் மேலாண்மைதான். எங்கோ ஓரிடத்தில் யாருக்கும் பயன்படாமல் வீணாகிக்கொண்டிருக்கும் தண்ணீரை அத்தியாவசிய தேவைக்குக்கூட தண்ணீர் இல்லாமல் தவிப்பவர்களுக்குக் கொண்டு சேர்க்க என்ன வழி? இதுதான் இன்றைய விஞ்ஞானிகளின் கவலை. இதற்காக ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வழிகளில் முயன்றுகொண்டிருக்கிறார்கள். பயணமாகும் தண்ணீர் பொதுவாக, தண்ணீரை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல அதை பெரிய பெரிய பனிப்பாளங்களாக உறையவைத்து கப்பலிலும் பிற வாகனங்களிலும் எடுத்துச்செல்வார்கள். இப்படி உறையவைக்கப்படும் தண்ணீர் சிறிது உருகுவதால் இதில் கணிசமான தண்ணீர் வீணாகவும் செய்யும். என்னதான் இன்று நவீன தொழிநுட்பங்கள் வந்துவிட்டாலும் இந்த முறையில் தண்ணீர் வீணாவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. ஆனால், உலகம் முழுதுமே தண்ணீரை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல இந்த முறைதான் இன்றும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதைத் தவிர இன்னொருமுறை பெரிய பெரிய கேலன்களில் அடைத்து எடுத்துச்செல்வது. இதுவும் மிகவும் பழையமுறைதான். தற்போது உலகம் முழுதும் பேக்கேஜ்டு ட்ரிங்கிங் வாட்டர் அல்லது மினரல் வாட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதற்காக, பிளாஸ்டிக் பாட்டில்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. Polyethylene Terephthalate (PET) எனும் வேதிப்பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை ஒரே ஒருமுறைதான் பயன்படுத்த முடியும். பிறகு, இவற்றை கவனமாக அப்புறப்படுத்தி ரீசைக்கிள் செய்ய வேண்டும்.

நடைமுறையில் இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சிக்கு செல்வது மிகவும் குறைவு. சந்தைக்கு வரும் இந்த பிளாஸ்டிக் பாட்டில்களில் வெறும் 30 சதவிகிதத்துக்கும் குறைவானவையே மறுசுழற்சிக்குச் செல்கின்றன. எஞ்சியவை காடுகள், மலைகள், அருவிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றில் எறியப்படுகின்றன. குறிப்பாக, சுற்றுலாதளங்களில் இப்படி பிளாஸ்டிக் கழிவுகளை எறிவது மிக மிக அதிகம். இந்த பிளாஸ்டிக் மிகவும் ஆபத்தானவை. அறுபது எழுபது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்துவிட்டு செல்லும் நம் உடலுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தேவைப்படும் தண்ணீரைப் பாதுகாப்பதற்காக நாம் பயன்படுத்தும் இந்த பிளாஸ்டிக் மக்கிப்போக ஆகும் காலம் எவ்வளவு தெரியுமா? சுமார் 450 ஆண்டுகள். நாம் மரித்து நம் எலும்பு மட்கினாலும் மக்காத ராட்சசன் இந்தப் பிளாஸ்டிக். உலகம் முழுதும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனையாகிறது என்றும் இந்த விகிதம் எதிர்வரும் 2021ம் ஆண்டுக்குள் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் ஒரு பகீர் புள்ளிவிவரம் சொல்கிறது. இந்த எண்ணிக்கையில் நாம் பிளாஸ்டிக் பாட்டில்களை பெருக்கிக்கொண்டு போனால், ஒரு கட்டத்தில் இவ்வுலகமே பிளாஸ்டிக்கால் மூழ்கிவிடும் என அஞ்சுகிறார்கள் சூழலியல் விஞ்ஞானிகள். இப்படியான சூழலில்தான் பெட் பாட்டில்களுக்கு மாற்றாய் வந்திருக்கிறது ஊஹோ எனும் தொழில்நுட்பம்.ஊஹோ எனும் புரட்சி

ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற ஆய்வு நிறுவனம் ஒன்று பெட் பாட்டில்கள் இல்லாமல், பனிக்கட்டி ஆக்காமல் தண்ணீரை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளது. அதன் பெயர்தான் ஊஹோ (Ooho).தண்ணீரை சோடியம் அல்கினேட் (Sodium Alginate) மற்றும் கால்சியம் குளோரைடு உப்பு ஆகியவற்றோடு சேர்க்கும்போது, தண்ணீரானது திரவமும் இல்லாத தின்மமும் இல்லாத நுங்கு போன்ற ஒரு நிலையை அடைகிறது. அதாவது, அதன் தண்ணீரின் மேற்பகுதி உறைந்து கவர் போல மாறிவிடுகிறது. உட்புறம் நீர் அப்படியே இருக்கிறது. இந்தத் தண்ணீரை நாம் அப்படியே வாயிலிட்டுக் கடித்து விழுங்கலாம். இந்தத் தண்ணீரை, பெட் பாட்டிலோ வேறு பாத்திரங்களோ இல்லாமல், ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லவும் முடியும் என்பதுதான் ஸ்பெஷலே.

இந்த திட்டத்துக்குப் பொது மக்களிடம் நிதி திரட்டி Crowd Funding முறையில் இது உருவாக்கப்பட்டிருப்பதால் இதற்கு தனி உரிமம் ஏதும் இல்லை. Creative Common License என்ற பொதுவான காப்புரிமை முறையிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, யார் வேண்டுமானாலும் இந்த முறையில் தண்ணீரை பயன்படுத்தலாம்தான். ஆனால், இது இன்னும் சந்தைக்கு வரவில்லை. இன்னமும் இதனை பரிசோதனை முறையிலேயே வைத்துள்ளார்கள். மிக விரைவிலேயே சந்தைக்கு வந்து ஊஹோ தண்ணீர் உலகையே கலக்கும் என்று சொல்லப்படுகிறது.

தற்போது ஊஹோ தண்ணீர் சிறிய கோலி குண்டு வடிவத்திலேயே உள்ளது. ஒருவரின் தாகம் தீர வேண்டுமனால் எத்தனை உருண்டைகள் விழுங்க வேண்டும். இதைப் பெரிய வடிவில் செய்ய முடியுமா எவ்வளவு தூரம் இதைக் கொண்டு செல்ல முடியும், சோடியம் அல்கினேட், கால்சியம் குளோரைடு எல்லாம் உடலுக்குத் தீங்கு இல்லையா என்று எல்லாம் கேலியாகவும், சீரியஸாகவும் ஆன்லைனின் இதைக் கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள் நமது நெட்டிசன்கள்.
மக்கள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. இதற்கு எல்லாம் இன்னும் தெளிவான பதில் இல்லைதான். (சோடியம் அல்கினேட், கால்சியம் குளோரைடு இரண்டும் உடலுக்குத் தீங்கற்றவை என்றே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்) ஆனால், எதிர்காலத்தில் இந்த தொழிநுட்பத்தின் மேம்பட்ட வடிவங்கள் வரும் என்பது மட்டும் உறுதி. அப்படி வரும்போது நம்மால் தண்ணீரை எந்தப் பாத்திரமும் இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும். இனி, உணவுப் பொருளை மட்டும் அல்ல தண்ணீரையும் நாம் கடித்து மென்று விழுங்க முடியும். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. எப்படியோ தண்ணீர் பிரச்னை தீர்ந்து; பிளாஸ்டிக் தொல்லையும் ஒழிந்தால் சரிதான்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபத்தான பூச்சிகள்!! (வீடியோ)
Next post உலகின் மோசமான ட்ரிங்ஸ்!! (வீடியோ)