ஆப்பு வைக்கும் தேர்தல் வியூகம் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 59 Second

உள்நாட்டு அரசியல் செயற்பாடுகளும் சர்வதேச அணுகுமுறைகளும், இலங்கை அரசியலுக்குத் தேவையான, தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்துள்ளன.

என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் தரப்பினரின் பிரிவினைப் போக்கும் சிங்கள தேசியவாத கட்சிகளின் ஒன்றிணைதலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிதைவும் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கையறு நிலையும், இலங்கை அரசியலில் மீள முடியாத, தேசியவாத சிந்தனைகளின் வௌிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தில், சிங்களத் தேசியவாத அரசை நிலைநிறுத்த, பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் முறையாகத் திட்டம் வகுத்துச் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதன் விளைவாக, வடக்கு, கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில், பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி கூட்டு, தேர்தல் களத்தில் குதிக்கும்.

இதன் நோக்கம், அறுதிப் பெரும்பான்மையைச் சிங்கள மக்களிடமிருந்து அறவீடு செய்து கொள்வதே ஆகும். தாம் வடக்கு, கிழக்கு மக்களை நம்பவில்லை; சிங்கள மக்களையும் அவர்களின் அதிகாரத்துடனான அரசாங்கத்தையும் ஸ்தாபிப்பதாகவே அமையும்.

மேலும், இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையைத்தொடர்ந்து, ஐ.நா மனித உரிமைச் செயற்பாடு தொடர்பான 31/1 இணை அனுசரணையில் இருந்து வெளியேறியதன் மூலம், சிங்கள தேசத்தின் காவலர் தாமே என்பதையும் சிங்கள மக்களின் நாயகர்களாகத் தம்மை அமைத்துக்கொள்வதையும் தமிழருக்குத் தமது ஆட்சியில் தீர்வு இல்லை என்பதையும் பிரசாரப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இவற்றைவிட, பட்டதாரிகள் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி அப்பணி தொடர்வதாக அறிவித்திருப்பதும் அதைச் செயலில் காட்டி இருப்பதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்களித்தது போல், எதிர்வரும் மாதத்தில் 1,000 ரூபாய் வேதனம் வழங்க முன்வந்தமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய காய்நகர்த்தல்கள் ஆகும். இவற்றைவிட, நின்று போயிருந்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், 50 ஆயிரம் வேலை வாய்ப்பை முதற்கட்டமாக, எதிர்வரும் வாரத்தில் வழங்க முனைந்துள்ளதுமான செயற்பாடுகள், நுகர்வோர் நலன் கருதி 15 ஆயிரம் பொருள்களுக்கு விலை குறைப்பு போன்ற அறிவிப்புகள், தேர்தல் பிரசாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

“இது சிங்கள நாடு; சிங்கள மக்கள்; சிங்கள ஆட்சி; பௌத்த மதம்; நாட்டைப் பாதுகாக்க எம்மால்தான் முடியும்” என, மிக இறுக்கமான உசுப்பேற்றலும் பிரசார வியூகமாக அமைந்துள்ளது.

இத்தகைய சூழலில், ஐ.தே.க பலம் குன்றிய நிலையில், இந்தப் பிரசார யுத்திகளுக்கு முகம்கொடுத்து, எவ்வாறு தாக்குப்பிடிக்க போகிறது? ஐ.தே.கவுக்குள் தோன்றியுள்ள குத்து வெட்டுகள், போட்டியாளர்களின் வியூகங்களுக்கான எதிர் வியூகங்களை வகுக்க முடியாத சூழலை உருவாக்கி உள்ளதுடன், இம்முறை சிங்கள இனவாதத்தைக் கையில் எடுத்தே தீரும். அதன் வெளிப்பாடே, இராணுவத் தளபதிக்கு, அமெரிக்கா பயணத்தடை விதித்தபோது, சஜித் பிரேமதாஸ வெளியிட்ட ஊடக அறிக்கை ஆகும்.

எனவே, இன்றைய சூழலில், ஐ.தே.க இனவாதத்தை கையில் எடுப்பதால், தமிழர் தரப்பும் முஸ்லிம் தரப்பும் போக்குக்கு இடம் இன்றி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்குதாரர்களாக முடியாத சூழலை, முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு அரசாங்கம் வெளிகாட்டி இருப்பதும் அரசாங்கத்தின் மனநிலையைப் புரியவைத்துள்ளது.

தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில், கடந்த 72 வருட காலத்தில் உரிமை, சலுகை, எதிர்ப்பு அரசியல் செய்ததன் மூலம், எதையும் அடையவும் இல்லை; சாதிக்கவும் இல்லை. தமிழ் அரசியல் தலைவர்கள், உரிமை அரசியலின் பெயரால், அவர்களே சுகபோகத்துடன் வாழ்ந்துள்ளனர்; சலுகைகளை அனுபவித்து உள்ளனர் என்ற நிலைப்பாடு, மிகமிக வேகமாக மேலெழுந்து வருகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் அதிகார மய்யங்களும் முன்னெடுத்த செயற்பாடுகள், தம்மை ஆதரித்த மக்களை அவர்கள் கண்டு கொள்ளாதமை, தீர்வைப் பெற்றுத் தருவோம் என வாக்குரைத்து, அதுவும் கைநழுவிப் போனதுமை போன்ற விமர்சனங்கள் தமிழ் மக்களைக் கடுமையாகச் சிந்திக்கத் தூண்டியுள்ளன.

அத்துடன், தேர்தல்களின்போது தீர்வு தொடர்பாகப் பிரஸ்தாபிப்பதும் ஐக்கியமாகச் செயற்பட்டு தமிழரின் பலத்தை வௌிக்காட்டுவதன் மூலமே, தமிழ்த் தேசிய உரிமையையும் தீர்வையும் பெறலாம் என்ற தமிழ் அரசியல்வாதிகளின் பிரசாரமும் தேர்தல் முடிந்த பின்னர் கையறு நிலைமைகளும் கூட, இம்முறை தமிழ் மக்களைச் சிந்திக்கத் தூண்டியுள்ளன.

இந்த அடிப்படையில், தேர்தல் பிரசாரத்தின் மூலம், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் ஏதும் இல்லை. ஏனெனில், அரசமைப்பு செயலிழந்து விட்டது; ஐ.நா தீர்மானம் கைநழுவிப் போய்விட்டது. ஒப்பந்தம் செய்தவர்களே அதிலிருந்து விலகுவதால், அது நீர்த்துப்போன ஒன்றே ஆகும். சர்வதேசமும் இந்தியாவும் தமிழர் தீர்வு விடயத்தில், அதன் தேச நலன் சார் விடயங்களை விடுத்து தலையிடப் போவதில்லை.

தமிழர் பிரச்சினை என்பது, சர்வதேச நாடுகளின் அரசியல், வியாபாரம், பாதுகாப்பு போன்ற நலன்களுக்குப் பாதகம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், மூக்கை நுழைப்பதற்கான ஒரு துரும்பே தவிர, இதயசுத்தியுடன் தமிழரும் தமிழ் அரசியல் தலைவர்களும் கனவு காணும் அளவுக்கு, எந்தவித யதார்த்தமான சூழ்நிலைகளும் காணப்படவில்லை. இது தமிழ்த் தலைமைகளுக்கும் தெரியும்.
ஆயினும், தமது கையாலாகாத்தனத்தை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கே, தமது பிரசாரங்களில் இந்தியாவையும் சர்வதேசத்தையும் இழுத்துவிட்டு, அவர்கள் தீர்வு தருவார்கள் எனத் தமிழர்களை நம்ப வைக்க முனைகின்றனர்.

எனவே, இந்த அரசியல் அணுகுமுறை தமிழ்ப் பகுதிகளில், தமிழ் மக்களை விழிப்படைய வைத்துள்ளது. தமிழர்கள், 70 வருடங்களுக்கு மேலாக, அஹிம்சை வழி, ஆயுத வழி எனப் போராடியும் தமிழர் பிரச்சினையை, சர்வதேச விவகாரம் ஆக்கியும், போர் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னரும், சிங்கள தேசியவாத அரசாங்கம், தமிழருக்குப் பிரச்சினை இல்லை; இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பதாகவே கூறி வருகின்றது.

இப்பொழுது, அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு வழங்கினால் போதும் என, வெளிப்படையாக அறிவித்திருப்பதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் இனி ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதையும் தெளிவாக மக்கள் புரிந்துள்ளார்கள்.

இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்து பிரிந்து சென்ற மாற்றுத் தலைமைக்காரரும் தமிழ்த் தேசிய முன்னணியும் ஆனந்தசங்கரியின் புதிய கூட்டும் இனி எதைச் சாதிக்க போகின்றன. மேலும், கூட்டமைப்பு தவிர்ந்த கட்சிகள், மக்களின் ஆதரவைப் பெறவில்லை. மேலும், “தமிழருக்குத் தீர்வைத் தர மாட்டோம்” என்று, அரசாங்கம் அடித்துச் சொல்லியுள்ள சூழலில், விக்னேஸ்வரனின் ‘சமஷ்டி’, கஜேந்திரகுமாரின் ‘ஒரு நாடு; இரு தேசம்’ எவ்வாறு சாத்தியமாகும்.

கூட்டமைப்பினர், துரோகிகள் எனச் சொல்லும் இவர்கள், தமது தீர்வை மீண்டும் மீண்டும் பேசுவோம் எனக் கூட்டமைப்பு பாணியில் சொல்வார்களா? அல்லது, விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் அணியினர் மீண்டும் ஆயுதப்போராட்டத்தைத் தங்கள் தலைமையில் தொடங்கப் போகிறார்களா?

ஆனந்தசங்கரியின் கூட்டு, தமது கட்சி ஒன்று இருப்பதாகத் தேர்தலில் காட்டிக் கொள்வதற்கான ஒரு கூட்டு. இந்த வகையில், இம்முறை ஆளும் தரப்புச் சார்பாக போட்டியிடும் கட்சிகள் பக்கம், மக்கள் பார்வை கணிசமாகத் திரும்பக் கூடிய சூழல் தோன்றியுள்ளது.

ஆளும் பக்கம் சேர்ந்தால், ஏதாவது கிடைக்கும் என எதிர்பார்க்கும் சலுகை அணி, தமிழ் அரசியலில் விரக்தியுற்ற மக்களின் ஆதரவும் அரசாங்கத்தின் பக்கம் சாயும் சூழல் மேலோங்கியுள்ளது. இந்நிலைமை, இக் கட்சிகளில் போட்டியிடுபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தாலும், பொதுஜன பெரமுன வகுத்த வியூகத்தில் வடக்கு, கிழக்கில், ஐக்கிய சுதந்திர முன்னணி தேர்தலில் போட்டியிடும் என அறிவித்து, கருணா அம்மானை அதன் தலைவராக நியமித்திருப்பது, கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அல்லது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கான வாக்கு சதவீதத்தை எடுத்தால் மாத்திரமே, அரசியல் பங்காளிகள் இல்லாவிட்டால் அவர்களுக்கு எதுவும் இல்லை. மாறாக, கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைப்பதற்கான ஒரு மூலோபாயமும் ஆகும்.

எனவே, பொதுஜன பெரமுனவின் தேர்தல் வியூகம், தமிழ்ப் பிரதேசங்கில் தோல்விகளை மறைப்பது; ஆட்சியில் பங்காளிகள் ஆகாமல் இருப்பது; சிங்களப் பகுதிகளில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதன் மூலம், சிங்கள மக்களின் முழுமையான ஆதரவை பெற்றவர்களாக, தம்மைச் சிங்கள மக்களே தேர்ந்தெடுத்தார்கள் என்பதை வௌியுலகுக்கு காண்பிப்பதாகும்.

எனவே, தமிழ்த் தரப்புக்கு இம்முறை தேர்தல் பிரசாரத்துக்கு ‘வாய்க்கு அவல் ஒன்றும் இல்லை’. வெற்றிக்காகக் கடந்த காலங்களைப் போல் செயற்பட முடியாது. ‘கல்லிலே நார் உரிப்பார்கள்’ இல்லாவிட்டால், வீட்டில் இருப்பார்கள்.

தமிழ்த் தலைவர்கள் எதைச் சிந்திக்கிறார்கள் என்பது, தமிழ் மக்களுக்குப் புரியவில்லை. எனவே, மாற்றம் நிகழுமா என்பது, தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ் தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த ஆப்பு வைக்கும் தேர்தல் வியூகத்துக்குள் என்பதே, இன்று உள்ள கேள்வியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரிலாக்ஸ் ப்ளீஸ்!! (மகளிர் பக்கம்)
Next post ஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்! (மருத்துவம்)