சின்னஞ் சிறிய நாட்டில் எத்தனை கட்சிகள் ? (கட்டுரை)
எதிர்வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் யார் யார் வெற்றியடைவார்கள்? எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு ஆசனங்கள் கிடைக்கும்? என்றொரு அறிவிப்பை முகநூலில் எழுதியிருக்கிறார் அரசியல் கருத்தாளர் சி.அ.யோதிலிங்கம்.
தன்னுடைய இந்தக் கணிப்பை எப்படி, எந்த அடிப்படையில் செய்தார் யோதிலிங்கம் என்று தெரியாது. அவரும் அதைப்பற்றி விளக்கவில்லை. அநேகமாக ஊகநிலைப்பட்ட கணிப்பு என்றே இதைக்கொள்ள முடிகிறது. என்றாலும் தொடர்ந்து அரசியற் களத்தில் கருத்துரைத்து வருகின்றவர் என்ற அடிப்படையில் யோதிலிங்கத்தின் கணிப்பு – அறிவிப்பு பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதைத் தொடர்ந்து வழமையைப்போல முகநூல் கொந்தளிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் கணிப்பு என்றால் லேசான ஒன்றா என்ன? தங்கள் தங்கள் கட்சிக்கு என்ன இடம் என்ற தவிப்போடிருப்பவர்களுக்கு இது பொறுத்துக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. யோதிலிங்கத்தின் கணிப்பும் அப்படித்தானுள்ளது. எந்தத் தரப்பும் திருப்தியடையக் கூடிய வெற்றி வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. வேண்டுமானால் சிலர் மட்டும் தம்முடைய வெற்றி ஊகிக்கப்பட்டிருக்கிறது என்று மகிழக்கூடும். இதிலும் கிழக்கில் அவருடைய கணிப்பு மந்தமடைந்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் தரப்பில் யார் யாருக்கெல்லாம் வெற்றிவாய்ப்புண்டு என்று அவர் குறிப்பிடவில்லை. வடக்கில் காட்டிய துலக்கத்தை கிழக்கில் அவரால் காட்ட முடியவில்லை.
எனினும் யோதிலிங்கத்தின் கணிப்பை ஒத்ததே என்னுடைய அவதானமும். என்னுடைய அவதானமானது, நபர்கள் சார்ந்ததல்ல. கட்சி அல்லது தரப்புச் சார்ந்தது.
இதெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும். இன்னும் பாராளுமன்றமே கலைக்கப்படவில்லை. அடுத்த தேர்தல் அறிவிப்பே விடுக்கப்படவில்லை. தேர்தற் கூட்டுகள் இன்னும் சரியாக வடிமைக்கப்படவோ உறுதிப்படுத்தப்படவோ இல்லை. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. வேட்பாளர்கள் யார் யாரென்று தீர்மானிக்கப்படவில்லை. அதற்குள் இதென்ன முந்திரிக்கொட்டைச் சமாச்சாரம்? என்று நீங்கள் கேட்கக் கூடும். என்னிடமும் இதே கேள்வி உண்டு. ஆனாலும் யோதிலிங்கம் அதையும் ஒரு ஊகநிலையில் கண்டுணர்ந்தே தன்னுடைய அறிவிப்பை – கணிப்பை – விடுத்திருக்கிறார். அவருடைய இந்த அறிவிப்பு கட்சிகளைக் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டலாம். தேர்தற்கூட்டுகளையும் வேறு விதமாக யோசிக்க வைக்கலாம். அந்தளவுக்கு கூருணர்வும் அரசியல் நுட்பமும் உள்ளவையா நம்முடைய கட்சிகளும் தலைவர்களும் என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது சற்றுக் கடினமே. சம்மந்தன் மட்டும் வழமையைப்போல இந்த விவகாரத்தில் தன்னுடைய சாணக்கியத்தை (தந்திரத்தை) காட்ட முற்படுவார். மற்றவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மட்டுமே செய்பவர்கள். அவர்களுக்கு வேறு யாருடைய கருத்தும் அபிப்பிராயங்களும் பொருட்டல்ல.
வரவுள்ள பாராளுமன்றத் தேர்தல் எல்லாக் கட்சிகளுக்கும் நெருக்கடியான ஒன்றே. எதுவும் மக்களிடம் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற தரப்பாக இல்லை என்பதே இதற்குக் காரணம். இது கட்சிகளுக்கு மட்டுமான பிரச்சினையில்லை. சனங்களுக்கும் இது ஒரு பெரிய பிரச்சினையே. யாரை ஏற்பது? எந்தத் தரப்பைத் தெரிவு செய்வது? என்ற குழப்பத்தில் சனங்களும் சிக்க வேண்டியிருக்கிறது. அந்தளவுக்கு பல கட்சிகள். பல தலைவர்கள். பல கூட்டுகள்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கசிந்த தகவல்களின்படி 100 க்கு மேற்பட்ட தரப்புகள் கட்சிப்பதிவுக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது. அப்படியென்றால் இந்தத் தேர்தலில் ஏராளம் கட்சிகள் போட்டியிலிறங்கப்போகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஏராளம் வேட்பாளர்களின் பெயரால் வாக்குச் சீட்டு நிரம்பியிருந்தது. இதைப்போலப் பாராளுமன்றத் தேர்தலிலும் பல கட்சிகளால் வாக்குச் சீட்டு நிரம்பப்போகிறது. கட்சிகள் பெருகப்பெருக தேர்தல் செலவீனமும் அதிகரிக்கும் என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு.
அரசியல் ஒரு விளையாட்டு என்றாகிய பிறகு இதுதானே நடக்கும்! இல்லையென்றால் இப்படி இத்தனை தொகையாகக் கட்சிகள் பெருக்கெடுக்குமா? இனத்துக்கொரு கட்சி என்று தொடங்கிய விளையாட்டு, இப்பொழுது ஒவ்வொரு இனங்களும் பல கட்சிகளைப் பெருக்கி வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இதைவிட வடக்குக்குத் தனியான கட்சிகள். கிழக்குக்குத் தனியான கட்சிகள் என்று பிரதேசக் கட்சிகளும் உருவாகத் தொடங்கியுள்ளன. வடக்கில் (யாழ்ப்பாணத்தில்) சாதிகளின் கூட்டணி ஒன்றும் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. அப்படியென்றால் சாதிக் கட்சிகளும் பிறக்கத் தொடங்கி விடும். இது இப்படியே வளர்ந்து இனி ஊருக்கொரு கட்சி. சாதிக்கொரு கட்சி. வீதிக்கொரு கட்சி. வீட்டுக்கொரு கட்சி என்று ஆகப்போகிறது.
ஒரு சின்னஞ்சிறிய நாட்டுக்கு இத்தனை கட்சிகள் தேவையா? இவ்வளவு அரசியல்வாதிகள் வேண்டுமா? என்றால், தேவையில்லை என்று துணிந்து கூற வேண்டும். இவ்வளவு கட்சிகள், இவ்வளவு தலைவர்கள் உள்ளபோதும் விரல் நீட்டி இவர் சிறந்த தலைவர் என்று சொல்லக்கூடிய நிலையில் யாருமே இல்லை. இந்தக் கட்சியைத் தெரிவு செய்யலாம் எனவும் சொல்ல முடியாது. ஆனாலும் சில தரப்புகள் வெற்றிவாய்ப்பைக் கொண்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அது எப்படி என்பது சூட்சுமமான ஒன்றே. சனங்கள் என்னதான் அதிருப்தி என்றாலும் சில தரப்புகளின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அந்தத் தரப்புகளைத் தெரிவு செய்கிறார்கள். அந்த நம்பிக்கையும் அந்தத் தெரிவும் முழு ஈடுபாட்டுடனும் இல்லை என்றாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை. வேறு தெரிவில்லை என்பதால் இது நடக்கிறது.
இப்படியான ஒரு நிலையில்தான் யோதிலிங்கத்தின் கணிப்பும் அமைந்துள்ளது. யோதிலிங்கத்தின் அரசியல் நிலைப்பாடும் தெரிவும் வேறு. அவருடைய கணிப்பு வேறு. அவரே அதைக் குறிப்பிடுகிறார். விருப்பங்கள் வேறு. யதார்த்தம் வேறு என்று. இதையே நாம் இங்கு அவருக்கும் அவரைப்போன்றவர்களுக்கும் கூறலாம். அரசியல் போக்கில் விருப்பங்கள் வேறு. யதார்த்தம் வேறு என்று. தமிழ்ச்சமூகத்தின் அரசியல் விருப்பு ஒன்றாக இருக்கலாம். இருக்கலாம் என்ன, அப்படித்தான் இருக்கிறது. அது மாபெரும் லட்சியக் கனவோடிருக்கிறது. அந்தக் கனவுக்காக அது பெரிய போராட்டத்தை நடத்தியது. நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொண்டது. ஆனால், யதார்த்தம் வேறாக உள்ளது. அது இந்தக் கனவுக்கும் இந்தப் பயணத்துக்கும் மாறானதாக – இன்னொரு விதமானதாக உள்ளதே. இதை எப்படிப் புறக்கணிக்க முடியும்?
என்னதான் மகத்தான கனவுகளும் விருப்பங்களும் இருந்தாலும் யதார்த்தமே நடைமுறையில் நிகழ்வது. என்பதால்தான் நாம் எப்போதும் யதார்த்தையும் உள்ளடக்கியே சிந்திக்க வேண்டும் என்கிறோம்.
ஒரு எளிய உதாரணம், இலங்கையில் வடக்குக் கிழக்கிற்கு வெளியே யாரும் தமக்கான அதிகாரப் பகிர்வைக் கோரிப்போராடவில்லை. வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களே தனி அலகு கேட்டுப்போராடினார்கள். பேச்சுவார்த்தை மேசையிலும் வடக்குக் கிழக்கை மையப்படுத்திய உரையாடல்களே நடந்தன. அதற்கான பிரதிநிதிகளே ஈடுபட்டனர்.
ஆனால், இலங்கை இந்திய உடன்படிக்கையில் வடக்குக் கிழக்கிற்கு மட்டும் அதிகாரப் பகிர்வோ மாகாணசபை முறைமையோ அறிமுகப்படுத்தப்படவில்லை. அது முழு நாட்டுக்குமானதாகவே அமைக்கப்பட்டது.
அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படியென்றால்தான் இதை ஓரளவுக்கேனும் நடைமுறைப்படுத்தலாம். இல்லையென்றால் இது பிரிவினையாகும் என்ற குழப்பங்களும் எதிர்ப்பும் உண்டாகும் என்று இந்தியாவுக்குத் தெரிந்தது. அப்பொழுது அதிகாரத்திலிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்குத் தெரிந்திருந்தது. எனவேதான் ஒன்பது மாகாணங்களையும் மாகாணசபை முறைமைக்குள்ளாக்கினார்கள். வடக்குக் கிழக்கு மட்டும் தற்காலிகமாக இணைக்கட்டது. பின்னர் நிலைமையைப் பொறுத்து அதை நீடிப்பதா இல்லையா எனத் தீர்மானிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆகவே எப்பொழுதும் நடைமுறையை – யதார்த்தத்தைக் கவனத்திற் கொண்டே எதையும் நாம் தீர்மானிக்க வேண்டும். இல்லையென்றால் நாம் தொடர்ந்தும் அலைக்கழிக்கப்பட்டும் அலைக்கழிந்து கொண்டுமே இருப்போம். ஈழப்போராட்டம் இதற்குச் சிறந்ததொரு அனுபவம். இதை யாரும் மறுத்துரைக்க முற்படலாம். ஆனால், அது மகத்தான உண்மையையும் பேரனுபவத்தையும் தந்திருக்கிறது. அந்த அனுபவத்தை நாம் உள்வாங்கி, அறிவனுபவமாக்கிக் கொள்ளவில்லை என்றால் தொடர்ந்தும் அலைக்கழிய வேண்டியதுதான்.
எப்படி அடுத்து வரப்போகின்ற தேர்தலின் வெற்றி தோல்விகள் அமையப்போகின்றனவோ, எவ்வளவுக்கு ஒவ்வொருவருடைய கனவுக்குமான எல்லைகளும் நடைமுறைகளும் உள்ளதோ அப்படியே தமிழ் அரசியற் கனவுக்கும் எல்லைகளும் நடைமுறைகளும் யதார்த்தமும் உண்டு. இதைக் கணக்கில் கொள்ள வேண்டியதே இன்று நமக்கான கடமையும் பொறுப்பும். இதிலிருந்தே நாம் நடைமுறையில் பயணிக்க முடியும்.
நடைமுறையில் பயணிக்கும் சமூகமொன்றே வெற்றியின் படிக்கட்டுகளில் தன்னுடைய கால்களைப் பதிக்கும். மற்றதெல்லாம் அந்த வெளியில் பறப்பதாகவே கனவு காணும். தமிழ்ச்சமூகம் இரண்டாவது வழியிலேயே தன்னைத் தொடர்ந்தும் வைத்திருக்கப்போகிறதா? அல்லது முதலாவது தெரிவான நடைமுறை – யதார்த்தம் என்ற படியில் கால் வைக்கப்போகிறதா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
இதற்கு இன்னொரு எளிய உதாரணத்தையும் சொல்லி விடலாம். யதார்த்தத்துக்கு எதிரான முறையில் கனவைக் கண்டு கொண்டிருக்கும் தமிழ்ச்சமூகத்திலிருந்துதான் நாட்டை விட்டு வெளியேறத் துடித்துக் கொண்டிருப்போரின் எண்ணிக்கையும் அதிகம். அதாவது தனி நாட்டுக்காகக் கனவு காண்போரே அந்தத் தனிநாட்டை விட்டு வெளியேறிப் பிற நாடு தேடிப் போகிறார்கள். இதுவே ஒரு யதார்த்த முரணன்றி வேறென்ன?
ஆகவே இனி வரும் அரசியற் பயணங்களாவது யதார்த்தத்தின் வழியில் காலடியைப் பதிக்கட்டும்.
Average Rating