சோரியாசிஸுக்கு சிகிச்சை இல்லையா?! (மருத்துவம்)
நம்முடைய தோல் பகுதியில் ஏற்படுகிற சோரியாசிஸ் என குறிப்பிடப்படுகிற இந்நோய் ‘செதில்கள் நோய்’ எனவும் அழைக்கப்படுகிறது. இது பல காலமாக மக்களைப் பாதிக்கக்கூடிய காரணியாக இருந்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் தோல்கள் உரிந்துகொண்டே இருக்கும். இதனை சரும மருத்துவர்கள் Psoriasis Vulgaris என குறிப்பிடுவார்கள். சோரியாசிஸ் இந்த வயதில்தான் ஒருவருக்கு வரும் என்று சொல்ல முடியாது. வயது வரம்பின்றி எல்லோரையும் பாதிக்கக் கூடியது சோரியாசிஸ். முன்பெல்லாம் இந்நோய்க்கான காரணம் அறியப்படாமலே இருந்தது. தற்போது, மருத்துவத்துறையில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சோரியாசிஸ் வருவதற்கான காரணத்தை எளிதாக அறிய முடிகிறது. சிறு குழந்தைகளுக்கும் சோரியாசிஸ் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அதாவது உடலில் ஆங்காங்கே தோல் உரிந்து சிவப்பாய் Rashes போன்று காணப்படும். இவ்வாறு தோல் பகுதி சிவந்து இருப்பது Guttate psoriasis என அழைக்கப்படுகிறது. சின்ன குழந்தைகள் ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சி அதிகம் உள்ள உணவுப்பண்டங்களைச் சாப்பிடும்போது ஸ்ட்ரெப்டோ காக்கஸ் கிருமி(Streptococcus) தொற்று ஏற்படும். இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்காதபோது உடல் அந்தக் கிருமியால் உண்டாகிற தொற்றை எதிர்ப்பது கிடையாது. இதன் காரணமாகத்தான் மேலே குறிப்பிடப்பட்ட Guttate psoriasis வருகிறது. இந்த வகை Childhood Psoriasis எனப்படும். சோரியாசிஸ் பல நோய்களுடன் கைகோர்த்து செல்லும் தன்மை கொண்டது. அசோசியேஷன் என்று பார்க்கும்போது, இந்த நோய்கள் சர்க்கரை நோயாகவோ, ரத்தக் கொதிப்பாகவோ, உடல் பருமனாகவோ இருக்கலாம். இத்தகைய தன்மை கொண்ட சோரியாசிஸ் குளிர்காலம், தொண்டையில் ஏற்படுகிற தொற்று ஆகிய காரணங்களால் தூண்டப்படுகிறது.
இந்த நோயைத் தூண்டுகிற காரணிகளில் மன அழுத்தம் முக்கிய காரணியாகத் திகழ்கிறது. சோரியாசிஸைக் குணப்படுத்த எளிய மற்றும் தரமான சிகிச்சைமுறைகள் உள்ளன. முதலில் வாழ்க்கைமுறையை மாற்ற வேண்டும். உணவு கட்டுப்பாடு அவசியம். கார்போஹைட்ரேட், கொழுப்பு அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். புரதம் சார்ந்த உணவுகளை சாப்பிடலாம். எனவே, சோரியாசிஸ் நோயைத் தூண்டும் காரணி என்ன என்பதைத் தெரிந்துகொண்டு அதை முதலில் தடுக்க வேண்டும். அதன் பின்னர் என்ன வகையான சோரியாசிஸ் யாருக்கு வந்துள்ளது என கண்டுபிடித்து, அதற்கேற்றவாறு Topical Therapy, Systemic Therapy கொடுக்கலாம்.
முதல் வகை தெரபியில் உடலின் வெளிப்புறம் தடவுவதற்கேற்ற மருந்துகள் கொடுக்கப்படும். இரண்டாம் வகை தெரபியில் வாய்வழியாக உட்கொள்ளும் விதத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுப்போம். இத்தகைய சிகிச்சை முறையில் நோயாளி முழுமையாக குணம் அடைய வேண்டும். நோயின் அறிகுறி கொஞ்சமும் இருக்கக்கூடாது என்பதுதான் இலக்கு. நவீன சிகிச்சை முறையில் தற்போது பயாலஜிக்கல் மூலம் சோரியாசிஸைக் குணப்படுத்த முடியும். இதற்கு மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம். எனவே, மருத்துவம் வேகமாக முன்னேறி வரும் நிலையில் எல்லாவற்றுக்கும் சிகிச்சை உண்டு. தகுதிவாய்ந்த மருத்துவரைக் கண்டறிவதன் மூலமும், உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலமும் சோரியாசிஸுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கலாம்!’’
Average Rating