நீரிழிவின் நண்பன் கோவைக்காய்!! (மருத்துவம்)
புதர்களிலும், வேலி ஓரங்களிலும் தானா வளரும் கோவைக்காயின் அருமை பற்றி நமக்குத் தெரியாது. நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியது கோவைக்காய். உணவாக பயன்படும் இந்தக் காய் வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி முதலான தாவர வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) என்னும் கொடிகள் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். காய் கசப்பு சுவைமிக்கது. காய், பழம் இரண்டுமே உடல் நலத்துக்கு உகந்த உணவு. ஆங்கிலத்தில் ‘Ivy gourd’, தெலுங்கில் ‘டொன்னடகாயா’, மலையாளத்தில் ‘கொவ்வை’ என அந்தந்த மாநிலத்தில் வெவ்வேறு பெயர்களினால் அழைக்கப்படும் கோவைக்காயின் தாவரவியல் பெயர் ‘கொக்கினியா கிராண்டிஸ்’ (Coccinia grandis).
இதன் மூலிகை மருத்துவக் குணங்களை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்களும், ரிஷிகளும். இதன் பழங்களை சாப்பிட பறவையினங்கள் பறந்தோடி வரும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவைக்காயின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என நால்வகையாய் பிரிப்பர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இதனை தொண்டைக்கொடி எனவும் அழைக்கின்றனர். மேலும் அப்பைக் கோவை, ராமக் கோவை என இருவகைகள் உள்ளன.
100 கிராம் கோவைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
புரோட்டீன் – 1.2 கிராம்
நார்ச்சத்து – 1.6 கிராம்
கொழுப்பு – 0.1 கிராம்
தண்ணீர் – 93.5 கிராம்
கார்போஹைட்ரேட் – 3.1 கிராம்
எரிசக்தி – 18 கலோரி
பாஸ்பரஸ் – 30 மிலி கிராம்
கால்சியம் – 40 மிலி கிராம்
இரும்புச்சத்து – 1.4 மிலி கிராம்
ரிபோஃப்ளாவின் – 0.08 மிலி கிராம்
தையமின் – 0.07 மிலி கிராம்
நியாசின் – 0.7 மிலி கிராம்
அஸ்கோர்பிக் அமிலம் – 1.4 மிலி கிராம்
பொட்டாசியம் – 30 மிலி கிராம்
வைட்டமின் சி – 1.4 மிலி கிராம்
வைட்டமின் பி 1 – 0.07 மிலி கிராம்
வைட்டமின் பி3 – 0.07 மிலி கிராம்
வைட்டமின் பி2 – 0.08 மிலி கிராம்.
கோவைக்காய் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது, காய்ச்சலின் போது உடல் வெப்பநிலை அதிகமாகாமல் பாதுகாக்கிறது. நாள்பட்ட சைனஸ் நோய்க்கான ஊசி மருந்தாக போட பயன்படுகிறது. வீக்கம், அழற்சி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் தொண்டை, வயிறு பகுதியில் ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்த பயன்படுகிறது. நீரிழிவு, ரத்தநாளங்களின் அடைப்பு மற்றும் உடல்பருமன் நோயுள்ள நபர்கள், குறைந்த கலோரி, குறைந்த கார்போஹைட்ரேட், நல்ல நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவே கொழுப்புச்சத்துள்ள கோவைக்காயை, உணவில் வழக்கமாக சேர்த்துக் கொள்வதால் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ள முடியும்.
மருத்துவ குணங்கள்
கோவைக்காயில், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், கல்லீரலை பாதுகாக்கும் ஹெப்படோபுரடக்டிவ் (Hepatoprotective) தன்மை, அழற்சி எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரான விளைவுகள் இருப்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இதிலிருக்கும் ஆன்டிகார்சினோஜெனிக் (Anticarcinogenic) விளைவுகளால் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளிலும் கோவைக்காயை பயன்படுத்துகிறார்கள். கோவைக்காயில் உள்ள ஆன்டிபேக்டீரியல் தன்மை உடலில் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுநோய்களை ஒழிக்க உதவுகிறது.
சிறு குடலில் குளுக்கோஸை உறிஞ்சுவதில் குறைபாடு, கணைய பி-செல்களிலிருந்து இன்சுலின் குளுக்கோஸ் தூண்டப்பட்ட சுரப்பு மற்றும் உணவின் மூலம் குளுக்கோஸ் அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடுமையான ஆண்டிஹைபர்கிளைசெமிக் செயல்பாடு அதிகரிக்கிறது. இதனால் ரத்தநாளங்களில் ரத்த உறைவு ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படுகிறது. கோவைக்காயில் உள்ள ஆன்டிஹைப்பர்கிளைசமிக் விளைவுகள் ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைப்பதாகவும், இதனால் ரத்தம் உறைவதை தடுப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் மொத்த அமிலத்தன்மை குறைவதையும், வயிற்றில் அல்சர் அறிகுறி மற்றும் இரைப்பை சாறின் அதிகரித்த pH மற்றும் புண் உருவாக்கம் குறைந்துள்ளதையும் சமீபத்திய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அல்சைமர் நோயின் தீவிரத்தையும் முன்னேற்றத்தையும் குறைப்பதால், அல்சைமர் நோய் உள்ள முதியவர்கள் கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களுக்கு தினமும் மூன்று வேளை இந்த கோவைக்காயை அரைத்து குடித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். தலையில் பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்னைகளுக்கு இந்த கோவைக்காய் ஜூஸ் குடிப்பதோடு அரைத்த அந்த சக்கையை தலையில் தடவி வந்தால் பொடுகு ஏற்படுவது குறைந்து விடும். பல் வலி, ஈறுகளில் வலி-வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கறை, அனைத்தையும் கோவைக்காய் ஜூஸ் குறைக்கிறது. சிலருக்கு சரியான உடல் எடை இருந்தாலும் தொப்பை குறையாது. இதை சரி செய்ய தினமும் இந்த கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் தொப்பை குறைந்து விடும். சர்க்கரை நோயால் சிலருக்கு அதிகளவில் சிறுநீர் போக்கு ஏற்படும்.
இதை கட்டுப்படுத்த தினமும் கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும் மேலும், சிறுநீரகத்தில் கல் இருந்தால், கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் கல் முழுமையாக நீங்கி விடும். தற்போது கம்ப்யூட்டர், ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப் போன்றவற்றின் அதிகப்படியான உபயோகத்தால் கண்களுக்கு அதிக வேலை கொடுக்கிறோம். இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் நரம்புகள் பலப்படும். சுற்றுச்சூழல் மாசு, ஃபாஸ்ட்புட், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. ரத்தம் அசுத்தம் அடைவதாலேயே, கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் வருகின்றன. உடலிலுள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை நீக்கவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும் கோவைக்காய் ஜூஸை அடிக்கடி அருந்தலாம்.
தற்போதுள்ள சமநிலையற்ற தட்பவெப்பநிலையால், உடலின் தட்பவெப்ப நிலையும் மாறுபடுகிறது இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை ஏற்படுகிறது. உடலின் நோயெதிர்ப்பு தன்மையை அதிகரிக்க கோவைக்காய் நல்ல மருந்து. மனஅழுத்தம், சுற்றுச்சூழல் மாசு, கணினி பயன்பாடு போன்றவற்றால் ஐ.டி ஊழியர்கள் பலர் கருவுறாமை (Infertility) பிரச்னையால் பாதிப்புக்குள்ளாகின்றனர். கோவைக்காய் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிப்பதில் பெரும் பங்காற்றுகிறது. உடல் சூட்டால் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும், மூல நோய்களுக்கும் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்த கோவைக்காய் நல்ல பலனை தரும்.
அதிக சளி தொல்லையால் ஏற்படும் இருமல், நெஞ்சில் சளி அடைத்து ஏற்படும் நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் போன்றவற்றை கோவைக்காய் விரைவில் குணம் அடைய செய்யும். மஞ்சள் காமாலை நோயிலிருந்தும், ரத்த சோகையிலிருந்தும் நம்மை பாதுகாக்கும். பூச்சிக் கடிகளால் ஏற்படும் காயங்கள் மற்றும் ரத்தக் கட்டுதல், ரத்தக் கசிவு அனைத்திற்கும் கோவைக்காயின் இலைகளை பிழிந்து சாற்றை இடுவதன் மூலம் விரைவில் பலனை காணலாம். கோவை இலையை டானிக்காகவும், கோவக்காயை மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். சித்த மருத்துவத்திலும் கோவக்காயை மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
Average Rating