சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)
இலங்கையின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான புங்குடுதீவு இறுப்பிட்டி கல்லடி அம்மன் கோவிலுக்கு வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள, “புங்குடுதீவு பெருக்குமரம்” பல உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ள போதிலும், அரசின் எந்தவொரு அமைப்பும் அதனைப் புனரமைக்காமல், முட்புதர்கள் அடங்கிய பற்றைக்காடாக இருப்பதினால், இதனைப் புனரமைத்து உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் புனரமைக்க வேண்டுமென, சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் சார்பில், சிலர் நீண்டகாலமாக “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” வேண்டுகோள் விடுத்தமைக்கு அமைய, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” அண்மைய சில கூட்டங்களில் இதுகுறித்து விவாதித்து, இதனைப் புனரமைப்பதென தீர்மானித்து இருந்தோம். (இதுபோன்ற “பெருக்குமரம்” இலங்கையிலேயே புங்குடுதீவு, நெடுந்தீவு, மன்னார் ஆகிய மூன்று இடங்களிலேயே அமைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.)
மேற்படி புங்குடுதீவு இறுப்பிட்டி கல்லடி அம்மன் கோவிலுக்கு வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள, “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல்” புனரமைப்பு இன்றைய சிவராத்திரி தினமன்று, திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (அதிபர், புங்குடுதீவு நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவர்) தலைமையில் ஆரம்பமாகியது.
மேற்படி நிகழ்வில், புங்குடுதீவு கல்லடி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா திருமதி. சச்சிதானந்ததேவி, திரு.நாவலன் (பிரதேசசபை உறுப்பினர்), திரு.வசந்தகுமார் (பிரதேசசபை உறுப்பினர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து இருந்தனர்.
அத்துடன் “பெருக்குமரத்தை” பார்வையிட வந்த டென்மார்க் உல்லாசப் பயணிகளும், கனடா, பிரான்சில் இருந்து வருகை தந்த புலம்பெயர்தேச தமிழ் மக்களுடன் அப்பிரதேச பொதுமக்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர். தற்போது இலையுதிர் காலமாக இருந்த போதிலும், பெருக்குமரத்தை பார்வையிட உல்லாசப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக திருமதி.சச்சிதானந்ததேவி, திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், திரு.நாவலன், திரு.வசந்தகுமார் ஆகியோர் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க.. திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள், உல்லாசப் பயணிகள், புலம்பெயர் உறவுகள் ஆகியோர் “பெருக்குமரத்தை” சுற்றி வேர்களை பாதிக்காதவாறு செம்மண்ணைப் பரப்பி, வேலைகளை ஆரம்பித்து வைக்க, இயந்திரங்கள் மூலம் “முட்புதர்கள் அடங்கிய பற்றைக்காடுகளை துப்பரவாக்கும் பணி” முதற்கட்டமாக ஆரம்பமாகி நடைபெறுகின்றது.
மேற்படி “பெருக்குமர சுற்றாடல்” வேர்களையோ, மரத்தையோ பாதிக்காதவாறு குறிப்பிட்ட சுற்றளவுக்கு செம்மண், செங்கல் மூலம் பதியப்பட்டு, மின்னிணைப்புகள், மலசலகூடம், தண்ணீர்தாங்கி, ஆகியவற்றுடன் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து பார்வையிட்டு செல்லும் வகையில் “பூங்கா வடிவில்” சிறந்த முறையில் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுக்கான அனுமதிக்கான முன்முயற்சிகளை மேற்கொண்ட “புங்குடுதீவு மண்ணின் மைந்தர்” திரு.இ.இளங்கோவன் (வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர்), திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (அதிபர்), திரு.வனோஜன், திரு.வசந்தகுமார் (பிரதேசசபை உறுப்பினர்), திரு.நாவலன் (பிரதேசசபை உறுப்பினர்), திரு.சதீஷ் ஆகியோருக்கும் சுவிஸ் ஒன்றியத்தின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”
இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
21.02.2020
Average Rating