சுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் !! (கட்டுரை)

Read Time:17 Minute, 17 Second

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாகப் போட்டியிடுமானால், அதனை வரவேற்பதாகப் பெருந்தோட்டத்துறை அமைச்சரும்

அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரன தெரிவித்திருப்பதானது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தாகவும் இருக்கலாமென்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தற்போது இருந்ததையும் இழந்த நாதியற்ற நிலையில் காணப்படுவதை அவதானிக்கலாம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தொடர்ந்தும் இப்பதவியில் நீடிப்பாராக இருந்தால்,

இக்கட்சிக்கு எதிர்காலமே இல்லாமல் போகுமென்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லையென, அக்கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, “நாங்கள் பொதுச் சின்னத்தில் போட்டியிட்டால்,

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவளிக்க மாட்டோம்” என்று கூறிக் கும்மாளமிட்ட பின்னர் என்ன நடந்தது?

சுதந்திரக் கட்சியினர், வெறும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளுக்குத்தான் சோரம் போனார்களே தவிர, கொள்கை எனும் கோட்பாட்டை அடியோடு மறந்துவிட்டனர்.

கட்சிக்கோ அல்லது பொதுச் செயலாளருக்கோ தூரநோக்கு இல்லையென்றால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் கொண்டு வந்த இந்தக் கட்சியை எவ்வாறு வழிநடத்த முடியும்?

இன்னுமொரு விடயத்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான நிமல் சிறிபால டீ சில்வா கூறுகின்றார். “நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரின் ஒரே நோக்கம்,

ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே ஆகும்” எனப் பேசியுள்ளார். இவரின் இந்தப் பேச்சினால், எதை விளங்கிக்கொள்ள முடியும்? அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, உண்மையாகத்தான் இவ்வாறு பேசுகின்றாரா அல்லது

அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதென்று தெரியாமல் பேசுகின்றாரா என்பது, அவருக்கே நிதர்சனம். “யானையின் வாலில் ஒரு குழுவும் தும்பிக்கையில் மற்றுமொரு குழுவும்,

கால்களைப் பிடித்தவாறு இன்னொரு குழுவும் பங்கு போட்டுக்கொண்டிருக்கும் போது, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தூங்கிக்கொண்டுதான் இருக்கின்றாரா?

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியாகவும் தற்போது பொதுக் கூட்டணியென்றும், பொதுச் சின்னம் இதயம்; அன்னம் என்றும் தடுமாறும்போது,

ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்க வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா கூறுவது, சிந்தனைக்குரிய விடயமாகும்.

இதேவேளை, தற்போதைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில், கட்சியின் அன்றைய தலைவராகவிருந்த

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில்

கூட்டமைப்பொன்றை அமைத்து ஆட்சி செய்த பெருமை அவருக்கே இருந்தது. அந்தக் காலகட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வளர்ந்துகொண்டே இருந்தது.

இப்போது, “நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில், அரசமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்

கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். இதை, அவர் ஜனாதிபதியாக இருக்கும்போது ஏன் செய்யவில்லை? தற்போதைய ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் இணைந்து, அரசமைப்பில் மாற்றத்தைச் செய்யப்போவதாக மைத்திரிபால சிறிசேன கூறுவதாகவிருந்தால், 2015ஆம்

ஆண்டில் இந்த நாட்டு மக்கள் அவருக்கு அளித்த வாக்குக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது என்பதுதான் அர்த்தம். ஒவ்வொரு முறையும், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டிலேயே ஈடுபடுவது இலங்கையின் தலைவிதியாகிவிட்டது.

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய கூட்டணியில் இணைத்துக்கொள்வதைப் பொதுஜன பெரமுனவில் உள்ள பலர் எதிர்ப்பதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அப்படியாயின், ஐந்து ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, அரசியலில் எதைச் சாதித்துள்ளார்? ஆடரம்பர வாழ்க்கை வேண்டாமெனக் கூறி, நாடாளுமன்றத்தில் வாழையிலையில் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட இவர், ஒரே ஒருமுறை மாத்திரம், வெளிநாடொன்றுக்குச் செல்லும்போது, சாதாரண பயணிகள்

ஆசனத்தில் அமர்ந்து பயணம் செய்தார். அதன்பின்னர் சென்ற சகல வெளிநாட்டுப் பயணங்களையும், அதிசொகுசு (BUSINESS CLASS) ஆசனத்திலேயே பயணம் செய்தார் என்பது மட்டுமல்லாமல், அவருடன் செல்லும் குழுவினரின் எண்ணிக்கையையும்,

இரண்டு மடங்காக்கிக் கொண்டார். தற்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளாரெனப் பேச்சுகள் அடிபடுகின்றன.

இதில் அவர் வெற்றி பெறுவாரென்றால், அது வேறுவிடயம். ஆனால், தோல்வி அடைந்தால் என்ன நடக்குமென்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும், பொதுத் தேர்தலுக்கு இடையில், அரசியலிலிருந்து அவர் ஓய்வுபெறப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒருமுறை தன்னிடம் கூறியதாக, இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஓரிரு தினங்ளுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியே, ஆளுங்கட்சியாகத் தற்போது பிரமித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு மிக மிக முக்கியப் பாத்திரமான

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை நாம் இவ்விடத்தில் மறந்துவிட முடியாது. இவரது விடாமுயற்சிக்கு அதிக பாத்திரமாக, நாட்டின் பெரும்பான்மையின மக்களின்

ஒத்துழைப்பு, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளராகக் களமிறங்கியிருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குக் கிடைக்கவும் அவர் அதில்

வெற்றியடையவும் வாய்ப்பாக இருந்ததாக் காணக்கிடைத்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள், வாய்கிழியத் தொண்டை கிழியக் கத்தியும், அந்த மக்களின் முடிவு உலகத்தையே ஒருகணம் அதிரவைத்தது.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

கட்சி, அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு விடாமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது. சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை நாடாமல், தங்களது கட்சியின் உறுப்பினர்களினாலேயே அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்திலும்

முயற்சியிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, எத்தரப்பினருடன் கூட்டணி அமைத்தாலும், பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்திலேயே வெற்றிபெறும். பெரும்பான்மை மக்களின் ஆதரவை, மொட்டுச் சின்னமே பெற்றுள்ளது” என்று, போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்காக, அடிப்படைவாதிகளுடன் ஒருபோதும் கைக்கோர்த்துச் செயற்பட மாட்டோம் என்றும் நாட்டு மக்களே தமக்குப் பெரும்பான்மை பலத்தை

வழங்கி, பலமான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவில் பல பங்காளிக் கட்சிகள் உள்ளன. அனைத்துக் கட்சிகள்,

சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து, கூட்டணியமைத்துப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம். கூட்டணி அமைப்பதால், பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் மாற்றம் ஏற்படாது. என்றும் கூறியுள்ள அவர், பெரும்பாலான

உறுப்பினர்கள் மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும், அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இவரது இந்தப் பேச்சை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஏற்றுக்கொள்வாரா?

தற்போது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், கட்சிகளின் தூசித்துடைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதால், இனவாதங்களும் பிரதேசவாதங்களும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அண்மையில் அமெரிக்காவிலிருந்த நாடு திரும்பிய பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ, பொதுத் தேர்தலில் தான் போட்டியிடுவதில்லையென தெரிவித்திருந்தமை, ஓர் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில்தான் உள்ளது.

ஏன் அவர் அந்த முடிவுக்கு வந்தார் என்பது பற்றி யாருடனும் பேசியதாகத் தெரியவில்லை.பொதுஜன பெரமுன வெற்றி பெற்றதற்குப் பின்னர்,

முதன்முறையாக இவ்வாறான கருத்துத் தெரிவிப்பது ஆரோக்கியமானதல்ல என்றுதான் கூறமுடியும். இதேவேளை, பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு

பொதுத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், இம்முறையும் நாடாளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்திலிருந்தே போட்டியிடவுள்ளாரென, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ், கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதிகள்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதிகள் போட்டியிடும் ஒரு புதிய கலாசாரம் உருவாகியுள்ளது. இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர்,

இம்முறை பொதுத் தேர்தல் களத்தில் குதிக்கவுள்ள அதேநேரத்தில், இரண்டு முறை ஜனாதிபதியாகப் பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரம் ஏன் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்ற கேள்வியொன்று எழுந்துள்ளது.

இவ்வாறு இருந்த போதும், நீண்டகாலத்தின் பின் இலங்கையின் 72ஆவது சுதந்திரதின வைபவத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சமுகமளித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது மனைவி

ஷிரந்தி ராஜபக்‌ஷ ஆகியோருடன் மிகவும் அந்நியோன்யமாக உரையாடிக் கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

இதைத்தான் சொல்வது அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை; நிரந்தரப் பகைவனுமில்லை என்று. சிலவேளை, பொதுஜனப் பெரமுனவுடன் இணைந்துப் போட்டியிடும் எண்ணங்கள் ஏதும் அவருக்கு உண்டானதோ என்று எண்ணுவதற்கும் இடமில்லை.

பிந்திய செய்தியின் அடிப்படையில், இன்று செவ்வாய்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவருமான மைத்திரிபால ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பு, பொதுத்

தேர்தல் பற்றிய கலந்துரையாடலாக இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஏற்கெனவே தேர்தல்

ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளன. இருந்தும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சில இடங்களில் தனித்துப் போட்டியிடலாமெனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு நிமிடம் தலை சுற்ற வைக்கும் விலை கொண்ட பொருட்கள் ! (வீடியோ)
Next post குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)